நூல் அறிமுகம்: எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதனின் *நீதிமன்றமும் நானும்* – நா. விஜயகுமார்ஏதோ ஒரு வழக்கறிஞரின் வழக்காடும் அனுபவம் என எண்ணி விட முடியாது. அவர் எழுத்துக்களும், விமர்சனங்களும், கலை இலக்கியம் சார்ந்த முற்போக்கு பார்வையும், மார்க்சிய பார்வையும் கொண்ட ஒரு முற்போக்கு மூத்த வழக்கறிஞரின் அனுபவம் என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
ஏனெனில் நீதிமன்ற வரலாற்றில் ஏராளமான வழக்குகளும் ஏராளமான நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் வருவதும் போவதும் உண்டு இதில் முற்போக்கான இலக்கியம் சார்ந்த வழக்குகள் நடத்துவதும் அணுகுமுறையும் உள்ள நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் தனித்துவமும் தனி இடமுண்டு .
அனுபவம் துவங்கும் முன்பே நீதிமன்ற வரலாற்றையும், இலக்கியம் சார்ந்த நீதிபதிகளில் படைப்புகளையும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த நீதிமன்ற முறைகளையும் இன்னும் ஏராளமான தகவல்கள் நம் முன் வைக்கிறார் எழுத்தாளர் சிகரம் செந்தில் நாதன் அவர்கள். எனது முதல் வழக்கு என்று சொன்னவுடன், இளம் வழக்கறிஞரின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜாமின் தருகிறேன் என்று கூறிய நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியாரும், ஒரே மாதிரியான இரு வழக்குகளில் ஒரு வழக்கு தள்ளுபடி செய்கிறேன் என்றும் மற்றொரு வழக்கு விசாரித்து ஏற்றுக் கொண்டு விட்டதால் இதற்கு முன் விசாரித்த அந்த வழக்கையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியதோடு விடாமல் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பியூனை அனுப்பி உங்கள் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என சொல்லி அனுப்பி இருப்பது,  வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிடம் தள்ளுபடி ஆகிவிட்டது என சொல்லிவிட போகிறார் என வழக்கறிஞரின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட நீதியரசர் சத்யதேவ் அவர்களைப் பற்றியும் படிக்கும் போதே நமக்கு மெய்சிலிர்க்கச் செய்கிறது.


அடுத்தபடியாக அபூர்வராகங்கள் வழக்கு நம்மை அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது. கண்ணதாசனைப் பற்றியும், அபூர்வ ராகம் படம் வந்த சூழ்நிலையும், அந்த கதையின் எழுத்தாளரின் உணர்வுகளையும், காமராஜர் மறைந்த போது நடைபெற்ற சம்பவங்களையும், அக்காலகட்டத்தில் ஏராளமான நிகழ்வுகளையும், வழக்கையும் படமாகவே கண்முன் நிறுத்துகிறது. வழக்கின் ஆரம்பத்தில் கே பாலச்சந்தர் அவர்கள் மீது வரும் எண்ணத்தை முடிவில் மாற்றி விடுகிறார் எழுத்தாளர்..
ரயில் பயணங்களில், நடிகைக்கு நன்றி சொல்லலாமா, புதுமைப்பித்தன் கடிதங்களும், புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடமை, சமுத்திரம் திலகவதி போர், பெருமாள் முருகன் வழக்கு தெரிய வேண்டிய சில தகவல்கள், ராஜராஜ சோழன் சிலை மீட்பு, செந்தமிழ் வேள்விச் சதுரர் சத்தியவேல் முருகனார் வழக்குகள் என ஏராளமான இலக்கியவாதிகளின் வரலாற்றையும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்கள் பட்ட துன்பத்தையும் கண்முன் நிறுத்துகிறது.
வழக்குகளும் வெற்றிபெற்ற தீர்ப்புகளும் மட்டுமே இடம்பெற்றிருந்தன முடிவுக்கு வரவேண்டாம் ஒவ்வொரு வழக்குகளிலும் உள்ள உண்மைகளை விமர்சனங்களை நேரடியாகவே எடுத்து நம் முன் வைக்கிறார் எழுத்தாளர் செந்தில் நாதன் அவர்கள். வழக்குகளால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட லாபங்களையும் திருப்பங்களையும் வெளிப்படையாக எடுத்து வைக்கிறார்.
புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்க முயற்சித்த அனைவரையும் பாராட்டுவதுடன் வெறும் அறிக்கையால் நடைபெற்றது என செய்தி வெளியிட்ட செம்மலர் பத்திரிகையை சின்ன புத்தி என விமர்சிக்கவும் செய்கிறார். வழக்குகளும் அனுபவங்களும் மட்டுமே இருக்கும் என நினைத்தாலும் படிக்கும்போது தெரிந்து கொள்வோம் ஏராளமான இலக்கியவாதிகளின் அறிமுகங்களும் தியாகங்களும் இடைவிடாத செயல்பாடுகளும் உள்ளது என்பதை.
நா.விஜயகுமார். B.A.,L.L.M
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
புத்தகம்- நீதிமன்றமும் நானும்
எழுத்தாளர்- சிகரம் ச.செந்தில்நாதன்
விலை ரூ.110/-
பக்கம்  110
பதிப்பகம் – சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600083
தொலைபேசி 24896979.