தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் - நூல் அறிமுகம் (நாவல்) Neervazhi Paduvum Devi Bharathi Tamil Novel - Thannaram Noolveli | https://bookday.in/

 நீர்வழிப் படூஉம் – நூல் அறிமுகம்

நூல் : நீர்வழிப் படூஉம்
ஆசிரியர் : தேவிபாரதி
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
ஆண்டு : 2022 இரண்டாம் பதிப்பு
விலை : ரூ.220
நூலைப்பெற : 9843870059
www.thannaram.in

மனித வாழ்வில் ஏராளமான நினைவலைகள் சாலைக் கற்களாக பரவிக் கிடக்கும். அக்கற்கள் உள்ளுக்குள் புதைந்தும், வெளியே தன்னிலையை தெரிவித்தும், ஊர்ந்த தடங்களால் உடைந்து சிதறியும் கிடக்கின்ற காட்சி ஒவ்வொருவர் பார்வையிலும் வேறு வேறாக காட்சியளிக்கும். அக்காட்சியினை வேர்த்தொகுப்புடன் பொருத்திப் பார்ப்பவர்களால் மட்டுமே அது வரலாறாக பார்க்கப்படும். அப்படி ஒரு பாதையின் தடத்தில் சிதறிய கற்களாக வாழ்ந்து தொல்லியல் வரலாறான கிராமத்தின் மனத்தை அதன் போக்கு மாறாமல் நம்மிடையே ஆசிரியர் தேவிபாரதி அவர்கள் கடத்திய சிந்தனை தான் நீர்வழிப் படூஉம்.

ஆம் நகரத்தில் இன்று வாழும் 50 வயதைக் கடந்த யார் ஒருவரும் தான் பதித்த கிராமத்தின் தடத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இந்நூல் மிகவும் உதவும். அப்படி என்னுடைய கிராமத்தில் வாழ்ந்த காலத்தில் மருத்துவச்சி என்று ஒருவர் இருந்ததையும், அதே வீட்டில் நாவிதர் இருந்ததும்< அவர்களின் பிள்ளைகள் அதே பாதையில் பயணித்ததையும் அவர்கள் வீடு வீடாக ஏறி உணவுக்காக கையேந்தியதையும் நான் இந்நூலை வாசிக்கும்போது கணத்த இதயத்துடன் வாசித்துக் கடந்தேன். ”ஏம்மா வெளியே ஏகாலி வீட்டம்மா (சலவையாளர்) நிக்கிறாங்க பாரு. ஏதாவது இருந்தா போட்டு அனுப்பு’’ இந்தக் குரல் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆம் துணி துவைப்பவர்கள் தலையிலும், முதுகிலும் அழுக்குத் துணிகளுடன் இக்குரல்களையும் சுமந்தே துணி வெளுக்கச் செல்வார்கள் கழுதைகளின் உறுமல் சத்தத்துடன். இப்படி உழைப்பவர்கள் ஊதியமாக பெறுகின்ற மீந்துபோன உணவு அவர்களின் வயிற்றைக் கழுவிய ஈரம் கூட காயாத நிலையில் வெளியே ”நான் சாமி வந்திருக்கிறேன்’’ என்ற குரல் வந்த திசையை நோக்கி பொங்கல் மறுநாள் காலை சூரியனின் முகம் கூட மலர்ந்திருக்காத நிலையில் அப்பா வெளியே வந்து ”உள்ள வாங்க சாமீ’’ என்று அவரை வரவேற்று அசுத்தம் தீண்டாமல் இருக்கும் பொருட்டு அப்போது தான் கழுவி சுத்தமாக வைத்திருக்கும் மனைக்கட்டையை அவருக்காக எடுத்துப்போட்டு உட்காரச் சொல்லுவார் அப்பா. வேறு யாராவது உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அடுத்த நொடி அம்மா ”இந்தாங்க தண்ணி குடிங்க’’ என்று செம்பு தண்ணீரை நீட்டும் அம்மா அப்போது அமைதியாக நின்றிருந்தார் ”வாங்க சாமீ’’ என்று வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு. எப்போதும் வராத சாமீ? பொங்கல் மறுநாள் மட்டும் எந்த சாதி வீடு என்றும் பார்க்காமல் சமதர்மமாக எல்லா வீடுகளிலும் நுழைந்துவிடுவார்.

அப்பா தயராக புத்தம் புதியதாக வாங்கி வைத்திருந்த வெற்றிலை பாக்கை தட்டில் வைத்து அதன் மேல் பொங்கல் காசை வைப்பார். சாமீ, ”ஓம் ரீம் கரீம்’’ என்று ரெண்டு வார்த்தையை உதிர்த்துவிட்டு ஆசீர்வாதம் பன்னிண்டு போயிடுவார். அனைவரும் அவர் காலில் விழ வேண்டும். எப்போதும் காசு பெறுபவர்கள் தான் விழுவார்கள். இங்கே மட்டும் சாமீயாக காசு பெறுவார். ”அவர் நம் வீடு வந்ததே பாக்கியம்’’ என்று பெருமை பொங்க தன் அங்காளி, பங்காளி மக்களுடன் கலகலப்பாக அன்றைய காணும் பொங்கல் நாள் கண்டுகொண்டுவிடும். இந்தக் காட்சி தேவிபாரதி அவர்களின் எழுத்து என்னை நினைவுகூற வைத்துவிட்டது.

நூலின் துவக்கம் ஒரு இழவு வீடு. ஆனால் அதுதான் எல்லா எல்லைகளையும் ஒருங்கே கொண்டுவந்து ஒரு புள்ளியில் இணைத்துவிட்டது. புதர் மண்டிய மண் சுவர் இன்றும் கிராமத்தில் நின்றுகொண்டுதான் இருக்கின்றன. அப்படி நின்ற மண் சுவர் ஏராளமான கதைகளை சொல்லிக்கொண்டே செல்லும். அப்படித்தான் ஈரோட்டுப்பாதையை, அங்கே அருகருகே குடிகொண்ட உடையாம்பாளையம், சுந்தராடிவலசு, முத்தையன் வலசு என நிறைய ஊடாடிச் சென்ற குடிநாவிதக் குடும்பப் பின்னணி கொண்டு பண்ணையக்கார குடும்பங்களில் கரண்ட தலை முடியையும், வரண்ட முகத் தாடியையும் தம்முடைய கத்தி, மழிக்கும் வேலையை செய்து காரு மாமா வகையறாக்களை வாழ வைத்தது. காரு மாமாவுடன் பெரியம்மா, அம்மா, ராசம்மா அத்தை என குடிநாவிதப் பெருமை பொங்கும் காட்சிகள் காரு மாமா இறப்பின் வழியே தேவிபாரதி அவர்களின் எழுத்து கொண்டு வரும். குறிப்பாக அவர் வாழ்ந்த வாழ்வின் நினைவலைகள் தான் இங்கே காட்சிப்படும்.

தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் - நூல் அறிமுகம் (நாவல்) Neervazhi Paduvum Devi Bharathi Tamil Novel - Thannaram Noolveli | https://bookday.in/

அப்பப்பா இந்நூலை வாசித்து முடிக்க எனக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. தொலைக்காட்சி சீரியல்கள் போலத்தான் இந்நூலை வாசித்து முடித்தேன். வாசிக்கும் இடங்களில் பல நேரம் கண் கலங்கியபடியேதான் வாசிக்க முடிந்தது. எழுத்து வடிவம் பேச்சு வடிவம் கொண்டு நம்மோடு எழுந்து வந்து பேசச் செய்கிறது. அந்த எழுத்துகள் வரும் இடங்களில் எல்லாம் தேவிபாரதி அவர்களுடன் நம்மையும் இணைத்துவிடுகிறார். அந்த பேச்சு வடிவ வரிகளை உரையாடல் வடிவில் வாசித்தால் மட்டுமே இந்நூல் நம்மோடு உரையாடும். அல்லாமல் எழுத்து வடிவமாக நிறுத்தினோமானால் இந்நூல் நம்மைவிட்டு தூரச் சென்றுவிடும். இதற்குமுன் இப்படிப்பட்ட ஒரு நூலை வாசித்த அனுபவம் இல்லையென்றே கூற வேண்டும். கிராமத்து வாழ்வியலை படம் பிடித்துக் காட்டியதனால் தான் இந்நூல் ‘சாகித்திய அகாடமி’ விருதுக்கு தேர்வானது. இன்றும் பேருந்தில் செல்லும்போது கிராமச் சாலைகளின் ஓரங்களில் கல்லில் உட்கார்ந்துகொண்டு முடிதிருத்தும் நாவித மக்களை பார்த்து வருகிறேன். இது பெரும்பாலான கிராமக் கட்டமைப்பை இன்னும் மாற்றாமால் தான் வைத்திருக்கிறது இன்றைய வாழ்வியல் என நாம் முடிவுக்கு வரலாம்.

அங்கிருந்து பரிணமித்து நகர்புறத்தில் கண்ணாடிக் கதவின் உள்ளே நாவிதம் பன்னும் நிலைக்குச் சென்றாலும் வாழ்வு அதேதான். ஈரோட்டில் குடிநாவிதம் செய்தவர்கள் பழனி கோயிலுக்குச் சென்றாலும் அதே நிலைதான். என்னவொன்று குடிப்பதற்குக் கஞ்சிக்குப் பதில் சில்லறைகள் மட்டும் மிஞ்சும். நாம் இன்னும் நிலபிரபுத்துவ கால கட்டத்தின் சொச்சமாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதையே ஆசிரியர் நமக்குச் சொல்லாமல் செல்கிறார் இந்நூலின் வழியே. அப்படியே பரிணமித்த வாழ்வு அதிகபட்சம் சாயப்பட்டறைத் தொழிலுக்கும், கொஞ்சம் கூடுதலாக எட்டிப்பார்த்தால் பள்ளி வாத்தியார் வரை வாழும். இப்படியெல்லாம் கிராம மனத்திலிருந்து நகர மனத்திற்கு வாசம் பட்ட வாழ்வு இறுதியில் காரு மாமா மரணத்தில் தாயக்கட்டை ஆடும் வரை வாழ்ந்துவிட்டு மனம் ஒன்றுகூடச் செய்யும் காட்சியில் தேவிபாரதி அவர்கள் நின்றுவிடுகிறார். அவர் நின்றாலும் நம்மை தூண்டிவிட்டு கிராம மனத்திற்கு ஏங்க வைத்துவிட்டார். நமக்கு ரயிலின் நீராவி எஞ்சின் நீர் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதன் அருகே சென்றாலும் அந்த வாசனை தெரியாது. அதன் புகை மட்டுமே கூ…. கூ…வென்று மேலே வெள்ளையாய் கூவிச் செல்லும். ஆனால் அந்த ரயில்பாதை அருகில் சிக்னல் இருந்து அங்கே குடியிருந்து குடிநீர் பற்றாக்குறை தாராளமாக இருந்து, அலைந்து வாழ்ந்த மக்களுக்கு அந்த நீராவி எஞ்சின் தான் தண்ணீர் கொடுத்தது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதே. எவ்வளவு வலி நிறைந்த வாழ்வியல் நிலையை நமக்குப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார். வாருங்கள் காரு மாமாவின் இறுதிச் சடங்கு வழியே கிராமத்தின் மண் வாசனையை எட்டிப் பிடிப்போம். நாம் வாழ்ந்தபோது நம்மை ஏளனமாக பார்த்த பண்ணையார் குடிபெருமை மீசை முறுக்கிகளை அப்படியே கழிச்சிக்கட்டிவிட்டு நமது மண்ணை மீட்டெடுப்போம் ஆசிரியர் தேவிபாரதி அவர்களின் எழுத்து வழியே நமது சமத்துவச் சிந்தனையின் ஊடாக. ஆகா மண் மனக்கச் செய்த எழுத்தாளர் தேவிபாரதி அவர்களை எப்படி வாழ்த்தினாலும் தகும். அவர் எழுத்தை வாசிப்போம். அதன் வழியே அவரை நன்றாக வாழ்த்தலாம். நாமும் கிராமிய மண் மனத்துடன் வாழ்வோம். வாசிப்போம்! உலகை நேசிப்போம்!!

 

நூல் அறிமுகம் எழுதியவர் :

இரா. சண்முக சாமி
புதுச்சேரி.

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *