பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களால் 1876 ஜுனில் எழுதப்பட்டு அவர் மறைவிற்கு பின் 1896 ல் ஜெர்மனியில் வெளியான “மனித குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” எனும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பில் சில குறிப்புகள்……
தற்போது வரை கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் ஆதிமனித இனத்தின் தோற்றுவாய் ஆப்ரிக்காவே ஆகும்..
பனிக்காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தின் தென்பகுதி உறைய சூழ்நிலை மாற்றத்தால் குரங்கினங்களில் ஒரு பகுதி மரத்திலிருந்து இறங்கி பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நேராக நிமிர்ந்து நின்றதும்,கைகள் முழு விடுதலை அடைந்ததும் மனிதகுரங்கு மனிதனாக மாறியதில் மிகவும் தீர்மானகரமான அம்சங்கள்…
இருகால் நடை தோன்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு உழைப்புக்கருவிகள் உருவாக்கப்பட்டன.
கால்களின் இயக்கத்திலிருந்து கைகள் விடுதலை அடைந்ததும் அவைகள் மென்மேலும் கருவிகளை உருவாக்கியதும் அதன் மூலம் இயற்கையின் மீது செலுத்திய தாக்கமும் மனிதகுலத்தின் வளர்ச்சியின் போக்கில் மிகப்பெரும் பாய்ச்சலை உருவாக்கியது.
உழைப்புக்கருவிகளை செய்வதிலிருந்து தான் உழைப்பு ஆரம்பமாகிறது.கை உழைப்பிற்கான கருவி மட்டுமல்ல.உழைப்பின் விளைபயனும் அதுவே.
கருவிகளைப் பயன்படுத்தி உழைப்பில் ஈடுபடுவதும்,கூட்டுச்செயல்பாடுகளும் அதையொட்டிய மூளையின் வளர்ச்சியுமே மொழியின் வளர்ச்சியை தீர்மானித்தது.
மூளையின் செயல்பாட்டிற்கான கூடுதல் தேவையை அக்காலத்தில் மாமிச உணவே பூர்த்தி செய்தது.
மூளையின் அளவு பெரியதானதும் தாவர உண்ணிகளை விட சீரண மண்டலத்தின் நீளம் குறைவானதும் மாமிச பயன்பாட்டிற்கு பின் ஏற்பட்ட்வை.மேலும் இவைகள் பரிணாம வளர்ச்சியோடு பொருந்தின.
ஒரு விலங்கு தனது சூழலை பயன்படுத்த மட்டுமே செய்கிறது.வெறும் இருத்தலில் மட்டுமே மாற்றங்களை உண்டாக்குகிறது.ஆனால் மனிதன் தனது மாற்றங்களால் தனது குறிக்கோளுக்கு சூழலை ஊழியம் புரியச் செய்கிறான்.இந்த வித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பே…
உண்ணத்தக்கவற்றை எல்லாம் உண்ணக் கற்றுக்கொண்டதைப் போல மனிதன் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழவும் கற்றுக்கொண்டு உலகம் முழுவதும் வியாபித்தான்..
கைகள்,பேச்சு உறுப்புகள்,மூளை இவற்றினுடைய ஒருங்கிணைத்த செயல்பாடுகளால் சமூகத்தில் மனிதன் மேலும் மேலும் சிக்கல் மிகுந்த காரியங்களை நிறைவேற்றி குறிக்கோள்களில் வெற்றி பெற்றான்…
விருப்பு வெறுப்பின்றி உற்று நோக்கினால்…
உழைப்பே பிரதானம்…
உழைப்பே ஆதி நகர்வின் அடித்தளம்..
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
தேனி வெங்கட்
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்