“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.  இவர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக இருந்தவர்.

கல்வித்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாதவர். இவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக்கொள்கை யையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகிற கல்விக் கொள்கையையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி கொடுத்திருக்கிறது.

அவ்வளவு எளிதல்ல…

கல்வியை முற்றிலும் தனியாருக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கார்ப்பரேட்டுகளின் விருப்பம் ஒருபுறம், குலக்கல்வி, குருகுலக் கல்வி என்ற காவிகளின் வெறி ஒருபுறம் என இந்த வரைவு அறிக்கை இருதரப்பையும் திருப்திப்படுத்த முயல்கிறது.  ராக்கெட்டை ஏவுவதைப்போல மனித மனங்களை, அவர்களது மொழி சார்ந்த பண்பாட்டை, மதிப்பீடுகளை, வாழ்க்கை முறையை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை கஸ்தூரிரங்கன்கள் புரிந்து கொள்வது நல்லது.

உண்மை நோக்கம்…

அழகாக முடிச்சவிழ்ப்பது போல ‘மும்மொழி கொள்கை’ என்ற பெயரில் இந்தியை படிப்பது கட்டாயம் என இவரது தலைமையிலான குழு பரிந்துரைத்தது. தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகம், மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழவே இந்தி கட்டாயம் இல்லை, ஆனால் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயம் என்று இந்தக்குழு கூறியுள்ளது. இன்னமும் கூட தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை திணிக்கும் ஆபத்து அகன்றுவிடவில்லை.

உண்மையில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் நோக்கம் இந்தியை திணிப்பது அல்ல, அது முதல்கட்டம் தான். அதன் வழியாக அடுத்தக் கட்டமாக இந்தியா முழுவதையும் சமஸ்கிருதமயமாக்குவதுதான் இவர்களது சதித்திட்டம்.  ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய கோல்வால்கர் கூறுவதை கவனியுங்கள். “தொடர்பு மொழி என்ற பிரச்சனைக் கான தீர்வு என்ற வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப்  பிடிக்கும் வரை வசதியின் பொருட்டு இந்திக்கே நாம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.” ஆக தேவ பாஷை என்று இவர்களால் கூறப்படுகிற சமஸ் கிருத திணிப்புதான் இவர்களது நோக்கம். அதற்கு முதல் படியாகத்தான் இந்தியை பந்தியில் உட்கார வைப்பது.

அதிகபட்ச முன்னுரிமை

இதை பின்பற்றித் தான் கல்வி நிலையங்களில் சமஸ்கிரு தத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு காதைக் கடிக்கிறது. ‘ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை’ என்றெல்லாம் இன்றைக்கு மோடி அரசு முழங்குவதன் பின்னணியில் இருப்பது அவர்க ளது ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்பதுதான்.

கோல்வால்கர் மேலும் தெளிவாக கூறுகிறார்: “மேல் படிப்பு, ஆராய்ச்சி எல்லாவற்றிலும் பொருத்தமான ஒரு பொது மொழி உண்டு என்றால் அது சமஸ்கிருதமே ஆகும். அதன் புனித தொடர்பும், சிறப்பான வளமும் அதுவே நமது தேசிய மொழி என்பதற்குத் தகுதியானதாகும்.

நாட்டின் ஒற்றுமைக்கு சமஸ்கிருதம் கட்டாயமாகும்.”  1952ஆம் ஆண்டு பாஜகவின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இவ்வாறு கூறுகிறது. “நாடு முழுவதும் சமஸ்கிருதத்தை கட்டாயப்பாடமாக்க வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களை பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள் என்று அறிவிக்க வேண்டும்.”

முதல் கட்டமே இந்தித் திணிப்பு

இப்போது தெரிகிறதா? சமஸ்கிருதத் திணிப்பின் முதல் கட்டமே இந்தி திணிப்பு என்பது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்ட மும் அதுதான். ‘ஆர்எஸ்எஸ் விதிகளும், ஒழுங்குமுறைகளும்’ என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு இவ்வாறு கூறுகிறது.  “இந்து சமாஜத்தில் பல்வேறு வகையாக பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு எழுச்சியூட்டி இளமை இரத்தம் பாயச் செய்ய வேண்டும்.

இந்து தர்மம் மற்றும் சமஸ்கிருதம் அடிப்படையில் இது செய்யப்படவேண்டும்.”  இதை மோடி அரசு கடந்த ஆட்சிக் காலத்திலேயே செயல்படுத்த முயற்சித்தது. கடந்த முறை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி கல்வி ஆலோசனை குழு கூட்டத்தில் பேசுகையில், “நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அதற்காக மூன்றாவது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வியாண்டு முதல் மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து கல்வி நிலை யங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்படும்” என்று கூறினார். அந்த வேலை யைத்தான் தற்போது கஸ்தூரிரங்கன் குழு செய்கிறது.

மொழிச் சிந்தனை மழுங்கிய பின்…

கட்டாய மொழித் திணிப்பால் தாய்மொழி பேசுவோரின் நாக்கை அறுப்பதற்கும், அவர்களது மூளையை கழற்றி மாற்று வதற்கும், பல்லாயிரம் ஆண்டுகளாக சேமித்து வைத்த எழுத்துக் களை, மரபுவழிப் பட்ட அறிவுச் செல்வத்தை ஒரே அரசா ணையின் மூலம் பறித்துவிட மோடி அரசு முயல்கிறது.  சமஸ்கிருத திணிப்புக்கு வன்மையாக எதிர்ப்பு தமிழகத்தி லிருந்து எழுவது இயல்பானதே.

இதுகுறித்து எழுத்தாளர் நக்கீரன் கூறுகிறார் “ஏறக்குறைய அனைத்து இந்திய மொழி களையும் விழுங்கி செரித்த சமஸ்கிருதம், தமிழிடம் தோற்ற காரணம் என்னவென்பதை யோசிக்க வேண்டும். உண்மை யில் சூழலியலை அடிப்படையாக கொண்ட நமது திணை மரபுச் சிந்தனையே கவசமாக இருந்து மொழியை காத்துள்ளது. திணை மரபு என்ற கருத்தாக்கம் சமஸ்கிருத மொழி இலக்கியத்தில் கிடையாது.

ஏன் எந்த மொழியிலும் கிடையாது. சமஸ்கிருதம் தேவ மொழி என்றால்,  தமிழ் என்பது நிலத்தின் மொழி” என்கிறார். மேலும் அவர் “உங்கள் மொழி சிந்தனை மழுங்கிய பிறகு நீங்கள் பண்பாட்டு அடிமையாக மாறியிருப்பீர்கள். அதன் பிறகு நிலத்தின் மீதான அதிகாரத்தை கைப்பற்றுவது எளிதாகி விடும்” என்று அவர் எச்சரிக்கிறார்.
பாஜக உறுப்பினர்க்கு மறுப்பு

நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் தன்னு டைய தாய்மொழியான போஜ்புரி மொழியில் பதவியேற்க முன்வந்தபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் போஜ்புரி மொழி இடம் பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

கடைசியில் அவர் வேறு வழியின்றி இந்தி மொழியில் பதவியேற்றார். ஆனால் உண்மையில் அவதி, போஜ்புரி, பிரஜ், பாசா, ஹரியான்வி, மாகதி, மைதிலி,  பஹாரி, சாத்ரி என வட மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த மொழிகள் இந்தியை விட பல நூற்றாண்டுகள் பழமையான வை. இலக்கிய வளம் கொண்டவை. ஆனால் இந்த மொழி களையெல்லாம் இந்தி மொழி தின்று செரித்துவிட்டது.

அரசமைப்பு சட்டத்தின் விதிகள் 344(1), 351 ஆகிய வற்றின் கீழ் எட்டாவது அட்டவணையில் அசாமி, வங்காளி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், உருது, சிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போடா, சந்தாலி, மைதிலி, டோக்ரி, கொங்கணி, மணிப்புரி, நேபாளி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் இடம் பெறவில்லை என்ற போதும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அது உள்ளது.

ஒருமைப்பாட்டுக்கு ஊறு…

1500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிற ஒரு நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மட்டும் திணிக்க முயல்வது தேசிய இனங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி மட்டுமல்ல, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிற வேலையு மாகும். இந்தி மொழிக்குள் சமஸ்கிருத சொற்களை திட்டமிட்டு திணிக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

அதனால்தான் முதலில் சாயமடிக்கப்பட்ட இந்தி, பின்னர் சுத்த சமஸ்கிருதம் என்று ‘புதிய கல்விக் கொள்கை’ கைகாட்டுகிறது.  2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியை தாய்மொழி என்று கூறியவர்கள் 41.3 சதவீதம் பேர் மட்டுமே. இவர்களும் ஒரே மாதிரி இந்தியை பேசுகிறவர்கள் அல்ல. ராஜஸ்தானில் பேசுவோர்கள் பயன்படுத்தும் இந்தியும் ம,பி.யில் பேசும் இந்தியும் ஒன்றல்ல. இந்தித் திணிப்பு என்ற பண்பாட்டு அழிப்பு வேலையால் பீகாரி, ராஜஸ்தானி, மராட்டி யம், பஞ்சாபி போன்ற மொழிகள் ஏற்கெனவே நிறம் இழந்திருக் கின்றன.

இதையே நாடு முழுவதும் செய்துவிட வேண்டும்என்ப தற்காக கொண்டு வரப்படுவதுதான் புதிய கல்விக்கொள்கை.  ‘புதிய கல்விக்கொள்கை’ என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கலாச்சார தேசியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இன்றைய இந்தியாவின் உண்மையான தேவையென்பது பன்முக தேசியமே. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் சேர்க்க வேண்டுமென்று 32க்கும் மேற்பட்ட மொழிகள் வரிசையில் நிற்கின்றன. அவை அனைத்தும் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழை வெளியே தள்ளிய சதி…

மோடி வகையறாவை தமிழகம் தொடர்ந்து தள்ளி வைப்பதால் அவர்களது வன்மம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் என தமிழ்நாட்டிற்கெதிராக ஒரு யுத்தத்தையே  அவர்கள் தொடுத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனால் அந்த பட்டியலிலிருந்து தமிழை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பது இயல்பான ஒன்றல்ல. திட்டமிட்டு செய்யப்படும் சதியாகும்.   மொழியைப் பொறுத்தவரை அவரவரின் தாய்மொ ழிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை என்பது அனைத்துக்கும் ஒரே மாதிரி பொருந்தாது. ஒரே ஒருவர் மட்டுமே பேசுகிற தாய் மொழியாக இருந்தாலும் கூட அந்த மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அது அவரது பண்பாட்டு அடையாளமாகும்.  புதிய கல்விக் கொள்கை வரைவின் அத்தனை பக்கங்க ளும் விஷத்தால் எழுதப்பட்டவைதான். அதிலும்குறிப்பாக மொழி குறித்த பகுதிகள் ஆலகால விஷத்தால் எழுதப் பட்டவை. இந்தக் கொள்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பொது வெளியில் விரிவான விவாதங்கள் நடந்தாக வேண்டும். பண்பாட்டு படையெடுப்பு நிறுத்தப்படவேண்டும்.

நன்றி: தீக்கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *