திரை விமர்சனம்: ரேவந்த் கொருகொண்டாவின் நாட்யம் – இரா இரமணன்பாரம்பரியமும் நவீனமும் கலந்த கலைப் படைப்பு

‘நாட்யம்’ அக்டோபர் 2021இல் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம். சந்தியா ராஜு எனும் நாட்டியக் கலைஞர் தயாரித்துள்ளார். அவரே முதன்மைப் பாத்திரத்திலும் நடித்துள்ளார். ரேவந்த் கொருகொண்டா எழுதி இயக்கியுள்ளார். சந்தியா ராஜு, கமல் காமராஜ், ரோஹித் பேஹல், ஆதித்ய மேனன்,சுபலேகா சுதாகர், பானுபிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

நாட்யம் எனும் கிராமத்தில் உள்ள கோயிலில் அங்குள்ள பெண் கடவுள் எழுதித் தந்ததாக நாட்டியக்கலை சாஸ்திர ஏடுகள் உள்ளன. அந்தக் கோயில் பிரிட்டிஷ் ஆட்சியில் ராணுவத்தால் மூடப்பட்டு சுதந்திரத்திற்குப் பிறகு திறக்கப்பட்டபோது இந்த ஏடுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அங்கு காதம்பரி எனும் நாட்டியப் பெண்மணிக்கு சிலையும் உள்ளது. ஆண்டுதோறும் அங்கு நாட்டிய விழா நடைபெறுகிறது. குருஜி என்பவர் அந்தக் கிராமத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். காதம்பரியின் வரலாற்றை பிரிட்டிஷ் வீரர் ஒருவரின் டைரியின் மூலம் அறிந்த அவர் அதை தன் மனைவியைக் கொண்டே நாட்டிய நாடகமாக நடத்த முயற்சி செய்கிறார்.

கோயில் அறங்காவலர் காதம்பரி கதையை நடத்தினால் ஊருக்கு கேடு விளையும் என்று கூறி தடுக்கிறார். குருஜியின் மனைவி பாம்பு கடித்து இறந்துவிடுகிறார். அது முதல் யாரும் காதம்பரி கதையை நடிக்கக் கூடாது என்று குருஜியும் கூறிவிடுகிறார். அவர் பள்ளியில் பயிலும் சிதாரா எனும் பெண் சிறு வயதிலிருந்தே காதம்பரி கதையை நாட்டியமாக ஆட வேண்டும் என்று விரும்புகிறாள். முதலில் சிறுமி என்பதால் அதற்கு மறுப்பு தெரிவிக்காத குருஜி பிறகு தடுத்து விடுகிறார்.

நகரத்தில் மேலை நாட்டுப் பாணி நடனப் போட்டியில் வெற்றி பெற விரும்பும் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்து நடனக் காட்சிகளைக் காண்கிறான். அங்கேயே தங்கி நடனம் பயில்கிறான். ஒரு எதிர்பாராத நிகழ்வினால் சிதாரா அவனுடன் நகரத்திற்கு வந்து மேல்படிப்பு படித்துக் கொண்டே அவனுடைய நாடகக் குழுவில் இணைந்து செயல்படுகிறாள். ஆனால் காதம்பரி கதையை தன்னுடைய முதல் அரங்கேற்றமாக செய்ய வேண்டும் என்கிற ஆவல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் அது நிகழும்போது ஏன் அறங்காவலர் காதம்பரி கதையை நடிக்கக்கூடாது என்றார் என்பது வெளிப்படுகிறது. நாட்டிய சாஸ்திரங்களை எழுதியது பெண் கடவுள் இல்லை; காதம்பரி எனும் பெண்தான். இந்த உண்மை தெரிந்தால் அந்தக் கோயிலை சுற்றியுள்ள மகத்துவம் போய்விடும்; பெருங்கூட்டமாக வரும் மக்கள் வரமாட்டார்கள்; தன் வருமானம் போய்விடும் என்பதாலேயே அறங்காவலர் அவ்வாறு கதை கட்டிவிட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க இசையும் நாட்டியமும் நிறைந்த படம். கதையம்சம், லாஜிக் போன்றவை பல இடங்களில் பலவீனமாக உள்ளன. ஆனால் கதாநாயகி பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தியா ராஜுவுக்கு முதல் படம் என்பது போலில்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அவரே நாட்டிய காட்சிகளையும் அமைத்துள்ளார். இந்தியாவில் பரத நாட்டியம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; மேலை நாட்டு நடனம் இன்னொரு பக்கம் நடைபெறுகிறது; இரண்டின் வேறுபட்ட சூழ்நிலைகளை படம் பிடிக்கிறது. முன்னதன் இறுக்கமும் பின்னதன் நெகிழ்வுத்தன்மையும் பார்க்க முடிகிறது. இரண்டாவது வகை நடனங்களையும் இணைக்க முடியும் என்று கூறுகிறது படம். ஒரு இடத்தில் எளிய மக்கள் நாட்டுப்புற நடனம் ஆடுவதைக் காட்டி எல்லாவற்றிலும் நடனம் இருக்கிறது என்பதையும் லேசாக சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக இம்மாதிரிப் படங்களில் பாரத நாட்டியம் தூக்கிப் பிடிக்கப்படுவதுடன் கடவுள் தொடர்பான நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால் இதில் நடனத்தின் நோக்கமே மக்களுக்கு உண்மைகளை சொல்வது என்பது வலியுறுத்தப்படுகிறது. அந்த விதத்திலும் பாராட்டலாம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.