’நேட்டிவ் சன்’ ஆப்பிரிக்க அமெரிக்கர் ரிச்சர்டு ரைட் எழுதிய இனவெறியைத் தோலுரித்துக் காட்டும் நாவல்! – பெ.விஜயகுமார்

’நேட்டிவ் சன்’ ஆப்பிரிக்க அமெரிக்கர் ரிச்சர்டு ரைட் எழுதிய இனவெறியைத் தோலுரித்துக் காட்டும் நாவல்! – பெ.விஜயகுமார்

கறுப்பின உழைப்பாளி ஜார்ஜ் ஃப்ளாய்டை இனவெறி பிடித்த அமெரிக்கக் காவல்துறை அதிகாரி செவ்வின் என்பவன் கழுத்தை நெறித்துக் கொல்லும் போது “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என அவர் முணங்கும் காட்சி இன்று உலகையே உலுக்கி வருகிறது. கறுப்பின மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை 400 ஆண்டு காலமாக அமெரிக்க வெள்ளையின மக்களின் நிறவெறிக் கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். வறுமையில் உழன்று, வன்முறைகளுக்கு ஆளாகும் இவர்களின் துயரம் சொல்லித்தீராதது. அன்று அடிமைகளாக இருந்த கறுப்பின மக்கள் இன்று ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இரண்டாந்தர குடிமக்களாகவே வாழ்கின்றனர். இவர்களின் சோகங்களை ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஜேம்ஸ் பால்டுவின், ரால்ஃப் எல்லிசன், மாயா ஏஞ்சலு, டோனி மாரிசன், ஆலிஸ் வாக்கர் போன்ற கறுப்பின எழுத்தாளர்கள் கதைகளாகவும், கவிதைகளாகவும் படைத்து வருகின்றனர். இவ்வரிசையில் ரிச்சர்டு ரைட் முக்கியமான இடம் வகிக்கிறார்.

1908இல் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரிச்சர்டு ரைட் சிறுவயதில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தவர். இளம் வயதிலேயே எழுத்தாற்றலைப் பெற்று கறுப்பின மக்களின் வலியை வார்த்தைகளில் வடித்தார். 1938இல் ரிச்சர்டு ரைட் எழுதிய ’அங்கில் டாம்ஸ் சில்டெரன்’ என்ற சிறுகதையில் அங்கில் டாம் என்ற அப்பாவிக் கதாபாத்திரம் தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வாசகர்களின் கழிவிரக்கத்திற்கு உள்ளாவதைச் சித்தரித்தார். பின்னர் இந்நிலைப்பாட்டிலிருந்து விலகி ரிச்சர்டு ரைட் வெள்ளையின மக்களின் இரக்கமும், தாராள மனப்பான்மையும் கறுப்பின மக்களின் துயர் துடைக்காது. கறுப்பின மக்கள் அவர்களுக்கான உரிமைகளைப் போராடிப் பெற வேண்டும் என்று நம்பினார்.

இயல்பாகவே அமெரிக்காவின் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினரானார். அமெரிக்காவிலிருந்து பிரான்சுக்கு குடிபெயர்ந்தபோது இத்தொடர்பிலிருந்து விலகினார். பிரான்சில் சார்த்தர, சிமன் தி புவா, அன்றே கீத், அன்றே மால்ரோ, ஆல்பெர்ட் காம்யு போன்ற அறிஞர்கள் குழுவில் ஒருவராகவும், இருத்தலியல் தத்துவத்தில் ஈடுபாடுடனும் இருந்தார். ’நேட்டிவ் சன்’ (1940) மற்றும் ’பிளாக் பாய்’ (1946) இரண்டும் ரிச்சர்டு ரைட்டின் காத்திரமான படைப்புகளாகும். ’நேட்டிவ் சன்’ நாவல் விற்பனைக்கு வந்த மூன்றே வாரங்களில் 25 லட்சம் பிரதிகள் விற்றன.  இந்நாவல் அமெரிக்க இலக்கியத்தின் உன்னதம் என்று போற்றப்பட்டது. பிகர் தாமஸ் (Bigger Thomas) என்ற இருபது வயது இளைஞன் வறுமையின் பிடியில் சிக்கித் தடுமாறி இறுதியில் கொலைக் குற்றவாளியாகி மரண தண்டனை பெறுவதைச் சித்தரிக்கும் நாவலாகும்.

வட அமெரிக்காவின் சிகாகோ நகரில் கறுப்பின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் பிகர் தாமஸ், அவனுடைய தாய் மிஸஸ் தாமஸ், தம்பி பட்டி (Buddy) தங்கை வெரா (Vera) ஆகியோருடன் வாழ்கிறான். அந்த ஒற்றை அறை வீட்டில் அவர்கள் நால்வருடன் எலிகளும் குடியிருக்கின்றன. வீட்டின் பெண்கள் உடை மாற்றும்போது பையன்கள் இருவரும் சுவற்றை நோக்கி நின்று கொள்வார்கள். ஒரு காலைப்பொழுதில் எல்லோரும் அரைத் தூக்கத்தில் இருக்கும் போது வீட்டுக்குள் ஓடும் எலியை விரட்டிப் பிடிக்கிறார்கள் சகோதரர்கள்.

பிகர் இறந்த எலியைக் காட்டி தங்கையைப் பயமுறுத்தி விளையாடுகிறான். பிகரின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்து அவனை வீட்டு நிலைமையைப் புரிந்துகொண்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கிறார் அவனின் தாய். பிகர் தன்னுடைய தாயின் மீது வெறுப்பை உமிழ்கிறான். உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி எலிப் பொந்து போன்ற வீடுகளில் வாழும் கறுப்பின மக்கள் வாழ்வில் வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. பிகரின் தாய் நாள் முழுவதையும் தோத்திரப் பாடல்கள் பாடியே கழிப்பார். ”ஏழை எளிய மக்களின் துயரத்தையும், வலியையும்  மறக்கச் செய்யும் அபின் போன்றது மதம்” என்ற கார்ல் மார்க்ஸ் கூற்றிற்குச் சாட்சியமாக இருக்கிறார். தாயின் அதீத இறைப்பற்று பிகரை கடவுளிடமிருந்தும், சர்ச்சிடமிருந்தும் விலகி நிற்கவைத்தது. ’ஜிம் க்ரோ சட்டம்’ என்ற கொடுமையான பாகுபாடுச் சட்டம் நடைமுறையிலிருந்த காலமது.

கறுப்பின மக்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள். மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் என்று அனைத்திலும் பாகுபாடு. மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். தண்டல் தொகை, சிறைவாசம், வன்முறை வெறியாட்டம் என்பதுடன் உச்சகட்டமாக மரண தண்டனையும் வழங்கப்பட்டது. ’தி கிரேட் டிப்ரெஷன்’ எனப்பட்ட பொருளாதார நெருக்கடிக் காலம் என்பதால் நாடெங்கிலும் வேலையின்மையும், வறுமையும் தாண்டவமாடின. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது கறுப்பின மக்களே. கறுப்பின இளைஞர்கள் படிப்பறிவும், வேலை வாய்ப்புகளுமின்றித் தவித்தனர். விரக்தியின் உச்சியில் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழிகளை அவர்கள் அறியவில்லை. துப்பாக்கிக் கலாச்சாரம் இன்று போல் அன்றும் அமெரிக்காவில் இருந்ததால் கறுப்பின இளைஞர்கள் கைகளில் துப்பாக்கியும், கத்தியும் சரளமாகப் புழங்கின. இத்தகு நிச்சயமற்ற வாழ்வின் மொத்த உருவமாய் நாவலின் நாயகன் பிகர் விளங்கினான்.

நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது அவன் பொழுதுபோக்கு. ஏற்கனவே ஒரு முறை பிடிபட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான். கறுப்பினர்களுக்கான நிவாரண மையத்திலிருந்து அவனுக்கு ஒரு வேலைவாய்ப்புக் கடிதம் வருகிறது. வெள்ளையர் வீட்டில் அடிமை வேலை பார்ப்பதில் அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. இருப்பினும் தாயின் வற்புறுத்தலும், குடும்ப வறுமையும் அவனை உந்தித் தள்ளுகின்றன. அரை மனதுடன் வேலைக்குப் புறப்படுகிறான். சிகாகோ நகரின் மிகப் பெரிய செல்வந்தர் டால்டன் என்பவரின் வீட்டில் டிரைவர் வேலை.

டால்டன் சிகாகோ நகரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர். சிகாகோ நகரின் ’பிளாக் பெல்ட்’ எனப்படும் கறுப்பின மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் அவரது நிறுவனத்திற்குச் சொந்தம். எலிப் பொந்து போன்ற வீடுகளுக்கு வார வாடகை எட்டு டாலர்! கறுப்பின மக்களைச் சுரண்டிச் சேர்த்த பணத்தைக் கொண்டு தான, தர்மங்கள் செய்து ஊரில் நல்லபேர் எடுத்தவர். அவர் மனைவி கண் பார்வையற்ற அமைதியான பெண்மணி. அவர்களின் ஒரே புதல்வி மேரி டால்டன் வீட்டின் செல்லப் பெண்மணி. மேரி இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறாள். அவளுடைய நண்பன் ஜான் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினன். வீட்டின் தலைமைப் பணியாளராக பெகி எனும் வயதான வெள்ளைக்காரப் பெண் இருக்கிறார். ஒரு மாலைப் பொழுதில் பிகர் வேலையில் சேருகிறான்.

அவன் தங்குவதற்கென்று வசதியான தனிஅறை கொடுக்கப்படுவது கண்டு வியக்கிறான். பெகி அவனுக்கு நல்ல உணவளித்து அன்புடன் பழகுகிறார். அன்றிரவு மேரியை பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுதான் அவனுக்கான முதல் வேலையாக வந்தது. அவன் வாழ்வையே சீரழித்த வேலையாகவும் அமைந்தது. மேரி பல்கலைக்கழகத்திற்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு காதலன் ஜானைப் பார்க்கப் போகிறாள். பிகருடன் சகஜமாகப் பழகுகிறாள். கறுப்பின மக்களின் வாழ்க்கை முறை குறித்து அறிய விரும்புவதாகக் கூறுகிறாள். பிகருக்கு நண்பன் ஜானை அறிமுகப்படுத்துகிறாள். இருவரும் அவனிடம் பழகும்விதம் அவனுக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளைக்காரர்கள் கறுப்பின டிரைவரிடம் பழகும் விதமாக இல்லை என்பதறிந்து திகைக்கிறான். அவனிடம் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிப் பேசுகிறார்கள்.

கம்யூனிசம் பற்றிய சிறுகையேடுகளை அவனிடம் படிக்கக் கொடுக்கிறார்கள். சாப்பிடப் புறப்படும்போது, ஜான் டிரைவர் சீட்டில் அமர்ந்துகொள்கிறான். பிகரை நடுவில் உட்காரவைத்து அவனுக்கு மிக அருகில் மேரி உட்காருகிறாள். அவள் கூந்தலின் நறுமணம் பிகரை சஞ்சலப்படுத்துகிறது. பாரில் மது அருந்துகிறார்கள். பீரில் தொடங்கி ரம்முடன் முடிக்கிறார்கள். மேரியும், ஜானும் போதையில் மிதக்கிறார்கள். பிகர் நிதானத்துடன் இருக்கிறான். தான் ஒரு டிரைவர் என்பதை உணர்ந்தவனாக மிகவும் கவனமாக இருக்கிறான். பணக்காரப் பெண் மேரியின் வேலையாள் எனவே அவளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதே கடமையென அமைதியாக இருக்கிறான். நள்ளிரவு தாண்டிய பின்னரே மேரி வீடு செல்ல நினைக்கிறாள்.

வழியில் ஜானை இறக்கிவிட்டு வீடு வந்து சேருகிறார்கள். நேரம் காலை இரண்டு மணி! மேரியால் காரிலிருந்து  இறங்க முடியவில்லை. அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து பிகர் இறக்கிவிடுகிறான். காரை நிறுத்திவிட்டு அவள் வீட்டுக்குள் செல்வதைக் கவனிக்கிறான். கும்மிருட்டு! மயான அமைதி! படியில் ஏறமுடியாமல் மேரி தள்ளாடி விழுகிறாள். வேறுவழியின்றி அவளைத் தூக்கிக்கொண்டு அவள் படுக்கை அறைக்குச் செல்கிறான். அவளின் அழகிய முகத்தில் கண்ணாடிக் கதவிலிருந்து சிறிது வெளிச்சம்படுகிறது. அவளின் அழகிய பிம்பம் அவனைக் கிறங்கச் செய்கிறது. மது அருந்திய மயக்கமும் சேர்ந்துகொள்ள அவளின் முகத்தில் முத்தமிடுகிறான். அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு நகரும்போது அறைக்குள் மேரியின் தாய் இருட்டில் வருவது கண்டு திடுக்கிடுகிறான். அவன் அமைதியாக கட்டிலில் மேரிக்கு அருகில் பதுங்கிக்கொள்கிறான். மிஸஸ் டால்டன் மெல்லிய குரலில் மேரியைக் கூப்பிடுகிறாள்.

மேரியால் பேச முடியவில்லை. போதையில் முணங்குகிறாள். பிகர் பதறிப்போய் அவளின் மீது தலையணையைவைத்து இறுக்க மூடுகிறான். மேரி குடிபோதையில் படுத்திருப்பதைக் கண்டு தாயுள்ளம் வருந்துகிறது. மண்டியிட்டு கடவுளைப் பிரார்த்தனை செய்துவிட்டு அறையிலிருந்து மெல்ல வெளியேறுகிறார். அவர் கதவைச் சாத்திவிட்டுச் சென்றதும் மேரியை உற்றுப் பார்த்த பிகர் அதிர்ச்சியடைகிறான். அவன் அழுத்திப் பிடித்ததில் மூச்சுத்திணறி இறந்திருக்கிறாள். அவன் அறியாது செய்த கொலையாகிறது. அவளின் இறந்த உடலை எடுத்துக்கொண்டு வீட்டில் குளிர்காய்வதற்காக இருக்கும் உலையில் அவளைத் திணித்து எரித்துவிட நினைக்கிறான். அவளின் உடல் முழுவதும் உலைக்குள் நுழைகிறது.

ஆனால் தலை மட்டும் வெளியில் நீட்டிக் கொள்கிறது. வேறுவழியின்றி தலையை வெட்டி உள்ளே தள்ளிவிடுகிறான். உலையில் மேரியின் உடல் கொழுந்துவிட்டு எரிகிறது. தன்னுடைய அறைக்குள் அவன் நுழையும்போது காலை நான்கு மணி! கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்கத் திட்டமிடுகிறான். பழியை மேரியின் காதலன் ஜானிடம் போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்கிறான். மேரி காலையில் எழுந்து டெட்ராய்ட் ஊருக்குச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். பிகரிடம் விசாரிக்கிறார்கள். பிகர் காலை இரண்டு மணியளவில் மேரியை இறக்கிவிட்டுச் சென்றதாகச் சொல்கிறான். மிஸஸ் டால்டன் தானும் மேரி போதையில் படுத்திருந்ததைப் பார்த்ததாகக் கூறுகிறார். யாருக்கும் பிகர் தாமஸ் மீது சந்தேகம் வரவில்லை.

அடுத்த நாள் காலை பிகர் தன்னுடைய காதலி பெஸ்ஸியைப் பார்ப்பதற்குச் செல்கிறான். பதற்றத்திலிருந்து மீண்டு மன அமைதி அடைய நினைக்கிறான். பெஸ்ஸி வெள்ளைக்காரர்கள் வீட்டில் வேலை செய்து பிழைக்கும் கறுப்பினப் பெண். காலையிலிருந்து இரவுவரை அவளுக்கு கடுமையான வேலைச் சுமையிருக்கும். இரவு வீடு திரும்பியதும் குடித்துவிட்டு தூங்கச் செல்வாள். பிகரின் தாய் மதம் தரும் போதையில் கவலையை மறந்தார். பெஸ்ஸி மது தரும் போதையில் கவலையை மறந்தாள். பிகரும், பெஸ்ஸியும் குடித்துப் பொழுதைக் கழிக்கிறார்கள். பிகரின் மனம் அடுத்த குற்றத்திற்கு திட்டமிடுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சான் என்ன முழமென்ன? பெஸ்ஸியையும் திட்டத்தில் சேர்க்கிறான். மேரி கடத்தப்பட்டிருப்பதாகவும் பத்தாயிரம் டாலர் பணம் கொடுக்கும் பட்சத்தில் அவளை விடுவிப்பதாகவும் கடிதம் எழுதுகிறான்.

கடிதத்தின் கீழ் ’ரெட்’ என்று எழுதி கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் சின்னத்தையும் வரைந்து அனுப்புகிறான். பழியை ஜானிடமும், கம்யூனிஸ்ட் கட்சியிடமும் போட்டுவிட்டு தப்பிக்க விழைகிறான். கடிதத்தை அவனே டால்டனின் வீட்டுக்குள் போட்டுவிடுகிறான். மேரி காணாமல் போன செய்தி ஊரில் நெருப்பாய் பரவுகிறது. டால்டனின் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் படை குவிகிறது. ஊரின் மிகப் பெரிய புள்ளியின் வீட்டுப் பெண் காணவில்லை என்பது பத்திரிக்கைகளுக்குப் பரபரப்பான செய்தியாகிறது. டால்டனிடம் பத்திரிக்கையாளர்கள் விவரங்களைக் கேட்கிறார்கள். டால்டன் நண்பரின் உதவியுடன் விசாரணையை ஆரம்பிக்கிறார்.

அந்நேரத்தில் மேரியின் கடத்தல் பற்றிய கடிதத்தைப் பார்த்ததும், காவல்துறை உதவியை நாட விழைகிறார். பிகர் உலையின் கீழ் குவிந்துகிடக்கும் சாம்பலை அள்ளுவதற்கு நகர்கிறான். பத்திரிக்கையாளன் ஒருவன் உலையிலிருந்து வித்தியாசமான நெடிவருவதை நுகர்கிறான். எல்லோருடைய கவனமும் உலையின்பால் திரும்புகிறது. கொலை செய்யப்பட்ட மேரியின் உடல் உலையில் எரிக்கப்பட்டது தெரியவருகிறது. எரியாமல் மிஞ்சிய ஒரு எலும்புத் துண்டையும், கருகிய அவளின் கம்மல் ஒன்றையும் காண்கிறார்கள். பிகர் மெல்ல வீட்டிலிருந்து நழுவுகிறான். காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடத் தொடங்குகிறான்.

பெஸ்ஸியையும் கூட்டிக்கொண்டு ஓடுவதில் சிரமமாக உள்ளது. இருவரும் ஆளில்லாத குடியிருப்பில் ஒன்றில் ஒளிந்துகொள்கிறார்கள். அன்றிரவு பெஸ்ஸியைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு உடலைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடுகிறான். ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் சிகாகோ நகர் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். ஊரின் வெள்ளைக்காரக் கும்பல் ஒன்றும் வெறியுடன் தேடி அலைகிறது. கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் கல்வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். வெள்ளைக்காரப் பெண் ஒருத்தியை பிகர் என்ற கறுப்பின வெறியன் பாலியல் வன்முறை செய்தபின் கொன்றுவிட்டதாகச் செய்தியை நாளிதழ்கள் விதவிதமாக ஜோடித்து வெளியிட்டன. பிகர் அன்றிரவே கைதாகிறான்.

அதிகாரிகள் அவனைக் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவனிடம் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகக் கடிதம் எழுதி வாங்குகிறார்கள். பிகர் குடும்பத்திலிருந்து அனைவரும் அவனைப் பார்க்க வருகிறார்கள். வழக்கம்போல் அவன் தாய் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி வேண்டுகிறாள். பிகர் தனக்குச் செய்த துரோகத்தை மறந்து, பிகரைக் காப்பாற்றிட ஜான் முயற்சி எடுக்கிறான். மேக்ஸ் என்ற கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞரை பிகருக்காக வாதாட ஏற்பாடு செய்கிறான். இதனால் வெள்ளைக்காரக் கும்பல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டிக்கிறது. இக்கும்பலுக்கு  கம்யூனிஸ்டுகள் மீதும், கட்சியின் மீதும் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. பிகர் மரண தண்டனை உறுதி என்பதை உணர்கிறான்.

மேரியை பாலியல் வன்முறை செய்யவில்லை என்று அவன் சொல்வதை யாரும் நம்பவில்லை. கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்ததாக பிகர் குற்றம் சுமத்தப்படுகிறான். பக்ளி என்பவர் அரசு தரப்பில் வாதாடி பிகருக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும் என்கிறார். அவனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையில்தான் அனைத்து வெள்ளையினப் பெண்களின் பாதுகாப்பும் அடங்கி இருக்கிறது என்று வாதாடுகிறார். மேக்ஸ் கடைசிவரை பிகரைக் காப்பாற்றப் போராடுகிறார். குற்றங்களுக்குத் தண்டனை அளிக்கும்  நீதிமன்றங்கள் குற்றங்கள் எதனால் நடக்கின்றன என்பதையும் ஆராய்ந்திட வேண்டும் என்கிறார். வெள்ளையினத்தவர்களின் நிறவெறி தணியாத வரை சமூகத்தில் வன்முறைகளைத் தவிர்க்க முடியாது என்கிறார்.

பாகுபாடுகள் இருக்கும் பட்சத்தில் சமூகத்தில் குற்றங்களும் இருக்கத்தான் செய்திடும் என்கிறார். சுரண்டலற்ற. பாகுபாடுகளற்ற, மனிதர்களை மனிதர்களாக நேசிக்கின்ற, சமமாக மதிக்கின்ற சமூகம் உருவானால் மட்டுமே குற்றங்கள் இல்லாதிருக்கும் என்கிறார். நாட்டின் பெரும்பான்மைச் சமூகம் வெறுப்பு அரசியலைக் கையில் எடுக்கும்போது சிறுபான்மைச் சமூகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம். பெரும்பான்மைச் சமூகத்தின் வன்முறையை வன்முறையினாலேயே எதிர்கொள்ள சிறுபான்மைச் சமூகம் தள்ளப்படும். அமெரிக்க ஜனத்தொகையில் 12.6% மட்டுமே இருக்கும் சிறுபான்மைச் சமூகமான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

இதில் நாம் தவறிழைக்கும் பட்சத்தில் பிகர் போன்று வன்முறையில் ஈடுபடும் பல கறுப்பின மக்களைச் சந்திக்க நேரிடும். சிறுபான்மையினரின் குரலுக்கு மதிப்பளிக்கும் சமுதாயமே நல்லதொரு சமுதாயமாகத் திகழும் என்று நீண்ட உரையை ஆற்றுகிறார். பிகர் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவனுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அளிக்க வேண்டும் என்று உணர்ச்சி மேலிட வாதிடுகிறார். ஆனால் பாக்ளி கொலைக் குற்றத்தின் கொடூரத் தன்மையினைக் கணக்கிலெடுத்து பிகருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையைக் கொடுத்திட வேண்டும் என்று முறையிடுகிறார். இறுதியில் பிகருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

பிகர் தேவையின்றி கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், அதன் உறுப்பினர் ஜான் மீதும் பழியைச் சுமத்த முயன்றதற்காக வருந்துகிறான். கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் மேக்ஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜானையும் நன்றிப் பெருக்கோடு பார்த்து விடை பெறுகிறான். சமத்துவமற்ற சமுதாயம் இருக்கும்வரை பிகர் போன்ற இளைஞர்களை மரண தண்டனைக்கு ஆளாக்கி எலெக்டிரிக் நாற்காலியில் உட்காரவைத்துக் கொல்வது நடந்துகொண்டுதான் இருக்கும்! இன, மத, சாதிவெறிகள் ஒழியாதவரை நாடுகளில் வன்முறைகள் நடந்தவண்ணம்தான் இருக்கும்! இன்னும் எத்தனை ஜார்ஜ் ஃப்ளாயிடுகளை இனவெறியின் கால்களில் நசுக்கிக் கொல்லப்போகிறோம்!

Show 1 Comment

1 Comment

  1. Raja kumari

    சரியான நேரத்தில் எழுதப்பட்ட அறிமுகம். அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *