“நீலம் சிறுகதைகள் தொகுதி - 1” – புத்தகம் | Neelam Sirukathaigal Thoguthi 1 Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

“நீலம் சிறுகதைகள் தொகுதி – 1” – நூல் அறிமுகம்

2020 அக்டோபர் 14ம் தேதி வெளிவந்த முதல் நீலம் இதழ் தொடங்கி 2022 செப்டம்பர் முடியவுள்ள இரண்டாண்டு காலகட்டத்தில் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் பத்து கதைகளைத் தேர்வு செய்து ‘நீலம் சிறுகதைகள் தொகுதி – 1’ என்ற தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தலித் தொன்மம், புலம் பெயர் வாழ்வு, நாட்டார் கலை மற்றும் தெய்வ மரபு, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வாழ்வியல் நெருக்கடி, பெண்களின் கையறு நிலை என்று கதைகளின் கருத்தியல் சார்பானது ‘நீலம்’ இதழை ஓர்மை கொண்டமைந்துள்ளது தவிர்க்கவியலாதது.

அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்துப் பேசுவதோடு அவரை ஒரு தலையாகக் காதல் கொண்ட இசுலாமியப் பெண்ணின் மொழியையும் புனைவாக்கி அண்ணலின் உயிர்த்தெழுதலை காலவெளி ஊடாட்டத்தின் மூலம் கதையாக்குகிறது சிவராஜ் பாரதி எழுதிய ‘பாபாசாகேப் அமர் ரஹே’. அம்பேத்கரின் வாழ்வு விவரித்தலில் இருக்கும் உயிர்ப்பு ஊடேகும் மெஹருன்னிஸா பேகத்தின் பேரன் குரலில் இல்லைதான்.

ஈழத்தில் தமிழ் இயக்கத்தாரால் விரட்டப்பட்ட இசுலாமியர் புலம் பெயர் சூழலில் எவ்வாறு சைவ வெள்ளாள முகமூடி அணிய நேர்கிறது என்பதையும் மீண்டும் ‘மூமின்’களாக (நெறி தவறாத இறைப்பற்றுள்ள இசுலாமியராக) மாற நேர்கிறது என்பதையும் சற்றே நாடகீயத்தனம் கொண்டு கதைக்கிறது ஷோபாசக்தியின் ‘மூமின்’. கதையின் நிகழ்களங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் புதிய அனுபவத்தை வாசிப்பவருக்குக் கொடுக்கும் கதையிது.

ஈழத்தில் கொரோனா காலகட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசால் இசுலாமிய ‘மையித்துகளுக்கு’ (இறந்த உடல்களுக்கு) நிகழ்த்தப்பட்ட வன்தகனங்கள் பற்றிய பிரதான சரடோடு இசுலாமியக் குடும்பத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறை, ஆண்களின் அதிகார நிலை குறித்தும் ஊடுபாவாகப் பேசுகிறது ஸர்மிளா ஸெய்யித்தின் ‘தகனம்’.

கூத்தில் பெண் வேசம் கட்டி ஆடும் தன் அப்பாவை சூரன் வேசம் கட்டி ஆட வைக்க ஏங்கும் சிறுவனின் விவரிப்பில் அவனது அக உலகையும் கூத்தோடு சேர்ந்த புற உலகையும் ரொம்பவே விரிவாக நீள்கிறது த.ராமலிங்கத்தின் ‘மலையுக சூரன்’ கதை. பாரி இளவழகனின் ‘ஜமா’ திரைப்படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பழங்குடி மக்களுக்கு கல்வி கற்பித்து பள்ளிக்கூடங்கள் திறந்த பண்டிட் கறம்பன் என்ற பழங்குடி தலைவனை ராஜா கமுக்கமாகத் தூக்கிலிட்டுவிட அவனின் ஆவி புகுந்த தூக்கு மேடை டம்மி பொம்மை பற்றியும் கறம்பனின் மனைவியாகப் போகும் மலையத்தி நீலி பற்றியும் சிறை ஆய்வாளர் என்.கே.தானப்பன்பிள்ளையின் வழியே தனது வழமையான சுவாரசிய நடையில் கதையாடுகிறார் ‘பேசாதவன்’ கதையில் ஜெயமோகன்.

தொகுப்பின் காத்திரமான கதைகளில் ஒன்றான ‘காணாமல் போனவர்களில்’ இமையம் தனக்கேயுரிய மொழி நடையிலும் கதை சொல்லலிலும் சமூகத்தின் இயல்பான ஒழுங்கில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்து வாழ்வின் நெருக்கடியில் இருந்து தொலைந்து போனவர்களையும் குடும்பத்தார் மூலமாகவே தொலைக்கப்பட்டவர்களையும் மனம் கனக்கும்படி பதிவு செய்கிறார்.

வேட்டி கூட அணிய முடியாதவர்களை வேட்டி அணியச் செய்த வேட்டி முனியனையும் சட்டை அணிய முடியாதவர்களை சட்டை அணியச் செய்த கட்டையனையும் கலகத்தன்மையுடன் படைத்துள்ளார் ‘நிறமிலான்’ கதையில் மனோஜ் பாலசுப்பிரமணியன். தலித் கதையாடல்களுக்குரிய கலகத்தன்மையும் மெலிதான ஓர் எள்ளல் தன்மையும் இக்கதையில் தென்படுகிறது.

தொகுப்பின் மற்றொரு முக்கியக் கதைகளில் ஒன்றான பெருமாள் முருகனின் ‘கடைசிப் பலி’யில், நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு எளிய மக்களின் வாழ்வியலோடு ஒன்றறக் கலந்துள்ளன என்பதையும் தெய்வங்களுக்கான எந்தப் புனிதத்தன்மைக்குமிடமின்றி ஒண்ணா மண்ணா வாழ்ந்து அந்த மக்களுக்காக தானே பலியாவது குறித்தும் தன் பாணியில் கதையாக்கியுள்ளார்.

வயதானவருக்கு வாக்கப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்ட ஒரு துயர வாழ்வில் இருந்து வெளியேறி, ஏற்கனவே திருமணமான இன்னொரு ஆணுடன் நேர்ந்துவிடும் உறவு ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலை மையப்படுத்தி இந்திராணி கதாபாத்திரம் மூலமாகவும் சிறுவன் கொளஞ்சி வழியாகவும் ‘தட்டையான’ சொல்லல் முறையில் கூறுகிறார் ‘தம்பொருள்’ கதையில் செந்தில் ஜெகந்நாதன்.

குடியான சாதிகளால் கழுவனுக்குக் கழுமரக்காவு கொடுக்கப்படும் பறக்குடி மூத்த ஆண்மகவுகளைக் காக்கும் பொருட்டு, குடித்தலைவன் நந்தனும் தம்பி சாத்தனும் ‘கண்டதைச் சொல்லும் கண்டன் கோடாங்கி’ துணை கொண்டு சேரியையே புலம் பெயரச் செய்யும் தொன்மத்தை முன் வைக்கிறது சாத்தன் குன்றனின் ‘கழுமரம் வென்ற கண்டன்’ கதை. வெறும் தொன்மமாக மட்டும் முடிந்து போவது ஒரு குறை.

இமையம், பெருமாள் முருகன், ஜெயமோகன், ஷோபாசக்தி, ஸர்மிளா ஸெய்யித் போன்ற அனுபவம்மிக்க எழுத்தாளர்களின் கதைகளில் தென்படும் ஒழுங்கமைதியும் வடிவநேர்த்தியும் இளையோர் கதைகளில் சற்றே மாற்றுக்குறைவுதான் என்ற போதிலும் கதைகளின் உள்ளார்ந்த உணர்வும் எண்ணமும் குறிப்பிடத்தகுந்தவையே.

தற்போதுள்ள தமிழ்ச் சிறுகதைகளின் பன்மயமான களங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகத் தொகுப்பு அமைந்துள்ளது சிறப்பு.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:நீலம் சிறுகதைகள் தொகுதி – 1
ஆசிரியர்:–
வெளியீடு:நீலம் பதிப்பகம்
– neelamcustomer@gmail.com
– 63698 25175
விலை:₹.250
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *