நவீன தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் பலரைப் பற்றிய அறிமுகம் ஏதும் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இலக்கிய வாசிப்புக்குள் வந்திருக்கும் பலருக்கு இல்லை. சொல்லப் போனால், தமிழ் இலக்கிய திறனாய்வாளர்கள் மற்றும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் யார் யாரை தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்கள்தான் நவீன தமிழ் இலக்கியம் என்ற மயக்கம் வாசகர் பலருக்கு உண்டு. நானே அப்படி இருந்தவன்தான். இப்படியான அரைகுறை வாசிப்பு உள்ளவர்களை தட்டி எழுப்பி, ‘இவர்கள்தான் உன்னுடைய பாட்டன்கள், அவர்களைப் பற்றி இதுவெல்லாம் தெரிந்து கொள்’ எனும்படியான அறிமுகத்தை – அஞ்சலிகள் வாயிலாகவும் அறிமுகங்கள் என்றபடிக்கும் பழ. அதியமான் தன்னுடைய “நவீனத் தமிழ் ஆளுமைகள் – அஞ்சலிகள், அறிமுகங்கள்” என்ற நூலில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

விஜயபாஸ்கரன், சிட்டி, இரா.இளவரசு, க.நா.சு., தி.ஜ.ர., கு. அழகிரிசாமி, வை.கோவிந்தன், ரா.அ.பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், மற்றும் வல்லிக்கண்ணன் என்ற பெருந்தகைகளை அஞ்சலிகள் வழியாகவும், அறிமுகங்கள் வழியாகவும் நம்முள் கடத்துகிறார். எந்தக் கட்டுரையிலும் அழுகை இல்லை என்பதும், காலமாகிப் போய் விட்டார்கள் என்ற காரணத்தினால் தேவையில்லாமல் புகழ்ந்து தள்ளுதல் என்பதும் சுத்தமாக இல்லை. அஞ்சலிகள், அறிமுகங்கள் என்பதை விடவும் மதிப்பீடுகள் என்பதே இந்தப் புத்தகத்திற்கு சரியாக இருக்கும். நமக்குத் தெரிந்த, படித்த எத்தனையோ ஆளுமைகளை விடவும் தமிழுக்கும், அதன் இலக்கியத்திற்கும் தங்களுடைய ஆக்கங்கள் – திறனாய்வுகள் – பதிப்புக்கள் போன்றவற்றின் மூலம் நினைத்து நினைத்துப் போற்றத் தக்க சேவைகளை செய்த இவர்களைப் பற்றி இதுவரை இவ்வளவு கச்சிதமான மதிப்பீடுகளை நான் படித்ததில்லை.

பழ. அதியமான்

சக்தி வை கோவிந்தன் அவர்களின் பதிப்பக சேவையை எப்படி ஒரு வாசகன் மறக்க முடியும்? எத்தனையோ இலக்கிய செவ்வியல் பிரதிகளை உயர்தர பைண்டுகள் கொண்ட புததகங்களாக வெளியிட்ட வை.கோவிந்தன் வறுமையின் பிடியில் சிக்குண்டு வயிற்றுசோறுக்காக மனமொட்டாமல் சில புத்தகங்களை அவசர அவசரமாக எழுதி பிழைத்த கதையை படிக்கும் போது, இந்த ஜீவனத்தின் கேவலத்தை என்னவென்று சொல்வது? அவரது மகன் வருத்தப்படுவதாக இந்த வரிகளை பழ.அதியமான் குறிப்பிடுகிறார். “எங்க அப்பா ஒண்ணும் செய்யாம வீட்டில் இருந்திருந்தாலே இன்னும் பல தலைமுறைகளுக்கு நாங்க நல்லா இருந்திருப்போம். புத்தகம் போடறேன், பத்திரிக்கை நடத்தறேன் என்று எல்லாவற்றையும் விரயம் செய்து விட்டார்கள். இப்போது நாங்கள் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படறோம்”. மகனுடைய வார்த்தைகளை மேற்கோள் இட்டுவிட்டு அதியமான் இப்படி சொல்கிறார்: “தந்தை செய்த செயல்களின் முக்கியத்துவம், பெருமை எல்லாம் தெரிந்தாலும் கூட அவர் மீதுள்ள பெரும் அபிமானத்தையும் மீறி இதயத்திலிருந்து வாழ்வின் வலி உதிர்த்த வார்த்தைகள் அழகப்பனுடையவை. இலட்சியத்தில் வெற்றி அடைந்தாலும் லௌகீகத்தில் தோல்வி அடையும் எந்தத் தந்தையின் மகனும் இப்படிப் பேசுவது இயல்புதான். காலத்தின் கருவியைக் கண்டெடுத்த வை.கோவிந்தனின் அறிவுக் கூர்மையைக் கண்டு பின்பற்ற வேண்டியிருப்பினும் தொழிலின் வெற்றிக்கும் வாழ்க்கையின் தோல்விக்குமான இடைவெளியைப் புரிந்து கொள்வதே வை.கோவிந்தனின் வாழ்க்கையிலிருந்து லௌகீக மனிதன் கற்றுக்கொள்ளுகிற விஷயமாகவிருக்கும்.”

இந்தப் புத்தகத்தின் கடைசி கட்டுரையான ஜார்ஜ் ஜோசப் – அறியப்படாத ஆளுமை, காங்கிரஸ்காரரான ஜோசப் வைக்கத்தில் நடந்த கோவில்/தெரு நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டு, காந்தியால் கண்டனத்திற்கு ஆளாக்கப்படுகிறார். காந்தியின் நோக்கில், வைக்கம் போராட்டம் என்பது இந்துக்களின் போராட்டம். சிரியன் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கவோ, தலைமை தாங்கவோ கூடாது என்று கடிதம் எழுதுகிறார் காந்தி. இந்தக் கடிதத்தில் காந்தியின் கிண்டல் தாங்க முடியாததாக இருக்கிறது. சிரியன் கிறித்துவ மதத்தில் உள்ள சாதி வேற்றுமைகளை ஜார்ஜ் ஜோசப் களைந்து விட்டாரா என்ற கிண்டல் தெறிக்க கேட்கிறார் காந்தி. அன்றைய உலக அரசியலைப் பற்றி எந்த தார்மீக அடிப்படையில் காந்தி கருத்துக்களை தெரிவித்தார் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. எதன் அடிப்படையில் உலகப்போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு ஆதரவையும், இந்திய வீரர்கள் இங்கிலாந்திற்கு ஆதரவாக களமாட வேண்டும் சொன்னார்?

பழ.அதியமான் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கும் ஒவ்வொரு ஆளுமையின் வாழ்வும் எண்ணி எண்ணி போற்றத் தக்கது. இவர்கள்தான் நம் பாட்டனார்கள் என்பதில் நம் நெஞ்சு விம்மித் தணிகிறது. இவர்கள் எதை ஆதாரமாகக் கொண்டு பேய் பிசாசுகள் போல தங்களின் லட்சியத்தைத் தூக்கிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அலைந்தபடியே இருந்தார்கள்?

நவீனத் தமிழ் ஆளுமைகள் – அஞ்சலிகள், அறிமுகங்கள்
பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம், மே 2016
ரூபா 140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *