நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும். அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற இரண்டு வரி மட்டுமல்ல அந்தப் பாடல் முழுவதும் அற்புதமான வாழ்க்கை தத்துவத்தை சொல்லக்கூடிய புறநானூற்று பாட்டு . ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனாரின் கனிந்த சொற்களாய் வாழ்வை படம் பிடித்து காட்டும் அற்புதமான பாடலில் இருந்துஇந்த நாவலின் தலைப்பு எடுத்துக் கொண்டுள்ளது.
 நீர் ஓரிடத்தில் பிறந்து வேறு இடத்தில் வளர்ந்து கடைசியில் ஓரிடத்தில் முடிவதைப் போலத்தான் வாழ்க்கை பல்வேறு விதமான மாற்றங்களை தன்னளவில் கொண்டுள்ளது என்பதைத்தான் இந்த கதை விவரிக்கிறது அதற்கு தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நாவலாசிரியர் தேவி பாரதி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை போல இந்த நாவல் அவருடைய சொந்த வாழ்க்கை பதிவாக தான் இருக்கிறது. இந்த நாவலின் கதை மாந்தர்கள் அவரின் உறவினர்கள் இந்த நாவலின் கதை சொல்லி ஒரு கதாபாத்திரமாக இருப்பது நாவலாசிரியரே என்பது முன்னுரையில் அவர் சொல்லிவிடுகிறார். நாவலின் கதைக்களம்  கொங்கு மண்டலம் பகுதி உடையார்பாளையம், ஆம்பராந்துரை வெள்ளக்கோயில், அரவக்குறிச்சி ,பழநி ஈரோடு, கரூர் ,சேலம் ஆகிய பகுதிகளில் கதை நகர்கிறது ஆதலால் கொங்கு மண்டலத்து வட்டார வழக்கு தேனினும் இனிமையான சுவையில் கதையை படிப்பதற்கு சுவாரசியம் கூட்டுகிறது. 60களின் இறுதியில் தொடங்கி 70களில் இறுதி வரை நடக்கும் காலச் சூழலை கதையின் பின்னணியான காலச் சூழலாக இருக்கிறது. அப்படி ஒரு காலகட்டம் நினைத்துப் பார்ப்பதற்கும் சொல்லி ரசிப்பதற்கும் ஆயிரம் ஆயிரம் கதைகளை உள்ளடக்கிய காலகட்டம். எண்பதுகளின் இறுதிகள் வரை அந்த சூழலின் தாக்கம் இருந்து கொண்டே இருந்தது வீடாகட்டும் வாழ்க்கை முறையாகட்டும், உறவுகள் கொண்டாட்டங்கள், கேலிகள் மகிழ்ச்சிகள் கோபம் ரோஷம் வன்மம் என அத்துணை உணர்ச்சிகளின்
ஒட்டுமொத்த சுரங்கமாக இருந்தது அந்த காலகட்டம். நினைத்து நினைத்து ரசித்து ரசித்து மகிழக்கூடி காலகட்டமாக எனக்கு இந்த கதை சொல்லுகிற காலம்
இருக்கிறது. குடும்ப உறவுகளிடையே இருக்கும் உரையாடல்கள் சண்டை சச்சரவுகள் மகிழ்ச்சியான தருணங்கள் ஆறுதல்கள் உதவிகள் பெரும் குதூகலமானவை. அப்படி ஒரு சூழலெல்லாம் இப்போது உள்ளவருக்கு வாய்ப்பதில்லை. நாவிதர் தொழில் செய்யும் காருமாமா ராசம்மா அத்தை, பெரியம்மா, பெரியப்பா சுந்தரவலசு, பெரியப்பா மெட்ராஸ் சின்னம்மா, சண்முகம் ,ஈஸ்வரி, சுந்தர் சாவித்திரி சௌந்தரம் பெரியம்மா செட்டி , பண்ணையார்கள் என மிகக் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அழுத்தமான வலி மிகுந்த வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை சொல்லக்கூடிய கதையை ரசனையோடு சொல்லி இருக்கிறார் ஆசிரியர். ஆறுமுகம் என்ற பெயர் இருந்தாலும் காருமாமா என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அனைத்து விதமான பரி மாணங்களையும் சொல்லுகிற கதையாக இருக்கிறது. காரு மாமா என்று அழைக்கப்படும் ஆறுமுகம் தந்தை இறந்த பின்பு உடன்பிறந்த அக்கா தங்கையரை திருமணம் முடிப்பதற்காக உழைத்து காப்பாற்றிய விதமாகட்டும். ஒரு நள்ளிரவில் மகனோடும் மகளோடும் ஓடிப்போன மனைவியை தேடிக்கொண்டு நிலை தடுமாறி முடிந்து போன ஆளாக மாறி காக்கா வலிப்பு வந்து இறந்து போன நிலையில் இருக்கும் சூழலைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது அந்த மனிதனின் மேல் பரிதாபம் மேற்கொள்கிறது. பழனி மலை அடிவாரத்தில் முடி திருத்தும் பெண்ணாக தன் மனைவி இருக்கிறாள் என்று யாரோ சொல்ல கேட்டு பழனி மலையில் அரஹரா கோஷம் சொல்லி முருகனிடம் முறையிட்டு தன் மனைவியும் மகளையும் மகனையும் மீட்டுத்தர  வேண்டும் என்று காரு மாமா அழுகிற காட்சி நாவலின் உச்சபட்ச காட்சியாக என் மனக்கண் முன் விரிகிறது.
ஆறு செழுமையாக இருந்த பொழுது நதிகள் நன்றாக ஓடிய பொழுது வாழ்க்கை நன்றாக இருந்தது .நதி வற்றிய போது ஆறு மணலால்  சூழ்ந்த பொழுது வாழ்க்கை பாழாக்கி ப்போனது என்ற குறியீடு இந்த கதையின் ஊடாக சொல்லிக் கொண்டே வருகிறார். கதையின் தொடக்கமே நொய்யல் ஆற்றில் எல்லோரும் உறவினர்கள் எல்லாம் குளித்து கும்பாளமிடம் காட்சி வருகிறது. அத்தை பெரியம்மா பேசும் பட்ட கதைகள் படாத கதைகள் அவர்களின் முன்னால் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிக்கின்றது.
நாவிததொழில் செய்யக்கூடியவர்கள் மருத்துவம் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அது மாத்திரமில்லாமல் ஊரில் நடக்கும் அத்தனை நல்ல மற்றும் கெட்ட காரியங்களில் அவர்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஒரு பிணம் இறந்தவுடன் அதற்கான இறுதி மரியாதை செய்வதற்கு அத்தனை காரியங்களையும் நாவிதர் செய்திருக்கிறார். லிங்க நாவிதன் என்ற நாட்டுப்புறப்பாடல் பாடுகின்ற ஒருவன் நாட்டுப்புற கலைகளான பாடலையும் ,கதைகளையும் எவ்வாறு சொல்வான் என்பதையும் அவன் வாசிக்கிற உடுக்கை ,சலங்கை பற்றிய செய்திகளையும் இந்த நாவலில் மிக அற்புதமாக அவர் ஒப்பாரி பாடல்கள் எடுத்துரைக்கிறார்.
நாவித தொழில் செய்கின்ற மக்கள் விவசாய செய்வதற்கு ஆசைப்பட்டு இருக்கிறார்கள் கொஞ்சம் பேர் விவசாயமும் செய்து இருக்கிறார்கள் .தவிரவும் ஆடும் மாடு,கோழி, சேவல் வளர்ப்பும் அவர்களின் விருப்பமான இருந்திருக்கிறது. ஊர் பண்ணையார்கள் குடிமுறை செய்வதற்கு ஆள் தேவை என்பதற்காகவே அவர்களை நாவிதர் தொழில் செய்வதற்கு நிர்பந்தித்திருக்கிறார்கள்.பணமும் பொருளும் கொடுத்து அவர்களை ஆதரித்து தொடர்ந்து நாவித்தொழில் செய்வதற்கு அவர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இளம் வயதில் தன் உடன் பிறந்த பெண்களுக்காக உழைத்து காப்பாற்றிய காரு மாமா தனது பிள்ளைகளுடன் ஓடிப்போன மனைவி எப்பயாவது திரும்பி வருவாள் என்று தனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் நகைகளை சேர்த்து வைத்து அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து
காத்திருந்தார் குழந்தைகள் நிலை என்ன ஆகும் என்ற கவலை அவரை வாட்டியது.
ராசம்மா அத்தை மேல் கோபம் கொண்ட உறவினர்கள். காருமாமா இறந்த பின்பு அவள் ஈஸ்வரி மற்றும் சுந்தரத்தோடு வந்த பின்பு அவள் கதையை கேட்டு அவளுக்கு ஆறுதலாக இருந்தனர். வாழ்க்கையில் ஏமாந்து உருக்குலைந்து போய் கணவன் இறந்த பின்பு திரும்பி வந்த ராசமாவை உறவுகள் பரிவோடு ஏற்றுக் கொண்டதாய் கதை நிறைவடைகிறது.
தாயம் விளையாடுவது, ஆற்றில் நீராடுவது கதை பேசுவது ஒன்றாக சமைத்து உண்பது இன்று நினைவில் தொங்கி நிற்கும் பல்வேறு சம்பவங்களை அந்த காலகட்டங்களைக்கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போன்ற எழுத்து எத்தனை அற்புதமானது. வாழ்க்கையை விட எழுத்து ஒன்றும் பெரியதல்ல என்கிறார் எழுத்தாளர் அப்படிப்பட்ட வாழ்க்கையை பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் எழுத்தின் மகத்தான பணி அல்லவா.
காதல், குடும்பம் ,துரோகம் ,சாதிய வன்மம் இனக்குழு வாழ்க்கை முறை எனகடந்த கால நினைவுகள் சிதையாமல் உரு குழையாமல் இருந்த கிராமப் பகுதிகள்
வட்டார வழக்கு ஒரு பெரிய வாழ்வு அனுபவம் . அத்தனையும் செம்மையாக விறுவிறுப்பாக படிக்கத் தூண்டும் மொழி நடையோடு சிறப்பாக விவரிக்கப்பட்ட நாவல் இந்த நீர்வழிபடூம்.
வாழ்க்கைச் சரித்திரம்
வருமைச்சித்திரம்
நூலின் தகவல்கள் 
ஆசிரியர் : தேவிபாரதி
வெளியீடு :   தன்னறம் பதிப்பகம்  
பக்கம் :199
விலை : ரூ .260
நூலறிமுகம் எழுதியவர் 
யாழ் எஸ் ராகவன்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *