வலியைவிட பசிதான் அவளை வாட்டியது. குழந்தை பிறந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. ஈர்க்குச்சிகள் ஆங்காங்கே நீண்டு அதன் வழியே சூரிய ஒளி பல இடங்களில் உட்புகுந்திருந்த ஓலை குடிசை அது. போன மழைக்கு குடிசையின் சுற்றுசுவர் பாதி கரைந்தும் ஒரு இடத்தில் வீழ்ந்துவிட்டும் இருந்தது. அவ்வப்போது ஒரு பூனை அந்த வீட்டில் நடை பழகும்.

கூரைப் பொத்தலில் ஒழுகிய மழைநீர் வீட்டின் தரையை சிறிது உரு மாற்றியிருந்தது. ஒரு பழைய புடவைதான் கதவென காற்றில் அடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு அறைதான். வாயிலின் வலதுபுறமாக அடுப்பு இருந்தது. அருகில் தண்ணீர் பானையும் சில பாத்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குடிசையின் இடதுபுறமாக ஒரு பனை ஓலை பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் ஒரு பழைய புடவை போடப்பட்டிருந்தது. பாயின் ஒரு முனையில் இரண்டு வயது பெண் குழந்தையும் மறு முனையில் இரு தினங்களுக்கு முன் பிறந்த மற்றொரு பெண் குழந்தையும் நடுவே பிள்ளைகளின் தாய் சாமந்தியும் படுத்திருந்தனர்.

ஓலைப் பாயின் சலசலப்பு. புரண்டு புரண்டு படுத்தது சாமந்தியின் முதல் குழந்தை. அதன் ஒத்திசைவில் ஓலைப் பாயும் சப்தம் போட்டது.

சாமந்தி படுக்கையை விட்டு மெல்ல எழுந்து இரண்டு காலையும் நீட்டிச் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தாள். காய்ந்த சருகுபோல் காணப்பட்டாள். கண்கள் சோர்வுற்று சற்றே உள்வாங்கியிருந்தன. கன்னங்கள் பிஞ்சு மாங்கொட்டையாய் சப்பையாய் ஒட்டியிருந்தன. உடுத்தியிருந்த புடவையை சரி செய்யக்கூட அவளுக்குத் தெம்பில்லை. ஏதோ பெயருக்கு மாராப்பு என்ற அளவில் அவள் தோள்மேல் சுருண்டு கிடந்தது.

மூத்த மகளை எழுப்ப முயற்சி செய்தாள். அந்தப் பிஞ்சு முனகிக்கொண்டே உருண்டு படுத்துக்கொண்டது. மணி என்னவாக இருக்கும் என நினைத்தவாறே சற்றே வாசலை எட்டிப் பார்த்தாள். மஞ்சள் வெயில் நண்பகல் என்பதை உணர்த்தியது.

எந்த ஒரு வேலைக்கும் செல்லாத மேம்போக்கான கணவன். சீட்டாட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவன். ஒரு முறை கருவேலக் காட்டில் சீட்டு ஆடும்போது இவனும் இவனது கூட்டாளியும் போலிசில் மாட்டிக்கொண்டு, மூன்று நாள் சிறையில் இருந்தனர். எப்போதாவது சிறிதளவு பணமும் தின்பண்டமும் கொண்டுவருவான். அதைத் தவிர அவன் இந்தக் குடும்பத்திற்கு என்று ஏதும் செய்ததில்லை.

எத்தனை எடுத்துக் கூறியிருப்பாள்.

‘தோ பாரு மாமா.. நமக்கு குழந்தை ஆயிட்ச்சி. இப்பக்கூட நீ பொறுப்பே இல்லாம இப்டி ஊரச் சுத்திக்கிட்டு இருந்தா எப்டி..? சொல்லு.. வயசான காலத்துல எங்கப்பாதான் கஞ்சி ஊத்துது. நால் ரூபா சம்பாரிச்சி குடுக்காட்டியும் இந்தப் பாழாப் போன சீட்டுக்கட்ட தொடாத மாமா. வூடு ஒழுவுது. கீத்த மாத்தணும். வர்ற மழைக்கெல்லா மொத்தமுங் கொட்டும் பாரு.. எதச் சொல்லு.. கேக்கமாட்ட இல்ல.. கஷ்டம் தெரியாம வளந்தனே.. இப்ப பாரு..’ என்று கண்களில் நீர் ததும்பி நிற்பாள்.

‘போடி போக்கத்தவளே.. வந்துட்டா பெரிய இவளாட்டம். எனக்கு புத்தி சொல்ல’ என்று கூறிவிட்டு சென்றுவிடுவான். செய்வதறியாது நிலை தப்பி நிற்பாள் சாமந்தி.

காதல் திருமணம்தான்.

‘தோ பாரு சாமந்தி. அந்த ஒதவாக்கரப் பையன நம்பாதே. வேல வெட்டியில்லாம அண்ணி கையால தண்டச் சோறு வாங்கித் தின்ற பய. அவனப் போய் கட்டிக்கிறங்கர.. தாயில்லா ஒத்த புள்ளன்னு செல்லங் குடுத்தா…’ சாமந்தியின் காதல் விவகாரம் தெரிந்து அவளது தந்தை எட்டியப்பன் கூடிய மட்டும் அறிவுரையுடன் எதார்த்தத்தையும் உணர்த்த முயன்றார். வயது கேட்பதாயில்லை.

ஒரு நாள் காலைப்பொழுது…

அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக் கூண்டைத் திறந்து நொய்யரிசிகளை அவற்றிற்கு உணவாக அளிக்க ‘போ.. போ.. போ..’ என்று அழைத்துத் தீனி போட்டாள் பக்கத்து வீட்டுப் பெண்.

வாசலில் படுத்திருந்த எட்டியப்பன் தூக்கம் கலைந்து சுற்றுமுற்றும் பார்த்தார்.

‘அடடா விடிஞ்சே ரொம்ப நேரமாச்சு போலியே’ என்று தன் மனதுக்குள் பேசிக்கொண்டே அருகில் இருந்த துண்டை உதறி எடுத்துக்கொண்டு படுத்திருந்த பாயைச் சுருட்டி எடுத்தவர் அப்போதுதான் கவனித்தார்.

வாசலில் கோலம் போடவில்லை. ‘என்ன சாமந்தி… இன்னுமா எழுந்துக்கல… சாணி தெளிக்கல.. என்னயும் கூட எழுப்பல..’ என்று குரல் கொடுத்துக்கொண்டே குடிசையின் வாயிற்படியில் தலைநுழைத்து ‘சாமந்தி..’ என்றார்.

அவள் வீட்டினுள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு விட்டவராய் வாசல் வந்து தெருமுனையை நோக்கினார்.

‘ன்னா.. மாமா.. தெருவையே பாத்துக்கிட்டு இருக்க’ என்றாள் பக்கத்து வீட்டுப் பெண்.

‘வந்துமா.. சாமந்தியக் காணல. காலையில எங்கப் போச்சின்னு தெரி…’ அவர் முடிக்கும் முன்பு மிக அருகில் சாமந்தியைப் பார்த்துவிட்டார்.

கழுத்தில் ரோஜாப் பூ மாலையுடன் வந்து நின்றாள். அருகில் சின்னப்பன். எட்டியப்பனின் கோபம் எப்படி யிருக்குமோ என அஞ்சியவளாய் பயந்து ஒடுங்கி சின்னப்பனின் அருகில் நின்றிருந்தாள் சாமந்தி.

நீண்ட நேர மௌனத்திற்குப் பிறகு இருவரையும் உள்ளே அமர வைத்தார். சேதி கேட்டு அங்கு வந்த சின்னப்பனின் அண்ணி இதுதான் நேரம் என்று சண்டையை இழுத்து அவனது உறவை கத்தரித்துவிட்டாள். அவனது அண்ணனும் அவளையே பின்தொடர்ந்தார்.

அன்று தொடங்கி சாமந்தியின் இரண்டாவது குழந்தை எட்டு மாதம் வயிற்றில் இருக்கும் வரை எட்டியப்பன்தான் சோறு போட்டார் இருவருக்கும். கிடைக்கும் வேலையைச் செய்வார். முதல் பிரசவத்தின்போது ஊரே பஞ்சத்தில் இருந்தது. வெற்றிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தவர், சத்துணவு கூடத்தில் மாரியம்மாளுக்கு கூடமாட ஒத்தாசையான வேலைகளையும் செய்வார். இது அது என்று ஏதாவது வருமானத்தைப் புரட்டி, வயிறு காயாது பார்த்துக் கொண்டார்.

