நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள் - நூல் அறிமுகம் | Naxalite Ajithavin ninaivu kurippugal - Kulachal.M.Yoosuf - BookReview - https://bookday.in/

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள் – நூல் அறிமுகம்

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்
தமிழில் : குளச்சல் மு. யூசுப்
பக்கம் : 432
விலை : 550
வெளியீடு : எதிர் வெளியீடு
நூலைப் பெற : thamizhbook.com

உலகளாவிய ஒரு தத்துவத்தை ஒவ்வொரு நாடும் கை கொள்கையில் அம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம், அம்மக்கள் உள்வாங்கியுள்ள அறிவுப் புலம், தத்துவப்புலம், மக்களின் போராட்ட குணம், யாவும் சேர்ந்து தான் மார்க்சிய தத்துவத்தை நிலைநிறுத்தி ஒரு சில நாடுகள் வெற்றி கண்டும் பல நாடுகள் அவ்வெற்றியை கைப்பற்ற தன்னாலான பகீரத முயற்சியெல்லாம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி அதிலிருந்து பிரிந்த மார்க்சிஸ்ட், அப்புறம் மாவோ லெனிஸ்ட், எனும் புரட்சிப் பாதையில் செல்லக்கூடிய நக்சல்பாரி அமைப்புகள் என்று பல்வேறு கட்சிகளாக சிதறிக் கிடக்கின்றன. தத்துவம் ஒன்றேயானாலும் அதை அடையும் வழிமுறைகள் வெவ்வேறானதாக இருக்கின்றன. அதன் ஒரு பகுதியான மாவோவின் வழித்தடத்தில் பயணித்த நக்சல்பாரி அமைப்பில் இருந்த அஜிதா அவர்களின் புரட்சிகர வாழ்க்கையை அசை போட்டு பார்க்க கூடிய ஒரு விரிவான போராட்ட களமான சுயசரிதையை தோழர் அஜிதா அவர்கள் எழுதி உள்ளார்கள். அதை மிக அடர்த்தியான மொழியில் குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

உள்ளபடியே மிக பிரமிப்பாக இருக்கிறது இவ்வளவு முரட்டு துணிச்சல் அதை கடைசி வரை கைவிடாத மன உறுதி தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை இம்மியளவும் பிசகாத நேர்மை எழுத்தில் வாசிக்கும் நமக்கே பயமாக இருக்கிறது. அதை வாழ்க்கையாக வாழ்ந்து முடித்திருக்கும் தோழர் அஜிதாவின் உள்ள உறுதி உண்மையில் போற்றத்தக்கது. குஜராத் தாய்க்கும் மும்பைத் தகப்பனுக்கும் பிறந்த அஜிதா வாழ்ந்ததெல்லாம் கேரளாவில் கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தம்பதிகளுக்கு அவர்களையும் தாண்டிச் செல்லும் மன உறுதியுடன் கூடிய மாவோவின் வழிமுறை கையிலேந்தி இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த நக்சலைட்டாக மாறுகிறார்.

தலச்சேரி புல்பள்ளி வயநாடு திருநெல்லி போன்ற பகுதிகளில் சிறிய அளவிலான ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு ஜமின்தார்களின் வீடுகளில் கொள்ளையடிக்கவும், காவல் நிலையங்களை தகர்க்கவும், அதிகாரிகளை கொலை செய்வதுமான வேலைகளில் இவர்கள் கூட்டம் ஈடுபடுகிறது. ஒரு பகுதியில் தாக்குதலை முடித்து விட்டு அடுத்த பகுதிக்கு புறப்படுகையில் வெறி கொண்ட அதிகார வர்க்கத்தின் கடும் கோபத்திற்கு ஆளாகி தேடுதல் வேட்டையில் ஈடுபட ஒவ்வொரு மலையாய் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் அவர்கள் காவல் துறையிடம் பிடிபடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது போராளியின் மரண வேதனைகள். உடலை சன்னஞ் சன்னமாக சல்லி சல்லியாக அடித்து நொறுக்குகிறார்கள். பெரும் அலைகழிப்பிற்கு ஆளாகி நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பின் 8 ஆண்டுகள் கடுந்தண்டனையை அனுபவித்து விடுதலையாகி மக்கள் பிரச்சனைகளுக்கு போராட்டகளத்தில் முன் நிற்கிறார்.

தோழர் அஜிதா அவர் கொண்ட கொள்கை சரி என்றாலும் அதற்காக தேர்ந்தெடுத்த வழிமுறை மிகத் தவறானது. இந்திய இடதுசாரிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். இ எம் எஸ் அவர்களை வழிமறித்து கேள்வி கேட்கிறார். இவரின் தவறான பாதையால் விளைந்த துன்பத்தையெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பழி தூற்றுகிறார்.

சரியோ தவறோ. தான் கொண்ட கொள்கை மிகச் சரியானது என்று விடாப்பிடியாக நிற்கிறார்.
வாசிக்க வேண்டிய நல்ல புத்தகங்களில் அஜிதாவின் நினைவுக் குறிப்புகளும் இடம்பெறுகின்றன சிறப்பான முறையில் புத்தகமாக்கம் செய்த எதிர் வெளியீட்டிற்கும் மொழிபெயர்த்த குளச்சல் மு. யூசுப் அவர்களுக்கும் பாராட்டுகள்

 

எழுதியவர் :

செ. தமிழ் ராஜ்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *