நா.வே.அருள் இன் கவிதைகள்
1
சதுரங்க வேட்டை
************************
ஒரு பொக்கை வாயைப்போல
வசதியான அகிம்சை உண்டியல்
எதுவுமில்லை.
அதில்தான்
வரிசையாகத் தோட்டாக்களைப்
பதுக்கி வைக்க முடியும்.
2
மகாத்மா வேட்டைக்கு ஆயுதம் தேவையில்லை
*****************************************************************
காலம் முகமூடியணிந்து
கடந்த காலத்திற்குத் திரும்புகையில்
அதிர்ச்சியான சம்பவங்கள்
மீண்டும்
வெள்ளைக்காரனின்
பளபளக்கும் நாற்காலிகள்.
மூழ்கும் சுதேசிக் கப்பல்கள்.
வெள்ளைக்காரன் தவறவிட்ட
பறிக்கவேண்டிய உயிர்களின்
பட்டியல்.
கறுப்பு மனிதர்கள் மீது
தடதடத்துச் சவாரி செய்யும்
வெளிர் மஞ்சள் குதிரைகள்.
ஓட்டப் பந்தயத்தில்
ஆமைகளை அச்சுறுத்திய முயல்களின் வாயில்
வேட்டை மிருகங்களின்
வெறுப்பு மொழி.
அசையும் நாக்குத்
தோல் துப்பாக்கியில்
நிரப்பி வைக்கப்பட்ட
புனித நூல் தோட்டாக்கள்.
குதிர்களில் சேகரித்த
லாயங்களின் குதிரை எலும்புகள்.
எஞ்சிய மகாத்மாக்களைக் கொல்வதற்கு
எளிய வழி
கடவுள் பாடல்கள் ஒலிக்கும்
மைதானத்தில்
கொல்லப்பட்ட ஒருவரின் வாயிலிருந்து உதிர்ந்த
கடைசி வார்த்தையைத்
திரும்பத் திரும்ப பிரயோகித்தல்….
‘ஹே ராம்’.
3
நாதுராமின் துருப்பிடித்த கைத்துப்பாக்கி
*********************************************************
வெளியிட காணொளிகள்
தயார்.
அலமாரிகளில்
அடுக்கிய பாலியல் உறுப்புகள்.
இணையத்தின் சமையலறையில்
உப்புமா கிண்டுவதற்கு
ஒரு சிட்டிகை உப்பு
போதுமான அளவு பொய்களின் ரவா.
புதிய குற்றங்கள்
கொலையாளிகளே இல்லாத நகரத்தில்
ருசுவாகாத கொலைகள்
நடைமுறைக்கு வந்த
நவீன நவகண்டம்
மீன் தொட்டிகளில்
துள்ளும்
அறுபட்ட தலைகள்
கடவுளை நடுத்தெருவில் வைத்துப் புணருகிறவர்களின்
முதல் வார்த்தை
‘புனிதம்!’
‘தீட்டு’ குளத்தில் மூழ்கிச் செத்தவர்களின்
கணக்கெடுப்பு
பாதியிலேயே நிற்கிறது.
வித்தியாசம் இவ்வளவுதான்…
சீதையைக் கொள்ளையடித்தவனுக்கு
ஒரே உடலில் பத்துத் தலைகள்
இராமனைக் கொள்ளையடித்தவர்களுக்கு
ஒரே தலையில்
பத்து உடல்கள்
கொலைக் கூடங்களில்
மகாத்மாவின் பஜனை மடங்கள்.
ஹே ராம்!
எழுதியவர் :
-நா.வே.அருள் இன்
“வரம் வாங்கிவிட்டுக் கடவுளைக் கொன்றவர்கள்”
கவிதைத் தொகுப்பிலிருந்து.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.