அமெரிக்காவின் அரசியல் நிலைமை மாற்றம், இந்தியா மீதான அதன் தாக்கம், தொற்றுநோய் காலத்துப் பொருளாதாரம், இந்திய விவசாயிகள் போராட்டங்கள், இந்திய ஜனநாயகம் ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநரும் நோபல் விருது பெற்ற பேராசிரியருமான அமர்த்தியா சென்னுடன் என்டிடிவியின் பிரணாய் ராய் உரையாடினார்.
உரையாடலின் தமிழ் எழுத்தாக்கம்
என்டிடிவி: வணக்கம். நான்கு பகுதிகள் கொண்ட இந்த டவுன் ஹால் தொடருக்கு உங்களை வரவேற்கிறேன். இந்தியா எதையெல்லாம் தொற்றுநோய்க்குப் பிறகு எதிர்பார்க்கலாம் என்பது குறித்து இந்த தொடரில் பெரும் சிந்தனாவாதிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். டவுன் ஹால் தொடரின் இந்த நான்காவது, இறுதி உரையாடல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கிறது. பேராசிரியர் அமர்த்தியா சென் நம்முடன் இருப்பதற்கு நாம் அனைவரும் நல்வாய்ப்பு பெற்றவர்களாகவே இருக்கின்றோம். பேராசிரியர் சென்னுடனான இந்த அரை மணி நேர உரையாடல் உண்மையில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட இரண்டு சிறிய உரையாடல்களிலிருந்த சில பகுதிகளின் ஒருங்கிணைப்பாகும்.
பேராசிரியர் சென்… எங்களுடன் இணைந்தமைக்கு, உங்களுடைய நேரத்தை எங்களுக்கு ஒதுக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் எந்த அளவிற்கு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். வங்காளிகள் மிகவும் கடினமாக உழைக்கின்றவர்கள் என்று சொல்லும் அளவிற்கு வங்காளிகள் அனைவருக்கான தவறான முன்மாதிரியாக நீங்கள் இருந்து வருகிறீர்கள். அது உண்மையில் சரியானதாக இருக்கவில்லை.
பேராசிரியர் அமர்த்தியா சென்: நான் எந்தவொரு முன்மாதிரியாகவும் இருக்கவில்லை என்பது உறுதி. ஆனால் நீங்கள் அவ்வாறு சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி.
என்டிடிவி: தினமும் காலை நான்கு மணி வரை வேலை செய்கிற நீங்கள் இன்று மீண்டும் உங்கள் வேலையைத் தொடங்கப் போகிறீர்கள்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: வங்காளத்தில் சொல்வார்கள் – இரவு நான்கு மணிக்கு உன்னைப் பார்க்க முடிந்தது, ஆனால் காலையில் நான்கு மணிக்குப் பார்க்க முடியவில்லை என்று.
என்டிடிவி: அது நல்ல விஷயம். அதை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் தொடங்கலாம் என்று நினைக்கிறேன், நீங்கள் தயாரா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: என்டிடிவியை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
என்டிடிவி: அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்புகளை நீங்கள் தொடர்ந்து நெருக்கமாகக் கவனித்து வருகிறீர்கள். இப்போது அமெரிக்காவில் இருக்கிறீர்கள். அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். ஜனநாயகம் மிகவும் முக்கியமானது; அது இன்னும் அமெரிக்காவில் செயல்திறனுடனே இருக்கிறது என்பதையே ட்ரம்ப் சகாப்தம் என்ற கொடுங்கனவு முடிந்து பிடென் சகாப்தம் வந்திருப்பது உண்மையில் காட்டுகிறது. இந்தியாவில் அமெரிக்கா ஏற்படுத்துகின்ற விளைவை அது எந்த அளவிற்கு மாற்றும்? இறுதியாக அமெரிக்கா ஜனநாயகத்திற்கு மீண்டும் திரும்பியிருப்பது, இந்தியாவுடனான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: இதில் பல தொடர்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று என்னவென்றால் – இந்தியாவில் தவறான வகையில் ஊக்கம் பெற்று வருகின்ற – ஜனநாயகத்தின் மீதான சந்தேகம் அமெரிக்காவில் முந்தைய ஆட்சியின் கீழ் மிகவும் வலுவாக இருந்தது. இங்கே நடந்த ஏராளமான விஷயங்கள் மிகவும் மோசமான முன்மாதிரியை அமெரிக்கா கொண்டிருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகவே இருந்தன. அவர்கள் சொல்வதைப் போல அமெரிக்கா மலை மீது பிரகாசிக்கின்ற முன்மாதிரியாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு நேர்மாறான நிலைக்கே சென்று முடிந்திருந்தது
என்டிடிவி: ஆம், அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை முழுமையான திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்று மற்ற மாற்றங்களும் நிகழுமா? எடுத்துக்காட்டாக தொற்றுநோய் முழுமையாக நம்முடன் இருக்கும் போது அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகான பொருளாதாரம் குறித்து நினைத்துப் பார்க்கும் போது, அமெரிக்காவும் உலகப் பொருளாதாரமும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: முதலில் நாம் நினைத்ததை விட, குறிப்பாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் விரைவாக உருவாகி வருகின்ற வைரஸ் மாறுபாடுகளின் காரணமாக கோவிட் அதிக அளவிலான பிரச்சனையாகவே இருக்கப் போகிறது. அது இன்னும் முடிவடைந்து விடவில்லை. உண்மையில் அதைச் சரியாகக் கையாள்வதற்கானதொரு சரியான வழியை அவர்கள் கண்டறிந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பிய பொருளாதாரம் குறித்து நான் அதிகம் கவலையடைந்துள்ளேன். இத்தாலிய பொருளாதாரம் இப்போது புதிய பிரதமரின் கைகளில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது என்றே கருதுகின்றேன். பிரிட்டிஷ் பொருளாதாரம் இன்னும் மந்தமான நிலையிலே இருக்கிறது. சமீபத்தில் கோவிட் குறித்து அவர்கள் மிகவும் சிறப்பாக எதிர்வினையாற்றி இருக்கின்றார்கள். ஆனாலும் ப்ரெக்ஸிட்டைப் பெற்றதில் அவர்கள் மிகப் பெரிய பிழையைச் செய்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்.
என்டிடிவி: இந்தியாவில் ஜனநாயகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று இந்தியாவைக் குறிவைத்து குறைகூறி வருகின்ற ஜனநாயக மேற்குலகம் இந்தியாவை மிக அதிகமாகத் தாக்கி வருகிறது என்று இந்திய அதிகாரிகள் மத்தியில் கவலை இருப்பதாகத் தெரிகிறது. இது ஏன் நடக்கிறது?
பேராசிரியர் அமர்த்தியா சென்: இந்தியா மீது அவதூறு சுமத்தப்படுவது குறித்தும், டூல் கிட் போன்ற எளிய சோதனைகளைச் செய்பவர்களைக்கூட உடனடியாக இந்தியாவை அவதூறு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவது குறித்தும் அரசாங்கத்திடம் அக்கறை இருந்து வருவதை நான் அறிவேன். அது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. இந்தியா மீது அவதூறைச் சுமத்துவதற்காகவே யாரும் இங்கே தங்களைத் தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கவில்லை. ஜனநாயக நடைமுறை குறித்து இருந்து வருகின்ற நிலையான விதிமுறைகளை மீறும் வகையில் இந்தியா தனது பாதையிலிருந்து இப்போது விலகியிருக்கிறது. சில சமயங்களில் தேவைக்கு அதிகமாகவே இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து விமர்சனங்கள் எழுகின்றனவோ இல்லையோ, ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் வரும் போது ‘ஓ… அவர்கள் நம்மை விமர்சிக்கிறார்கள்’ என்று முணுமுணுத்துக் கொள்கின்றோம். விமர்சனம் செய்யும் அனைவருமே இந்தியாவிற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது சித்தப்பிரமை. அது எந்தவிதத்திலும் அறிவார்ந்த அரசியல் சிந்தனையாக இருக்கப் போவதில்லை.
என்டிடிவி: எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் நீடித்து நிலைபெற்று இருக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: வரலாற்றுரீதியாகப் பின்னோக்கி பார்த்தால் இந்தியாவிற்கென்று ஜனநாயக வரலாறு இருந்திருப்பதைக் காண முடியும். அசோகர் மக்களைக் கலந்தாலோசிப்பதில் அதிக அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார். அக்பர் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆலோசனைகளின் வழியாக எவ்வாறு ஆட்சி செய்வது என்பதைக் காண விரும்பியவராக இருந்திருக்கிறார். ஆக இந்தியாவிற்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. எனது சொந்த நாட்டை மிகவும் தேசபக்தி கொண்ட தேசியவாத வழியில் எதிர்கொள்கையில் அது எனது பிரச்சனைகளில் ஒன்றாகின்றது. இருப்பினும் இது எனது நாடு, நான் ஓர் இந்தியன், அமெரிக்காவில் கற்பித்து வருபவன் என்றாலும் நான் ஓர் அமெரிக்கன் அல்ல, முழுமையான இந்திய ரத்தம் கொண்டவன் நான் என்பதால், என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள இந்திய நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். இங்கே நாம் ஜனநாயகத்திற்குள் தவறி நுழைந்துள்ள எந்தவொரு நாட்டையும் பற்றி பேசவில்லை என்பது மிகவும் முக்கியம். மேற்கத்திய உலகத்திற்கு வெளியே ஜனநாயக அமைப்பைக் கொண்ட முதல் நாடாக இருக்கின்ற இந்தியாவைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை நம்மிடம் இருக்கிறது. நம்மால் மாற்றுக் கருத்துகளை மிகவும் நாகரிகமான முறையில் கையாள முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் அவ்வாறுதான் மாறியது. இந்தியா அப்போது ஒளிமயமான இடமாக இருந்தது. இப்போது அந்த நிலைமை எங்கே போயிற்று? அது மட்டுமில்லை – மனித உரிமைகள் பட்டியல் உள்ளிட்டு பலவற்றில் இந்தியா இப்போது மிகவும் பின்தங்கியே இருக்கிறது. நம்மிடம் இருந்த முக்கியமானவை அனைத்தும் – குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதித்துறையின் செயல்முறை எதுவுமில்லாமல் சிறையில் அடைப்பதில்லை என்ற காலம் – போய் விட்டன. இந்தியாவுக்கு என்ன நேர்ந்து விட்டது என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற உணர்வை அது எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.
என்டிடிவி: இந்தியா ஒளிமயமான இடத்தில் இருந்தது என்று சொன்னீர்கள். ஆனாலும் இப்போது நீங்கள் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறீர்கள். உங்களையும், உங்களுடைய பெரிய குடும்பத்தையும் இதுபோன்ற செயல்கள் தனிப்பட்ட முறையில் எவ்வாறு பாதிக்கின்றன? பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் உங்களுடைய குடும்பம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டது என்று கடந்த காலத்தில் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: பிரிட்டிஷ் இந்தியாவில் பள்ளி மாணவனாக நான் வளர்ந்து வந்தேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் அப்போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாக காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட முயற்சிகளை மேற்கொள்வதே இருந்து வந்தது. காலனித்துவ ஆட்சியில் நடைபெற்ற தவறான விஷயங்களுக்கிடையில் என் மாமாவைப் போலவே எனது உடல் ரீதியான உறவுகள் பலரும் சிறைகளுக்குள் இருந்தனர். தடுப்புக்காவலில் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உண்மையில் எந்தவொரு தவறும் செய்ததால் அவர்கள் சிறைகளுக்குள் அடைக்கப்படவில்லை. சுதந்திரமாக வெளியில் இருந்தால் ஏதாவது தவறு செய்து விடுவார்கள் என்பதாலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அப்படிப்பட்ட நிலைமைதான் இருந்தது. அதை நாங்கள் மாற்ற வேண்டியிருந்தது. சுதந்திரம் அடைந்தவுடன் அது முடிவடைந்து விடும், அதற்குப் பிறகு அதுபோன்ற அசுரத்தனம் இருக்காது என்று எங்களுக்குள் நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
பின்னர் காங்கிரஸே சுதந்திரம் கிடைத்த பிறகு அந்த ஏகாதிபத்திய எச்சங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும் என்றாலும் செய்யவில்லை. சமீப காலங்களில் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. உங்களிடம் இப்போது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) போன்ற சட்டங்கள் உள்ளன. மீண்டும் காலனித்துவ காலத்தைப் போலவே, அதாவது எந்த தவறும் செய்ததால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நீங்கள் தவறு செய்ய முடியும் என்ற சாத்தியம் இருப்பதாலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே அந்தச் சட்டங்கள் இருக்கின்றன. உங்களை அரசாங்கம் பயங்கரவாதி என்று சொல்லும். அதை இல்லை என்று நிரூபிக்க முயற்சிக்க வேண்டிய அவஸ்தை உங்களிடம் விடப்படும். காந்திஜியின் செயல்பாடுகள், ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள், எழுத்துக்கள், மேலும் பல தலைவர்களின் பங்களிப்புகளால் பலப்படுத்தப்பட்ட பாரம்பரியத்தை நாம் இன்றைக்கு இழந்து நிற்கின்றோம். அந்த பாரம்பரியத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
என்டிடிவி: ஆமாம். எந்தவொரு நாட்டின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக பொருளாதார வளர்ச்சி மட்டுமே இருக்காமல் சுதந்திரமும் அதற்கான பங்கை அளிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: வளர்ச்சியையே நான் சுதந்திரம் என்பதாகக் காண்கிறேன். ‘வளர்ச்சி என்ற சுதந்திரம்’ என்ற புத்தகத்தைக்கூட நான் எழுதியிருக்கிறேன். அது சுதந்திரத்தை மையமாகக் கொண்ட வெற்றி குறித்த பார்வை. நாம் பஞ்சத்தை வெல்ல விரும்புகிறோம், பசியை வெல்ல விரும்புகிறோம், அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உயர்கல்வி உயர்தரத்திலே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றுகூட முதலிடத்தில் இருக்கவில்லை. அதையெல்லாம் நாம் மாற்ற விரும்புகிறோம். ஆனாலும் தனிநபர்கள் சுதந்திரமாக வாழ முடிய வேண்டும் என்பது குறித்த மிக ஆழமான அர்ப்பணிப்பும் நம்மிடையே இருந்து வருகிறது. சுதந்திரத்தின் இந்த அடிப்படைப் பண்புகளைப் புறக்கணிக்கின்ற எந்தவொரு வளர்ச்சியாலும் நமக்கு அதிகப் பயன் இருக்கப் போவதில்லை.
என்டிடிவி: சுதந்திரமும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்று கூறும் போது பொருளாதாரம், அரசியல் மற்றும் குறிப்பாக இந்தியா குறித்த உங்கள் எழுத்துக்களுடன் உங்களுடைய தனிப்பட்ட அரசியல், கருத்துகள் எந்த அளவிற்கு நெருக்கமாகப் பிணைந்துள்ளன?
பேராசிரியர் அமர்த்தியா சென்: ஜனநாயகம் மிகவும் முக்கியமானது என்பதால் நமக்கு அது தேவைப்படுகிறது. உண்மையில் அது மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட பேச்சு சுதந்திரம், தனிப்பட்ட செயல்பாட்டு சுதந்திரம் ஆகியவை முக்கியமானவை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவை சில நேரங்களில் உருவாக்கப்படுவது போன்று இடது அல்லது வலது சார்ந்த பிரச்சனைகளாக இருப்பதில்லை. நான் அரசியலில் இடதுசாரி கருத்துகள் என்று விவரிக்கப்படுகின்ற பல கருத்துகளைக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவேளை என்னிடம் அவ்வாறான கருத்துகள் இல்லாமல் சந்தை-சார்பு வலதுசாரி கருத்துகள் இருந்திருந்தாலோ அல்லது சந்தை ஒருபோதும் தவறு செய்யாது என்று நான் நினைத்திருந்தாலும்கூட அவையனைத்தையும் விட ஜனநாயகமே மிக முக்கியமானது என்ற கருத்தே அப்போதும் என்னிடம் இருந்திருக்கும்.
என்டிடிவி: இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: அச்சுறுத்துகின்ற நேர்மையற்ற சூழ்நிலைகள் எப்போதும் சிறந்த சூழ்நிலையை நோக்கி நகர்வதை ஏற்கனவே கண்டிருப்பதால், எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடனே நான் இருக்கிறேன். நம்மிடம் பஞ்சங்கள் வழக்கமாக இருந்து வந்தன. அவை இப்போது இல்லாமல் போய் விட்டன. ஊட்டச்சத்து குறைபாடு நம்மிடையே அதிகமாக உள்ளது. அதுவும் கடந்து போகும் என்றே நம்புகிறேன். மருத்துவ வசதிக் குறைபாடுகளும் இல்லாமல் போய் விடும் என்றே நம்புகிறேன். இதுபோன்ற வெற்றிகளைக் கண்டிருக்கின்ற அதே வேளையில் பல தோல்விகளையும் நாம் கண்டிருக்கிறோம். எந்த வழியில் நாம் செல்லப் போகிறோம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்ததாகவே இருக்கும். எந்த அளவிற்கு நம்முடைய கவனத்தைச் செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கும். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருக்கின்றனர். அவர்களில் கன்னையா, உமர் காலித், ஷெஹ்லா போன்ற சிலர் சிறையில் இருந்துள்ளனர். திஷா ரவி போன்ற பலர் இருக்கின்றனர். போராடத் தயாராக இருக்கின்ற அவர்கள் அதற்காக ஏராளமான தியாகங்களைச் செய்வார்கள் என்றே நான் கருதுகிறேன்.
இங்கே ஒரு சில பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டேன். அவை யுஏபிஏ சூழலில் வந்தவை. ஆனாலும் இந்தியாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தயாராக இருக்கின்ற மக்களாலேயே இந்த நாடு நிறைந்துள்ளது. என்னுடைய நம்பிக்கை அவர்கள் மீதே இருக்கிறது. இந்திய அரசியல் குழப்பமான நிலையில் இருக்கின்ற இந்த நேரத்தில். இளைஞர்களைத் தேடிச் செல்வது பைத்தியக்காரத்தனம் அல்ல என்றே நான் நினைக்கிறேன். இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள், அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம் என்றே நான் நினைக்கிறேன்.
என்டிடிவி: நீங்கள் இப்போது கூறியதிலிருந்து நமது நாட்டு இளைஞர்கள் மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பது தெரிகிறது. உள்ளார்ந்த ஜனநாயக உணர்வு அவர்களிடம் இருப்பதாக, நமக்காக இந்தியாவைக் கவனித்துக் கொள்கின்ற தைரியமான, இளைய தலைமுறையினர் நம்மிடையே இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பயங்கரவாதி என்று சொல்லி மக்களைக் கைது செய்கின்ற சூழ்நிலையில், தான் ஒரு பயங்கரவாதி அல்ல என்பதைக் காட்டுவதற்கு அவன் அல்லது அவளிடம் மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. இதை நாம் எவ்வாறு எதிர்கொண்டு வருகிறோம் என்று எனக்குத் தெரியாது. மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக, பயங்கரவாத செயல்களைச் செய்ததாகக் கூறி அவற்றின் அடிப்படையில் இளைஞர்கள் கைது செய்யப்படுவது இந்தியாவில் காண்கின்ற விந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட – அவர் பெயர் என்ன? – திஷா ரவி, தவறிழைத்ததற்கான சான்றுகள் எதுவும் இருக்கவில்லை. அவர் ‘என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலமே இந்தியர்களுக்கு சுதந்திரத்திற்கான உரிமை கிடைக்கும் என்றால் நான் அப்படியே சிறையில் இருந்து விட்டுப் போகிறேன்’ என்று கூறியதை நான் பாராட்டுகிறேன். அது ஒரு மிக உன்னதமான அறிக்கை. இந்திய ஆட்சித்துறையினரால் வழங்கப்பட்ட தண்டனை என்ற தவறான முடிவிற்கு உள்ளானவர்களால் ஏற்கனவே இதுபோன்று வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் நீதித்துறையால் பொறுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் அதுபோன்று இல்லை என்றாலும் சில நேரங்களில் நீதித்துறை சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ஆனால் மாற வேண்டும் என்று சொல்கின்ற வகையிலேயே பெரும்பாலும் அது நீதித்துறையால் பொறுத்துக் கொள்ளப்படுவதாகவே இருக்கிறது.
என்டிடிவி: இந்தியாவில் நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டங்களுக்கு இளைஞர்கள் ஆதரவளிப்பது குறித்து நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். உண்மையில் இந்தியாவைப் புயல் போன்று தாக்கியுள்ள விவசாயிகளின் போராட்டம் சர்வதேச சமூகத்தினராலும் கவனிக்கப்பட்டே வருகிறது. தங்களுடைய அன்றாட இருப்பு குறித்த மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை, விளைபொருட்களுக்கான விலைகளுக்கான ஆபத்து மற்றும் ஏற்ற இறக்கம், நல்ல பருவமழை – மோசமான பருவமழை என்று பிற துறைகளில் உள்ளவர்கள் அல்லது பிற நாடுகளில் இருப்பவர்கள் எதிர்கொள்ளாத அளவிற்கு இந்திய விவசாயிகள் நிச்சயமற்ற நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய விவசாயத்தில் உள்ளார்ந்து இருக்கின்ற ஆபத்துகளைக் குறைக்க அரசாங்கம் என்ன செய்திட வேண்டும்?
பேராசிரியர் அமர்த்தியா சென்: இந்திய விவசாயம் பல வழிகளிலும் வெற்றி பெறுவதாக இருந்தாலும் – நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற தன்மைகளால் உருவாகின்ற ஆபத்துகள் குறித்து தொடர்ந்து விவசாயிகளிடம் கவலை இருந்தே வருகிறது. இந்த பாதுகாப்பின்மைகளைத் தீர்த்து வைப்பதற்கு – ஐரோப்பா, அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்கா என்று அவை எங்கே நடந்தாலும் – அரசாங்கத்தின் பங்கு பல வழிகளிலும் முக்கியமானதாக இருக்கிறது. பிரச்சனைகள் எல்லாம் தானாகச் சரியாகிவிடும் என்று – இந்த காலகட்டத்தில் இந்தியாவில் கருதப்படுவதைப் போன்று – தாங்களாகக் கருதிக் கொண்டு பிரச்சனையிலிருந்து வெளியேறிவிட முடியாது என்பதை அரசுகள் பெரும்பாலும் உணர்ந்தே இருக்கின்றன. அதுபோன்று நடந்து கொள்வது நல்லதொரு திட்டமிடலாக இருக்காது. நல்ல திட்டமிடல் என்பது நிலைமையைச் சரிசெய்வது மட்டுமல்ல. நிலைமை வேறாக இருக்கும் போது நன்கு கவனித்துக் கொள்வது, ஏதேனும் தவறு நடந்தால் – கடந்த காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்துள்ள, நாம் தவிர்க்க வேண்டிய சாத்தியமற்ற சூழ்நிலை வந்தால் – அவர்கள் தங்களைச் சாகடித்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மக்களிடம் நம்பிக்கையூட்டுவது போன்றவற்றையும் உள்ளடக்கியே இருக்கும். உலகெங்கிலும் பொருளாதாரம் சார்ந்த ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக விவசாயத்தில் இருந்து வருகின்ற பாதுகாப்பின்மையின் இயல்பான தன்மையைப் புரிந்து கொள்ளாமல் ஏன் இந்த அளவிற்கு உணர்ச்சியற்றதாக அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
என்.டி.டி.வி: இந்த நாட்டில் விவசாயத்துடன் தொடர்புடையதாக இருக்கின்ற மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை, ஏற்ற இறக்கம், பாதுகாப்பின்மை போன்றவற்றைக் குறைப்பதே இந்தியாவில் விவசாய மேம்பாட்டிற்கான துரிதமான வழியாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: ஆமாம், விவசாயிகளிடம் ஏற்கனவே இருந்து வந்த பாதுகாப்பின் அடிப்படையிலேயே, நாம் இப்போது நடைபெறுகின்ற விவசாயிகளின் போராட்டத்தைப் பார்க்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதாவது உத்தரவாதம் தருவதில் அரசாங்கத்திற்கென்று பங்கு இருக்கும் போது, தங்களால் பாதுகாப்பான நிலையில் இருக்க முடியும் என்று விவசாயிகள் உண்மையில் நினைக்கிறார்கள். பொருளாதாரத் திட்டமிடுதலின் பல பகுதிகளிலும் இது உண்மையில் நிகழ்ந்திருக்கிறது. அதாவது சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராகச் செல்லக்கூடாது – நான் அதை எதிர்க்கவில்லை – என்றாலும் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற உறுதியான பாதுகாப்பை வழங்கிட வேண்டும். அவ்வாறு பாதுகாப்பை உறுதி செய்து தராமல் சந்தை சக்திகளிடம் அவர்களை விட்டுச் செல்வது சந்தைப் பொருளாதாரத்திற்குமே உகந்ததாக இருக்கப் போவதில்லை.
உலகின் எந்தவொரு வெற்றிகரமான சந்தைப் பொருளாதாரமும் ஆபத்துக்களை மக்கள் எதிர்கொள்வதைத் தடுப்பதை உறுதிப்படுத்துகின்ற வகையில், பட்டினிச் சாவு குறித்த பயத்திலிருந்து வெளியே வருவதற்காக எடுக்கப்படுகின்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் அளிக்கப்படுகின்ற ஆதரவை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. இந்த வெளிச்சத்தைக் கொண்டே இப்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை நாம் படிக்க வேண்டும். இத்தகைய பாதுகாப்புகளைத் தராமல் இந்தியாவில் பசுமைப் புரட்சி நடந்திருக்கவில்லை. இவ்வாறான பாதுகாப்புகளை வழங்கியே நாம் பசுமைப் புரட்சியை எட்டினோம்.
என்டிடிவி: மூன்று புதிய மசோதாக்களும் சந்தை சார்ந்தவையாக இருக்கின்றன என்றும், அந்த மசோதாக்களுக்கு எதிராக இருப்பவர்கள் எவரொருவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானவரே என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: சில நேரங்களில் என் மீதும் நான் சந்தைக்கு எதிரானவன் என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக சந்தையை எதிர்கொண்டு வருகின்ற நான் ஆடம் ஸ்மித் கொண்டிருந்த அதே கருத்தைக் கொண்டவனாகவே இருக்கிறேன். அதாவது வெற்றியடைவதற்கு உங்களிடம் ஆரோக்கியமான சந்தை இருக்க வேண்டும். மக்களின் நலன்களைக் கவனித்துக் கொள்கின்ற ஆரோக்கியமான அரசு இருக்க வேண்டும். ஆரோக்கியமான சந்தைக்கு முன்னுரிமையை அளித்து விட்டு, நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கான அரசின் பொறுப்பை முற்றிலும் புறக்கணிப்பதே விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான காரணமாக இருக்கிறது. இவையிரண்டின் கலவையே 1776ஆம் ஆண்டில் ஆடம் ஸ்மித்தால் முன்வைக்கப்பட்டிருந்தது என்றே நான் கருதுகிறேன். இந்தக் கருத்தே கடந்த ஆண்டு நான் ஆற்றிய சொற்பொழிவின் மையமாக அமைந்திருந்தது.
என்டிடிவி: மக்களின் நலனை அரசோ அல்லது அரசாங்கமோ கவனிக்க வேண்டும் என்று கூறும் போது, தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதால் – தங்கள் சுயநலத்தைப் பற்றி மட்டுமே நம்முடைய விவசாயிகள் கவலைப்படுகிறார்கள் என்பதால் – அவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது.
பேராசிரியர் அமர்த்தியா சென்: தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி ஒருவர் கவலைப்படுவது ஒன்றும் பாவச் செயலல்ல. அதைச் செய்கின்ற போது, திடீரென்று எங்கிருந்தோ நீங்கள் விவசாயியே அல்ல, காலிஸ்தான் அல்லது அது போன்ற ஏதேனுமொரு அதிருப்தி இயக்கத்தின் கொடியைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவர்களுடன் எந்த தொடர்பையும் கொண்டிராத விவசாயிகள் திடீரென்று காலிஸ்தானிய படைவீரர்களாக இருப்பதைக் கண்டு மக்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டார்கள்.
இதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக உள்ள பலர் இப்போது இருக்கிறார்கள், அதுதான் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. ஏனென்றால் சிலரது தலைகளில் தட்டினால் தாங்கள் விரும்புவதை – அதாவது அரசாங்கத்தை யாரும் விமர்சிக்காத அமைதியான நாட்டை – அடைந்து விடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் அது நிச்சயம் ஜனநாயகமாக இருக்காது. யுஏபிஏ மற்றும் பலவற்றில் நிர்வாகத்தின் பங்கை மிகைப்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை அடைய முடியாது.
என்டிடிவி: இதில் முற்றிலுமாக நான் உங்களுடன் உடன்படுகிறேன். பெயர் குறிப்பிட்டுச் சொல்வது, ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது போன்ற செயல்கள் நீங்கள் சொல்வதைப் போல தலையிலே தட்டுவதாகும். நமது விவசாயிகளைப் பற்றி நாம் அனைவரும் உண்மையில் மிகவும் பெருமை கொள்கிறோம். அவர்கள் நம்முடைய ராணுவ வீரர்களைப் போல இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து தருகிறார்கள்.
இப்போது நடந்து கொண்டிருப்பதன் மறுபக்கத்திற்கு நாம் செல்லலாம். இந்தியாவின் பங்குச் சந்தை வளர்ந்து வருகிறது என்றாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7% முதல் 8% என்ற அளவிற்கு குறைந்துள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ள போதிலும் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் பங்குச் சந்தைகள் வளர்ந்தே இருக்கின்றன. இந்த இரண்டு முரண்பாடான போக்குகளை எவ்வாறு விளக்குவது? இவ்வாறு நடந்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? உண்மையில் பொருளாதாரத்தைப் பற்றி பங்குச் சந்தை என்ன கூறுகிறது?
பேராசிரியர் அமர்த்தியா சென்: அதுபற்றி பங்குச் சந்தை அதிகம் சொல்லவில்லை. ஆனால் பங்குகளின் மதிப்பைப் பற்றி அது சொல்கிறது. பங்குகளின் மதிப்பு பலவிதமான கருத்தாய்வுகளைப் பொறுத்தது. பொருளாதாரம் எவ்வளவு உற்பத்தித்திறன் வாய்ந்ததாக இருக்கிறது, ஊதியமாக அல்லது பொருளாதார பரிவர்த்தனையின் பலன்களாக தனிநபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாக அது இருப்பதில்லை. நீங்கள் உற்பத்திப் பொருளை விற்க விரும்பினால் மூலதனத்தின் மதிப்புடன் ஒப்பிடும்போது லாப மதிப்பு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று ஒப்பீட்டு அளவாகவே அது இருக்கிறது. எனவே பொருளாதாரத்தின் பொருளாதார செயல்திறன் மிக மோசமாக இருந்தாலும்கூட பங்குச் சந்தை மிக எளிதாக அதிகரிக்கக்கூடும். அவ்வாறு நடப்பது இதுவொன்றும் முதல் முறை அல்ல.
என்டிடிவி: இப்போது உங்களிடம் உண்மையிலேயே நேர்மையற்ற கேள்வி ஒன்றை நான் கேட்கப் போகிறேன். நமது பொருளாதாரம் மீண்டும் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகையில், பங்குச் சந்தைக்கு என்ன நடக்கப் போகிறது, பங்கு விலைகள் உயருமா அல்லது வீழ்ச்சியடையுமா? நான் சொன்னதைப் போல இது மிகவும் நேர்மையற்ற கேள்விதான்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: பங்குச் சந்தையில் பல கூறுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவற்றில் ஒன்று – ஆர்தர் பிகோ குறிப்பாக வலியுறுத்திச் சொன்னது – அதற்கு உளவியல் நிலை மிகவும் முக்கியமானது. அனைத்தும் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக மக்களை நம்ப வைப்பதில் வெற்றி பெற்றால், சொத்துகளின் மதிப்பு காட்டப்பட்டால் பங்குகளின் மதிப்பு நிச்சயம் உயரும். அதிக சிரமம் எதுவுமின்றி பங்குச் சந்தைகள் உயரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.
பொருளாதார விஷயங்களைத் தீர்மானிப்பதற்கான மிகச் சிறந்த வழியாக பங்குச் சந்தை இருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் மறுபுறம் பங்குச் சந்தைக்கு அதிக அளவிலான முதலீடு நிச்சயமாக உதவுகிறது. எனவே அறிவார்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர் நிச்சயம் பங்குச் சந்தையையும் – அது மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதால் அல்ல, மாறாக பொருளாதாரத்தின் செயல்திறனில் ஒரு கருவியாக இருப்பதால் – கவனித்துப் பார்க்க வேண்டும். எனவே உங்களால் பங்குச் சந்தைகளை முழுமையாக ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் அதை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் நமது உலகம் முதலாளித்துவ பொருளாதாரத்திலிருந்து வெகு தொலைவிற்கு நகர்ந்து சென்று விடும் என்று நான் நினைக்கவில்லை.
என்டிடிவி: இப்போது எளிதான கேள்வியிலிருந்து சற்றே வேடிக்கையான கேள்விக்கு… பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்களா – இல்லையென்றால் ஏன்?
பேராசிரியர் அமர்த்தியா சென்: நான் இதுவரையிலும் அதைத் தொடவில்லை. வேடிக்கையான, நேர்மையான விஷயங்களைச் செய்யவே நான் விரும்புகிறேன். செய்கின்ற எதுவொன்றிலும் ஒரு விதி இருக்க வேண்டும் என்பதை நான் பொது விதியாகக் கொண்டிருக்கிறேன். எனவே அந்தக் கருத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை. மறுபுறத்தில் பார்த்தால், நேர்மையின்மையை தெளிவான மூலதனமாக்கி, அடிப்படையில் நம்பிக்கை தந்திரமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் நான் மிகவும் மோசமான நிலையில் இருக்க வேண்டும். அவ்வளவு மோசமான நிலையில் நான் இருக்கவில்லை, எனவே நான் ஏன் அதற்குள் செல்ல வேண்டும்?
என்டிடிவி: இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு நீங்கள் மிகவும் பொருத்தமான பாடத்தை, உண்மை குறித்து கற்பிக்கப் போகிறீர்கள் என்று கேள்விப்படுகிறோம். நம்பிக்கை-பற்றாக்குறை, உண்மை-பற்றாக்குறை இருந்து வருகின்ற உலகில் வாழ்ந்து வருகின்ற போது, இன்றைக்கு அது மிகவும் பொருத்தமானது என்றே நான் சொல்வேன். அது ஒருபோதும் மோசமாக இருக்கப் போவதில்லை.
பேராசிரியர் அமர்த்தியா சென்: உண்மை குறித்து ஒரு பாடத்தை தயார் செய்து அடுத்த ஆண்டு நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். உண்மை குறித்த மக்களின் பார்வை மிகவும் குறைபாடுடன் இருப்பதாலேயே இந்த உலகில் ஏராளமான சிரமங்கள் எழுகின்றன என்பதை அதிகமாக நம்புவதாலேயே அந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை தன்னுடைய நண்பரிடம் ‘சிறந்த தத்துவஞானியான விட்ஜென்ஸ்டைன் எனும் நான் இன்னும் கூடுதலாகப் புத்திசாலித்தனத்துடன் இருப்பதன் மூலம் தலைசிறந்த மனிதனாக இருக்க விரும்புகிறேன்’ என்று விட்ஜென்ஸ்டீன் கூறினார். தலைசிறந்த நபராக இருப்பதற்கு புத்திசாலித்தனமாக இருப்பது அதிகம் தேவைப்படுவதில்லை. ஆனால் நம்முடைய ஏராளமான தோல்விகள், சரியானதைச் செய்ய இயலாமை போன்றவை நமது அறிவுசார் தோல்வியிலிருந்தே குறிப்பாக உண்மையைப் புரிந்து கொள்ளாததாலேயே எழுவதாக அவர் கருதினார். இந்த உலகில் நாம் சந்திக்கும் வேறுபாடுகள், விவாதங்களின் பின்னணியில் பார்க்கும் போது இந்தியப் பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்வதற்கான மிகப் பெரிய தேவை இப்போது எழுந்துள்ளது.
என்டிடிவி: பேராசிரியர் அமர்த்தியா சென், உங்களுடைய இந்த நேரத்தை எங்களுடன் செலவிட்டதற்கு மிக்க நன்றி. உங்களுடன் இரவில் மிகவும் தாமதமாகப் பேசியிருக்கிறேனா, அல்லது அது அதிகாலையில் பேசியிருக்கிறேனா, அதிகாலை நான்கு மணியா அல்லது இரவு நான்கு மணியா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன். இரவில் மிகவும் தாமதமாக, இல்லையா?
பேராசிரியர் அமர்த்தியா சென்: ஆம். நான் அதிகாலை நான்கு மணி வரை வேலை செய்ததால்…
என்டிடிவி: நேரத்தைப் பார்த்தால் நாங்கள் உங்களுக்கு நியாயம் செய்திருக்கவில்லை என்றே நம்புகிறேன். தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: ஆம். என்னுடைய தூக்கத்தை நீங்கள் கணக்கில் கொள்ளவில்லை என்றால்…
என்டிடிவி: எங்களுடன் இணைந்ததற்கும், இவ்வளவு நேரம் செலவிட்டதற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. தயவுசெய்து கடினமாக உழைக்க வேண்டாம். நான் சொன்னதைப் போல் நீங்கள் உண்மையிலேயே மோசமான முன்மாதிரியை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். உண்மையில் எங்கள் அனைவரையும் மிகவும் குற்றவாளியாக உணர வைத்திருக்கிறீர்கள்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: ஓ… நன்றி. எனது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ளவும், என்னிடம் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
என்டிடிவி: நன்றி, மிக்க நன்றி. இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
பேராசிரியர் அமர்த்தியா சென்: விடைபெறுகிறேன்.
நன்றி: என்டிடிவி தொலைக்காட்சி 2021 மார்ச் 06
தமிழில்: தா.சந்திரகுரு