மின்னணு கருவிகளை கையாளும்போது கவனம் தேவை
– ஶ்ரீ காளீஸ்வரர் செ
அன்றாட வாழ்வில் மின்னணு பொருட்கள்
தரற்காலத்தில் மின்னணு பொருட்கள் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. மொபைல் கருவிகள், சார்ஜர்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான மின்னணு பொருட்களை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.
தொழில்நுட்ப வளர்ச்சி, அதிகப்படியான உற்பத்தி மற்றும் உலகளாவிய பொருளாதார வசதிகளின் காரணமாக எளியவர்களும் பயன்படுத்தும் வகையில் மின்னணு பொருட்கள் கிடைக்கின்றன.
ஆனால், மின்னணு பொருட்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தற்காலத்தில் பழைய மின்னணு பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, பழுதடைந்த மின்னணு பொருட்களை சரி செய்வது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பல்வேறு விதமான காணொளிகள் (Videos) சமூக ஊடகங்களில் அனுதினமும் வெளியாகிறது.
கல்வி நோக்கத்திற்காக இத்தகைய காணொளிகள் வெளியிடப்பட்டாலும், அவற்றில் பல தவறான மற்றும் பாதுகாப்பற்ற தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது.
தவறாக வழிநடத்தும் சமூக ஊடகம்
மொபைல் ஃபோன்களுக்கு பயன்படுத்தக்கூடிய பேட்டரிகள் நாளடைவில், வேதி வினைகளின் காரணமாக அளவில் பெரிதாகிவிடும். குறிப்பாக, பட்டன் மொபைல் போன்களில் (keypad phones) பயன்படுத்தப்படும் கழற்றி மாற்றக் கூடிய பேட்டரிகள் (removable Batteries) எளிதில் உப்பிவிடும். இத்தகைய, அளவில் பெரிதான (Bulge) பேட்டரிகளை தொடர்ந்து பயன்படுத்துவது மிக மிக ஆபத்தானது. அதனுள் நாளடைவில் வேதிவினைகளின் காரணமாக சேரும் வாயுக்கள் (H2,CO) மற்றும் அழுத்தத்தின் காரணமாக திடீரென வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.
இருந்த போதிலும்,தொடர்ந்து மின்ன்னேற்றம் (charging ) செய்யாமல் இருக்கும்போது, இத்தகைய பேட்டரிகள் வெடிப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். இத்தகைய பேட்டரிகளை முறையாக அப்புறப்படுத்துவது இன்றியமையாதது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நான் சமூக ஊடகத்தில் பார்த்த ஒரு காணொளியில் குண்டூசியை கொண்டு, இந்த பேட்டரியின் உட்புறத்தில் (inner shell) கவனமாக ஒரு துளையிட சொல்கிறார்கள். அதனுள் சேர்ந்திருக்கும் வாயுக்கள் அனைத்தும் வெளியேறிய பிறகு, அதன் மீது ஒரு டேப்பை (insulation tape) சுற்றி மீண்டும் பயன்படுத்தலாம் என அந்த காணொளி குறிப்பிடுகிறது. இந்தப் போக்கு சரியானது அல்ல. ஒரு பேட்டரியினுடைய வெளிப்புற அமைப்பானது (outer cover) அது வெடித்து விடாத வகையில் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
வெளிப்புற ஈரப்பதம், வெப்பநிலை போன்றவற்றால் பேட்டரி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் பேட்டரி தயாரிப்பாளர்கள் கவனமாக இருப்பார்கள். மேலும், குறிப்பாக லித்தியம் கொண்டு தயாரிக்கப்படும் பேட்டரிகள் தண்ணீரோடு மிக மோசமாக வினைபுரியக்கூடியது. இத்தகைய சூழலில் குண்டூசியை வைத்து அந்த பேட்டரியில் துளையிடுவதே தவறான ஒரு செயலாகும். இந்த நடைமுறையின் போது, பேட்டரி வெடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதையும் கடந்து இத்தகைய ஒரு பேட்டரியை சாதாரண டேப்பை (insulation tape) சுற்றி வைத்து மீண்டும் மீண்டும் மின்னேற்றம்(charging)செய்யும்போது அதனுள் அதிகப்படியான வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கும்போதே இத்தகைய மொபைல் போன் பேட்டரிகள் வெடிக்கும் சூழல் ஏற்படலாம்.

மேலும், தற்கால மொபைல் கருவிகளில் வெளியாகக்கூடிய கழற்ற முடியாத (non removable) லித்தியம் பேட்டரிகளில் கூட, இதுபோன்ற அளவில் பெரிதாகும் பிரச்சனை ஏற்படலாம். ஒருவேளை உங்களுடைய மொபைல் துறையில் அதிகப்படியாக அழுத்தம் ஏற்படுவது போல நீங்கள் உணர்ந்தால், முறைப்படி அதை சரி செய்பவரிடம் (technician) கொண்டு சென்று, பேட்டரியை மாற்றிக் கொள்வது சிறந்தது.
அதிகப்படியான அழுத்தம் பேட்டரி வெடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். மேலும், நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னழுத்த அளவீடு (Voltage rating) கொண்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதிலும் குறிப்பாக சார்ஜர்களையும் கடந்து, அதற்காக பயன்படுத்தும் usb கேபிள்களும் தரமானதாக இருக்க வேண்டும். தரம் குறைந்த அல்லது பொருந்தமில்லாத மின் அளவீடு கொண்ட சார்ஜர்களை பயன்படுத்தும் போது மொபைல் கருவிகள் அதிகம் சூடாவதோடு, தீ விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.
தவறாக வழிநடத்தும் சோதனைகள்
ஒரு சமூக ஊடக காணொளியை பார்க்கும்போது, சிறிய எல்இடி விளக்குகளை தொடர் இணைப்பில் இணைத்து நேரடியாக 230 வோல்ட் மின்னழுத்தத்தில் மின்சாரம் வரக்கூடிய இணைப்பில் சொருகி, அதை காணொளியாக பதிவிட்டு இருக்கிறார்கள். இதற்கு எல்இடி பல்ப் எக்ஸ்பிரிமெண்ட் (led light experiment) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற செயல்பாடுகள் மிக மிக ஆபத்தானது. 230 வோல்ட் மின்சாரமானது, நமது உடலில் பாயும் போது மிக மோசமான தீக்காயங்களை ஏற்படுத்தும். உயிருக்கு கூட ஆபத்தாக அமையும். மேலும், led விளக்குகள் மிகக் குறைந்த மின்னழுத்தத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அவற்றை நேரடியாக 230 வோல்ட் மின் இணைப்பில் பொருத்தி விளையாடுவது, மிகுந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும், அசாதாரண சூழல்களில், எல்இடி பல்புகள் வெடிக்கும் போது, அதில் இருக்கும் சிறிய கண்ணாடி துகள்கள் கண்களில் பட்டு கண் பார்வை பாதிக்கப்படும் சூழல் கூட ஏற்படலாம்.
மேலும், இது போன்ற பரிசோதனைகளை குழந்தைகள் நிச்சயம் செய்யக்கூடாது. ஆனால் இது போன்ற காணொளிகள் பள்ளி மாணவர்களுக்கான செயல்பாடுகள் என்பது போல செய்து காட்டப்படுகிறது.
இதைப் போலவே, இருசக்கர வாகன பேட்டரிக்கு பதிலாக சில கெப்பாசிட்டர்களை (மின்தேக்கி) வரிசையாக இணைத்து, இருசக்கர வாகனத்தை இயக்கலாம் என்பது போன்ற ஒரு காணொளியையும் பார்த்து இருந்தேன். கெப்பாசிட்டர்கள் புற சூழலில் அதிகப்படியான வெப்பநிலை ஏற்படும் போது வெடித்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை பொருத்தி இருசக்கர வாகனங்களில் விளையாடுவது சரியானதாக அமையாது. இது வாகன பயணத்தின் போது, தீ விபத்துகளுக்கு கூட வழிவகுக்கும்.
எனவே, பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அது குறித்து முறையாக ஆய்வு செய்து கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக மின்சாரக் கருவிகளோடு மிகுந்த கவனத்தோடு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவற்றின் அடிப்படை செயல்முறைகள் குறித்து முழுவதுமாக அறிந்து கொண்ட பின்பே உரிய பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கி காணொளிகளாக பதிவிட வேண்டும்.
மறு பயன்பாடு எல்லா நேரங்களிலும் உகந்ததல்ல
ஒரு சில இணைய காணொளிகளில் வீடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழைய எலக்ட்ரானிக் கருவிகளை எடுத்து வந்து அவற்றை சரி செய்து பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும், குறிப்பிட்ட டையோடுகள், ட்ரான்சிஸ்டர்கள் போன்றவை செயல்படாமல் இருக்கும்போது வெளியில் இருந்து ஒரு சில ஒயர்களை மாற்றி அமைத்து இயக்க முடியும் என்றும் காணொளிகளை பார்க்க முடிகிறது.
உண்மையிலேயே, பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்து மறு பயன்பாடு செய்வது, ஒரு வகையில் வரவேற்கக் கூடிய விஷயம் தான். ஆனாலும், இது குறித்து பல காணொளிகளில் தெளிவான விளக்கம் வழங்கப்படுவதில்லை. மேலும் இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பிரித்து வேலை செய்யும்போது பாதுகாப்பு கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம், இது போன்ற கருவிகளை சரி செய்து மீண்டும் பயன்படுத்தும் போது, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், குறிப்பிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவி எதற்காக தூக்கி வீசப்பட்டது என்பது நமக்கு தெரியாது. அதில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் கூட இருக்கலாம். எனவே இது போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு முன்பு அல்லது சரி செய்து பயன்படுத்துவதற்கு முன்பு, போதிய தகவல்களை அறிந்து கொள்வது இன்றியமையாதது.

இது போன்ற காணொளிகளை பதிவிடுபவர்கள் துறை சார்ந்த வல்லுனர்களாக இருக்கலாம். ஆனால், அதை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு மாணவர்கள் இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளோடு விளையாடுவது எப்போதும் உகந்ததாக அமையாது. மேலும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை நாமாகவே பிரித்து வேலை செய்வதை ஊக்குவிப்பதில்லை. மேலும், லித்தியம் பேட்டரிகளோடு வரக்கூடிய ப்ளூடூத் ஒலிபெருக்கிகள் போன்ற கருவிகளில் வேலை செய்யும்போது கூட சற்றே கவனமாக இருக்க வேண்டும். காரணம் விலை மலிவாக கிடைக்கும் இது போன்ற ஒலிபெருக்கிகளில் தரம் குறைந்த லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதை கவனிக்க முடிகிறது.
மற்றும் ஒரு காணொளியில் பழுதடைந்து எல்இடி பல்புகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு, அவற்றின் மேல் மூடியை கழட்டி இரண்டு ஒயர்களை மட்டும் ஒவ்வொரு led விளக்கின் மீதும் வைத்து பரிசோதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே இது போன்ற நடைமுறைகள் மிகுந்த ஆபத்திற்குரியது. பெரும்பாலான வீட்டில் பயன்படுத்தப்படும், எல் இ டி பல்புகள் 230 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. எனவே, நேரடியாக மின் இணைப்பில் வைத்துக் கொண்டு அவற்றைப் பிரித்து சரி செய்வது, திடீர் மின்னதிர்ச்சிக்கு கூட வழிவகுக்கும். மேலும், பெரும்பாலான வீட்டில் பயன்படுத்தப்படும் எல்இடி பல்புகள் ஒருமுறை பயன்பாட்டிற்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்ய முயற்சிப்பது அனைத்து சூழல்களிலும் உகந்ததாக அமையாது.
மேலும் சிலர் தண்ணீர் பைப்புகளை உருக்கி (pvc water pipes), அவற்றை வெளிப்புற அமைப்பாக கொண்டு (outer case for switch box) ஸ்விட்ச் பாக்ஸ்கள் செய்யும் முறை குறித்தும் காணொளிகளாக பதிவிட்டு வெளியிட்டு இருக்கின்றனர். தண்ணீர் பைப்புகள் அதிகப்படியான வெப்பநிலையை தாங்கும் வகையில் (heat resisting capacity is low) வடிவமைக்கப்படுவதில்லை. அவற்றில் மின்சார ஒயர்களை இணைத்து, ஸ்விட்ச் பாக்ஸ்களாக பயன்படுத்துவது, தீ விபத்துகளுக்கு கூட வழிவகுக்கும். எனவே, அதற்காக பரிந்துரைக்கப்படும் தரத்திலான பிளாஸ்டிக் ஸ்விட்ச் பாக்ஸ்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

மேலும், பழைய செட்டாப் பாக்ஸ் கருவிகள், பழுதடைந்து எக்ஸ்டென்ஷன் பாக்ஸ்கள் (Extension boxes) உள்ளிட்ட கருவிகளையும் சரி செய்யும் காணொளிகள் இணையத்தில் காண கிடைக்கிறது. இவற்றைப் பார்த்துவிட்டு மட்டும், பழுதடைந்த கருவிகளை சரி செய்து விட முடியாது. எப்போதும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை பழுது பார்க்கும் போது அதற்கான முறையான பயிற்சி மற்றும் அனுபவம் முக்கியமானது. மேலும், அனுபவம் இருப்பினும் கூட மூல இணைப்பிற்கு(main connection)முறையான தரை இணைப்பு வழங்கப்பட்டு (proper grounding)இருப்பதையும், திடீர் மின்னதிர்ச்சியை தடுக்க முறையாக செருப்பு அணிந்திருப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், உரிய துறை சார் நிபுணர்களின் அனுமதி மற்றும் மேற்பார்வை இன்றி இது போன்ற பரிசோதனைகளில் ஈடுபடக்கூடாது.
அப்புறப்படுத்துதல்
பழுதடைந்த பேட்டரிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை குப்பைகளில் தூக்கி வீசக்கூடாது. அவை திடீரென வெடித்து தீ விபத்துகளை கூட ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், நீங்கள் பயன்படுத்தும் பேட்டரிகளுடன் வரக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவி சம்பந்தமின்றி அடிக்கடி சூடாவதாக உங்களுக்கு தோன்றினால், உடனடியாக அதை பரிசோதிப்பது நல்லது. முன்பே குறிப்பிட்டது போல மொபைல் திரையில் அதிகப்படியான அழுத்தம், உப்பிய பேட்டரிகள் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. முறையான பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்து கொள்வதோடு, பிறர்க்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சி, மனித வாழ்வில் மிகப்பெரிய நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு இருப்பதோடு, உலகளாவிய தகவல் தொடர்புக்கும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது.
மின்சாரத்தின் வருகைக்குப் பிறகு, இரவில் கூட எளிமையாக பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருந்த போதிலும், இது போன்ற தொழில்நுட்பங்களை போதிய விழிப்புணர்வோடு பாதுகாப்பாக பயன்படுத்துவது சாலச்சிறந்தது.
கட்டுரையாளர்:
ஶ்ரீ காளீஸ்வரர் செ,
இளம் அறிவியல் எழுத்தாளர்,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
தெ.தி.இந்து கல்லூரி.
நாகர்கோவில் – 02
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