மருமகனின் போக்கைக் கண்டு மனம் வருந்தியவராய், இன்று திருந்துவான், நாளை திருந்துவான் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தார்.

‘விடும்மா. நீ கண் கலங்காத. ஒரு நாள் திருந்தி வருவான். உன்னயும் புள்ளயயும் நல்லாப் பாத்துப்பான்..’ என்று மகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்துக் கொண்டிருந்தார்.

முன்பு சாமந்தியும் அவருடன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது ‘வயிற்றுப் பிள்ளைக்காரி… நீ வராத…’ என்று அவளை நிறுத்தி விட்டார்கள்.

ஒரு நாள் வெற்றிலைத் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு மாலை வரும்போது சிம்னி விளக்கு ஒன்று வாங்கிக்கொண்டு வீடு நோக்கி வந்தார் எட்டியப்பன்.

‘டப்பா, புட்டின்னு திரி போட்டு புள்ள வௌக்கு எரிய வைக்குது. ஒரு வௌக்கு வாங்கி ஏத்தி வச்சா வீடு வெளிச்சமா இருக்கும்…’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று விளக்குடன் வந்தார். ஆனால் அந்த விளக்கு எரிவதைப் பார்ப்பதற்கு அவரில்லை.

விளக்குடன் வீட்டு வாசலில் கால் வைத்தவர் மயங்கி விழுந்தார். சாமந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். ஊரார் அவருக்கு நல்ல சாவு என்று பேசிக்கொண்டனர்.

தந்தையின் நினைவலைகளின் நடுவே தன் வாழ்க்கைச் சித்திரம் சிதறுண்டு போனதையும் ஒருசேர நினைக்கையில் தானாகவே அவள் கண்களில் நீர் கரைந்தோடியது.

பொறுப்பில்லாக் கணவன் வீடு வந்து நான்கு நாட்களாகிவிட்டன. தேர்தல் பிரச்சாரத்திற்கு என்று சொல்லிவிட்டுப் போனவன். இது ஒன்றும் புதிது இல்லை தான். இருந்தும் தன் நிலை தெரிந்தும் இப்படி செய்கிறானே என்கிற ஆதங்கம் சாமந்திக்கு. அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியுடன் வீட்டில் வெகு சுலபமாய் இரண்டாவது பிரசவம் முடிந்திருந்தது.

நேற்று காலையில் பொறையும் கடுங்காப்பியும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள் பக்கத்து வீட்டு வேலம்மாள். 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி. அவளே மாலையும் வந்து சாமந்திக்கு ரொட்டியும் வரக்காப்பியும் கொடுத்து, ‘எம்மா சாமந்தி எழுந்து சாப்புடு. புள்ள பெத்த வயிறு காயக்கூடாது. இந்தாப் புடி…’ என்று கூறி அவளை மெல்ல எழுப்பி உட்கார வைத்துக் கொடுத்தாள்.

அருகில் நின்று தன் தங்கையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சாமந்தியின் மூத்த குழந்தையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு, ‘வாடியம்மா.. வா சாப்புடலாம்…’ என்றவாறே தான் கொண்டு வந்த பருப்பு சாதத்தைப் பிசைந்து ஊட்டினாள்.

‘சாமந்தி.. நீ ஒண்ணுக்கும் வெசனப்படாத. ஒம்புருஷன் வந்துடுவான். நா எங்கண்ணனப் போய்ப் பாத்துட்டு வந்துர்றேன். இழுத்துக்னு இருக்குதாம். நீ பத்தரமா இரு. நாளைக்கு சாயங்காலம் வந்துடறேன்’ என்று கூறிச் சென்றுவிட்டாள்.

சாமந்திக்கு பசியின் தாக்கம் அதிகமானது. இரு பிள்ளைகளும் உறங்கிக்கொண்டு இருந்தனர். அது உறக்கமா… பசியின் மயக்கமா… என்று தெரியாவண்ணம் இருந்தது மூத்த மகளின் முகம்.

மெல்ல எழுந்து நின்று முந்தானையைச் சரி செய்து விட்டு பானை நீரை சொம்பு நிறைய மொண்டு குடித்துவிட்டு ஏதோ யோசனை வந்தவளாய் அவளது வீட்டின் எதிர்ப்புறமாக இருந்த வீட்டிற்குச் சென்றாள்.

அது பொன்னாத்தா வீடு. பொன்னாத்தா இவளைக் கண்டதும் ‘ஏய்.. என்னா பொண்ணுடி நீ.. பச்ச ஒடம்புக்காரி. வா வா இப்டி உக்காரு..’ என்றாள். சாமந்தி அந்த வீட்டின் திண்ணையை ஒட்டிக் கீழே அமர்ந்தாள். கூரை வீடு என்றாலும் நன்கு வேயப்பட்டு இருந்தது. சற்றே பொருள் படைத்தவள்தான் பொன்னாத்தாள்.

‘நானே வரலாம்னு இருந்தேன். ம்.. எங்க வேல மாளுது. சரி.. ஏண்டி இந்த வெயில்ல வந்த.. என்னா ஒம்புருஷன் வந்துட்டானா…?’

‘இல்ல அத்த..’

‘ம்.. மனுசனா அவ.. ச்சீய்.. புள்ளய மட்டும் ஒண்ணுக்கு ரெண்டா பெத்துக்கத் தெரியுது. காப்பாத்த வேணா.. நாலு நாளா வராம இருப்பானா ஒருத்தன். வயித்து புள்ளக்காரின்னு ஒண்ணு வீட்டுல இருக்கேன்னு தெரிய வேணா… அவனுக்கு. இப்ப என்னத்தப் பண்ணிட்டு எந்த செயில்ல இருக்கானோ? எதுக்கும் நீ வெசனப்படாத சாமந்தி. அவங்கண்டிப்பா நாளைக்கி வந்துருவான். திருந்தி உன்னையும் உன் புள்ளயயும் நல்லா பாத்துப்பான்டி. நீ நல்லாதான் இருப்ப… இப்ப ஒண்ணும் கவலப்படாத…’ என்றாள்.

‘அத்த..’ என்று இழுத்தவள், ‘பசிக்குது. அதான் வந்தேன்.. எதுனா இருந்தா…’ என்ற வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தினாள்.

‘கஞ்சிதாண்டி வெலாவி இருக்கே. பச்ச ஒடம்புக்காரி. கஞ்சி குடிச்சா ஆவாதுடி…’

‘பரவால்ல அத்த.. குடு.. பெரிய பொண்ணும் பசியோட தூங்குது.’

‘சரி இரு வரேன்’ என்று உள்ளே சென்றாள். இரு பக்கமும் திண்ணை. நடுவில் வாயிற்படி. அங்குதான் அமர்ந்திருந்தாள் சாமந்தி. உள்ளே தரையோடு போடப் பட்டிருந்த அடுப்பு. அதன் மேல் இருந்தது கஞ்சிக் கலயம். பென்னாத்தா பக்கத்தில் கவிழ்த்து வைத்திருந்த ஒரு குண்டானை எடுத்து கீழே வைத்தாள். அடுப்பின் மேலிருந்த கஞ்சிக் கலயத்தைத் திறந்து, கொஞ்சமாக இருந்த கஞ்சியை மொத்தமாக வழித்துக் குண்டானில் ஊற்றினாள். சாமந்தி இவற்றைப் பார்த்தவாறு இருந்தாள்.

சாமந்திக்குத் தன் இளவயது காட்சிகள் கண்முன் தெரிவதைத் தடுக்க முடியவில்லை.

‘எப்பா என்னா சோறு செஞ்ச?’

‘ஒண்ணுமில்லம்மா.. கஞ்சிதான். வௌவிட்டு வொட்சக் கல்ல ஊறுகா அரைச்சே..’

‘போப்பா.. கஞ்சி வேணா.. கொழம்பு வைன்னா..’

‘ஒடம்புக்கு முடியலம்மா.. இப்ப மட்டும் சாப்டு. நாளைக்கு செஞ்சி தரேம்மா…’

காட்சியை அசைபோட்ட அவள் கண்களின் ஓரமாக வறண்ட நீர். துடைத்து விட்டவள் பொன்னாத்தா கஞ்சி ஊற்றுவதை எட்டிப் பார்த்தாள்.

குனிந்து சிறிது உப்பெடுத்த பொன்னாத்தாள், குனிந்தவாறே அதைக் கஞ்சியில் போட்டுக் கலக்கினாள். அந்நேரம் ஏதோ ஒன்று கொழகொழவென்று கருமையாய்க் கஞ்சியில் விழுந்தது.

‘அய்யய்யோ…’ என்று பதறிய பொன்னாத்தா நான்கு விரல்களை ஒருங்கிணைத்து மெல்ல அதை வெளியே எடுத்து பக்கத்தில் உள்ள தட்டில் போட்டாள். இதனை முழுதுமாகப் பார்த்துவிட்ட சாமந்தியைப் பொன்னாத்தாளும் பார்க்கத் தவறவில்லை.

‘அது ஒண்ணுமில்லடி.. சளி புடிச்சிருந்துதா.. அதான் கொஞ்சம் பொடி போட்டேன்.. பொலுக்குன்னு ஊத்திடுச்சி.. தோ எடுத்திட்டேன். நீ குடி..’ என்று கூறி கஞ்சிக் குண்டானை அவள் கையில் கொடுத்துவிட்டு, ‘புடி புடி சாமந்தி… எவ வூட்டு மாடோ பாரு கொல்லையில வந்து வெக்காவ மேயுது. இரு தொரத்திட்டு வரேன்…’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள், மாட்டை விரட்டியபடி.

அரிசி கஞ்சி சூடாகத்தான் இருந்தது. நெல்லரிசி உணவின் வாசம் அவளின் பசியை மேலும் தூண்டியது. சாமந்தியின் கை சுட்டபோதும் அவள் கண்ட காட்சியே அவள் மனதில் நின்றது.

சரி. இனிமேல் நாம் நன்றாக இருப்போம். பொன்னாத்தா சொன்னதுபோல் தன் கணவன் திருந்தி வருவான் என்று மனதில் அசை போட்டுக்கொண்டே வந்தவள் கண் முன்னே…, அந்த மூக்குப்பொடி கலந்த சளி அவ்வளவும் அந்தக் கஞ்சியில் கொத்தாக தொபக்கென்று விழுந்த காட்சி மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தது.

கையில் இருக்கும் கஞ்சியை வைத்துவிட்டுச் செல்வதா? பசியில் துவண்டுபோன வயிற்றிற்கு அதை அளித்துப் பசியாற்றுவதா? என்று ஒரு கணம் யோசித்தவள், அதனை எடுத்துக்கொண்டு தள்ளாடியபடியே தன் வீடு நோக்கிச் சென்றாள், தன் பிள்ளையும் பசியோடு இருப்பதை எண்ணியவளாய்.

கண்களில் வழிந்த நீர் அவளது ஒட்டிய கன்னங்களில் கோலங்களைப் போட்டுக்கொண்டே இருந்தது. தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி, வெடிகுண்டிற்குப் பலியானார். அக்கூட்டத்திற்குச் சென்றிருந்த பலரும் வெடிகுண்டு வெடித்ததில் பலியானார்கள். அதில் சாமந்தியின் கணவனும்…

– இறை மொழி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “‘நீர்க்கோலம்’ சிறுகதை – இறை மொழி”
  1. மனதை உலுக்கும் கதை …வரியவர்களின் குறைந்த பட்ச வருமானத்தையும் விழுங்கிவிடும் போதை….அருவருப்பை புறந்தள்ளும் பசி…படிக்க படிக்க மனது கணமாகிறது….

  2. எளிய மக்களின் வறுமையையும் பசியின் கொடுமையையும் ஆண்களின் பொறுப்பு இன்மையையும் ஒருங்கே சொல்லும் சிறுகதை. நல்ல எழுத்து நடை.
    சிறுகதை எழுத்தாளர்களில் பெண்கள் தடம் பதிக்க வேண்டிய தேவை உள்ளது. அது நிறைவேறும் விதத்தில் நல்ல தொடக்கமாக இக்கதையைப் பார்க்கிறேன்.

    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *