வாழ்வின் எல்லாப் பொழுதுகளிலும் தன் உயிரின் அத்தனை வலிகளையும் கொடுத்து இன்னொரு நபரையோ இன்னுமொரு சமூகத்தின் கருணையையோ அண்டியே காத்துக்கிடக்கும் எளிய மாந்தர்களின் வயிறு பட்டினியால் காய்ந்து கிடந்தாலும் இருதயம் முழுவதிலும்தான் எத்தனை எத்தனை ஈரம் ஒழுகிடும் அன்புகள்.. பிரியங்கள்.. சக மனிதர்களின் மீதும் உயிர்களின் அனைத்தின் மீதும்.
ஆண்-பெண் அன்பு மிகுந்த உறவுகளால் பெண்ணின் கருவறையில் சூல் கொண்டு அவளின் பெருமை மிகுந்த யோனியின் வழியாக மட்டுமே பேருலகம்  பார்த்த பெருமை மிகுந்த உழைக்கும் மதிப்புறு மனிதக் கூட்டம் இங்கு, ஆண் பெண் கருமுட்டையில் இல்லாமல் ஆணின் அழுக்கு பிடித்த அவயங்களில் தங்கள் பிறப்பை பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டங்களை நோக்கி கையேந்தி கிடைக்கும் ஒரு பகுதியான குடி நாவிதர் சமூகத்தின் வாழ்நிலை..
பொதுச் சமூகத்தால் பேச மறந்துபோன மனிதர்களின் வாழ்முறை குறித்தான நிஜம் மிகுந்த கதைகளை பேசியிருக்கிறார் எழுத்தாளர் தேவி பாரதி அவர்கள் தன்னுடைய புதினத்தின் “நீர்வழிப் படூஉம்” வழியாக.. காய்ந்துபோன மனிதர்களின் வனப்பு மிகுந்த ஈரம் கொண்ட பேரன்பின் பிரியங்களை பேசியிருக்கிறார் நாவலுக்குள்.. நல்லதொரு முறையில் அச்சாகி வெளியிட்டிருக்கிறார்கள் நற்றிணை பதிப்பகத்தார்.. இருவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
எத்தனை பெரிய பண்ணைக்காரன் ஆனாலும் கவுண்டன் கவுண்டச்சியானாலும் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும்  குடிநாவிதனும் அவனுடைய நாசுவத்தியும் இல்லாமல், அவர்களுடைய வழிகாட்டுதலும் துணையில்லாமல் பிறப்பும், திருமணமும் ,பிள்ளைப்பேரும் இறப்பும் முடிவுறாது.. நிலத்தையும் எளிய மக்களின் உழைப்பையும் தின்று கொழுத்து வாழும் பண்ணையார்களின் கவுண்டர்களின் கிராமமான, ஆம்பராந்தின் ஆற்றுப்படுகையின் ஈரத்தின் உயிர் இழுத்து பச்சையும் துளிர்விடும் உடையாம்பாளையம் கிராமத்திலும், ஈரோடு திருப்பூர் கோவை ஒட்டிய கிராமங்களிலும் நகரங்களிலும் தன்னுடைய கதை மாந்தர்களை உலாவ விட்டிருக்கிறார் வலிகளோடும் வேதனை மிகுந்த வாழ்வினோடும் கதையாசிரியர் தேவிபாரதி..
பண்ணையார்களின்.. பண்ணையாடிச்சிகளின்.. கவுண்டர்களின் கவுண்டச்சிகளின் வாழ்வின் பெருமைக்காக வாழ்ந்து செத்துப்போன காருமாமாவின் பிணத்திலிருந்து தொடங்குகிறது நாவல்.. அக்கம் பக்கத்து கிராமங்களிலும் நகரங்களிலும் தன்னுடைய ரத்த உறவுகள் அத்தனையும் சிதறியும் தெரித்தும் வாழ்ந்து கிடக்கும் பொழுது, தன்னுடைய 21 வயது தொடங்கி செத்துக் கிடக்கும் இந்த நாள் வரையிலும் கிராமத்து கவுண்டன் கவுண்டச்சிகளுக்கும்
ஏவலனாக வாழ்ந்து கிடைத்த காருண்யத்தை  தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் மகிழ்விற்காக வாழ்க்கையின் வசந்தங்களை இழந்த காரு மாமாவின் பிணம் அனாதையாக வீட்டுக்குள்ளே கிடக்கிறது..
தாலி அறுக்க மனைவி இருந்தும் கொள்ளி வைக்க மகன் இருந்தும் எவரும் இல்லாமல் பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு கடுமையான மன நெருக்கடிக்கு முத்தையன்வலசு பெரியப்பா ஆளாகி நின்ற பொழுது.. அக்கம்பக்கமிருக்கும் கிராமங்கள் அனைத்தும் காருமாமாவை அறிந்தவர்கள் பலர் இருந்தும் எவரும் அற்றவராக சுடுகாட்டுக்கு போவதை நினைத்து அவளின் தங்கை குரலெடுத்து பாடிய பெரும் ஒப்பாரி பாடலுக்குள் இருக்கும் உணர்ச்சிகள் எப்படி பல கிராம மனிதர்களும் பங்கேற்கக் கூடிய சவ ஊர்வலமாக மாறிய கதையை சொல்லியிருப்பார் நாவலாசிரியர்..
காருமாமாவின் தங்கை முத்து பாடிய ஒப்பாரிக்குள் தன்னை இழந்த  முத்தையன் வலசு பெரியப்பா தன் கால்களில் சலங்கை கட்டி ஆடிய ஆட்டத்தின் ஒலி கிராமத்து பண்ணையார்களின் காதில் போய்  காருமாமா சாவு செய்தி சொல்லியது எப்படி என்பதை பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர்..
காரு மாமாவை சுற்றியே புனையப் பட்டிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும்
அன்பு கொண்டவர்களாக.. வாழ்வதற்கான பிடிமானங்கள் தளர்ந்த நிலையிலும் மனசு முழுவதும் ஈரம் சுமந்து திரிபவர்கள் ஆக படைக்கப்பட்டிருக்கிறார்கள்.காரு மாமாவின் தங்கை முத்து, அவரின் மூத்த சகோதரிகள் உடையாம்பாளையம் பெரியம்மா, சுந்தராடி வலசு பெரியம்மா, சௌந்திர பெரியம்மா, ராசம்மா அத்தை , அத்தையின் மகன் சுந்தரம், மகள் ஈஸ்வரி,   ராசம்மாவின் தங்கை மகள் சாவித்திரி இப்படி அனைவரும் அன்பினை சுமந்தவர்களாக வாழ்ந்தாலும், குடிநாவிதர் குடும்பங்களை தங்களை நோக்கியே கையேந்தி நிற்க வைத்திருக்கும் ஒரு சமூக அவலத்தின் சாட்சியாக இந்த நாவலின் அத்தனை மனிதர்களும்..
நாவலுக்குள் வரக்கூடிய அத்துணை மனித மனங்களும் ஈரத்தோடு அவ்வப்போது உடன் வரும் சக மனிதர்கள் மேல் கொஞ்சம் ..கொஞ்சம் கோபமும் ஆத்திரமும் செலுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் கூட எதிரில் இருப்பவரின் கண்கொண்டு பேசும்பொழுது அத்தனை கோபங்களும் அப்படியே மறைந்து போகும்.. அவைகள் அன்பின் ஈரத்தில் கரைந்து போகும். இப்படியான
குடிநாவிதர் சமூகத்தின் வாழ் முறையாக வாழ்வியலாக நாவல் முழுக்க ஆசிரியரால் படைக்கப்பட்டிருக்கிறது.
காரு மாமாவின் தங்கை முத்துவின் மனசின் ஆழமதில் புதைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு நினைவுகளையும் கீரி வெளியே எடுத்து வார்த்தை வழியாக உச்சரிக்கும் ஒவ்வொரு பக்கங்களிலும் நாவிதர் குடும்பங்களின் பெரும் சோகங்கள் வேதனைகளாக வலிகளாக கண்ணீரின் உப்புதனை நம் விரல்களின் நுனிகள் தீண்டி இருக்கும்.

தன்னை விடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் குழந்தைகள் சுந்தரத்தையும் ஈஸ்வரியும் கூட்டிப் போன ராசம்மாவுக்காக கடைசிவரை தனியாகவே இருந்து அவள்மீது அழியாத அன்பு வைத்திருந்த காரு மாமாவின் கதையை சொல்லியிருக்கிறார்.. தான் செய்த தவறினை ராசம்மா உணர்ந்தாலும் மீண்டும் உடையாம்பாளையம் வரும்பொழுது சொந்தபந்தங்கள் என்ன நினைப்பார்களோ என யோசித்து யோசித்து தன்னை வருத்தி வாழ்ந்து வரும் ராசம்மா கதையை சொல்லியிருப்பார்..

பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவச்சியாகவே உடையாம்பாளையம் முழுவதிலும் சுற்றி வருவார் பெரியம்மா தன் இடுப்பில் சொருகி இருக்கும் கம்பறக் கத்தியோடு.. தாயோடு பிணைத்திருக்கும் தொப்புள் கொடியை அறுத்து எடுத்து சிசுவை தனியா ஆக்கிடும் பெரியம்மா சிசு வளர்ந்து வரும் ஒவ்வொரு நாளிலும் அதனுடைய வளர்ச்சியை பார்த்துக்கொண்டே மகிழ்ந்து கிடக்கும் கண்களை படமாக்கியிருப்பார் நாவலாசிரியர்.. அதில் ஏதேனும் ஒரு குழந்தை சுகமற்று பிரியும் பொழுது அதற்காக தன் வருத்திக்கொண்டு பட்டினி கிடந்த காலங்களையும் பதிவாக்கி இருப்பார் நாவலுக்குள்..
நாவலுக்குள் வரக்கூடிய ஒவ்வொரு மனிதர்களையும் பேசிக்கொண்டே இருக்கலாம் வாசித்து முடித்தவுடன் அத்தனை பெரிய அன்பினை சுமந்தவர்களாக படைத்திருப்பார் தேவிபாரதி..
ஒப்பாரி பாடலை உணர்ச்சி ததும்ப பாடுவது எப்படி என பயிற்சி கொடுத்த லிங்கநாதன்.. ஒரு இழவு வீட்டில் உடுக்கை எடுத்து பாடிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சுவலியால் துடிதுடித்து செத்துப் போனது.. அவன் பெருமை குறித்து ஒப்பாரி பாடல் பாடும் பொழுது கேட்பதற்கும் பாடல்களில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திருத்துவதற்கு ஏதும் இல்லாதவர்களாக பெண்களும் முத்துவும் பாடிக் கொண்டிருப்பது, நம் கண்களை விட்டும் இருதயத்தை விட்டு அகல மறுக்கிறது.. ஒப்பாரி பாடல் குறித்தான ஒரு பதிவினை சிறப்பாக செய்திருக்கிறார் நாவலாசிரியர்..
கலை இலக்கியத் தளத்தில் வெளிவரும் ஒவ்வொரு எழுத்திற்கும் ஓர் அரசியல் இருக்கும்..இருந்தே ஆகும்.  அரசியலற்ற படைப்புகள் ஏதும் இங்கு இருக்காது.. அந்தவகையில் தேவிபாரதியின் இந்த நாவலுக்குள்ளும் அவரின் புனைவிற்குள்ளும் ஓர் அரசியல் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது..
இந்திய மனித மனங்களுக்குள் சாதி ஆதிக்கம் என்பது எப்பொழுதுமே அதனுடைய உச்சத்தில் இருந்தும்.. கௌரவத்தில் இருந்தும் தன்னை ஒருபொழுதும் இறக்கிக் கொள்ளாது. அத்தகைய திமிர்த்தனம் மிக்கது தான் சாதி.. மநுதர்மத்திற்கு துரோகம் இழைக்காமல் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கும்.. கஞ்சிக்கே வழியற்றவர்கூட ஆதிக்கசாதி உணர்வுக்குள் ஆட்பட்டு திமிர்த்தனம் புரிவதை நாம் அன்றாடம் பார்த்தே வந்திருக்கிறோம்.. பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.. ஆதிக்க சாதி மனோபாவம் என்பது எந்த காலத்திலும் தன் கீழ் இருக்கும் சாதி மக்கள் மேல் ஈரக் கண்கொண்டு.. இரக்கம் கொண்டு பார்த்தது கிடையாது.. பார்த்திட தன்னை பழகிக் கொண்டதும் கிடையாது.. அப்படி பார்ப்பது என்பது மனுநீதிக்கு செய்யும் அதர்மமாக தன்னை பாவிக்கும்..  அப்படிப் பார்க்கும் பார்வையில் கூட பாசத்தோடு இலை தழைகள் கொடுத்து ஆட்டினை வளர்க்கும் கறிகடைக்காரரை ஒத்ததாகவே இருக்கும்.. இதுதான் மநுதர்மத்தின் தர்மமாகும்.
