நூல் அறிமுகம்: நீர் – அதிகாரம் – நுண்ணரசியல் – மு.சிவகுருநாதன்

 

(‘காடோடி’ பதிப்பகம் வெளியிட்ட தோழர் நக்கீரன் அவர்களின் ‘நீர் எழுத்து – தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்’, நூலின் ஒரு வாசிப்பனுபவம்.)

      எப்போதும் ‘சிறியதே அழகு’ என்பார்கள். இ.எஃப்.ஷூமாஸர் எழுதிய ‘சிறியதே அழகு’ எனும் நூல் எம்.யூசுப்ராஜா மொழிபெயர்ப்பில் 2011 இல் எதிர் வெளியிட்ட நூல். நீர் எழுத்தின் துணை நூல்கள் பட்டியலில் 43 இல் இடம்பெறுகிறது. அதன் கருத்துகளுக்கு ஒத்திசைவாக, சங்க இலக்கியத்திலிருந்து சர்வதேச ஆவணங்கள் வரை நூற்றுக்கும் அதிகமான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்கள் என ஏராளமான தரவுகளை மிகச் சுருக்கமான வகையில் நக்கீரன் நமக்களித்துள்ளார்.

    விரிவுக்கு அஞ்சி தவிர்க்கப்பட்டுள்ள பகுதிகள் முன்னுரையில் குறிப்பிடப்படுகின்றன. அவை தனிநூலாக வரட்டும். தலையணை கனத்திலும் இவற்றை எழுத முடியுமென்றாலும் சூழலியலாளரான நக்கீரன் காடழிப்பைத் தடுக்க தன்னாலான பேருதவியைச் செய்துள்ளார் எனலாம். இதுவும்கூட இந்த நூல் பரவலான சென்றதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

    ஒன்பது இயல்களாக பகுக்கப்பட்ட ‘நீர் எழுத்தில்’ மொத்தம் 125 கட்டுரைகள் உள்ளன. நூலின் மொத்த பக்கங்கள் 248. முன்னுரை, பிற்சேர்க்கைகளின் 13 பக்கங்கள் போக, 225 பக்கங்களில் 125 கட்டுரை எனில் ஒரு கட்டுரைக்கு 1.8 பக்கம் மட்டுமே. அனைத்துக் கட்டுரைகளும் மிகச் சிறியவை. அரைப்பக்க, முக்கால் பக்கக் கட்டுரைகளும் உண்டு. ஆனால் இவையனைத்தும் செறிவானவை, ஆழமானவை. நீரின் தோற்றம், வரலாறு, அரசியல் என அனைத்தையும் பேசுபவை.

     நேபாள நாடோடிக்கதை வழியே நீர் வணிகத்தை அமபலப்படுத்துவதோடு நீர் எழுத்து தொடங்குகிறது. தொடர்ந்து ஒன்பது அத்தியாயங்கள் வழியே நீரின் வரலாறு நீரைப்போல இயல்பாக  பயணிக்கிறது. ‘நீர் எழுந்து’ எழுத்து மறைந்துபோகும் என்பது பழைய கதை. இந்த நீர் எழுத்து உள்ளும் வெளியும் நீரைப்போல ஓடுகிறது. நீருக்குப் பின்னாலுள்ள நுண்ணரசியலையும் வெளிக் கொணர்கிறது.

பசுமை இலக்கியம்: வாசகரின் தேடல் ...

 எழுத்தாளர் நக்கீரன்

      புறந்தூய்மை நீராலமைவது தமிழ்ப் பண்பாடு. இதற்குக்கூட பார்ப்பனீயக் கலாச்சாரத்தில் இடமில்லை. நீரே இங்கு தீட்டாகும் அவலம். தீட்டுக்கழிக்க பசு மாட்டு மூத்திரம், தீ, பட்டு, வேத மந்திரங்கள் என்பதாக இருக்கிறது ஆரியப்பண்பாடு. நீர், காற்று இன்றி அனைத்து உயிர்களும் இல்லை. ஆனால் இதைப்பற்றிய புரிதல் இல்லாத அரசுகளும் சமூகமும் உருவாகிவிட்டன. எனவே இன்றைய காலத்தின் தேவையாக ‘நமது நீர், நமது உரிமை’ என்னும் முழக்கத்துடன் நூல் முடிவடைகிறது.

       பனிக்கட்டி – ஆலி, பம்புசெட் – எக்கி, Aquifer – நீரகம், மேக வெடிப்பு – நீரிடி, மறைநீர், பொங்குநீர் – பரப்புநீர் – கரப்புநீர் என புதிய சொல்லாக்கங்களை உருவாக்குவதும் சங்க இலக்கியம் மற்றும் பிறரது ஆக்கங்களைத் தேடித் தொகுத்தும் எனப் பல சொற்களைப் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார் தோழர் நக்கீரன். நீருக்காக தன்னுயிர் ஈந்த தோழர் லீலாவதிக்கு இந்நூலைப் படைந்ததுடன், ஏழைப்பெண்கள் நீருக்காகப் படும் துயரங்களை பெரிய அளவில் கவனப்படுத்தியுள்ளார்.

    வரலாறு, அரசியல், சமூகவியல், பொருளாதாரம், சூழலியல், என பலதரப்பட்ட பார்வைகளையும் அவற்றின் நுண்ணரசியல் கூறுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும் நூலாக இது அமைகிறது.

     உதாரணமாக, சென்னைக் குடிநீர் சிக்கலுக்கு ஆலோசனை வழங்கவந்த பிரான்சின் ‘விவெண்டி’ நிறுவனமும் பள்ளிக்கரணையை குப்பைகளால் நிரப்பும் ‘ஓனிகஸ்’ம் சகோதர நிறுவனங்கள் (பக்.40) 1996 டிசம்பரில் அண்டைநாடான வங்கதேசத்துடன் ஒப்பந்தம் மூலம் கங்கை நதிநீரைப் பகிர்ந்து கொண்ட  எச்.டி. தேவகவுடா தனது அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு காவிரிநீர் தரமறுத்தல் (பக்.183) சமகால அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் பார்வையுடன் ஒரே புள்ளியில் கொண்டுவந்து கவனத்தை ஈர்க்கிறார். நான்கு லிட்டர் நீரை எடுத்துக்கொண்டு  புவிக்கோளத்தை நீர் இருப்பை விளங்கவைத்து, பின்னர் அதன் புள்ளிவிவரத்தை அளிக்கிறார் (பக்.41) இம்மாதிரியான எளிய புரிதலை உண்டாக்குவது எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.

   ஒன்பது இயல்களாகவும் 125 சிறு கட்டுரைகளாகவும் எழுதப்பட்ட இந்நூலை நம் வசதிக்காக நான்கு பகுதிகளாக பகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அவை,

  • அறிவியல், சூழலியல் புரிதல்
  • பழந்தமிழக நீராண்மை
  • நீராண்மையின் அழிவு
  • தீர்வுகளும் புரிதல்களும்

அறிவியல், சூழலியல் புரிதல்

நீர் எழுத்து வாசகர் மதிப்புரை – 01 ...

    நீர் அறிவியல், பருவமழை, நீர்நிலைகள், ஆறுகள் ஆகிய இயல்களிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் நீரை அறிவியல் மற்றும் சூழலியல் ரீதியாகப் புரிந்துகொள்ள பேருதவி புரிகின்றன. நீர் நமது புவியின் மூதாய் என்பதை உணர்த்துவதும், நீர் எல்லா விலங்குகளிடமும் சுழன்று வருவது, மூச்சுக்காற்றில் நீர் கலந்திருப்பது என என நீரின்சுழற்சியை உணர வைக்கிறார். இதில் தீண்டாமை பார்ப்பவர்கள் செத்தொழியலாம். தூக்கணாங்குருவி, காகம் ஆகியன  மழை அறிவிப்பாளர்களாகும், வானவில், இடி, மின்னல், காற்றின் திசை போன்றவையும் மழைக்குறிகளாகும் பழம் அறிவியல் உண்மைகளும் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆறுகளையும் பிற நீர்நிலைகளையும் உணரவும், உணர்த்தவுமான பகுதிகள் எளிய மொழிநடையால் அனைத்துத் தரப்பினரையும் கவரும். நீரைப் பற்றிய புரிதலின்மை இன்றைய சீரழிவுகளுக்கு முதன்மையான காரணம். அதனைப் பல்வேறு இடங்களில் உணர வைப்பது இந்நூலின் வெற்றியாகும்.

பழந்தமிழக நீராண்மை

    நீர் பற்றிய மரபுவழிப்பட்ட அறிவு கல்லணை போன்ற அணை, கால்வாய், ஏரி, வண்டல் நுட்பங்களும் மடை, தூம்பு, மதகு, குமிழி, கலிங்கு, கற்சிறை, கொரம்பு  போன்ற பாசனம் சார் நுட்பங்களும் இயற்கையோடு இயைந்தப் பண்பாட்டு வாழ்வியல் கூறாக அமைந்திருந்த நிலை எடுத்துக்காட்டப்படுகிறது. ஆனால் இவை தமிழர் பெருமித உணர்வாக அல்லாமல், இயல்பாக விளக்குவது சிறப்பு. பிரம்மதேயத்தில் நடந்த நீர் விற்பனையும், நீர்க்கூலி (தண்ணீர் வரி), ஊர்க்கழஞ்சு (ஊரின் பொதுவான ஓடைக்கு வரி), வட்டி நாழி (நீர்ப் பாய்ச்ச கழனி வரி நாழிக்கணக்கில்) என வரிகள் விதிக்கப்பட்டதும் இந்தப் பெருமிதங்களில் கரைந்துப் போய்விடக்கூடாதல்லவா! எனவே நக்கீரன் ஆழமானப் புரிதலுடனும் கவனத்துடனும் செயல்பட்டுள்ளார். அவரது இயல்பான மொழிநடையும் மேட்டுக்குடி அல்லாத மக்கள் சூழலியல் பார்வையும், தொலைநோக்கும் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

நீராண்மையின் அழிவு

  இந்த அழிவுகள் எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. இன்றைய உலகமய ‘கார்ப்பரேட்’ சூழல் இதை துரிதப்படுத்தியிருக்கிறது. இவற்றை வரலாறு, பண்பாடு மற்றும் சூழலியல் புரிதலோடு இந்நூல் அணுகி ஆராய்கிறது. ஆறுகள் இயற்கையோடு இருந்த தொல்குடிப் பண்பாடு மறைந்து, புனிதம் எனும் சுமையேற்றப்பட்ட பிறகு அதன் இயல்பு குன்றியது. வணிகமயமான நீர், அழியும் நீராதாரங்கள், மணற்கொள்ளைகள், நீருடன் சேர்ந்து நிலமும் காற்றும் மாசடையும் அவலம், நெய்தல் நிலமான சதுப்புநிலங்களின் அழிவு போன்றவற்றோடு, செயற்கை மழை, வனத்தையும் மக்களையும் அழிக்கும் பேரணைகள், ஆறுகள் இணைப்பு என்னும் கார்ப்பரேட்களின் கனவுத்திட்டம் ஆகியனவும் அரசியல் புரிதலோடு முன்வைக்கப்படுகின்றன. மலைக்காடுகள் தேயிலை, காப்பி, ரப்பர், யூக்லிப்டஸ் தோட்டங்களாக மாறியதன் பின்னணியும் சூழலியல் அழிவை இந்நூல் படம் பிடிக்கிறது. நதிநீர் இணைப்பின் சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன.  கடலில் வீணாகக் கலக்கும் நீர், இமயமும் உபரி நீரும் போன்ற கருத்துகளும் விவாதிக்கபடுகின்றன.

தீர்வுகளும் புரிதல்களும்

    வெறுமனே சூழலியல் சிக்கல்களை மட்டும் பேசிவிட்டு நகராமல் அதற்கான தீர்வுகளையும் முன் வைக்கிறது. ‘இறுதியில் பின்னிணைப்ப்பாக உள்ள தமிழ்நாடு நீர்க் கொள்கைக்கான 20 பரிந்துரைகள்’ இதற்கான முதல்படியாகும். குளம், ஏரி, ஆறு, கடல் என அனைத்து நீராதாரங்களையும் பாதுகாத்தல், சோலைக்காடுகள், சதுப்புநிலக் காடுகளை அழிவிலிருந்து மீட்டல், தோட்டத் தொழில்களிடமிருந்து வனங்களை மீட்டெடுத்தல் ஆகியன விவாதிக்கப்படுகிறது. மறைநீர் கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டு மாற்று வாழ்க்கைமுறையைப் பயிலவேண்டும். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினை உணர்தல், மழைநீர் சேகரிப்பு போன்றவையும் வலியுறுத்தப்படுகிறது. உலக அளவிலான புரட்சிகரத் தலைமைகள், மயிலம்மா, லீலாவதி போன்ற நம் நாட்டு உதாரணங்கள் வாயிலாக நீர் நிர்வாகத்தில் மக்களின் பங்கையும் அதில் மக்களுக்கான அதிகாரத்தையும் (தண்ணீர் பார்லிமெண்ட்), ‘நமது நீர், நமது உரிமை’ என நமக்கான உரிமையையும் என்று உரத்துச் சொல்கிறது இந்நூல். நமது உயிரான நீர், மண், காற்று என சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் தேவையை நோக்கி, நம்மை உந்தித்தள்ளும் விசையாக இந்நூல் திகழ்கிறது.

நூல் விவரங்கள்:

 நீர் எழுத்து – தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்

நக்கீரன்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019

இரண்டாம் பதிப்பு: ஜனவரி 2020

பக்கங்கள்: 248

விலை: ரூ. 250

வெளியீடு: காடோடி

0,6 வி.கே.என். நகர்,

நன்னிலம் – 610105,

திருவாரூர் – மாவட்டம்.

மின்னஞ்சல்:  [email protected]

அலைபேசி: 8072730977