*நட்பிற்கு ஏது இலக்கணம்* சிறுகதை – ம. மீனாட்சிசுந்தரம்

Natppirku Ethu Ilakkanam Short Story By M. Meenakshisundaram. *நட்பிற்கு ஏது இலக்கணம்* சிறுகதை - ம. மீனாட்சிசுந்தரம்இன்று காலையிலிருந்தே எனது முகநூல் பக்கத்தில் நாளைக்கான எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. எனது பிறந்தநாள் என்றால் என் உயிர் நண்பன் நாணாவை மறக்க முடியாது, அவனும் மறந்திருக்க மாட்டான். நாளை கண்டிப்பாக நேரில் வாழ்த்துச் சொல்ல வருவான். இந்த நினைப்பிலேயே உறங்கிப்போனேன்.

மறுநாள் அவன் நினைப்போடுதான் விடிந்தது. அவனோடு பழகிய இந்த ஆறு வருடத்தில் அவனோடு மட்டும்தான் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறேன். ஆகவே கோவிலுக்குக் கூட செல்லாமல் அவனுக்காகக் காத்திருந்தேன்.

வருவானா………?

இந்த கேள்வி எனக்குள் எழுந்தபோது மதியம் மணி இரண்டு. இனி அவன் வருவதற்கு வாய்ப்பில்லை. கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் இப்போது இல்லை. கண்களில் கண்ணீர். எனக்கு ஆத்மார்த்தமான நண்பன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கும் நான் மட்டும்தான் ஆறு மாதத்திற்கு முன்பு வரையில்.

எங்களது நட்பு முறிவதற்கான காரணம் வேடிக்கையானது என்றாலும், இப்படி ஒரு சிந்தனையுள்ள மனிதர்களும் இச்சமூகத்தில் இருப்பார்களா? எனும் கேள்வியும் எனக்குள் எழுந்ததில் வியப்பில்லை தான். இதற்கு உதாரண புருசர்கள் இந்த உலகத்தில் உண்டென்றால் அது நாங்களாகத்தான் இருக்க முடியும் என்பதை நான் நினைத்ததில் தவறில்லையே!?

நேரில் வரப்பிடிக்கவில்லை என்றாலும் போனிலாவது வாழ்த்துச் சொல்லலாமே? அப்படியென்ன அவனுக்குத் துரோகம் செய்துவிட்டேன். அவன் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைத்தது தவறா?.

மகேஸ்வரியுமா? பாவம் அவள். அவளுக்கு எனது பிறந்த நாள் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் கணவனுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும். பாவம் பெண்கள். நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடிமைகள்.

பிறந்த நாள் கேக்கும், அவனுக்குப் பிடித்த உணவு வகைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. காலையிலிருந்தே உண்ணா நோன்புதான். பசியிலும் நாணாவின் நினைப்புதான்.

பரமசிவமான என்னை ‘பரமு‘ என்று அவனும் நாராயணனான அவனை நாணா என்று நானும் கூப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டோம்.

நாணாவின் நினைப்பும் ஆறு மாதங்களுக்கு முன் அவன் கோபத்தில் பேசியதும் என் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

“பரமு என்னோட கல்யாணத்துக்கப்புறம் நீ என்ன விட்டுப் பிரிஞ்சுருவியாடா?“.

”இது ஒரு கேள்வியாடா.“

“அப்படீன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம். அப்பாவுக்கு இப்பவே போன் பண்ணி சொல்லிடுறேன்.“

“நீ பேசுறது சின்னப் பிள்ளைத்தனமா இருக்குடா“

“என்னடா வடிவேலுன்னு நெனப்பா?“

“ஜோக்கடிக்கிற நேரமாடா இது.“

“சொல்லுங்க சார்“

“அம்மாவுக்கு அப்புறம் மனைவிதாண்டா வாழ்க்கை”

“ஐம்பது வயசுக்காரன் மாதிரி பேசுற.“

“நண்பனுக்காக கல்யாணமே வேண்டாம்னு சொல்றவன்னா அது நீ மட்டுந்தாண்டா.“

“நீ இல்லாத ஒரு நாளக்கூட என்னால நெனச்சுப் பார்க்க முடியல? இன்னிக்கு உன்னாலதானடா உயிரோட இருக்கேன். எம் மனசு உனக்கு புரியலையா? உம் மனச கல்லாக்கிட்டயா? முன்னப்பின்ன தெரியாதவளுக்காக உன்னவிட்டுப் பிரியணுமா?“

“உலகத்துலயே சிறந்த பொன்மொழின்னா இதுதாண்டா.. சினிமாவுலகூட இப்படி வசனம் பேசியிருக்கமாட்டான் கதாநாயகன். ஆமா, நீ என்னய மொத மொத பாக்கும்போதும் நானும் முன்னப்பின்னத் தெரியாதவந்தான.“

சிறிது நேர மௌனத்திற்குப் பின்

“ஒத்துக்கிறேன் ஆனா ஒரே ஒரு நிபந்தனை”

“அப்பாடா!“ நிம்மதிப் பெருமூச்சோடு

”சொல்லுப்பா”

“கீழ உள்ள வீடு காலியாகப் போகுது. கல்யாணத்துக்கப்புறம் நா அதுக்கு போயிடறேன். நீ. இந்த வீட்லயே இருந்துறேன்.“

“பாக்கலாம்.“

“என்னடா, பாக்கலாம். சரின்னு சொல்லுடா ப்ளீஸ்.“

அவனைத் திருப்திப்படுத்துவதற்காக “சரி“ என்றேன்.

அவனது திருமணத்திற்கு முன் ஒரு முன்னிரவில் அவனோடு பேசியது நினைவில் வந்து போனது.

மகேஸ்வரி அவனுக்கு மனைவியானாள்.

அவனது விருப்பப்படி நான் மேல் வீட்டிலும், அவன் கீழ் வீட்டிலும் இருந்தோம்.

ஒரு மாதம் உருண்டோடியது.

அவன் வார நாட்களில் வேலை முடிந்து வந்தால்கூட இரவு பதினோரு மணிவரை என்னோடுதான் பொழுதைக் கழித்தான். விடுமுறை நாட்களிலும் அவன் மனைவியோடு இருப்பதை தவிர்த்து வந்தது, எனக்குள் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவன் நிச்சயமாக மாறப் போவதில்லை. அப்போதே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

அதன்படி, ஒரு ஞாயிறு காலை. அவன் என்னை பார்க்க வந்திருந்தபோது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், “நீ செய்றது பச்சத் துரோகண்டா. உன்னோட மனைவி பொம்மையாடா. பகல் பூரா வீட்டுக்குள்ளயே அடஞ்சி கிடக்குதுடா பாவண்டா அந்தப் பொண்ணு. புருசனோட வெளியில போகணும்னு அதுக்கும் ஆசையிருக்குந்தான.“

“நீ என்ன வக்காலத்து. அவளுக்கு ஆசையிருந்தா அவ கேக்கலாந்தான.“

“கல்யாணமான புதுசுல எந்த மனைவியும் கேக்கமாட்டாங்க. இயற்கையாவே நம்ம பொண்ணுங்களோட மனசுடா அது. நாமதான் அவங்க மனசப் புரிஞ்சுக்கிட்டு நடக்கணும்…“

“எப்படா கதாசிரியரான?“

“ஆமாடா உன்ன வச்சே ஒரு கதை எழுதப்போறேன்.‘ கதைக்கான தலைப்பு! நண்பனுக்காக மனைவியை துறந்தவன்.“

“அண்ணா சூப்பர்,.“ கைகளைத் தட்டியவாறே மகேஸ்வரி வீட்டுக்குள் வந்ததை சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

“வாம்மா மகேஸ்வரி“

“அண்ணா நா பேசலாமா?“

“தாராளமா பேசலாம்“

நாராயணன் சிரித்துக்கொண்டே“கதாசிரியரா இருந்து எப்படா வசனகர்த்தாவ மாறின?“

“இதுக்கெல்லாம் காரணகர்த்தா சாட்சாத் என்னோட நண்பன் நாணாதான்.“

எங்களின் சிரிப்புக்கு நடுவில் மகேஸ்வரி “என்ன கொஞ்சம் பேசவிடுறீங்களா?“

“சாரிம்மா“

“எங்கப்பா நேற்றைக்கி போன் பண்ணி கேட்டாங்கண்ணா. மாப்பிள சந்தோசமா வச்சுக்கிறாரா? கோவில், சினிமா, பீச்சுன்னு கூட்டிட்டுப் போனாரா?

இப்பல்லாம் உங்கம்மாவும் நானும் வாரத்துக்கு ஒரு சினிமா, ஹோட்டல்னு போயிட்டு இருக்கோம். உன்னோட அம்மா சந்தோசத்துல ஒரு சுத்து பெருத்துப் போயிருக்காம்மா.“ முகம் முழுக்க ஆனந்தம் பொங்கி வழிய ஒரே மூச்சில் பேசி முடித்தாள் மகேஸ்வரி.

Natppirku Ethu Ilakkanam Short Story By M. Meenakshisundaram. *நட்பிற்கு ஏது இலக்கணம்* சிறுகதை - ம. மீனாட்சிசுந்தரம்

“மகேஸ்வரி முகத்தப் பாத்தியா, அவங்க அப்பா. அம்மாவ சந்தோசமா வச்சுக்கிறதுக்கே இவ்வளவு சந்தோசம்னா, நீ கூட்டிட்டுப் போனா மகேஸ்வரி முகம் எப்படியிரும்னு நினைச்சுப்பாரு. இதுதாண்டா வாழ்க்கை. மனுசன படைச்சதே சந்தோசத்த அனுபவிக்கிறதுக்குத்தான்.“

மௌனமாய் உட்கார்ந்திருந்தான்.

இதுதான் சரியான நேரம்.

“நாணா, இப்ப நா சொல்லப்போறத பொறுமையா கேளு.“

“நீ சொல்லப் போறது எனக்குப் பிடிச்சிருக்கணும்.“

“எல்லாமே ஒன்னோட நன்மைக்குத்தாண்டா,“

“சரி விசயத்துக்கு வா“

“நானு வேற வீடு பார்த்துட்டேன்டா.“

“மெய்யாலுமா.“ சிரித்துக் கொண்டே மெட்ராஸ் பாஷையில் கேட்டான்.

“மெய்யாலுந்தாண்டா. சத்தியமா.“

“என்ன சீண்டிப் பார்க்கிறயா?“

“இப்ப நீ குடும்பத்தலைவன்டா. விளையாட்டா பேசுறதெல்லாம் விட்ரு.“

“நீ நம்பிக்கை துரோகிடா.“

அவன் மீது கோபம் வரவில்லை.

மாறாக “உனக்குன்னு மனைவி குடும்பம்னு ஆயிடுச்சு. நீங்க சந்தோசமா இருக்கணுண்டா.“

“பக்கத்தில நீ இருந்தா எங்க சந்தோசம் போயிருமோ!.“

“இந்த முப்பது நாளா உன்ன பாத்துக்கிட்டுத்தானடா இருக்கேன். வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தா. மாடிக்குத்தான் நேர வர்ற. நானாடா உனக்கு பொண்டாட்டி. வீட்ல உனக்குன்னு ஒருத்தி இருக்கிறத மறந்துர்ற. அப்பா அம்மா உறவுன்னு இருந்துட்டு எல்லாமே நீதான்னு ஒரு எதிர்பார்ப்போடதானடா அவங்களும் வந்திருப்பாங்க. உங்களுக்கு. சமைச்சுப் போடறதுக்கும், கட்டில் சுகத்துக்கும், பெத்துப் போடறதுக்கும் மட்டும்தான் பொண்டாட்டியா? அவங்களுக்கும் ஆசையிருக்குண்டா. அவங்கள சந்தோசமா வச்சிக்கிறதும் ஒரு ஆணோட கடமைதான்.“

“பச்சத் துரோகிடா நீ.“

“நட்பு வேற வாழ்க்கை வேறடா.”

“நடிக்காதடா, உம் மூஞ்சில முழிக்கிறதே பாவம்“

“என்னங்க நீங்க பேசுறதுல நியாயமே இல்ல. அவரு பேசுனதுல என்ன தப்பு. நம்ம சந்தோசமா இருக்கணுங்கிறதுதான் அவரோட மனசு முழுக்க இருக்கு“

“மனசாவது மண்ணாங்கட்டியாவது சுயநலம் பிடிச்சவன்.“

“கோபத்துல வார்த்தைகள விடாதீங்க. நண்பன்னா என்ன வேணாலும் பேசிடலாமா? “

“சரி விடும்மா. கோபத்துல பேசுறான். எம்மேல வச்சிருக்கிற அன்பு. அவன் கண்ண மறைக்குது. போகப் போக புரிஞ்சுப்பான்.“

“நானு புரிஞ்சுதாண்டா பேசுறேன். இதுதான்டா கடைசி நானும் நீயும் பேசுறதும் பாக்குறதும்.“ .

இப்படியும் ஒரு விசித்திர குணம் உள்ளவர்கள் இருப்பார்களா? மகேஸ்வரி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

கணவனின் நியாயமற்ற கோபமும் வார்த்தைகளும் அவளுக்குள் கோபத்தை உண்டாக்கியதை அவளது முகத்திலிருந்து தெரிந்துகொண்டேன்.

”அவருக்காக மன்னிப்புக் கேட்டுக்கிறேண்ணா.” மகேஸ்வரி

“அவனோட கோபமெல்லாம் மத்தாப்பு மாதிரிதாம்மா. இதுதாம்மா என்னோட விலாசம், கண்டிப்பா வாங்க”

குழந்தைத்தனமான அவனது பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இருந்தாலும் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் என்னை அழ வைத்தது.

அவனோடு பழகிய ஆறாண்டு காலத்தில் என் மீது அளவற்ற அன்பு வைத்திருந்ததை அனுபவித்தவன். நிச்சயம் மாறமாட்டான் என்று தெரிந்துதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்

இந்தச் சணம் கூட என்னைப் போலவே அவனும் என்னை நினைத்துக் கொண்டுதான் இருப்பான்.

“தலை வலிக்குதுன்னு லீவு போட்டுட்டு தூங்காம இருந்தா, தலைவலி போயிருமா? மணி ரெண்டாகுது சாப்பிடவும் இல்ல. இதுக்கு நீங்க ஆபீஸ் போயிருக்கலாம்.“ மகேஸ்வரி.

“மனசு சரியில்லை.“

“உங்க நண்பன் ஞாபகந்தான.“

“உனக்கு எப்படி…..?“

“இந்த ஆறு மாசமா இதுதான நடந்துக்கிட்டிருக்கு.“

“அவன மறக்க முடியலையே!“

“இவ்வளவு அன்பு வச்சிருக்கிற நீங்க அன்னிக்கு ஏன் அப்படி பேசுனீங்க.“

“……………………..“

“ஒண்ணு அவர மறந்துடணும். இல்ல அவரோட பேசணும். இரண்டுங்கெட்டான இருக்கிறது…………..“

“அப்படி அவன மறக்கிறதா இருந்தா என்னோட………………………“

“வாய மூடுங்க. நான் ஒருத்தி இருக்கேன்”

அவனையறியாமல் அவன் கன்னத்தில் வழிந்தது கண்ணீர்.

”உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?”

“கேளு“

“ஆமா அவர மறக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன உங்களுக்குள்ள……..?“

நாணாவின் கண்கள் மீண்டும் குளமாயின.

“இன்னிக்கு இந்த உயிர் இருக்கிறதுக்கு காரணமே அவந்தான்.”

சிறிது நேர மௌனத்திற்குப் பின் தொடர்ந்தான்…….

”இன்னிக்கு உயிரோட இருக்கேன்னா அவன் போட்ட பிச்சைதான். ஒரு விபத்தில சிக்கி அநாதையாய் ரோட்டில் கிடந்த என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தது அவந்தான். ரெண்டு நாள் கழிச்சு கண்ணு முழிச்சப்போ, இவன்தாம்பா கடவுளா வந்து உன்ன காப்பாத்தினது. அதுமட்டுமில்ல அவனோட உதிரத்தயும் குடுத்து காப்பாத்திருக்காம்பா.

அவனுக்கு நன்றி மட்டும் சொன்னா போறாது. உன்னோட ஆயுசு முழுக்க அவன மறந்துறாத. அப்பா அன்னிக்கு சொன்ன வார்த்தைகளை இப்போது நினைச்சாலும்………………….”

அந்த விபத்துதான் முன்பின் தெரியாத எங்களின் நட்புக்கு விதை. அன்று முதல் இணைபிரியாத எங்களது நட்பு முறிவதற்கு காரணமே நீதான்.“

அவனது குழந்தைத்தனமான பேச்சையும், தேம்பித் தேம்பி அழுததையும், நட்பின் மற்றுமொரு பரிமாணத்தையும் பார்த்த மகேஸ்வரி அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டதோடு;

“நம்மளோட சந்தோசத்துக்காக அவரு தனியா போனதுக்கு அவருக்கு நீங்க நன்றி சொல்றத விட்டுட்டு இந்த ஆறு மாசமா பிரிவுங்கிற தண்டனைய கொடுத்துட்டீங்க. பாவம் அந்த அண்ணா”

ஆமா அவனோட மனச புரிஞ்சுக்காத பாவி மட்டுமில்ல மகா மடையன்”

”இப்ப அவரு மேல இருந்த கோபமெல்லாம் தீர்ந்திருச்சா?. இன்னிக்கு அவருக்கு பிறந்த நாள்………..“

“உனக்கு எப்படி…………….?“

‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரமு. உன்ன நேரில பார்த்துச் சொல்றதுக்கு எனக்குக் கூச்சமா இருக்குடா. உம் மனசு வலிக்க பேசினதுக்கு என்ன மன்னிச்சுரு.‘

‘‘இன்னிக்கு உங்க டைரியில நீங்க எழுதி வச்சிருந்தது.“ மகேஸ்வரி.

“அவன மறக்க முடியல. நேரில பார்க்கிறதுக்கும் திராணி இல்ல”.

‘இன்னுமாடா கோபம் தீரல. என்னை மறந்துட்டியாடா? ஆனா நானு மறக்கலடா உன்ன. மறக்கவும் முடியல.‘ நாணாவின் போட்டோவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தபோது, ’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே‘ என் செல்போனின் ரிங்டோன்.

புதிய எண். பேசியது பெண் குரல்.

மகேஸ்வரிதான் என் மூளை உறுதிப்படுத்துவதற்குள்,

“அண்ணா வாழ்த்துக்கள். நலமோடும் வளமோடும் நீங்க நீடூழி வாழணும்ணா.“

“நன்றிம்மா“

“நாணாவும் நீயும் எப்படிம்மா இருக்கீங்க?“

“சந்தோசமா இருக்கோம்ண்ணா.“

“எப்பம்மா வருவீங்க“

“வரோம்ணா.“

அதற்கு மேல் பேச நா எழவில்லை.

அடுத்த ஒருமணி நேரத்தில் அழைப்பு மணி ஓசை கேட்டு, கதவு திறக்க. இது பிரமையா?

மகேஸ்வரியின் அருகில் நாணா. மகிழ்ச்சியின் உச்சத்தில் நான். ‘அதுக்குள்ள எப்படி……?’

எனக்கு நெருக்கமாக என் உயிர் நண்பனின் முகம். அவன் மூச்சுக்காற்றை என் மூச்சுக்காற்றோடு கலந்து சுவாசித்தேன். கண்ணீரோடு கட்டி அணைத்துக்கொண்டான். வார்த்தைகள் வரவில்லை. இருவர் முகங்களிலும் மாறி மாறி மகிழ்ச்சியும், கண்ணீரும். மகேஸ்வரியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.