நூல் அறிமுகம்: சரிதா ஜோ-வின் *நீல மரமும் தங்க இறக்கைகளும்* – பூங்கொடிபுத்தகம்: நீல மரமும் தங்க இறக்கைகளும்
ஆசிரியர்: சரிதா. ஜோ
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ₹75.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/neela-maramum-thanga-irakkaikalum-by-saritha-joe/

குழந்தைகளைப் பற்றி எழுதும் புத்தகங்கள் குழந்தைகள் படிக்கும் வகையில் இருக்க வேண்டும்.அதுதான் சிறந்த குழந்தை இலக்கியம். இந்தநூலின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்ததும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்து முழுவதும் வாசித்து முடித்த பின் தான் என் மகன் ஶ்ரீராம் கீழே வைத்தான். இந்த ஒன்றே இந்த புத்தகம் கண்டிப்பாக குழந்தைகள் படிக்கும் விதத்திலும், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதத்திலும் இருக்கிறது என்பதற்குச் சான்று.

சிறந்த கதைசொல்லியாக தனக்கு என தனி பாணியை வைத்திருக்கும் சரிதா கதை எழுதுவதிலும் தனக்கென தனி எழுத்துநடை கொண்டுள்ளார். கதைசொல்லியாய் இருப்பதால் மிக அழகாகக் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவும், அதே நேரத்தில் அற்புதமான கருத்துக்களையும் கதையின் ஊடே கொடுத்து உள்ளார். இந்தப் புத்தகம் இவரின் முதல் சிறார் சிறுகதைத் தொகுப்பு.

8 சிறுகதைகள் கொண்ட இந்த நூலில் முதல் சிறுகதை பூமிக்கு வந்த நிலா. வழக்கமாக நட்சத்திரங்கள் வானில் பார்க்கும் போது என்ன நிறத்தில் இருக்கும்? வெள்ளை தானே. ஆனால் குழந்தைகளை வரைய சொல்லுங்கள் .பல வண்ணங்களில் வரைவார்கள். எங்க வீட்டுச் சின்ன வாண்டு கூட சிங்கம் வரஞ்சு பச்சை கலர் குடுப்பா. என் சிங்கம் எந்த கலர்ல வேணும்னாலும் இருக்கும்ன்னு சொல்லுவா. அது மாதிரி குழந்தைகள் உலகத்தின் கற்பனைகள் அலாதியானது. நாமும் குழந்தைகள் உள்ளம் தரித்தால் மட்டுமே அதை உணர்ந்து ரசிப்பது சாத்தியம். சரிதா கதையில் வரும் நட்சத்திரங்களை பல்வேறு வண்ணங்களில் படைத்து தனக்குள் உள்ள குழந்தையை உயிர்ப்பிக்கிறார் . அந்த நட்சத்திரங்கள் நிலாவில் வடை சுடும் பாட்டியிடம் வடைக் கேட்க, நிலா தனக்கு மட்டும் தான் வடை என்று சொல்லி, அவைகளைக் கீழே தள்ளி விடுகிறது.

அந்த நட்சத்திரங்கள் பூமியில் ஒரு மழலையர் பள்ளியில் விழுந்து விடுகிறது. அடுத்து என்ன என்ன நிகழ்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருப்பார்.
இரண்டாம் கதை டோலி லாலி . மனிதனின் அளவுக்கு அதிகமான பேராசை , அவனை மட்டும் இல்லாமல் எந்த தவறும் செய்யாத மற்ற உயிர்களையும் பாதிக்கிறது என்பதை இந்தக் கதையில் ஒரு வலியோடு நமக்கு கடத்தி இருக்கிறார். இந்த கதை பற்றி நிறைய கேள்விகள் என் மகன் கேட்டான். கதைகள் மகிழ்ச்சி மட்டும் அல்ல , குழந்தைகளின் சிந்தனையையும் தூண்டும் என்பது திண்ணம்.இந்த பிரபஞ்சம் தனக்கு மட்டுமே என்று எண்ணி இறுமாப்போடு தவறுகள் செய்யும் மனிதனுக்கு சாதாரண வெட்டுக்கிளிகள் பாடம் புகட்டும் கதை கிளியே கிளியே வெட்டுக்கிளியே.

ஒரு இடத்தில் நின்று கிளை பரப்பி , நிழல் தந்து , பறவைகளின் வாழிடமாய், மனிதர்களுக்கும் பயன் தந்து கொண்டு இருக்கும் மரங்கள் நடந்தால் என்ன நிகழும் என்றதொரு அழகிய கற்பனை மரங்களின் ஆட்டம்.

கதைகள் வெறும் கற்பனை மட்டும் அல்ல. சமகால நிகழ்வுகளை பதிந்து வைக்கும் ஆவணமும் கூட. அப்படி தற்போது உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா பற்றி தகவல்களோடு காட்டுக்குள்ளே ஏலேலோ ஐலசா கதை.

தொடர்ந்து ஒரு எலி குடும்பம் தான் தேர்தல்ல ஜெயிச்சு ராஜா ஆகுது. அதுக்கு பின்னாடி இருக்கிற சதியைக் கண்டுபிடிச்சி சின்னா எலி எப்படி ராஜா ஆகுது கதை தான் சின்னா லட்டு தின்ன ஆசையா ?

ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கிற நீல மரத்தில் இருக்கிற பழத்தை சாப்பிடும் பறவைக்கு தங்க நிற இறக்கை கிடைக்கும் என்பதால் பலத் தடைகளைத் தாண்டி அந்தப் பழத்தைச் சாப்பிட அபி,சிபி காகங்கள் முயற்சி செய்யும் கதை தான் நீல மரமும் தங்க இறக்கைகளும் என்ற புத்தகக் தலைப்பு கொண்ட கதை.இதில் நிறைய பறவைகள் பற்றி தகவல்கள் தந்து இருக்கிறார் சரிதா.

கடைசி கதையான வானவில்லும் வாண்டுகளும் கதை வானவில்லைப் பற்றிய நிறைய அறிவியல் தகவல்கள் நிறைந்த கதை.

சூழலியல், இயற்கை, விலங்குகள் மீதான நேசம், அறிவியல் ,நற்பண்புகள் எல்லாம் கலந்து கொண்டாட்டமான கதைகளைத் தந்து சிறார் இலக்கியத்தில் தன் முதல் அழுத்தமான முத்திரையைப் பதித்து உள்ளார். குழந்தைகளுக்கு சிறந்த வாசிப்பு அனுபவத்தைக் கண்டிப்பாக இந்நூல் தரும்.

ஆசிரியர். பூங்கொடி, மதுரை.