தேசியக் கல்விக் கொள்கை வரைவை தமிழில் சுருக்கமாக அளித்திருப்பது பற்றி தன் கருத்துகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் விழியன்.

தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, நம் நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கருத்துச் சொல்லும் கால அவகாசம் ஜூன் 30ந் தேதியோடு முடிவடைவதாக இருந்ததை இம்மாதம் (ஜூலை) 31-ம் தேதி நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. இக்கொள்கை வரைவில் இந்தி கட்டாயம் எனும் அம்சம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பைத் தந்தது. எனவே, அதில் சில தளர்வுகளை மாற்றி அமைத்தது மத்திய அரசு. மேலும், இதில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களோடு முரண்படும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். இக்கொள்கை வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதால், மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகப் பல மாநிலங்களில் ஒலித்தது.

விழியன்

அதனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு சுருக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், மொழிபெயர்ப்பில் குழப்பங்கள் இருப்பதாகக் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. தமிழில் மத்திய அரசு அளிக்கும் முன்பே 40-க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்போடு தமிழில் மொழியாக்கம் செய்து இக்கொள்கை வரை வெளியிடப்பட்டது. மொழியாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் விழியனிடம் இது குறித்து கேட்டோம்.

ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கும் வரைவில் இருக்கும் விரிவான தகவல்கள் தமிழ் சுருக்கத்தில் இல்லை.

– விழியன்

“தேசியக் கல்விக் கொள்கையின் வரைவைத் தமிழில் கொடுக்க வேண்டும் எனும் முயற்சி சரியானதுதான். ஆனால், அதைச் சுருக்கிக் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஏனென்றால், இந்தச் சுருக்கம் பத்திரிகைகளில் வெளிவரும் நியூஸ் ஆர்ட்டிகிளைப் போல இருப்பதாகத் தோன்றுகிறது. இதை மட்டும் படித்து ஒருவர் சொல்லும் கருத்து முழுமையாக இருக்குமா என்பது சந்தேகம்தான் அல்லது வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கும் வரைவில் இருக்கும் விரிவான தகவல்கள் தமிழ் சுருக்கத்தில் இல்லை.

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி

உதாரணமாக, முதல் வகுப்பில் கற்றல் ஏன் இல்லை என்பதைப் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுவிட்டு, பின் அதற்கான தீர்வாக இதை முன் மொழிகிறோம் என்று இருக்கும். ஆனால், தமிழில் நேரடியாக அந்தத் தீர்வை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். எதனால் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. அதனால், இந்தத் தீர்வு பற்றி விவாதிப்பதில் முழுமை இருக்காது. இன்னும் சொல்லப்போனால், அந்தத் தீர்வு மட்டுமே படிப்பவர்களுக்கு தவறானதாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அதாவது வரைவு சொல்ல விரும்புவதையே வேறு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடும்.

தேசியக் கல்விக் கொள்கைதேசியக் கல்விக் கொள்கை

அதேபோல, பள்ளியில் தன்னார்வலர்களை எப்படிப் பயன்படுத்த போகிறார்கள் என்பது பற்றிய இடத்திலும் இதே சிக்கல். ஒரு சில வரிகளில் இந்த விஷயம் கடந்துவிடப்படுகிறது. ஆனால், ஆங்கில வரைவில் சமூக தன்னார்வலர்கள், பள்ளியில் மாலை நேரத்தில் பாடங்கள் நடத்துவார்கள். ஆனால், தேர்ச்சி மதிப்பீட்டில் அவர்களின் பங்கு கணக்கில் கொள்ளப்படாது. அதற்கு ஆசிரியரே பொறுப்பு என்பதாக இருக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறக்கின்றன. இப்படியிருக்கையில் இந்தச் சுருக்கத்தை மட்டுமே கொண்டு எப்படி கருத்து சொல்வது?

தமிழில் இந்த வரைவு வேண்டும் என நாம் கேட்டதே, அவர்கள் சொல்வதை நாம் தவறாகப் புரிந்துகொண்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான்.

– விழியன்

தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை
விகடன்

மொழிபெயர்ப்பிலும் பல குழப்பங்கள் இருக்கின்றன. ஓரிடத்தில் ‘இலகுவான ஆனால் இறுக்கமான’ என்று குறிப்பிடுகிறார்கள். தமிழில் இந்த வரைவு வேண்டும் என நாம் கேட்டதே, அவர்கள் சொல்வதை நாம் தவறாகப் புரிந்துகொண்டு விடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான். ஆனால், இந்த பாரா ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழில் இருப்பதற்கும் அர்த்தமே மாறிவிட்டதாக நினைக்கிறேன். இதேபோல பல இடங்களில் குழப்பங்கள் இருக்கின்றன. இந்தச் சுருக்கத்தை வைத்து கருத்துச் சொல்லலாம். ஆனால் அது முழுமையாகவும் ஆழமாகவும் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.

school students

தமிழ் சுருக்கம் வந்து சில நாள்களே ஆகின்றன. இதைப் படித்து கருத்துச் சொல்ல ஒரு மாத கால அவகாசமும் போதாது இல்லையா? எனவே கருத்து சொல்லும் காலத்தையும் நீட்டித்தால் உதவியாக இருக்கும்.” என்று முடித்தார்.

நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *