அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடும், அரிய இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வும்!
– முனைவர். பா. ராம் மனோகர்
தேசிய அறிவியல் தினம் 28.02.25 அன்று நம் நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, மையகருத்து “அறிவியல் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கி அறிவியல் அறிவினை மேம்பாடு செய்து சமூகத்திற்கும், அறிவியலுக்கும், உள்ள இடைவெளியினை குறைத்தல் “ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அறிவியல் முக்கியத்துவம் உணர்த்தி உலக அளவில் தொடரும் சவால்களை சந்தித்து தீர்வு காண முயற்சி மேற்கொள்ள அனைவரும் உழைக்க வேண்டும். மேலும் இந்த வியக்க வைக்கும் அறிவியல் வளர்ச்சி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், சென்று சேர்ந்திருக்கிறதா!? என்ற வினாவிற்கு, நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, சாலை மேம்பாடு, வாழ்விடம், தொலை தொடர்பு, விண்வெளி, செயற்கைக்கோள், கட்டுமானங்கள், அன்றாட வாழ்வில் பயன்பாட்டு பொருட்கள், மின்னணு தொழில் நுட்பம், அலுவல் முறை ,பொழுது போக்கு, தொழிற்சாலை பெருக்கம், கல்வி கற்பித்தல் என்று உண்மையில், வாழ்க்கையினை எளிதாக நவீனமாக மாற்றி, கடந்த 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும், மனிதர்கள், மன நிலை மாற்றம் கொண்டு வந்திருக்கிறது எனில் மிகையாகாது.
ஆனால் அறிவியலால் ஏற்பட்ட செயற்கை வாழ்வில், நாம் அடிப்படையில் “இயற்கை”என்ற மீளப் பெற இயலாத உடைமை, ஒன்றினை இழந்து வருகிறோம் என்ற
அச்சம் தொடர்ந்து வருகிறது. அது அவ்வப்போது ஏற்படும் பருவ கால மாற்றம், எதிர்பாராத,பருவம் மாறி பெய்யும் அதிக மழை, வெப்பம், பனி, புயல் போன்ற பேரிடர்கள் மூலம் உண்மையாக, இயற்கை வெளிப்படுத்திவருகின்ற நிலைகளையும் நாம் அறிகிறோம் அல்லவா!!?
ஆம், உலக அளவில், இயற்கை சுற்றுசூழல் பிரச்சினைகள் மனித இனம் சந்தித்து வருவதையும், இயற்கை அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அவையாவது,
1.புவி வெப்ப மயமாதல், படிவ எரி பொருட்கள்.
2.படிவ எரி பொருட்களை மட்டும் நம்பி இருத்தல்.
3.உணவு கழிவுகள்.
4.உயிரின பல்வகைமை இழப்பு.
5.பிளாஸ்டிக் கழிவு, மாசு பிரச்சனை
6.காடுகள் அழிப்பு
7.காற்று மாசு பிரச்சனை
8.புவி துருவப்பகுதியில், பனிப் பாறைகள் உருகுதல்.
9.பெருங்கடல் அமில மயமாதல்.
10.விவசாய பிரச்சனை.
11.மண் சத்துக்குறைபாடு, சீர்கேடு
12.உணவு, நீர் பாதுகாப்பின்மை
13.விரைவான நவீன உடை மாற்றம் & துணிகழிவுகள்
14.கடலில் அபரிமித மீன் பிடித்தல்
15.கோபால்ட் கனிமம் அகழ்ந்து எடுத்தல்.
ஆகிய மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் செயற்கை தொழில் நுட்ப அறிவியல் அறிவியல் வளர்ச்சி பெருக இயற்கையினை சீரழிக்கும் மனித செயல்பாடுகள் மூலம் உருவாகி தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. மேற்கண்ட 15 பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று ஓரளவு தொடர்பு கொண்டுள்ளன.
அறிவியல் வளர்ச்சியினால், எதிர் கொண்டு வரும் பக்க விளைவுகள், மாறி வரும் மனித குலம் பாதிக்கப்படக் கூடாது என்றும் அதே அறிவியல் நுட்ப செயல்பாடுகள் மூலமாகவே குறைபாடுகளை சீர் செய்து வருவது தெளிவாக நாம் அறிவோம்.
ஆமாங்க! சுற்றுசூழல், மாசுபாடு, காடழிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ள சரியான முறைகள் கொண்ட கல்வி விழிப்புணர்வு மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் அவசியம் ஆகும். நவீன அறிவியல் கண்டு பிடிப்பு, ஆய்வுகள், செயல் முறைகள் மூலம் நம் நாட்டில் ஓரளவு வனவிலங்கு, சுற்றுசூழல் பாதுகாப்பு மேற்கொள்ள இயலும். அவற்றில் மிக முக்கியமான 10 இயற்கை பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் கீழ் குறிப்பிடப்படுபவை, ஆகும்.
1.செயற்கை நுண்ணறிவு
2.ட்ரோன்கள்
3.மேம்பட்ட நிழற்பட (PHOTO TRAPS) கருவி
4.நேரடி காமிரா படப்பிடிப்பு -கள கண்காணிப்பு
5.உயிரி ஒலியியல் (BIO ACOUSTICS)
6.வரைபடம் முறைகள், சூழல் அமைப்பு மாதிரி
(MAPPING, MODELLING ECOSYSTEMS)
7.மேம்படுத்தப்பட்ட வன விலங்கு, தொடர் கண்காணிப்பு
தொழில் நுட்பம். (MICRO TAG, SATTELITE, COLLAR)
8.LIDAR முறை வனங்கள் வரைபடம் எடுத்தல் (லேசர் 3D)
9.DNA, பாதுகாப்புக்கான பகுப்பாய்வு (e DNA)
(வன விலங்கு செயல்பாடுகள், உணவு முறை, இனத்
தொகை மரபியல்)
10.குடிமக்கள் அறிவியல் அவர்களுக்கான பிரச்சனை
தீர்வுக்கான வழி முறை
பருவ கால மாற்றம், வாழிட அழிப்பு, உயிரின வேற்றுமை இழப்பு, ஆகிய பல்வேறு பிரச்சினைகளால் நம் நாட்டின் இயற்கை, வாழிடம், வன விலங்கு சரணாலயங்கள், ஒரு புறம் பாதித்துவருகின்றன. மேற்குறிப்பிட்ட அறிவியல் தொழில்நுட்ப முறைகள்,அந்த பாதிப்புகள் பற்றிய தகவல்களை துல்லியமாக அறிய, தீர்வு காண உதவுகிறது.
எனினும், வளர்ச்சி என்ற நோக்கத்தில், இயற்கை, வனப் பகுதிகளில், தொழிற் சாலைகள், விவசாயம், குடியிருப்பு போன்ற ஆக்கிரமிப்பு, முன்னுரிமை பெறும்போது, வனம் இயற்கை அறிவியல், நவீன தொழில் நுட்ப அறிவியல் வசம் தோற்றுப் போவது உண்மை என்பதை நம்மில் எத்தனை நபர்கள் உணருகிறோம்.
மேலும் அறிவியல் தொழில் நுட்பம், மூலம் வேலை வாய்ப்புகள், பொருளாதார, வருவாய் பெருக்கம் என்ற காரணிகளை மக்கள் முன் எடுத்துச் செல்லும் போது,உலக நல்வாழ்வின் அடிப்படையான இயற்கைபகுதி, சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய காரணிகள் முன்னுரிமை பெறுவது இல்லை. அங்கு அரசு இயற்றிய
சட்டம், கொள்கை ஆகியவை கூட மறக்கப்படுகின்றன.
மேலும் இயற்கையினை சார்ந்து வாழ்கின்ற, விளிம்பு நிலை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்ற பரிதாப நிகழ்வுகள் நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வருகின்றன.
நம் நாட்டில் “தங்க பள்ளத்தாக்கு “என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம், குளிர் காலத்தில் பனிப் போர்வை போர்த்திய, வெண்ணிற தேவதை போன்ற ஒரு உல்லாச பயணிகளின் சொர்க்கம் என்றால் மிகையாகாது. இன்று அத்தகைய அழகிய ஜம்மு – காஷ்மீர் வடபகுதியின் ஆறு வன கோட்டங்களில், ஒன்று, லாஞ்சிபோரா வன விலங்கு சரணாலயம் ஆகும்.
இங்கு மனித குடியிருப்புகள், நிறைந்த ஹண்ட்வாரா கிராமம் காணப்படுகின்றது. அடர்ந்த வனப்பகுதி குறைந்து விட்டதால், இங்கு வசித்துவரும், சிறுத்தை
விலங்குகள், அடிக்கடி, கிராமத்தில் நுழைந்து, அந்த மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சமீபத்தில், மிகவும் நெருங்கிய தூரத்தில் சிறுமி ஒன்றையும், மாடு மேய்த்து கொண்டிருந்த, சிறுவன், மலம் கழிக்க வீட்டுக்கு வெளியில் வந்த சிறுவன் ஒருவன் என பலரையும் பயம் கொள்ள செய்யும் அந்த விலங்கு உண்மையில் ஏன்
காட்டினை விட்டு வெளியே வருகின்றது!!? இந்த வினாவிற்கு விடை என்ன!!?
வளர்ச்சி பணி என்று, காடுகள் துண்டாடப்பட்டு, சாலைகள், ரயில் பாதை,, விவசாயம், வேலி தடுப்பு என்று, விலங்குகள் உணவு தேடும் பாதை மாறி, அவற்றுக்கான, நீர், உணவு குறையும் போது, அருகில் கிராமங்களை நாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
அப்போது மனித -வன விலங்கு ஒரே வாழிடத்தில் வசிக்கும் நிலையில் உள்ள அவர்களுக்கு இடையில் மோதல்கள், நடை பெறுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
வளர்ச்சி பணிகள் என்பதும் மக்களுக்கு நன்மை செய்யும் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்த ஒரு முறை எனினும், இயற்கை சார்ந்த பகுதியில், சுற்றுசூழல் சமநிலை சிதைத்து, அங்குள்ள விலங்குகள், தாவரங்கள் பாதிக்க செய்யும் நிலை அறிவியல் மனப்பான்மை கொண்ட செயல் தானா!? சற்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். குறிப்பாக, இந்த காஷ்மீர் கிராமத்தில், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கின்றனர்.
மேலும், கிராமங்களின் அருகில் உள்ள நகரங்களின் வீட்டு, உணவு கழிவுகள் வனங்களின் அருகில் கொட்டப்படுவதால் ஊர் நாய்கள் அதிகம் அப்பகுதியினை நாடி செல்கின்றன. தொடர்ந்து சிறுத்தைகள் நாய்களை வேட்டையாட வருகின்றன.
இதன் மூலம் அங்குள்ள மக்கள் அதிக துன்பங்கள் அடைவதும் மற்றும் அச்சத்தில் வாழ்வது மிக மோசமான நிலை ஆகும். இதே போல் மேற்கு மலைத் தொடர் காடுகளில், பல்வேறு வளர்ச்சி பணிகள், விவசாயம் என்று மக்கள் குடியேற்றம் அதிகரித்து, யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள், போன்றவை நகரங்களை நோக்கி வருகின்றன.
வளர்ச்சி பணிகள், மக்களின் நல்வாழ்வுக்காக என்று ஒரு புறம் திட்டங்கள் இட்டு தொழில் நுட்ப கட்டமைப்பு மூலம் இயற்கை சார்ந்த கிராமங்கள் நவீன நகரங்கள் ஆக மாறி வருவது அறிவியல் வளர்ச்சியில் ஒரு முரண்பாடாகத் தான் தோன்றுகிறது.
உலகெங்கும் இந்த நிலை இருப்பினும், நம் நாட்டினைப் போன்ற ,வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அரிய இயற்கை வளங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற நிலையில் அழிந்து போக அனுமதித்து வருகிறோம் அல்லவா!!?
உலகம் பல்வேறு சுற்றுசூழல் பிரச்சினைகளை சந்தித்து வருகையில், இயற்கை, வன பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு, நீடித்த, தொடர் நிலையான வளர்ச்சி என்ற (SUSTAINABLE DEVELOPMENT) கோட்பாடு பின்பற்ற அரசுகள் முயல்வது அவசியம் ஆகும்.
காஷ்மீர் வனப்பகுதியில்,கிராமத்து மக்கள் சிறுத்தை மூலம் பாதிப்பு, பல்வேறு இயற்கை சார்ந்த பகுதிகளில் அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள், வளர்ச்சி திட்ட கட்டமைப்பு பணிகளால் பாதிக்கும் போது, அதற்குரிய மாற்று வழிகளை அரசுத் துறைகள் அறிவியல் பூர்வமாக அறிந்து, சமூக நலன் சார்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி என்பது மிகவும் அவசியம் ஆகும். இன்றைய கால கட்டத்தில் நாம் பல்வேறு வாழ்க்கை முறைகளைஎளிதாக இனிதாக மனித இனம் அனுபவித்து வருவது, பல்வேறு விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, ஆற்றல், அறிவுத் திறன் ஆகிய காரணங்களால் என்பதை உணருவோம்.
அதே நேரத்தில் வளர்ச்சிக்கான அறிவியல், வீழ்ச்சிக்கான அறிவியலாய் மாறி விடாமல், அடிப்படை இயற்கை கட்டமைப்பு சிதைந்து விடாமல் கவனம் கொண்டு செயல் ஆற்றுவோம். தேசிய அறிவியல் நாளில் சிந்தித்து அறிவியல் மாற்றங்கள், மனித இனம் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க முயற்சி செய்வோம்.
################################################
தேசிய அறிவியல் நாள் கட்டுரையாளர்:
முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.