நெகிழனின் "பூஜ்ய விலாசம்" கவிதைகள் தொகுப்பு புத்தகம் | Negizhan's Poojya Vilasam Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

நெகிழனின் “பூஜ்ய விலாசம்” கவிதைகள் தொகுப்பு  – நூல் அறிமுகம்

“பூஜ்ய விலாசம்” கவிதைகள் தொகுப்பு  – நூல் அறிமுகம்

வாழ்வின் எல்லா ஆட்டங்களிலும் அவுட் ஆனவனின் நிசப்தக் குரல்

பாவம் செய்பவர்களெல்லாம்
அடுத்த ஜென்மத்தில்
காகமாகவோ பன்றியாகவோதான்
பிறப்பார்கள் என்றான்
அன்றிலிருந்துதான்
அடுக்கடுக்காக பாவங்களை
செய்யத் தொடங்கினேன்
அடுத்த ஜென்மத்தில்
நிச்சயம் நான்
காகமாகவோ பன்றியாகவோ பிறப்பேன்
மிகச் சுதந்திரமாக
சிறகடித்துப் பறப்பேன்
துள்ளிக் குதித்து ஓடுவேன்
இஷ்டம்போல இருப்பேன்
அங்கே
என்னைக் கேட்க
என்னைத் தீட்டென்க
எந்த மயிரானும் இருக்கமாட்டான்.’ (நன்றி: தினவு அரையாண்டிதழ் – 6)

தினவு இதழில் வாசித்த நெகிழனின் கவிதைகளில் கண்டுணர்ந்த அங்கதமும்> வாழ்வு மீதான தன் விமர்சனத்தையே கழிவிரக்கமும் சுய எள்ளலும் கொண்டதான மொழியில் முன்வைக்கும் அவரது கவிமொழியும் ஈர்த்திடவே> கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேடியபோது கிட்டியதே மணல்வீடு வெளியீடான நெகிழனின் ‘பூஜ்ய விலாசம்’ என்ற இக்கவிதைத் தொகுப்பு.

நெகிழனின் முதல் தொகுப்பான ‘பூஜ்ய விலாசம்’ 2020-ல் வெளிவந்துள்ளது. தொகுப்பின் தொடக்கத்திலேயே தனது வாழ்க்கைப்பாடு குறித்தும் அதைக் கடக்க முற்படும் தன்முயற்சியையும் சுட்டும் வகையில் தன் நிலையை அறிவித்து விடுகிறார்…

‘என்னைப் படுக்க வைத்து
மார்பின் மேல்
ஒன்றன் மீது ஒன்றாய்
சப்பட்டைக்கற்களை அடுக்குங்கள்
தேர்ந்த கரகாட்டக்காரனின் லாவகத்தோடு
கடைசி வரை
சரிந்து விடாமல் வாழ்ந்து காட்டுவேன்…’

பச்சைக்கிளியை வீட்டுக்குள் சிறைபட்டுக் கிடக்கும் இளம்பெண்ணுக்கும்> உணவு கிடைக்காத நிலையை – அரிசியை ஈசல்களாகவும்> சாலைகளில் அகால மரணங்களுக்கு குங்குமம் தடவி சிதறடிக்கப்படும் திருஷ்டி வெள்ளைப் பூசணிகளையும்> சுற்றத்தாருக்கு நம் நிலை மகிழ்ச்சியாய் தெரிவதை – வாசலில் கட்டப்பட்டிருக்கும் நாயாகவும்> குடும்ப உறுப்பினர்களை எரியும் தீக்குச்சிகளாகவும்> இப்படிப் பெரும்பாலான இவரது தொடக்கக் கவிதைகளில் படிமமும் – உருவகமும் தவிர்க்க முடியாமல் இடம் பிடித்துக் கொண்டுள்ளன.

பின்வரும் கவிதையில் – சூழலில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் பல்வேறு புறச்சூழல் காரணமாகவும் கிணற்று நீரின் அளவு குறைவது – நிலத்தடி நீர் உள்ளிட்ட வாழ்வின் ஒட்டுமொத்த வளம் குறைதலையும் – அதனால் வாழ்விழந்த மனிதர்களையும் – அவர்கள் மாண்டு போகவும் தற்கொலை செய்து கொள்பவர்களையும் கிணற்றில் கல்லைக்கட்டிக் குதிப்பவராகவும் – அவர்களே ஊற்றாய் மாறுவதாகவும் – கூறுவதில் படிமம்> உருவகம் போன்றவற்றின் வினையாடும் விதம் காத்திரமாய் துலங்குகிறது.

ஊற்று

எங்கள் ஊரில்
ஒரு புகழ்பெற்றக் கிணறிருக்கிறது
நீர் கீழிறங்கும்போதெல்லாம்
ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார்
நீர் சற்று மேலெழும்
ஒவ்வொரு மாதமும் இப்படித்தான்
போனமாதம்
ரொம்பவும் கீழே போய்விட
ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது
ஒவ்வொருமுறையும் நீருக்குள் போகிறவர்கள்
அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள்
அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்
ஊற்றாய் மாறுகிறார்கள்
பின் மெல்ல மேலெழும்பி
நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.

அதே போல்> வாழ்வு எத்தனை குரூரமாக நம்மீது வறுமையின்வழி வன்முறையை ஏவி நம்மை கையறு நிலைக்குக் கொண்டு சென்றாலும்> அதிலிருந்தே தமக்கான பற்றுக்கோலை எப்படியாகிலும் எடுத்துக்கொண்டு முன்னகரும் நூதனத்தையும் வெளிப்படுத்துகிறார்.

உண்

முதலில் தொடக்கி வைத்தது தவழும் மகன்தான்
அவன்தான் முதலில் சுவரை நக்கினான்
பின்னாளில் மகளும் சேர்ந்துகொண்டாள்
ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத மனைவி
காரைகளைப் பெயர்த்து வாயில் அதக்கிக்கொண்டு
சிரிப்போடு கடந்தாள்
பிறகவள்
முறுக்கு போல ஊறலிட்டு
சத்தமின்றி மௌ;ளவும் பழகிக்கொண்டாள்
எல்லோரும் தூங்கிய இரவில்
சத்தமின்றி எழுந்த நான்
ஒரு முழுச் செங்கல்லையே உருவி
ஈயக்குண்டானில் வேகவைத்தேன்.

வசிக்கும் வீட்டுக்கூரையின் விரிசலையும் பிளவையும் ‘தகதகக்கும் பொன்னிற யோனி’யாக்கும் கவி ‘அதன்பின் ஓரிரவில் பீறிட்ட மதனநீரில்’ தரை வழுக்கக் குடும்பமே சறுக்கல் பழகி> எல்லாம் திருவிழாவில் வழுக்குமரம் ஏறுவதற்கான பயிற்சி எனக் குழந்தைகளையும் நம்ப வைக்கும் சாமர்த்தியம் கொண்ட குடும்பத் தலைவனைத் தொடர்ந்து அங்கதத்துடன் பாடியபடி இருக்கிறார் கவிஞர்.

மழை பார்த்தல்

அடித்துப் பெய்தது மழை
நானும் மனைவியும் ஆளுக்கொரு பாத்திரத்தை
ஒழுகுமிடத்தில் வைத்தோம்
மகன் எழுந்து நாய் பொம்மையை திண்ணையில் வைத்தான்
விடிய விடிய தூக்கத்தை
சதுர சதுரமாய் கிழித்து மடக்கி
கப்பல் செய்து மழைநீரில் விட்டோம்
சலிப்பின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது நாய்.

சுயபகடி இல்லாத எந்தவொரு மனிதனும் அடித்துத் துவைக்கும் வாழ்வின் சிடுக்குகளிலிருந்து கிஞ்சித்தும் வெளியேற முடியாது என்றுணர்ந்தே தனக்கு வாய்த்தது குறித்து ‘வெள்ளந்தி’யாய் கூறுகிறார்…

வாய்த்தது

ஒரு காகம் கரையுமோசை
சுற்றும் தேடினேன்
எங்குமில்லையது
கேட்டது கேட்டது
மீண்டும் மீண்டும்
அது சரி
எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் உண்டென்பார்கள்
எனக்கு வாய்த்தது
ஒரு காகம் போல.

காமத்தையும் கலவியையும் பசியைப் போன்றதொரு அடிப்படை உணர்வாய் உணர்ந்திருக்கும் நெகிழன் அதன் எல்லா சாத்தியங்களையும் தன் கவிமொழியில் முயற்சித்து விடுகிறார். ‘உதயம்’> ‘பச்சை வாழை’> ‘கால் நூற்றாண்டு நண்பர்கள்’> ‘அமாவாசையின் கண்கள்’> ‘சுருதி’ என்று பல கவிதைகளில் உலகின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் அல்லது இல்லாது போன ஒருத்தியைத் தனது கற்பனையில் துவம்சம் செய்யத் தொடங்குகிறார் – சுற்றிலும் மனைவி> பிள்ளைகள்> அம்மா எல்லோரும் உறங்கியிருக்க – ‘பகீர்’களுடனே..! வழக்கம் போல ஆண்கள் எழுதும் காமம்> புணர்ச்சி குறித்த கவிதைகளில் (ரமேஷ்பிரேதன் போன்ற சிலரைத் தவிர்த்து) பெண்ணுடல் ஒரு சம்போகக் கருவியாக வீழ்ந்திருக்கும் விபத்தே இத்தொகுப்பிலும் நேர்ந்துள்ளது.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் பொதுத்தன்மை குறித்தும் அடிநாதம் குறித்தும் ஓர்மை கொள்கையில்… கவலைகளை டேக்சாவைப் போல மிதித்து நசுக்கி எடைக்குப் போட்டு விட்டு> அதில் கிடைக்கும் பேரீச்சைகளின் ருசியில்> தன்னுடன் இருந்த பல பொம்மைகள் பலருடனும் சென்றுவிட்ட போதிலும்> வெறிச்சோடிக் கிடக்கும் சாலையில் வெயிலில் நிறமிழந்து யாருக்கோ காத்துக் கிடக்கும் பிங்க் நிற முட்டாள் கரடி பொம்மையாகவே வாழ்ந்து வரும் விட்டேத்தி நிலையும் வறண்ட நம்பிக்கையுமே தொனிக்கிறது.

இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையில் கிடைக்கும் நல்லி எலும்பு எனும் நற்பெயர் ஒன்றுக்காகத்தானே புதிய ஆட்களைப் பார்த்தும் பழைய முகங்களைப் பார்த்தும் யாருமற்ற வெளியைப் பார்த்தும் ஒரு வளர்ப்பு நாய் குரைப்பதும் வாலை ஆட்டுவதும் – எல்லாப் பாடுகளும் வாழ்வதற்குத்தானே என்கிறார் கவிஞர்.

இத்தொகுப்பில் நெகிழனிடம் தென்படும் மிக முக்கியமானதும் கவித்துவம் பூரணமாய் வெளிப்படும் கணங்களைக் கொண்டிருப்பது அவரது ‘சர்ரியலிச’ பாணி கவிதைகளே..!

‘நம்பிக்கையின் எலும்புகள்
முறியும் அகாலத்தில்
உச்சுக் கொட்டுகிறது பல்லி
கனவுகளின் ஒளிநாடா
பற்றியெரியும் இரவுகளில்
தன் பூட்ஸ் கால்கள்
அழுந்தப் பதிய
வீடெங்கும் நடைபயில்கிறது
சுவர்கடிகாரம்’

இக்கவிதையை வாசிக்கும்போதே எனக்கு சால்வடார் டாலியின் ‘The Persistence of Memory’ என்ற தலைப்பிலான ‘உருகும் காலம்’ அல்லது ‘உருகும் கடிகாரங்கள்’ என்ற சர்ரியலிச ஓவியம் நினைவுக்கு வந்து> பூட்டிய வீட்டில் இரவின் அகாலத்தில் கனத்த பூட்சுகள் அணிந்த சுவர்க்கடிகாரம் குறுக்கும் மறுக்குமாக நடைபயிலும் அந்தக் காட்சியையும் மனக்கண்ணில் சித்திரமாக்கியது. இது போன்ற கணங்களிலேதான் கவிஞனின் இந்தக் கவிதைச் செயல்பாடு முழுமையடைகிறது.

சிறப்பானதொரு முழுத்தொகுப்பு என வகைப்படுத்த முடியாதெனினும்> தொகுப்பில் சிறப்பான கவிதைகள் நிச்சயமாக உள்ளன. பிற்பாடு வெளியான தொகுப்புகளையும் வாசிக்குங்கால்> கவிஞரின் பரிணாமம் எத்தகையதாக வளர்ந்துள்ளது என அவதானிக்க இயலும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“பூஜ்ய விலாசம்” கவிதைகள் தொகுப்பு 
ஆசிரியர்:நெகிழன்
வெளியீடு:
மணல்வீடு வெளியீடு –
வலைதளம்: www.manalveedu.org –
மின்னஞ்சல்: manalveedu@gmail.com –
தொடர்புக்கு: 98946 05371
விலை:₹.80
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *