நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை வைத்து Nayanthara: Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் (Documentary) | நயன்தாரா: தேவதை கதைக்கு அப்பால்

நயன்தாரா – தேவதைக் கதைக்கு அப்பால் | அ. குமரேசன்

நயன்தாரா ஆவணப்படம் – Nayanthara Beyond The Fairy Tale

உற்றவர்களின் வீடுகளுக்குப் போகிறபோது கல்யாண ஆல்பத்தைக் கையில் கொடுத்துப் பார்க்கச் சொல்வார்கள். கூடவே உட்கார்ந்து ஒவ்வொரு படமாகக் காட்டி அவர் யார் இவர் யார் என்று ஃபிளாஷ்பேக் சொல்லி மகிழ்ச்சியடைவார்கள். அப்புறம் வீடியோ பதிவை டிவியில் ஓடவிடுவது பழக்கத்திற்கு வந்தது.

திரைப்படக் கலைஞர் நயன்தாராவை தம்முடைய வீட்டு அங்கத்தினர் போல நினைக்கிற ரசிகர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கென்று ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபெய்ரி டேல்’  (Nayanthara: Beyond the Fairy Tale) ஆல்பத்தை ஆவணப்படமாக நெட்ஃபிளிக்ஸ் மேடையில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணக் கோலாகலமும், பெரிய நட்சத்திரப் பட்டாள வருகையும் பற்றிய ஆவணப்படம் என முதலில் சொல்லப்பட்டது. நெட்பிளிக்ஸ் அப்போதே அதற்கு ஒப்பந்தம் போட்டிருந்ததாகத் தெரிகிறது. இரண்டாண்டு காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கிற ஆவணப்படத்தில் நயனின் திரையுலகப் பயணமும் முதல் பகுதியாக இணைக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர், உடன்பிறப்புடன் சிறு வயதுப் படங்கள் குடும்பப் பின்னணியைத் தெரிவிக்கின்றன. கேரளத்தில் உடல் நலிவடைந்திருக்கும் தந்தையையும் அவரைக் குழந்தை போலக் கவனித்துக் கொள்ளும் தாயையும் பற்றிக் குறிப்பிட்டு அவர்களைத் தானும் பராமரித்து வருவதைத் தெரிவித்திருப்பது பாசமயம்.

திரையுலகிற்குத் திட்டமிட்டு வரவில்லை என்று கூறும் நயன்தாரா, தொடக்கத்தில் ஒரு பத்திரிகையில் வந்திருந்த தனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மலையாள இயக்குநர் சத்தியன் அந்திக்காடு அழைத்துப் படத்தில் நடிக்கச் சொன்னதாகவும், தயங்கியவரிடம் ஒருநாள் படப்பிடிப்பைக் காணுமாறு கூறியதாகவும், அதன் பின் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அந்த நாளைப் பகிர்கிறார். மாடலாக இருந்தவர் தொழில் மாற்றம் பெற்றது போல, டயானாவாக இருந்தவர் நயன்தாரா என்று பெயர் மாற்றமும் பெற்றது அப்போதுதான்.

தமிழில் ‘ஐயா’, ‘சந்திரமுகி’ படங்களில் அறிமுகமாகி அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளம் கிடைத்ததை முற்பகுதி பல படங்களின் காட்சித் துணுக்குகளோடு சொல்கிறது. அதற்கான படிகளில் ஏறியபோது ஏற்பட்ட சவால்களையும் குறிப்பிடுகிறார். ‘பில்லா’ படத்தில் பிகினி உடையுடன் வந்ததும், மற்றொரு படத்தில் நடனமாடியதும் கடும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளானதைக் கூறுகிறார். நடிப்பை விமர்சிக்காமல் உடல் அமைப்பைப் பரிகசித்தார்கள் என்கிறார். அந்த வக்கிரத்துக்குத்தான் முடிவே இல்லையே.

நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை வைத்து Nayanthara: Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் (Documentary) | நயன்தாரா: தேவதை கதைக்கு அப்பால்

நட்சத்திரங்களாக வெற்றி பெற்ற பெண்கள் பலரும் இதைக் கடந்துதான் வந்திருப்பார்கள். ஆவணப்படத்தில் ராதிகா சொல்லியிருப்பது போல, பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாத துறையில் இவ்வளவு பெரிய ஆளுமையாக நயன்தாரா உருவெடுத்தது அசாதாரணமானதுதான். படத்தில் பங்கேற்றுள்ள விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, நாகார்ஜூன், நாக சைதன்யா, பார்வதி ஆகிய நடிகர்கள், சத்தியன் அந்திக்காடு, அட்லீ உள்ளிட்ட இயக்குநர்கள் எல்லோருமே இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இரண்டு முன்னணி நாயக நடிகர்களோடு ஏற்பட்ட காதல் உறவு முறிந்ததன் தாக்கங்களையும் பேசுகிறார். அவர்களுடைய பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் பத்திரிகைகளிலும் இதர ஊடகங்களிலும் வந்துள்ள விமர்சனங்களில் அந்த இருவரும் யார் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்லத்தான் போகிறார்கள் என்றுதான் இவர் சொல்லாமல் விட்டார் போலும்.

இரண்டாவது காதல் உறவின்போது, இனி படங்களில் நடிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கேமரா முன் வராமல் ஒதுங்கினார். அந்த உறவு தடைப்பட்டுத் தொடராமல் போனது, இவரது சாதனைப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது. அந்த உறவுகள் பற்றி தன்னைக் கேட்கிறவர்கள் சம்பந்தப்பட்ட அந்த ஆண்களிடம் ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி நியாயமானது.

எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அக்கறையுள்ள ஈடுபாட்டுடன், அயராத உழைப்புடன், தடைகளுக்குப் பின்வாங்காத துணிவுடன் செயல்படும் பெண்ணால் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கைச் செய்தி நிச்சயம் இருக்கிறது. காதல் முறிவுகள் சோர்ந்து முடங்கிப் போவதற்கல்ல என்ற உறுதிப்பாடும் இருக்கிறது. இது வரையில் ஏற்கத் தக்கதுதான். ஆனால்…

அதற்குப் பிறகு? ‘நானும் ரவுடிதான்’ படத்தில் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் உருவான புதிய காதல் அத்தியாயத்திற்குள் படம் புகுந்ததும், தொடக்கத்தில் காதலுக்கே உரிய ஈர்ப்பை உணரச் செய்வதாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியாக, நடிக்க வைக்கப்பட்ட காட்சிகள் போல அலுப்பூட்டுகிறது. உச்சமாக, அந்தப் பகட்டுக் கண்ணாடி அரங்கில் நடைபெற்ற திருமணக் காட்சி, அதற்கு யார் யார் வந்தார்கள் என்பதைத் தாண்டி எவ்வகையிலும் கவரவில்லை.

திருமண நடைமுறையில் இரண்டு மதங்களின் அடையாளங்களை கலந்து செய்ய விரும்பவில்லை, மாறாக இந்துச் சடங்குகளைப் பின்பற்றவே முடிவு செய்ததாகத் தெரிவிக்கிறார். அது அவரது முழு உரிமை, அதை விமர்சிப்பதற்கில்லை. முன்பே மதம் மாறிவிட்டவர் என்பதால் இதைப் புதிய முடிவு என்றும் சொல்வதற்கில்லை.

கோடிக்கணக்கில் செலவாகியிருக்கக்கூடிய அந்த விழாவின் ஆடம்பர ஏற்பாடுகள், அரங்கத்திற்கான யோசனை முதல் ஆடை அணிகலன்கள் வரையில் இவர்தான் முடிவு செய்தார் என்ற தகவல்கள் எல்லாம் பணக்காரத்தனத்தின் அறிவிப்பாகவே இருக்கின்றன. அதுசரி, பணக்காரர்கள்தானே.

குழந்தைகளின் வருகையும் கொஞ்சலும்தான் ஆறுதல். மற்றபடி, தேவதைக் கதைக்கு அப்பால் (பியாண்ட் ஃபெய்ரி டேல்) சொல்வதற்கான ஆழமான செய்திகளும் தாக்கங்களும் போராட்டங்களும் தவிர்க்கப்பட்டு மேலோட்டமான பகிர்வுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. கதாபாத்திரத்தால் இவருக்கும் இவரால் கதாபாத்திரத்திற்கும் சிறப்புச் சேர்த்த ‘அறம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கூடுதலாகக் கூறியிருக்கலாம், துணிவோடு சில கருத்துகளைப் பேசிய ‘அன்னபூரணி’ படத்திற்கு எழுந்த எதிர்ப்பு பற்றி துளியாவது குறிப்பிட்டிருக்கலாம். மொத்தத்தில், அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் ஒரு முன்னுதாரண வாழ்க்கைப் பயணம் பற்றிய முக்கியமான பதிவு என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

படம் ஓடிடி திரைக்கு வருவதற்கு முன்பாகப் பரபரப்பைக் கிளப்பிய நயன்தாராவின் அறிக்கை, நடிகர்–தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் வழக்குரைஞர் ஓலை பற்றியெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வணிகம் சார்ந்த அந்தப் பிரச்சினை வழக்குக்குப் போகுமானால் யார் பக்கம் நியாயம் என்று நீதிமன்றம் சொல்லட்டும்.

திருமண ஆல்பம் அப்படியொன்றும் சிறப்பாக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடன் பார்ப்பது போலக் காட்டிக்கொண்டே பக்கங்களைப் புரட்டுவோமல்லவா? அது போல இதையும் பார்க்கலாம். ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்கிற வசதிதான் இருக்கிறதே!

கட்டுரையாளர் :

அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *