உங்களிடம் ஷேக்ஸ்பியர் புத்தகம் இருக்குமா சார்?, ஜெயகாந்தன்?
“உங்களிடம் ஷேக்ஸ்பியர் புத்தகம் இருக்குமா சார்?, ஜெயகாந்தன் புத்தகம் இருந்தாலும் பரவாயில்லை… “
இந்தக் கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. அந்த அம்மையார் பேசும்போதும் அவருடைய முகத்தையும், புருவம் தூக்கி கண்கள் விரியும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.
அந்தத் தாயாரின் வயிற்றில் நான் பிறந்திருந்தால் அல்லது அவர் எனக்கு அம்மாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு கணம் இந்த எண்ணம் என்னுள் வந்து செல்வதற்குக் காரணமாக இருந்தவர் நான் வேலை பார்க்கும் கல்லூரியில் ஆயம்மா வேலை செய்யும் தேவகி அம்மாதான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு “வானம் வரையாத ஞான மின்னல்கள்” என்னும் கவிதைத் தொகுப்பைப் பேராசிரியர் நண்பர் சந்திரசேகர் அவர்கள் என்னிடம் கையளித்தார். அந்த நூலின் ஆசிரியர் கவியரசன். அவருடைய நூலுக்கு நானும், நண்பர் சந்திரசேகரும் கருத்துரையும், அணிந்துரையும் எழுதி இருந்தோம். அதனால் நண்பரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அவருடைய தேர்வு கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வந்தேன்.
எதிரே தேவகி அம்மா. என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ”என்ன புத்தகம் சார் அது?” புத்தகத்தைக் காண்பித்தேன். புத்தகத்தின் அட்டையின் பின்பக்கத்தில் உள்ள எங்கள் இருவருடைய நிழற்படமும் சிறிய அளவிலான கருத்தும் இருப்பதையும் பார்த்துவிட்டு ஒரே நிமிடத்தில் அதைப் படித்து விட்டு முகம் மலர்ந்து பாராட்டினார்.
அந்த அம்மையார் சொன்ன வார்த்தை “இது ரொம்ப நல்லா இருக்கு சார்” அந்த வார்த்தையின் கூர்மையை உணர்ந்து, ”வேண்டுமென்றால் படித்துட்டு கொடுங்கள்” என்று சொன்னவுடன், வேண்டாம் இருக்கட்டும் சொல்வார்கள் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் தேவகி அம்மா,
”படிச்சிட்டு நாளைக்குத் தரட்டுமா சார்” என்றார்.
உண்மையில் நான் பூரிப்படைந்தேன்.
அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்த பின்பு, இரண்டு நாட்களாக அந்தத் தாயின் சிந்தனை அவ்வப்போது எண்ணில் ஊறிக்கொண்டே இருந்தன. புத்தகத்தைக் கொடுத்த மறுநாள் அந்த அம்மாவே நான் முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி வரும்போது,
“சார் இன்னும் அந்தப் புத்தகத்தை முடிக்கவில்லை நாளைக்குத் தந்துவிடுகிறேன்” என்றார்.
”சரிம்மா நீங்க எப்பொழுது முடிக்கிறிங்களோ அப்பொழுது கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டுச் சென்றாலும், தேவகி அம்மாவைப் பற்றிய எண்ணம் என்னுள் துளிர்விடத் தொடங்கியது. அவரிடம் நிறையப் பேச வேண்டும், அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கத் தொடங்கியது. அந்த தாயாரின் நடவடிக்கையும், கண்ணியமும் பற்றி நண்பர்களுடன் சிலாகித்துச் சொல்ல ஆரம்பித்தேன் அவர்களும் கேட்டும், கேட்காமல் அடுத்த நிகழ்வுகளுக்குத் தாவிச் சென்று விடுவோம். Staff appraisal form ready பண்ணனும், எக்ஸாம் டூட்டி இருக்கு, இன்னும் சம்பளம் பத்தல அதுக்கு வேற ஏதாவது PART TIME வேல பார்த்தாதான் ஏதாவது பண்ணமுடியும்.
சமயத்தில் அரசியல்…
பொதுவுடைமையைப் பற்றிச் சொல்வதற்குக் குறியீடாக ஒரு நிகழ்வைச் சொல்லுவது வழக்கம். தன்னைப் பார்க்க வரும் நண்பர்களுக்குக் காரல் மார்க்ஸ் அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்பார். அதைப் பெரியார் அனைவருக்கும் சமமாகக் கொடுங்கள் என்பார். அம்பேத்கர் அனைவருக்கும் ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள் என்று சொல்வதாகக் கற்பனை கலந்த கதையைச் சொல்லுவதெல்லாம் பேசி செல்வது வழக்கம். ஆயினும் தேவகி அம்மாவைப் பற்றிய எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்.
உண்மையில் அந்த அம்மாவிற்குப் படிக்க நேரம் இருக்குமா?. காரணம் கல்லூரியில் நாங்கள் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார். வகுப்பறையைச் சுத்தம் செய்வது, மாணவர்களின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது, இப்படி ஏதாவது ஒரு வேலை அவருக்கும், மற்ற ஆயாம்மாக்களுக்கும் இருந்து கொண்டே இருக்கும். சிறுநீர் கழிப்பதற்காக சமயத்தில் நண்பர்களுடன் கழிவறைக்குச் செல்லும் பொழுது உள்ளே வந்த அம்மா சுத்தம் செய்து கொண்டிருப்பார். எங்களுடைய பேச்சு சத்தம் கேட்டால் உடனே வெளியே வந்து நீங்கப் போங்க சார் என்று வெளியே வந்துவிடுவார். இதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தும் அந்த கழிவறைக்குள் நாங்கள் உள்ளே செல்லும் பொழுது அருவருப்புடன் தான் சென்று வருவோம். அந்த அளவிற்கு நாற்றமெடுக்கும். சிலர் மாஸ்க் போட்டுக்கொண்டு இன்னும் சிலர் மூக்கில் தன்னுடைய கைக்குட்டையைப் பொத்திக்கொண்டோ ஒன்றிரண்டு நிமிடங்களில் வெளியில் வந்து நாற்றம் பொறுக்காமல் காரி காரி உமிழ்வதுண்டு. ஆனாலும் தேவகி அம்மா எந்த முகச்சுளிப்பு இல்லாமல் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் பினாயுளும், ஆசிட், பாத்ரூம் கழுவும் தென்னம் தொடப்பம், மாபு போடும் குச்சி… சுத்தம் செய்யும் மற்ற பொருட்களுடனும் உள்ளே சென்று அத்துணை அழகாக சுத்தம் செய்து விட்டு வருவார். பெரும்பாலும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்த பின்புதான் ஆயாம்மாக்கள் சாப்பிடுவார்கள். உண்மையில் எவ்வளவு பெரிய சகிப்புத்தன்மை வேண்டும் அவர்களுக்கு.
தேவகி அம்மாவைக் கடந்து செல்லும் பொழுது ஏனோ பேசத் தோன்றும். பேசுவதற்கு எவ்வளவோ இருந்தாலும் ஆயம்மா சாப்பிட்டீங்களா? நான் சேமித்து வைத்திருந்த அந்த ஒத்த வார்த்தை மட்டும் கேட்பேன். அந்த வார்த்தையைத் தேவதூதன் தங்கள் பாவங்களுக்காக இறக்கப்பட்டது போலச் சாப்பிட்டோம் சார், இன்னும் இல்ல சார், சாப்பிட போறோம் சார்…
நீங்க சாப்டிங்களா சார் என்று பதில் கேள்வி அதே அனுசரணையுடன் வந்து நிற்பதை நான் ரசித்து இருக்கிறேன்.
இப்படிதான் தேவகி அம்மா உள்ளிட்ட ஆன்மாக்களைக் கடந்து செல்வதுண்டு. அதுபோன்று ஒரு நாளில்தான் நண்பரிடம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு வரும் பொழுது என்னிடம் தேவைக்கு அம்மா கேட்டார் என்ன புத்தகம் சார் அது?.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அம்மாவைப் பார்ப்பதற்காக அவர் இருக்கும் இடத்திற்கு சென்றேன் அவரைப் பார்க்க வந்ததை அறிந்து அந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து நல்லா இருக்கு சார் தேங்க்ஸ் என்றார்கள். அந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மட்டும் வந்துவிட வேண்டுமென்று மனமில்லை. குறைந்தபட்சம் அந்த அம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகபட்சம் அதிகபட்சம் அவரிடம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால் கிடைத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் மட்டும் தான் பேசி இருப்பேன். அதன்பிறகு அந்த தாயார் மீது பெரிய மரியாதையும், அன்பும் நிரம்பி வழிய தொடங்கியது.
நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? எப்படி உங்களுக்குப் படிக்கும் ஆர்வம் வந்தது என்ற இரண்டு கேள்விகள் அவரிடம் கேட்டிருந்தேன்.அதற்கு அந்த அம்மா…
சார் நான் பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன் நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன் சார் எங்க வீட்டுக்காரரு PTC TRAINSPORTல் வேலை பார்த்தார். எனக்கும் அவருக்கும் கல்யாணமான கொஞ்ச நாளிலேயே உடம்பு முடியாம போச்சு. அதனால VRS வாங்கிட்டு வீட்டிலேயே இருந்தாரு. ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியல அதனால NEW CENTURY BOOK HOUSEல வேலைக்குப் போனாரு. அங்கிருந்து சில புத்தகங்களைக் கொண்டுவந்து தருவாரு. அப்போ நிறைய படிப்பேன் சார்.
அதேபோல நானு நிறைய கம்பெனிகளில் வேலை பார்த்து இருக்கேன். ஜெரோ கார்மெண்ட்ஸ் கம்பெனி CUTTING PIECE நான் நல்ல தைப்பேன். நான் செய்ற வேலைய பார்த்துட்டு அந்த கம்பெனி வெளிநாட்டில இருக்கிற அவங்க கம்பெனிக்கு போறியான்னு கேட்டாங்க… அப்போ உடம்பு முடியாத கணவர் குழந்தை பிறந்து 3 வருஷம் தான் ஆச்சி இப்படிப்பட்ட சூழலில் என்னால போக முடியல என்று சொன்னார்கள்.
அது மட்டும் இல்ல கல்யாணம் ஆகி 5 வருஷத்திலேயே வீட்டுக்காரரு இறந்துட்டாரு. இதையெல்லாம் கோர்வையாக சொல்லும் பொழுது என் கண்கள் விரிய அவரையே ஏதோ ஒரு ஆச்சரியம் நிறைந்தைப் பார்ப்பதைப் போலவே பார்த்துக்கொண்டிருந்தேன்.
மனம் கனம் கூடியது அதே சமயத்தில் இலகுவாக மாறியது. கணவரை இழந்த பின்பு தன் ஒற்றை மகனை கரை சேர்ப்பதற்கு அந்த அம்மா எத்துணைப் பெரிய பாதையைக் கடந்து வந்திருப்பார்.
இன்றைக்கு ஓய்வெடுக்கும் வேண்டிய வயது ஆனாலும் சொந்த உழைப்பில் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாப்பிடும் எண்ணமும், லட்சியமும் எவ்வளவு பெரிய உன்னதமான செயல்.
நான் அறிய அந்த அம்மா வேலையைப் பார்த்து பயந்தது இல்லை. ஒதுங்கியது இல்லை. பதுங்கியது இல்லை. யார் எப்பொழுது கூப்பிட்டு வேலை சொன்னாலும் எந்த விதமான முகசுளிப்பும் இல்லாமல் அந்த வேலையைச் செய்து முடித்து விடுவார்.
பத்து நாட்களுக்கு முன்பு தான் தமிழ்த்துறை இலக்கிய மன்ற விழாவை நடத்தியது. அப்பொழுது கடுமையான பணி நெருக்கடி. ஒரே நேரத்தில் பேச்சு போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவிய போட்டி என ஒவ்வொரு அறைகளிலும் ஒவ்வொரு போட்டிகள் நடத்துவது என தீர்மானித்திருந்தோம். அதனால் போதிய அளவிற்கு எங்களுக்கு இடவசதி இல்லை. ஓவியப் போட்டி நடத்துவதற்கு தரைதளத்தில் கருத்தரங்க அறைக்குப் பக்கத்தில் இரண்டு அறைகள் இருந்தன. அதைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தபோது, அந்த அறைகள் அசுத்தமாக இருந்தன. அப்பொழுது தேவகி அம்மையார் உட்பட மூன்று ஆயமகள் வந்து சுத்தம் செய்தார்கள்.
குறித்த நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விட்டார்கள். மிகவும் குறைவான நேரத்திலேயே கடுமையான பணிச்சுமை களுக்கு மத்தியில் நேர்த்தியாக அந்த அறையை சுத்தம் செய்து ஒப்படைக்கும் போது அவர்கள் செய்த இந்த வேலைக்காகப் பெரிய நன்றி மா என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இது. அது எங்க வேலை சார். அதுக்கு எதுக்கு சார் நன்றி சொல்றீங்க என்றார். அதற்கு நான்… இல்லம்மா ஏற்கனவே உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்குது. கூடவும் இந்த வேலை கொஞ்சம் சுமைதானம்மா என்றவுடன். அப்படின்னு பார்த்தா நாம எங்க வேலைக்கு போக முடியாது. வீட்லதான் இருக்குனும். வேலைக்கு வந்துட்டா இருக்கிற வேலையை செய்துதான் ஆகணும். இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு நானும் என்னுடைய வேலையை எண்ணிப்பார்த்தேன்.
இதுபோன்ற கடுமையான பணி சூழலுக்கு மத்தியில் தான் அந்த அம்மா எங்கள் கல்லூரியில் வேலை பார்க்கிறார். இதற்கிடையில் தான் அந்த அம்மா வீட்டுக்குச் சென்றாலும் தனி மனுஷியாக தன்னுடைய வேலைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் தான் அந்த அம்மா புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
உன்னிடம் நிறைய பணம் இருந்தால் அள்ளிக்கொடு. உன்னிடம் நிறைய படிப்பு இருந்தால் சொல்லிக்கொடு ஒரு பழமொழி ஒன்று உண்டு. இந்த பண்பு யாரிடம் இருக்கிறது தெரியவில்லை.
சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை நிறைய படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. நேர்காணல் ஒன்றில் கவிஞர் இன்குலாப் அவர்கள் கவிதையைப் பொறுத்தவரையில் இன்றும் நான் மாணவன்தான் என்பார். இந்த வார்த்தையைச் சொல்லும் பொழுது நாடறிந்த நல்ல கவிஞர். தமிழ்நாட்டைத் தாண்டி உலக நாடுகளில் உள்ள படைப்பாளிகளிடம் அவருடைய பெயர் நன்கு பரிச்சயமானது. ஆனாலும் என்று தன்னை ஒரு
மாணவனாக நினைத்துப் படித்தால்தான் நாளைக்குப் பேராசிரியராக இருக்க முடியும். இல்லை என்றால் பேருக்கு கூட ஆசிரியராக இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
படிக்கும் முறையை குறித்து சர்வே ஒன்று இப்படி சொல்லுகிறது. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு 60 சதவீத மாணவர்கள் படிப்பதே இல்லை. அவர்கள் படிப்பை விட்டு விலகி நிற்கிறார்கள். அதே போன்று ஆசிரியர்களிலும் ஐந்தில் ஒருவர் தான் அன்றாடம் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார் அல்லது புதுப்புது தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர் வேலைக்கு வருவதற்காக மட்டுமே தன்னுடைய பாடத்திட்டத்தை மட்டுமே விரும்பி படிக்கிறார்கள். மற்றவற்றை அறிந்துகொள்வதில் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது.
வாசிப்பு என்பது உடற்பயிற்சி போல… அன்றாடம் வாசித்தால் மட்டும் தான் புதிய புதிய சிந்தனைகள் உருவாகும் அறிவு தெளிவடையும், சிந்தனை மேலோங்கும்.
வள்ளுவப் பெருந்தகையும் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்கின்றார்.
தேவகி அம்மாவைப்பற்றி கணிதத் துறை பேராசிரியர் நண்பர் முனைவர் ஸ்டாலின் அவர்களிடம் ஒருமுறை சிலாகித்துப் பேசி இருந்தேன்.
அவர் இப்படியாகச் சொல்லியிருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன் யாருக்காக எழுதினாரோ?. அந்த எழுத்துக்கள் அவர்களிடம் முறையாகச் சென்று சேர்ந்திருக்கிறது என்றார்.
உண்மைதானோ…
பேரா.எ.பாவலன்
drpavalan@gmail.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நதி சுனையில் ஆரம்பித்த சமுத்திரத்தில் முடியும். தேவகி அம்மா சமுத்திரத்தைத் தாண்டி செல்லும் நதி. இந்த உலகம் சுயநலத்தால் இயங்கும். சாமானியர்களில் வியப்படையச் செய்பவர்களை அடையாளம் காட்டுவதில் சுயநலக்காரர்கள் முனிவரே பாவலன் ஐயா அவர்கள்.
மு தனஞ்செழியன்.