நாவலில் வரக்கூடிய எளிய மனிதர்கள் உலாவரும்  இடங்கள் அனைத்தும் கவுண்டன் கவுண்டச்சிகளின் தோட்டங்களும்.. தெருக்களும்.. வீடுகளுமாகவே.. கவுண்டன் கவுண்டச்சி குடும்பங்கள் அவர்களின் சொந்தங்கள் அத்தனை பேருமே நாவிதர் குடும்பங்களின் மேல் கரிசனம் மிகுந்ததாகவும் ஆதரவாகவும் இருப்பதாக படைக்கப்பட்டிருக்கிறது.. பொதுச் சமூகத்தில் நிலச்சுவான்தார் குடும்பங்களின் மீதும் கவுண்டன் கவுண்டச்சிகளின் மீதும் இயல்பாகவே இருந்து வரும் திமிர்த்தனம் கொண்டவர்கள் ஆதிக்க குணம் நிறைந்தவர்கள் இவர்கள் என்கிற ஒரு கட்டமைப்பில், நாவிதர் குடும்பங்களின் வறுமையும் இல்லாமையும் வாழ்வியலையும் பேசி அவர்களின்பால் அன்பு கொண்டவர்கள்தான் நிலச்சுவான்தார் குடும்பங்கள்.. கவுண்டன் கவுண்டச்சிகள் என்பதை உள்ளீடாக சொல்லி.. ஆதிக்க சாதியாக இருந்தாலும் எத்தனை அன்பு கொண்டவர்கள் கவுண்டரும் கவுண்டச்சிகளும் என்பதை பேச முற்பட்டு சாதிப் படிநிலையில் சமன் செய்ய..ஏற்று தன்னை பழகிக்கொள்ள வந்திருக்கும் நாவலோ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது..


கவுண்டன் கவுண்டச்சி குடும்பத்தில் சாதி மீறி திருமணம் என்பது எங்கேயாவது நடந்திருக்கலாம்.. அதற்குப்பின்னால் இருக்கக்கூடிய பொருளாதார அரசியல் ஒத்து வரும் பொழுதே அது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இத்தகைய குடும்பங்களில் சாதி மாறிய திருமணம் என்பது பல நேரங்களில் கௌரவக் கொலைகளிலேயே முடிந்திருக்கிறது என்பதை நிதமும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.. சாதி மாறித் திருமணம் செய்து கொண்டாலும் கவுண்டன் கவுண்டன்சிகள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற ஒரு மாயையை சொல்லியிருக்கிறார் நாவலுக்குள்..
முத்தையன் வலசு பெரியப்பாவின் மூத்த தாரம் பிரிந்துபோய் அவரின் தாய் வீட்டில் இருக்க,அவரை சந்தித்து பெரியப்பாவோடு இணை சேர்த்திட உடையாம்பாளையம் பெரியம்மா முயற்சி செய்து கொண்டிருப்பார்.  சென்னிமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் இரு குடும்பத்திற்குமான வாய்த்தகராறு முற்றி போக பெரிய சண்டையாக உருப்பெறும் பொழுது, அங்கே இருக்கக்கூடிய தபால் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்திற்கு குழுமியிருந்த கம்யூனிஸ்டு தோழர்கள் அவர்களை சண்டையில் இருந்து விலக்கி வைக்க அவர்களிடம் “தோழர்.. தோழர்” என்று பேசி முயற்சி செய்வார்கள். தோழர்களின் குரலுக்கு அந்த இரண்டு குடும்பமும் செவிமடுக்க மறுப்பார்கள்.. சண்டையை விலக்க முடியாமல் முடியாமல்  தோழர்கள் தலையின்மேல் சிவப்புதுண்டு போர்த்தி அமர்ந்து விட்டார்கள் இன்று நையாண்டியோடு பேசியிருப்பார்.. குடும்ப பஞ்சாயத்திற்கு மதிக்காத இந்த இரு குடும்பத்தவர்களும்.. தோழர்களின் அரசியலுக்கு எங்கே மதிப்பு கொடுக்க போகிறார்கள் இவர்களின் அரசியல் எங்கேயும் எடுபடாது என்று வன்மத்தோடு பேசி அந்த இரு குடும்பத்தாரையும் இந்திய மக்களாக உருவகப்படுத்தி தோழர்களின்  தலையில் துண்டு போட்டு பதிவாக்கி மகிழ்ந்திருப்பார் தேவிபாரதி..
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” என்கிற இந்த நாவல் குடி நாவிதர் சமூகத்தின் வாழ்நிலையை பேசிக்கொண்டு சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளீடாக நியாயப்படுத்திப் பேசி மநு தர்மத்திற்கு நியாயம் சேர்ப்பித்து இருப்பதாக நான் உணர்கிறேன்..
நீர்வழிப் படூ உம்
தேவி பாரதி
நற்றிணை பதிப்பகம்
கருப்பு அன்பரசன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *