ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) எழுதிய நீதியரசர் மா.மாணிக்கம் நாவல் (Neethiyarasar M Manickam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நீதியரசர் மா.மாணிக்கம் (Neethiyarasar M Manickam) – நூல் அறிமுகம்

நீதியரசர் மா.மாணிக்கம் (Neethiyarasar M Manickam) – நூல் அறிமுகம்

 

“கடமையாவன. தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம்
வேண்டுதல்.”

– மகாகவி பாரதி

காவல்துறை காக்கிக்கும் கருப்பு அங்கிக்கும்… நீதியின் தராசுக்குமான போராட்டம்..! உசத்தி நீயா? நானா?…யார்? என தீராத சண்டைகள் அங்கொன்றும்…இங்கொன்றும் நடந்த வண்ணம் தான் நாடெங்கிலும் இருக்கிறது. இதோடு லாக்கப் மரணம்..கற்பழிப்பு வழக்கு கொலை கொள்ளைகள் என இதன் அத்தியாயம் விரிவடைகிறது…!

பொதுவாக காக்கி சட்டை போட்டவர்கள், காவல்துறையானது….அதிகாரம் முழுக்க கையில் எடுத்து ஏதோ விளையாட்டாக்கிப் பார்க்கும்… சில காவல்துறை அதிகாரிகளால்… இது போன்ற துரதிஷ்டமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்களுக்கும்…சட்டம் ஒழுங்குக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்களுக்குமான.. போராட்டமாக காவல்துறையின் வன்முறை உக்கிரம் பெறுகிறது நீதியரசர் மா. மாணிக்கம் எனும் இந்நாவலில்..! உயர்நீதிமன்றத்திற்குள் நடந்த இந்த வன்முறைத் தாக்குதலில் நீதிபதிகளுமே அடங்கிய போது… உரத்த குரலில் நீதிய ரசர் மா.. மாணிக்கம் நாவல் மூலம் பொது ஜன விவாதத்தை நடத்துவதாகவும் நம்மிடம் நாவல் பேசுகிறது…! இந்த நாவலின் கடைசி சில அத்தியாயங்களின் போராட்டக் களத்தின் படுகோரமான விளைவுகளும் காட்சிகளும் நம் கண் முன்னே விரிகிறது இது எனக்கும் பல வருடங்களை முன்னோக்கி நினைவுகள் செல்ல உதவியது எனலாம்.
காவல்துறை காக்கிக்கும்… மின்சார தொழிலாளிகளுக்கும் நடந்த வாய் சண்டை,பிரச்சனை,மிரட்டல், கைதான.. சில போராட்டங்கள்… என என் கண் முன் விரிகிறது.!அது ஒரு தனி கதை….!

சிகரம் ச செந்தில்நாதன், புகழ்வாய்த்த தமிழ் இலக்கிய இதழான”சிகரம்” ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டு நடத்தியவர்,. கலை இலக்கிய அமைப்பான தமுஎகச வின் ஸ்தாபகத் தலைவர்களில் முன்னோடியாக இருந்தவர். இவர் எழுதிய முதல் நாவல் “மங்களம்”. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தவிர …முருகன் வணக்கத்தின் மறுபக்கம்,..

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை:ஒரு மறு வாசிப்பு,.. சிகரம் செந்தில் நாதனின் திறனாய்வுகள்,,..ஆண்டவன் -ஆகமம் -நீதிமன்றம், …தமிழ் மொழி -நீதிமன்றம் -தீர்ப்புகள் இவர் எழுதிய நூல்களின் பிற வரிசையாகும்.

ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) எழுதிய நீதியரசர் மா.மாணிக்கம் நாவல் (Neethiyarasar M Manickam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

தனது வழக்கறிஞர் தொழிலில் தொழிலாளர்களுக்காக வாதிட்டு வெற்றித் தீர்ப்பு பெற்றுத் தந்தவர். தமிழுக்காக…தமிழ் அறிஞர்களுக்கான வாழ்வியல் வழக்கிலும் வெற்றி கண்டவர். ஜூனியர்களையும் நீதிபதியாகப் பார்த்தவர்.. வழக்கிலும் வழக்கு மன்றத்திலும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தனது அனுபவத்தை சேர்த்து வைத்திருப்பவர்.. பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வழக்கறிஞர்.

இத்தனைக்கும் மேலாக தான் அன்றாடம் பணி புரியும் உயர்நீதி மன்றத்தில் நடந்த கருப்பு அங்கிகள் மீது நடத்தப்பட்ட காக்கிச்சட்டைகளின் வன்முறைக்குமான களப்போராட்டத்தில் தனது வெம்பிய மனத்திற்கு விடை தந்திடவும்…
தான் சார்ந்த இயக்கம் தொட்டு… நீதி அரசர் மாணிக்கம் எனும் நாவலை மனவெளியின் சாட்சியத்தோடு சிகரம் ச. செந்தில்நாதன் அவர்கள் இந் நாவலை அவதானித்து உள்ளார்…பிறப்பெடுக்க வைத்துள்ளார்….என்று தான் கூற வேண்டும்.

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”

என்பதற்கு இணங்க நாவலுக்கான தன் உரையில் நாவல் ஆசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் ‘ ஒரு சொல்’ எனத் தலைப்பிட்டு தனது முதல் நாவல்” மங்களம் “குறித்தான தமிழ் அறிவுசார் உலகத்தின் வாத விவாதங்கள் குறித்து சொல்வதும், நாவல் குறித்தான தனது ஆழமான நிலைப்பாட்டினையும் விளக்கிச் சொல்கிறார். “மங்களம்” நாவல் வெளியான உடனே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எம் ஃ பில் ஆய்வுக்கு தேர்வு செய்தது சமூக அக்கறையின் மீதான தாக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தமிழ் இலக்கியத்தில் எந்த வடிவத்தையும் காலம் தான் முடிவு செய்யும்.வளரும் போக்கில் மொழி ஆளுமையின் வளமை சிறக்க…அது புதுப்புது வடிவங்களில் வந்து பிறக்கிறது.இது தமிழின் பேரினப் பெருமை சாற்றிக் கொண்டாடும் காலம் இது எனலாம்.

நாவலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் மிகத் தெளிவான இலக்கிய ரீதியான விளக்கத்தினை ஒரு சொல் மூலமாக
பல சொற்களின் குவியல்களோடு தன் முதல் உரையைத் தந்துள்ளார். இதன் மூலம் நீதியரசர் மா.மாணிக்கம் புதினத்துக்குள் நுழைய மனதை இலகுவாக்குகிறார்… என்பது படிக்கும் வாசகர்கள் உண்மை என்று அறியலாம். நீதியரசர் மா. மாணிக்கம்… திருவாரூருக்கும் நாகப்பட்டிணத்திற்கும் இடையில் இருக்கும் கீழ்வேளூர் அருகே இருக்கும் ” முப்பத்திக்கோட்டகம்” சிறிய கிராமத்தில் பிறந்து… அங்கேயே அரசு பள்ளியில் படித்து…சட்டக் கல்லூரியில் பயின்ற ஊரின் முதல் வழக்கறிஞராகவும் இன்று மாவட்ட நீதி அரசராகவும் ஆனதில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் நீதி அரசர். மாயவரத்தில் வக்கீல் போர்டு போட்டுக்கிட்டு.. காத்து வாங்கின மா.மாணிக்கம்… தன் அக்கா வீட்டுக்காரர் மாமாவின் நீதிமன்ற அரசியல்..செல்வாக்கால்…மாஜிஸ்ட்ரேட் ஆகி…மாவட்ட நீதிபதியானதும்…தன் அக்காள் மகள் கல்யாணியை மணந்ததும், இரு பெண் பிள்ளைகளும் என இவர் வாழ்க்கையின் சிறு குறிப்பு…
பெரும் குறிப்பு…நிகழ்வுகளாக… விரிகிறது நாவல்.

வக்கீலாக இருந்த மாணிக்கம் “யுவர் ஆனராகி ” “மை லார்டு” ஆகி கார் பங்களா என சொகுசு வசதிகள் பெற்றிடும் கற்பனையில் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியம் சென்று பார்க்கிறார்…ராஜயோகம் சொல்லிவிட்டார்.நாடி ஜோசியர்…!. ஹை கோர்ட் ஜட்ஜ் மனதில் எண்ணி மாணிக்கத்தின்
மன உளைச்சல்…முழுவதையும் நாவலில் பார்க்க முடிகிறது.

இதில் தனக்கு நல்லது செய்வது போல் நடித்து தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ளத் துடிக்கும க்ரைம் எஸ் ஐ ஆகி பின் டிஎஸ்பி ஆன சகாயராஜ்… மற்றும் நீதிபதி பதவியை ராஜினாமா செய்த நாராயணசாமியும் தனக்கு ஆதரவுக் கம்புகளாகவும்…எதிரான அம்புகளாகவும் உணர்ந்தார்.. நீதி அரசர் மா மாணிக்கம்..!
படிக்கும் காலத்தில் பகுத்தறிவாளனாக இருந்த மாணிக்கம் இப்போது பதவிக்காக ஜோசியர்களை
ஆலோசனை கேட்டும்… வைதீஸ்வரன் கோயில் அருளானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு செல்வதுமான…இயந்திரத் தன்மைக்கு மாணிக்கம் மாறிவிட்டார்..
தனது பதவியின் நெருக்கடி…தன் குடும்பத்தோடு கொடைக்கானல் பார்க்க முடியாததும்…, சென்னைக்குச் சென்று மகள்கள் விரும்பியதை வாங்கித் தர முடியாமலும் போன நெருக்கடி வாழ்க்கை தான் நீதிபதியின் வாழ்க்கை..
இது மனைவி கல்யாணிக்கு நீதி மறுத்த
நிலை என்பதும் நீதிமானுக்குத் தெரிந்தே இருந்தது.
சொந்த கிராமத்தில் தான் நண்பர்களோடு சேர்ந்து எடுத்த முடிவின்படி நடந்திடும் முதல்
சித்ரா பௌர்ணமியின் திருவிழாவிற்கும்,..தனக்கான ஊர் மக்களே விரும்பி நடத்தும்…பாராட்டு விழாவிற்கும்….செல்ல முடியாததும் நீதியரசர் மாணிக்கத்தின் துரதர்ஷ்டமே!

குமாரசாமி எனும் அருளானந்த சுவாமிக்கு அதே தெருவில் இருந்த ராமர் பிள்ளை சீடரானார். சீடருக்கு பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. மனைவி ஜானகியுடன் போகாத கோயில்கள் இல்லை.. செய்யாத சடங்குகள் இல்லை. சீடன் ராமர் பிள்ளை இதுகுறித்து அருள் ஆனந்த சாமியிடம் எந்த ஜோசியமும் கேட்டதும் இல்லை. ஆனால் மனம் நொந்து ஒரு நாள் குமாரசாமி எனும் அருளானந்த சாமியிடம் குழந்தையின்மை குறித்தான தனது குடும்ப சூழலை சொன்னான் ராமன்.

சிறிது நேரம் நிஷ்டையிலிருந்து விட்டு அருளானந்த சுவாமிகளும்… உங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று சீடன் ராமனிடம் கூறிவிட்டார். ராமன் பின்னால் பிள்ளை என்பதை சேர்த்து ராமர் பிள்ளை ஆகிவிட்டார்.தன் மனைவி ஜானகியிடமும் இதை ராமர் பிள்ளை சொன்னார்.. ஜானகியிடம் எந்தக் கவலையும் இன்றி மீண்டும்… ஆலயம் கோயில் என… சாமியை கும்பிடுவதாக அவள் கடமையை நிறைவேற்றினாள்… இரண்டு ஆண்டுகள் கழித்து ஜானகி கருவுற்றாள்…. ராமர் பிள்ளைக்கு சந்தேகம் வந்தது. சந்தேகத்தை அறிய முடியாமல் ஜானகி தவித்தாள். தெருவில் இருந்த கோபால் என்பவனோடு முடிச்சு போட்டு ராமர் பிள்ளை பேசினார்…என்பது தெரிய வந்தது…!. வதந்தியை பரப்பி விட்டது யார் என ஜானகிக்குப் புரியவில்லை. தன்னை நாராயணியும், இந்திராணியும்..சிரித்த நமட்டு ச் சிரிப்பை இவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்களும்… ஜானகியிடம்…ஆம்பளைங்களே அப்படித்தான்… ஆமாம்! அந்த கோபாலு வேலை கிடைச்சுடுச்சுன்னு சென்னைக்கு போனானே…சேர்ந்துட்டானா வேலையில்?என்றார்கள். பாய்ந்தாள் ஜானகி.
கர்ப்பத்திற்கு கோபாலை முடிச்சு போடும் அசிங்கத்தை ஜானகியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஊர் மேயுற கைசடை நாய்கள் நாக்கில் நரம்பில்
லாமல் ஊளையிடுகின்றன….

என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.ஜானகி. வீட்டிற்கு வந்தாள்..படுக்கை அறைக்குள் நுழைந் தாள்.கதவை சாத்திக் கொண்டாள்.மூடிய கதவு எதையோ சொல்வது போல் இருந்தாள்…. தூக்கமின்றி விம்மி அழுதாள்.

மறுநாள் காலை கண் விழித்த ராமர் பிள்ளையின் கண்களில் ஜானகி தென்படவில்லை….சிறிது நேரத்தில் அவருக்கு செய்தி வந்தது.. ஊருக்கு வெளியே இருக்கிற பாழும் கெணத்தில அம்மா பொணம் கெடக்குது “”

படிக்கும் யாவருக்கும் மனசு கனக்க வைக்கும்.!… அருளானந்த சுவாமிகள் மீது கர்ஜனையும் ஆவேசமும் நம்முள் பெருகுகிறது..!ஏமாளிகள் ராமர் பிள்ளைகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதியாக பதவியேற்ற மா. மாணிக்கம் தன்னிடம் பாசம் கொண்டு நடித்த க்ரைம் எஸ் ஐ யாக இருந்த சகாயராஜ்… வாலிபர் சங்கம் பகத்சிங் என்பவனைத் தாக்கி நள்ளிரவில் தன்னை எழுப்பி ரிமாண்ட் செய்ய உத்திரவிடச் சொன்னதும், தன்னைத் தாக்கிய விவரங்களை பகத்சிங் சொன்னதையும் கேட்டறிந்தார் நீதிபதி…!தாக்கியது உண்மை என்பதையும் புரிந்து கொண்ட நீதிபதி ரிமாண்ட் செய்து மருத்துவமனையில் சேர்த்திடவும் ஜாமீனுக்கு விண்ணப்பம் போடவும் பகத்சிங்கிடம் கூறி கூறிவிட்டார்.
திண்டுக்கல்லுக்கு ஏண்டா வந்தோம்…

திண்டுக்கல் இருக்கே… இது காக்கா புடிக்கிறவனுக்கு நல்ல ஸ்டேஷன்….மற்றவனுக்கு எல்லாம் ஆப்பு வைக்கிற ஸ்டேஷன்.. எப்ப பாத்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் இருந்தும்… ஹை கோர்ட்ல இருந்தும்…கொடைக்கானல் போவதற்கும்… பழனி போறதுக்கும்…ஜட்ஜஸ் வந்து கொண்டே இருப்பார்கள்…! நம்ம பாடு பெரும்பாடாய்ப் போயிடும்..! இதுதான் இந்த மாவட்ட நீதிபதிகளின் நிலைமை.

பகத்சிங்கை தாக்கியது பெரும் பிரச்சனையாக ஆனது. எம் எல் ஏ பாலபாரதி தலையிட்டு இருக்கிறார் என்பது சகாயராஜிக்கு வயிற்றைக் கலக்கியது.. எம்எல்ஏ குறித்து வாயில் வந்தபடி எல்லாம் பேசினான் சகாயராஜ்.

பகத்சிங் கைதைப்பற்றி வாலிபர் சங்கம் அதன் பின் இருக்கும் இயக்கம் குறித்து காவல்துறையின் கருத்தை சகாயராஜ் மூலம் நாவலாசிரியர் பதிவு செய்கிறார்.
சகாயராஜ் சொல்கிறார் ” பகத்சிங் மாதிரி வீரனாகிட முடியுமா? ஒரு மீட்டிங்ல ஒருத்தர் சொன்னார்…..ஐயா!செஞ்சிக்கோட்டையில் ஏறினவன் எல்லாம் தேசிங்கு ராஜனாக முடியுமான்னு கேட்டான். சகாயராஜ்..!எழவுப் பேரு வாலிபர் சங்கமாம். இடதுசாரியாவது வலதுசாரியாவது..எல்லாம் அயோக்கியப் பசங்க… படிப்ப பாதியில விட்டுட்டு வேலை வெட்டி இல்லாம அலையற பசங்க… தான் அவனுங்க!எல்லாம் பொழுது விடிஞ்சு..பொழுது போனா.. ரேஷன் கடையில். போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல..கொடிய புடிச்சுக்கிட்டு தொண்டை கிழிய கத்துவானுங்க. அப்புறமா ஒருத்தன் வருவான். சேப்பு துண்டு போட்டுக்கிட்டு.! போராட்டம் வெற்றி. என்று சொல்லிபுட்டுப் போயிடுவான்!. சகாயராஜ் மூலமா காவல்துறையின் கூற்றை சொல்ல வைக்கிறார் நாவல் ஆசிரியர்.

காவல்துறை எப்படி எல்லாம் பொய் வழக்கு போடும்.. அது கூட்டத்தில் எப்படி எல்லாம் கலவரம் செய்யும்.. வன்முறைக் களமாக எதை..எப்படி.. எப்போது உருவாக்குவது?, யாரைக் குறி வைத்து பிடிக்கத் துடிக்கும்….வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும்.. வன்முறை வெறியாட்டம் போன்ற எந்திரமான நச்சுக் குணங்களை காக்கிச் சட்டைகள் எப்போதும் கொண்டிருக்கும் என்பதை நாவலில் மிக அடர்த்தியாக நாவலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் பதிவு செய்கிறார்.
நீதிமன்றம்..வக்கீல்களுக்கும் காவல்துறைக்குமான மிகப் பெரும் போராட்டத்திற்கான குறியீடுகளாக
நாவல் ஆசிரியர்… இலங்கைத் தமிழர் படுகொலைக்கு எதிரான போராட்டமும், நீதிமன்றத்தில் வந்த சுப்பிரமணிய சுவாமியும் தான் கதைக்கான முக்கிய கருவாக்கியுள்ளார் ஆசிரியர் எனலாம்..…

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு ஆரம்பிச்சாங்களே.. அதிலிருந்து நீதிமன்றத்திற்கு உள்நடந்த காக்கி சட்டைகள் நடத்திய வன்முறைகள் அத்தனையும் படிக்கப் படிக்க படிப்பவர் நெஞ்சத்தை உலுக்குகிறது.

இவ்வளவு வன்மம் நிறைந்தவர்களா? பொது ஜன மத்தியில் கேள்வியும்.. காவல்துறை குறித்து எழ வைக்கிறது…. நாவல்! போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கருப்பன் ஆற்றிய உரையும்… வீராவேசமான காவல்துறைக்கு எதிரான நெத்தியடிப் பேச்சும்… கேட்க மனம் உக்கிரம் பெறுகிறது… வக்கீல்களைக் கடித்துக் குதறியதோடும்… ரணங்களோடு…இரத்த காயங்களோடும்…உடலில்… கைகளில் கால்களில் மண்டைகளில் வழியும் ரத்தத்தோடும்…இரத்தத்தோடும்….. என அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் அலைந்ததும்… இதற்கு விதிவிலக்காக இன்றி நீதிபதிகள் தாக்கப்பட்டதும் நீதிக்கான பெருத்த அவமானம் எனலாம்..! பல நீதிபதிகள் தாக்குதலோடு நீதி அரசர் மா மாணிக்கமும் இதில் தாக்கப்பட்டார்.. தலையில் ரத்தம் சொட்டு சொட்டாக வழிய தனியார் மருத்துவமனையில் தலையில் கட்டிய கட்டோடு அவர் வீட்டுக்குச் செல்லாமல்.. நேராக அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அடிபட்ட வழக்கறிஞர்களைப் பார்க்க வந்துவிட்டார் என்ற தகவல்கள் வழக்கறிஞர்களுக்கு மிகவும் ஆறுதலானது.அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் வலியும் மறைந்தது. ஒவ்வொரு படுக்கையாக அவர் பார்க்க முயன்றார்… வழக்கறிஞர்கள் நெகிழ்ந்து போனார்கள். நீதி அரசரும் நெகிழ்ந்தார். ஒரே உணர்ச்சிப் பெருக்கு… ” நீங்க வேறு.. நான் வேறு… இல்லே..!, நாமல்லாம் ஒரே ஜாதி என்றார்! ” வன்முறைக்கு எதிராக ஆறுதலான வார்த்தைகளாக இருந்தது.நீதிக்கும் நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்குமான ஆறுதலாக்கிக் கொள்ளலாம்..

கூச்சல் குழப்பம் வன்முறையின் வெறியாட்டம் என்பதாகவே நாவல் படித்து முடித்ததும் மனசுக்குள் படம் போல் விரிகிறது. கதையின் நக்கல்…நையாண்டி… எல்லாம் நாவலைப் படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது.

ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) எழுதிய நீதியரசர் மா.மாணிக்கம் நாவல் (Neethiyarasar M Manickam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எல்லோரையும் நாவலில் நிஜமான பெயர்களோடு பதிவு செய்திருப்பது சிறப்பு எனலாம். தான் யார் என்பதையும் தனக்குப் பின்னாலான முகத்தினையும்…நேரடியாகவே நாவல் ஆசிரியர் சிகரம் ச. செந்தில்நாதன் இந்த நாவலின் மூலம் பதிவு செய்துள்ளார்.

இந்த நாவலில் குறிப்பிடத்தக்க நீதிபதிகளின் பெயர்கள் பின்வருமாறு கூறலாம்.. இவர்கள் நாவலுக்குள்ளான கதாபாத்திரங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மா மாணிக்கம்,இளங்குமரன், ராம் சிங் ஜான்சன், நாராயணசாமி, காமராஜ், காசிநாதன், குணசேகரன், அரிச்சந்திரன்,,டிசி சங்கர்,, ஏசி அம்பிகாபதி, நீதியரசர் தபோல்கர்,,பி ஆர் கே மேனன், ஜஸ்டிஸ் மித்ரா, சந்துரு, ஆகியோர்களும் எஸ்பி குத்தாலிங்கம்…

நாவலில் கீழ்க்கண்ட பாத்திரங்கள் பெயர்களோடு குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன். இதில் வழக்கறிஞர்களும் அடங்கு வர்.
வழக்கறிஞர்கள் சேரன், சோழன்,பாண்டியன்,, விஜயேந்திரன், கினிலியோ இமானுவேல், புகழேந்தி,ராகவேந்திரன், ராஜன்,ரவி,முத்துக்குமார், மோகன கிருஷ்ணன்,ஜெயக்குமார், அமர்நாத்,கேசவன், ராம சிவசங்கரன்,வடிவாம்பாள், செங்கொடி, கருப்பன்,,கயல்விழி, அங்கையர் கன்னி, பொற்கொடி, ராஜ்குமார், பார்த்தசாரதி, கோகுல்ராம்,உதயகுமார், பத்திரிக்கையாளர் பரமசிவம்,,கமிஷனர் ராமசுப்பிரமணியம்,,ராதாகிருஷ்ணன்,
கட்டபொம்மன் ஜாக்சன், வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ், என்பதோடு கீழ்க்கண்ட கதாபாத்திரங்களும் நாவலின் சிறப்பு எனலாம்….
கல்யாணி,ராமர் பிள்ளை, ஜானகி, நாராயணி,இந்திராணி, மாரிமுத்து,, கோவிந்தன், நடேசன்,நாராயணசாமி, சுப்பிரமணியன், ராஜவேலு, பகத்சிங்,பாலபாரதி எம்எல்ஏ,ராமதுரை, கோதண்டபாணி, ரத்தினசாமி, சக்கரவர்த்தி, அருளானந்தம், குமாரசாமி,கோபாலு,சத்தியவேல் முருகனார்,சிதம்பரம்,ஆறுமுகசாமி…
நாவலின் பாத்திரங்களாக இவர்கள்…!

நாவல் 23 அத்தியாயங்களோடு 183 பக்கத்தில் முடிகிறது. 23 வது அத்தியாயமே 24 வது அத்தியாயத்திலுமாக இரு முறை அச்சிடப்பட்டுள்ளது.
நீதி அரசர் மா மாணிக்கம் நாவலை படிக்கும் போது எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்ட வகுப்பில் டாக்டர் மு.வ.எழுதிய “பாவை “”புதினத்தின் டாக்டர் மு. வ வின் நடை போல் சிகரம் செந்தில்நாதன் நடையும் இந்த நாவலின் சிறப்பாக வந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.. மேலும் தன் சொந்த அனுபவங்களின் மனதில் பதித்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான சம்பவங்களை நாவலாக்கி தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் இன்னும் தர வேண்டும் . நாவலாசிரியர் சிகரம் ச..செந்தில்நாதன்…! தொழில் சார்ந்து எழுதிய நாவல் பாராட்டத்தக்கது.. சமூகத்தின் எதிர்கால தலைமுறைகளுக்கு உதவிடும் இந்நாவல்.

-ஆரிசன்

நூலின் தகவல்கள்  : 

நூல்: நீதியரசர் மா. மாணிக்கம்
ஆசிரியர்: சிகரம் ச. செந்தில்நாதன்
பதிப்பு: சிகரம்
பக்கங்கள்:192
விலை:ரூ 150/-
தொடர்புக்கு:9444082180

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *