தேவி பாரதி என்ற புனைப் பெயரில் எழுதும் இராஜசேகரன், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் புதுவெங்கரையாம்பாளையத்தில் பிறந்தவர். 1980 ஆம் ஆண்டில் இருந்து பல தமிழ் இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் இவர் தமிழ் மாத இதழான காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஏழாண்டு காலமாக பணிபுரிந்துள்ளார். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

நீர்வழிப் படூஉம் நாவல்,சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். காரு மாமாவின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். அத்தனை சொந்தங்களுடன் பிறந்து வாழ்ந்த காரு மாமா ஒரு அனாதை போல் தனியாக மரணம் அடைந்தது எத்தனை துயர் நிறைந்த ஒரு நிகழ்வு. உடன் பிறந்தவர்களின் வாழ்வுக்காக அவர் அடைந்த பெருந் துயரங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனைவியையும், குழந்தைகளையும் தேடி அவர்,பழனி மலை அடிவாரங்களில் அலைகிற கொடுமை,மனதைக் கலங்க வைக்கிறது.துளி ஆறுதலாக,அங்கேயும் அவருக்கு கரம் நீட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். பாச மலர்,வேட்டைக்காரன்,காதலிக்க நேரமில்லை திரைப்படங்கள்,கதை நிகழும் காலத்தை குறிப்பிடுவதோடு,அன்றைய நாட்களில் திரைப்படங்கள்,மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன.பேச்சு வார்த்தை அற்றுப் போனவர்களையும்,வானொலி வழி திரைப்படங்கள் இணைத்து வைக்கின்றன.

குடி நாவிதர்களுக்கு அவர்களின் பன்னாடிகள் மிகப்பெரிய அனுசரணையாகத் தான் இருக்கிறார்கள். நல்லது கெட்டதுகளில் உதவி செய்கிறார்கள். ஏன், பிரசவம் பார்க்கும் நேரத்தில் அவர்களின் ஆணைகளுக்கு கூட அடிபணிகிறார்கள். ஒரு குடிநாவிதனை இழக்க பன்னாடிகள் அவ்வளவு எளிதில் துணிவதில்லை. ஏனென்றால் அந்த இழப்பு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக அறிவார்கள். ஒரு கிராமிய வாழ்வில், குடிநாவிதர் என்று அறியப்படுகிற நாவிதர்கள், அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்வில் பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரை, ஏன் இறப்பிற்குப் பிறகும் கூட எந்த அளவு பிணைந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது ஆச்சரியமும் பிரமிப்பும் உண்டாகிறது.

அவர்கள்,மிகவும் எளிய மனிதர்கள் அவமானங்களையும் கேவலங்களையும் உண்டு,செரித்து வளர்ந்தவர்கள்.அவை குறித்து எந்த புகார்களும் அவர்களிடத்தில் இல்லை.அவர்கள் தங்களுக்கான விதி என்று அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதரவாயிருக்கிறார்கள்.துரோகம் செய்கிறார்கள்.வன்மம் கொள்கிறார்கள்.உறவை முறித்துக் கொள்கிறார்கள்.மன்னித்து அரவணைக்கிறார்கள்.துக்க வீடுகளில்,லிங்க நாவிதன் கற்றுத் தந்த ஒப்பாரிப் பாடல்களைப் பாடி,இறந்த மனிதனிடமிருந்து கொஞ்ச நேரம் எல்லோருடைய கவனத்தையும் தன் பால் ஈர்க்கிறார்கள்.தாள முடியாத துயரில்,சாயப் பட்டறை நைட்ரேட்டில் தங்கள் கதையை முடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்வை மிகப் பெரிய போராட்டமாக நினைப்பதில்லை.ஆண்களுக்கு சவரக் கத்தியும்,பெண்களுக்கு பிரவசத்திற்குப் பயன்படும் கறம்பக் கத்தியும் அலட்சியமாக அவர்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கான தைரியத்தைத் தருகின்றன. அவையும் கை விட்ட பின்,அரசின்,முதியோர் உதவித் தொகை அவர்களை அரவணைக்கிறது. நாவலின் எந்தவொரு மனிதரையும் அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியாது. செட்டியோடு ஓடிப் போன காரு மாமாவின் மனைவி, 33 அத்தியாயங்கள் கொண்ட நாவலின் 29 வது அத்தியாயத்தில் தாலி அறுக்கும் சடங்குக்காக வந்து சேர்கிறார்.

அவள் ஓடிப்போன நாளில் இருந்து தனது அண்ணன் உடலாலும்,மனதாலும் படும் வாதையை காணச் சகிக்காமல் அவளை அத்தனை கெட்ட வார்த்தைகளாலும்,தூற்றிக் கொண்டே இருக்கும் அம்மா, அவள்,நிர்க்கதியாக நிற்பதை அறிந்தது அத்தனையும் மறந்து மன்னித்து அவளை வாரி அணைத்துக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. காரு மாமாவின் தங்கை வேறு எப்படிப்பட்டவளாக இருக்க முடியும்? மயானத்தில் மலர்கின்ற மலர் போல, அந்த துக்க வீட்டிலும் கதை சொல்லிக்கும்,அவனது மறைப் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. அது கூந்தலில் சூடப்பட்டதா? அல்லது புழுதியில் வீசப்பட்டதா என்பதை நாவலின் இறுதியில் உருட்டப்படுகிற தாயக்கட்டை முடிவு செய்கிறது.

முன்னொரு முறை தாயக்கட்டம் விளையாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்த போது வந்து அதை நிறுத்தின மழை இப்போது பெய்யவில்லை.
விளையாட்டின் முடிவு மட்டுமல்ல, மூன்று பேரில் விதியையும் தீர்மானிக்க போகிற உருட்டலுக்காக கரங்களில் காத்திருக்கின்றன தாயக்கட்டைகள்.
நாவலை இந்த இடத்தில் முடித்து விடுகிறார்.வாசிப்பவர்கள்,அவர் நிறுத்திய இடத்திலிருந்து எழுதத் தொடங்குகிறோம். இதுதான் இந்த நாவலின் மிகப் பெரிய வெற்றி. நான் பழனியை சேர்ந்தவன் என்பதாலும், நிறைய கவுண்டர் இன நண்பர்கள் இருந்ததாலும், எனக்கு நாவலை வாசிக்கையில்,நாவலின் மொழி பரிச்சயமானதாக இருந்தது. ஆனால்,அதேஞ்சாமி அப்டிக் கீழ கோந்துக்கற?வா,திண்ணைல வந்து கோரு வா என்கிற மொழி பரிச்சயம் இல்லாதவர்களின் கண்களைத் திணறச் செய்து விடும்.

வறண்ட நிலமொன்றின் விலங்குகளின், பறவைகளின்,நிலவெளியின் பின்னணியில், நதி வழி போகிற படகைப் போல,விதி வழி போகிற எளிய மனிதர்கள் பட்ட பாடுகளை, சக மனிதர்களை, அவர்களின் குறை நிறைகளோடு அப்படியே அணைத்துக் கொள்ளும் அவர்களின் அன்பை கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிற நாவல்.

                      நூலின் தகவல்

நூல்                     : “நீர்வழிப் படூஉம்” [நாவல்]

ஆசிரியர்        : தேவிபாரதி

வெளியீடு       : நற்றிணைப் பதிப்பகம்

தொடர்புக்கு :  44 2433 2924

பக்கங்கள்      : 200

விலை               : ரூ. 250

                       எழுதியவர்

 Sivakumar

                 ஜி.சிவக்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *