ஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்
2013 ஆம் ஆண்டு அன்று படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் நரேந்திர தபோல்கரை (Narendra Dabholkar) கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாக (NSTD) கடைப்பிடிக்கப்படுகிறது. நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை மற்றும் மதவெறிக்கு எதிராகப் போராடினார். அறிவியலாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.
இந்த நாளை கடைப்பிடிப்பதன் கருப்பொருளாக ”ஏன் என்று கேள்?” என்பதை அறிவித்துள்ளார்கள். அனைத்திந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பினர் (All India People’s Science Network) இந்த நாளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பின்வரும் நோக்கங்களுக்காக வலியுறுத்துகின்றனர்.
1. அறிவியல் மனப்பான்மையை பரப்புவது.
2. அறிவியல் மனப்பான்மை மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கெதிரான முன்னிகழ்ந்திராத தாக்குதல்களைத் தடுப்பது.
இந்நாளை அறிவியல் சார்ந்த நாடகங்கள், பங்கேற்று நடித்தல் நிகழ்வுகள், அறிவியல் கண்காட்சிகள், போட்டிகள், பேரணிகள், வெளியீடுகளை வெளியிடுதல், அறிவியல் சார் திரைப்படங்களைக் காட்சிப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளின் மூலமாக நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நரேந்திர தபோல்கரின் வாழ்க்கை
நரேந்திர தபோல்கர் பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் சாத்தாரா என்ற இடத்தில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் பிறந்தார். இவர் மீரஜ்ஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் முறையாக மருத்துவத் தொழிலைச் செய்த பிறகு, 1980 களில் சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார். இவர் சமூக நீதிக்கு ஆதரவாகவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வந்தார். 1983 முதலே இவர் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வந்தார். ஆனாலும் இவர் காவல்துறைப் பாதுகாப்பினைப் புறக்கணித்து இயங்கி வந்தார்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஓம்காரேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இரண்டு துப்பாக்கியேந்திய நபர்களால் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டு இறந்தார். இவர் தனது இறந்த பிறகு தனது உடலை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள உடல் தானம் செய்திருந்தார். பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதன் காரணமாக இவரது உடல் கல்வி சார் நோக்கங்களுக்கு பயன்படுத்தத் தகுதியற்றதாக ஆனது.
இவரது உடல் மத வழக்கங்கள் ஏதுமின்றி மகன்களால் செய்யப்படும் காரியமான சிதைக்கு தீ மூட்டும் வழக்கத்திற்கு மாறாக இவரது மகளான முக்தாவால் எரியூட்டப்பட்டது.
அறிவியல் மனப்பான்மை
மக்கள் சிறந்த முடிவுகளை எடுக்கவும், கருத்துகளை பகுத்தறிவு சார்ந்த வழியில் உணரவும் உதவும் ஒரு அணுகுமுறை மற்றும் சரிபார்க்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலான மனநிலையே அறிவியல் மனப்பான்மை என வரையறுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் அல்லது கருத்துக்களை ஆதரிக்காவிட்டாலும், திறந்த மனது, வரம்பு மீறாத மற்றும் புதிய யோசனைகளைக் கருத்தில் கொள்ளத் தயாராக இருத்தல் ஆகிய பண்புகளின் மூலம் இது அடையாளப்படுத்தப்படுகிறது.
நரேந்திர தபோல்கரின் நினைவு நாளும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளுமான இந்நாளில் பொது மக்களிடமும், கல்வி பயிலும் மாணவர்களிடமும் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு இந்தியாவை அறிவியல் மனப்பான்மை மிக்க மக்களைக் கொண்ட நாடாக மாற்றுவோம் என்று சூளுரைப்போம்.
வாழட்டும் அறிவியல்!
வளரட்டும் அறிவியல் மனப்பான்மை!
கட்டுரையாளர்:
நா. ரெ. மகாலிங்கம்
விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
மேலும் படிக்க : ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது – பி.ராஜமாணிக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.