நவி பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு
வீ. பா. கணேசன்
உலக அளவில் அமைதியையும் சர்வதேசச் சட்டத்தையும் மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் (“நவி”) பிள்ளைக்கு (Navanethem “Navi” Pillay) வழங்க நோர்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது.
விதிவிலக்கான துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்கை உருவாக்குவதற்கான பாதையில் முன்னின்று வழிகாட்டிய ஒருவருக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடரப்படுவதை உறுதிசெய்வதில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
உலகளாவிய சட்டக் கொள்கைகளின் மீதான நவி பிள்ளையின் அர்ப்பணிப்பும், உறுதியான அறநெறி உணர்வும் அவரது நீண்டகாலப் பணிவாழ்வில் தொடர்ந்து நிலைத்திருப்பவை. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், நிறவெறி ஆட்சியின் கீழ், இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, வழக்கறிஞராகவும் சட்டத் துறையில் முன்னோடியாகவும் உருவெடுத்தார். ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புரீதியான பாகுபாடு, இனப் பிரிவினை மற்றும் ஒதுக்குதல் ஆகியவற்றை அவர் எதிர்த்துப் போராடினார். நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா உள்ளிட்டோருக்காகத் தனது ஆரம்பகாலப் பணியில் அவர் வாதாடியதிலிருந்து, நமது காலத்தின் முக்கியமான சர்வதேச நீதிமன்ற வழக்குகளில் நீதிபதியாகப் பணியாற்றியது வரையிலான அவரது பணிகளில் ஒரு பொதுவான இழை தொடர்ந்து காணப்படுகிறது.
இந்த ஆண்டின் பரிசு பெறுபவர் சர்வதேசச் சட்டத்தின் வரம்பையும் தாக்கத்தையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்றம், ருவாண்டாவுக்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும் அவர் செயல்பட்டுள்ளார். சமீப காலம் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை விசாரிப்பதற்காக ஐ.நா. அமைத்த சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். தற்போது, இனப்படுகொலை செய்ததாக மியான்மர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், நவி பிள்ளை சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நீதிமன்ற வழக்குகளில், போர்ச் செயல்களையும் வன்முறைகளையும் தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் உதவ முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டியுள்ளார். சர்வதேசச் சட்ட நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நவி பிள்ளை பங்களித்துள்ளார். அவரது சுதந்திரமான அணுகுமுறை, நிபுணத்துவம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை, நமது காலத்தின் மிகவும் மதிக்கப்படும் சர்வதேசச் சட்ட வல்லுநர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளன.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சட்டத்தின் ஆட்சி, அமைதியை உறுதிசெய்யவும் மோதல்களை வன்முறையற்ற வழிகளில் தீர்க்கவும் நாம் உருவாக்கியுள்ள அமைப்பின் அடித்தளமாக விளங்குகிறது என்பதை உலகிற்கு நினைவூட்ட நோர்வே நோபல் குழு விரும்புகிறது. நீதியின்றி அமைதி நிலவ முடியாது.
சட்டத்தின் ஆட்சி இல்லாமல் இயங்கும் உலகம் அநீதியானதாகவும், விவேகமற்றதாகவும், மனிதாபிமானமற்றதாகவும் இருக்கும் என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது. ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும் இடையிலான மிக மெல்லிய எல்லையைப் பாதுகாப்பவர்கள் நீதிபதிகள். எனவே, அவர்கள் நமது பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர்கள். ஆனால், இன்று அதே நீதிபதிகள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன; அவர்கள் சார்ந்த நிறுவனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இத்தகைய சூழலில், துணிச்சல், தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதிப்பாடு கொண்டவர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். நீதிபதியாகத் தமது பணியில் நவி பிள்ளை இந்தப் பண்புகளை வெளிப்படுத்தி வருகிறார்.
நவி பிள்ளை, நாடுகளையும் அவற்றின் தலைவர்களையும் அவர்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்துள்ளார். வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையையும் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தையும் உருவாக்கியுள்ளார். தாம் வகித்த அனைத்துப் பொறுப்புகளிலும், சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது தனிநபர்களுக்கும் நாடுகளுக்கும் உள்ள பொறுப்பு என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய சட்ட விதிமுறைகளையும் சட்டக் கொள்கைகளையும் வரையறுப்பதற்கும் அவர் உதவியுள்ளார்.
ருவாண்டாவுக்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம், பாலியல் வல்லுறவும் பாலியல் வன்முறையும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மட்டுமல்லாமல், இனப்படுகொலையின் ஒரு வடிவமாகவும் அமையக்கூடும் என்று தீர்மானித்தபோது, அதில் நவி பிள்ளையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதே வழக்கில், மற்றொரு முக்கியமான சட்ட முன்னேற்றத்திலும் அவர் முக்கியப் பங்காற்றினார். முதன்முறையாக, பிரசாரத்தைப் பரப்பியதன் அடிப்படையில் மட்டுமே, இனப்படுகொலை செய்யத் தூண்டியதாக ஓர் எதிரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
நவி பிள்ளை, நமது காலத்தின் சர்வதேசச் சட்டக் கொள்கைகளைப் பாதுகாக்கும் தலைசிறந்தவர்களில் ஒருவர். அவரது சிறப்புமிக்க பணிவாழ்வு, உலகளாவிய சட்டத்தின் ஆட்சியை ஆதரிக்கவும், வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
நீதி மற்றும் மனித மாண்பின் மீதான நவி பிள்ளையின் அர்ப்பணிப்பு, அமைதியான உலகை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன் தனித்தன்மையான செயல்பாட்டின் மூலம் இன்று சர்வதேச அளவிலான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருப்பது நம் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு தருணம் என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
சர்வதேச அளவில் இனப்படுகொலைக்கு எதிரான வலுவான செயல்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நவி பிள்ளைக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

