கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல் வாசிப்பு நம் கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கக் கூடியது. நாம் வாழும் சமூகம் குழந்தைகளை பற்றி சிந்திப்பதில்லை அவர்களுடைய உளவியல் நெருக்கடிகளை குறித்து அக்கறை கொள்வதில்லை என்பதை இந்த நாவலை வாசித்த உடனேயே குற்ற உணர்வோடு ஏற்றுக்கொள்கிறேன். ஊரில் ஏற்படும் எல்லா கலவரங்களிலும், சமூகத்தில் நிலவும் சாதியை ஏற்றத்தாழ்வுகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. கீர்த்தியும் அருணும் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கக்கிறார்கள். ஒருவர் ஒருவர் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு இருவரையும் எதிர் எதிர் திசையில் நிறுத்துவது சமூகத்தின் வாழ்வியல் முரண்.
குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் ஆகவே தனது நண்பன் அருண் வரைந்த ஓவியத்தையும் அறிவியல் பாடப் புத்தகத்தையும் சுமந்து கொண்டு பல நெருக்கடிக்கு மத்தியில் அவனுடைய வீட்டை நோக்கி செல்கிறாள். அருண் தவறு செய்த போதும் சாதிய கும்பலோடு சேர்ந்து தன் பகுதி (அண்ணல் நகர்) முழுவதையும் கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய போதும் அவன் மீதும் அவனுடைய படைப்பாற்றல் மீதும் அன்பு பூர்வமாக நட்பு பாராட்டுவது தான் குழந்தைகள் நமக்கு கற்றுத் தரும் ஆகச்சிறந்த பாடம். நம்முடைய பழமையான அழுக்கு சிந்தனைகளை சமத்துவமற்ற சமதர்மமற்ற சாதிய ஏற்றத்தாழ்வு மன நிலையை நாம் குழந்தைகள் மீது திணிக்கிறோம். அல்லது அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குறைந்தபட்ச புரிந்துணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தோழர் சண்முக வடிவு இந்த நூலை கொடுத்து பலமுறை என்னிடம் வாசித்தீர்களா? வாசித்தீர்களா என்று கேட்பார்கள். பல பணிகளுக்கு மத்தியில் நூல் வாசிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று காலை வாசிக்க அமர்ந்ததிலிருந்து கடைசி பக்கம் முடிகிற வரை மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு கணம் இருக்கிறது. குழந்தைகளை கடுகளவும் பொருட்படுத்தாது சாதிய ரீதியான பிளவுகளை திணிப்பது மிகப்பெரும் வன்முறை என்பதை உணர்கிறோம். தர்மபுரி மாவட்டத்தில் திவ்யா இளவரசன் என்ற தோழர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்ததினால் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து அதன் பின்னணியில் இரண்டு குழந்தைகள் எப்படி எதிர் திசையில் இருக்கிறார்கள் என்பதை இந்த நாவல் வழி புரிந்து கொள்ள முடிகிறது.
தன் கிராமம் முழுவதும் எரிந்து வீடுகள் அனைத்தும் நாசமான பிறகும் தன் நண்பன் அருண் பாட புத்தகத்தையும் வரைந்த ஓவியத்தையும் சுமந்து கொண்டு தன் அத்தை செல்வியோடு பயணிக்க கூடிய கீர்த்தி நம் மனதில் நின்று பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறாள். செல்வி அத்தையும் கீர்த்தியும் இன்று சமூகத்திற்கு தேவையாக இருக்கிறார்கள். இந்த சமூகம் பல அருண்களை மட்டுமே உருவாக்கி இருக்கிறது. கீர்த்திகளை கவனிக்க மறந்து போய் இருக்கிறது. சமத்துவ சமுதாயம் மலர விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல் அனைத்து குழந்தைகள் கைகளிலும் தவழ வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து வாசிக்க வேண்டிய ஆகச் சிறந்த நாவல் இது. இந்த நாவலை எல்லா குழந்தைகளுடைய கைகளிலும் தவழ செய்ய வேண்டியது நம்முடைய கடமை.
நூல்: நீலப்பூ
ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடு: வானம் பதிப்பகம்
விலை: ₹.80
ரா. பி. சகேஷ் சந்தியா
சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.