*நீ எப்போ வர்றே?* குறுங்கதை – உதயசங்கர்

நீ எப்போ வர்றே? குறுங்கதை Nee Eppo Varra Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayam.போன மாதம் இறந்து போன அவனுடைய நண்பன் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அலைபேசித்திரையில் தெரிந்த அவனுடைய படத்தைப் பார்த்ததும் முதலில் திடுக்கென்றிருந்தது. அப்புறம் அவனுடைய பிள்ளைகள் யாராவது தெரியாமல் அழைத்திருப்பார்கள் என்று நினைத்தான். கொஞ்சநேரம் கழித்து மறுபடியும் அழைப்பு வந்தது. இப்போது யோசிக்காமல் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான். மறுமுனையில் பதிலில்லை. திரும்பவும் ஹலோ என்றான். எந்த சத்தமுமில்லை. சரி. குழந்தைகள் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தான். அதன்பிறகு அன்று முழுவதும் தொந்திரவில்லை.

இரவில் மூன்று மணியிருக்கும். மறுபடியும் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இந்த முறை அவனுக்குக் கடுப்பாகி விட்டது. விளையாடுவதற்கும் அளவு வேண்டாமா? அலைபேசியை எடுத்து,

“விளையாடறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா.. ராத்திரியில என்ன வேடிக்கை?“ என்று கத்தினான். ஒருகணம் அமைதியாக இருந்த மறுமுனையில் லேசாக மூச்சு விடும் சத்தம் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “ என்ற வேலுவின் குரல் கேட்டது. அவனுக்கு அப்படியே விக்கித்துப்போய் வியர்த்து ஒழுகியது. அவனுக்குக் குரலே வெளியே வரவில்லை. குழற ஆரம்பித்தபோது,

“என்னடா பதிலேயில்ல.. நீ எப்ப வர்றே? “ என்ற சத்தம் மறுபடியும் கேட்டது. அது வேலுவின் குரலே தான். அதே பெண்மை கலந்த கீச்சுக்குரல். அவன் உடல் நடுங்க,

“யாரு? யாரு? “ என்றான். பதிலில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவன் உடனே வேலுவின் மகனை போனில் கூப்பிட்டான். வேலுவின் மகன் போனை எடுக்கவில்லை. காலையில் கூப்பிடலாமென்று நினைத்து படுக்கையில் புரண்டான். தூக்கம் வரவில்லை. யாராக இருக்கும்? அச்சுஅசல் வேலுவின் குரலைப் போலவே இருந்ததே. 

காலையிலே வேலுவின் மகனை அழைத்தான்.

“அப்பாவோட நம்பரிலிருந்து எனக்குப் போன் வந்ததுப்பா? யாராச்சும் போனை எடுத்து விளையாடுறாங்களா..

இல்லியே மாமா.. அப்பா இறந்த பிறகு அந்த சிம்மைக் கழட்டி ஒடிச்சுப் போட்டாச்சு.. அவரோட போனை எங்கேயோ பழைய எலக்டிரானிக் சாமான்கள் வைக்கிற பையில் போட்டாச்சே.. வேற யாராச்சும் இருக்கும் மாமா..

என்று தெளிவாகப் பதில் சொன்னான். ஒருவேளை நாம் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று மனம் ஆறுதலடைந்தது. ஆனால் அந்த ஆறுதல் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கவில்லை. மத்தியானம் போல திரும்பவும் அழைப்பு வந்தது. அவன் எடுக்காமல் அந்தத் திரையையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து வந்த அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்தான். ஒரு நேரத்தில் தாங்க முடியாமல் போனைச் சுவிட்ச் ஆப் செய்தான்.

கொஞ்சநேரம் எதுவுமில்லை. நிம்மதியாக இருந்தது. ஆனால் அவனே அதிர்ச்சியடையும் படி சுவிட்ச் ஆப் செய்த போனிலிருந்து அழைப்பு வந்தது. திரையில் தெரிந்த வேலுவின் உருவம் சற்று ஒளி மங்கியிருந்தது. அவ்வளவுதான். திகிலுடன் ஏதோ அமானுஷ்ய சக்தி அங்கே இருக்கிறதென்று அவன் பயந்து போனைத் தொடவில்லை. ஆனால் வேலுவின் குரல் கேட்டது,

“நீ எப்ப வர்றே? “

பயத்தில் அவன் ஊளையிட்டான். இதயம் வேகவேகமாகத் துடித்தது. ரத்தவோட்டம் வேகமாக ஓடியது. உடலெங்கும் வியர்த்து ஒழுகியது. அப்படியே கட்டிலில் உட்கார்ந்த அவன் கண்முன்னால் வேலு நின்று கொண்டிருந்தான்.

“வா.. போகலாம்..என்றான் வேலு. அந்த அறையெங்கும் சாராய வாடை வீசியது. அவன் எழுந்து பேசாமல் வேலுவின் பின்னால் போனான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.