பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும், உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்! Negligence of international governments and the decline of global biodiversity - https://bookday.in/

பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும், உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்!

பன்னாட்டு அரசுகளின் அலட்சியமும்,
உலக உயிரின வேற்றுமை வீழ்ச்சியும்!

முனைவர். பா. ராம் மனோகர்

உலகின் ஆதாரம் இயற்கை!எனினும் ஐ. நா. சபை, அபாய சங்கினை எத்தனை முறை ஊதினாலும், உலக நாடுகள் ஒவ்வொரு பன்னாட்டு மாநாட்டிலும் உறுதி மொழி ஏற்று இயற்கை காப்பாற்ற செயல்பாடுகளை தொடர்ந்து அவை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றன. ஆனால், மாறாக குறிப்பிட்ட இலக்கு அடைவதற்கு ஏற்ற முயற்சிகளை தவிர்த்து செல்வது வழக்கமாகிவிட்டது என்பது மிகவும் வருந்ததக்க தகவல் ஆகும். ஆம்! பல வளர்ச்சியடைந்த நாடுகளில், இந்த மாநாடு ஒரு சடங்கு போல், எண்ணி அவற்றின் நிலை அலட்சியமாக இருப்பது போலவே தோன்றுகிறது. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் தம், பொருளாதார வளர்ச்சிக்கு இடையில், இயற்கை காப்பாற்ற போராடி வந்தாலும், நிதி பற்றாக்குறை காரணமாகவும், சற்று கவனம் திசை மாறி வருகிறது என்பதே உண்மை ஆகும்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22,கனடா நாட்டில், COP -15 என்ற உலக சுற்றுசூழல் பாதுகாப்பு, மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் முடிவு செய்தபடி, 2030 ஆம் ஆண்டுக்குள், 30%இயற்கை பகுதிகளை உலகெங்கும், உள்ள அனைத்து நாடுகளில் மீட்டு எடுக்க வேண்டும், அதற்குரிய விருப்பம், குறிக்கோள்கள் கொண்டு இருத்தல், நாடுகள், அரசுகளுக்கு இடையில், ஒருங்கிணைப்பு முயற்சி, உயிரின வேற்றுமை மீட்க உறுதியான தலைமை, வளம், மற்றும் ஒத்துழைப்பு, தேவையாகும். 2030 ஆம் ஆண்டுக்குள், உலக நாடுகளில் உள்ள முக்கிய உயிரின வேற்றுமை நிறைந்த இயற்கை சூழல் பகுதிகளை 30%மீட்டு எடுக்க வேண்டும். உணவு வீணாதலை குறைத்தல், அதிக நுகர்வினையும் தடுத்தல், உயிரின வேற்றுமை பகுதியில் ஊறு விளைவிக்கும் செயல்பாடுகள், திட்டங்களுக்கும், மானியம் நிறுத்தம் செய்தல்,பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 200பில்லியன் தொகை சேகரித்தல், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உயிரின வேற்றுமை பாதுகாக்க முன் வருதல் போன்ற நோக்கங்கள் நிறைவேற இந்த மாநாடு உதவும் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

COP -15 என்ற பன்னாட்டு உயிரின வேற்றுமை மாநாடு, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 7-19 நாட்களில் கனடா நாட்டில் மான்ட்ரியல் நகரில் நடை பெற்றது. இந்த மாபெரும் பன்னாட்டு மாநாட்டின் முக்கிய தீர்மானமாக “குன் மிங் – மான்ட்ரியல் உலக உயிரின வேற்றுமை அமைப்புக்கான பாதுகாப்பு “திட்டம் அறிவித்து, உலக உயிரின வேற்றுமை இழப்புகள் குறைக்க குறிக்கோள்கள் வரையறுக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற தொடர்ந்து பணிகள் துவங்கியது. இயற்கை சூழல் வாழிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து, பராமரிப்பு, மீட்பு செய்தல், உயிரினங்கள் அழிநிலைக்கு செல்வதை குறைத்தல், மரபணு வேற்றுமை, உள்ளூர்
தாவர, விலங்கு சிற்றினங்கள் தகவமைப்பு மேற்கொள்ள செயல்பாடுகள், பொது மக்கள் உயிரின வேற்றுமை மூலம் அடையும் பலன்கள் அதிகரிக்க செய்தல், விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் அனைத்து வளரும் நாடுகளில், உலக உயிரின கட்டமைப்பு (GLOBAL BIODIVERSITY FRAME WORK 2022) செயல்பாடுகள் மேற்கொள்ள, நிதியுதவி, தகுதி கட்டமைப்பு பயிற்சி, தொழில் நுட்ப அறிவியல் கூட்டுறவு மூலம், நவீன தொழில் நுட்ப நுணுக்கங்கள் அறிய செய்தல்,
ஆகிய குறிக்கோள்களை நோக்கி, பணிகள் துவங்கின.

இந்நிலையில் COP -16 பன்னாட்டு சுற்றுசூழல் மாநாடு, அக்டோபர் மாதம் 21 ம் நாள் துவங்கி 01.11.24வரை (நவம்பர், 2024 ) நடைபெற உள்ளது. குறிப்பாக, தேசிய உயிரின வேற்றுமை திட்ட செயல் கண்காணிப்பு செயலி (NATIONAL BIODIVERSITY STRATEGY ACTION PLAN TRACKER) மேற்கண்ட செயலி, வளரும் நாடுகளில் உலக உயிரின கட்டமைப்பு நிலை அறிய, உலக இயற்கை, வனவிலங்கு நிதியம் (WORLD WIDE FUND FOR NATURE -WWF) உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இவற்றின் தற்போதைய நிலை, அனைத்து நாடுகளிலும், குன்மிங் -மான்ட்ரியல்உயிரின வேற்றுமை ஒப்பந்தம் -2022 க்கு பிறகு ஏற்பட்டு வரும் முன்னேற்றம், ஆகியவற்றை மீள் பார்வை ஆய்வு செய்ய COP -16 நடைபெற உள்ளது. எனினும் ஒப்பந்தத்தின் மூலம் உறுதி மேற்கொண்ட 10% நாடுகள் மட்டும்,ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளன.

196 நாடுகள் NBSAP மூலம் GBF என்ற உயிரின வேற்றுமை கட்டமைப்பு நிலையினை 2030 ஆம் ஆண்டுக்குள் மீட்க COP -15 ன் பொழுது திட்டமிட்டு இருந்து தீர்மானம் நிறைவேற்றின. சமீபத்தில் 20 நாடுகள் மட்டும் NBSAP திட்டத்தினை மீண்டும் மாற்றம் செய்து வரும் நிலையில் 9 நாடுகள் (ஐரோப்பிய யூனியன் உள்பட)
மட்டும், சரியான முறையில் உடனடி உயிரின வேற்றுமை (ஜூன் 2024வரை) பாதுகாப்பு செயல் திட்டம் பற்றி அறிக்கை தயாரித்துள்ளது. 186 நாடுகள் (இந்தியா உள்பட) இது வரை அறிக்கைகள் தாக்கல் செய்யவில்லை. பல நாடுகள், இயற்கை பாதுகாப்பு பற்றி தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க உறுதியானமுன்னுரிமை செயல்கள் அற்ற நிலை கவலை, வருத்தம் அளிக்கிறது. 33%நாடுகளில் மட்டுமே தேசிய அளவில் குறிக்கோள்கள் கொண்டு பல்வேறு பணிகள் தொடர்கின்றன.

WWF -US, உலக இயற்கை வன விலங்கு நிதியத்தின் முது துணை தலைவர் திரு. கின்னேட் ஹெனம்லே என்பவர் “சரியான, குறிக்கோள்கள் கொண்டுஅரசு களின் செயல் திட்டங்கள் உள்ள அறிக்கைகள் தான் எங்களுக்கு தேவை “என கூறுகிறார்.மேலும் COP -15க்கு பிறகு பல நாடுகளில் போதிய முன்னேற்றம் “உயிரின வேற்றுமை பாதுகாப்பு “ பற்றி இல்லை. சரியான அளவீடுகொண்ட குறிக்கோள்கள், சமர்ப்பித்த திட்டங்களில் தரம் இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது என WWF தெரிவிக்கிறது.தெளிவான இலக்குகள்,, மற்றும் திட்டங்கள் தேவையான நிதி ஆதாரம் பற்றியும், குறிப்பிடாத நிலை, காணுகையில் உயிரின வேற்றுமை பாதுகாப்பு நோக்கம் அங்கு சீரழிகிறது.

உண்மையில் நாடுகள் இயற்கை பாதுகாப்பு செயல் பாடுகள் நிறைவேற்றுதல், சவால்கள் ஆக எதிர் கொண்டு வருகிறது என்றால் மிகையில்லை. அரசின் பல்வேறு துறைகளிலும் ஏழைகளுக்கு முன்னுரிமை மற்றும் நிதி ஒருங்கிணைப்பு முற்றிலும் இல்லை. மேலும், ஒவ்வொரு நாட்டின் சுற்றுசூழல் அமைச்சக நிர்வாகம்,சமூகத்தில், தற் காலத்தில் பல்வேறு நவீன மாற்றங்களை, தமக்குள் தாமே ஏற்படுத்தி கொள்ளும் நிலையினை எதிர் கொள்ள கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனினும் மக்கள் சமூக சேவை அமைப்புகள், உள்ளூர் மக்கள், பழங்குடியினர், தமது உள்ளூர் சுற்றுசூழல்
இயற்கை பாதுகாப்பு செயல் பாடுகள், விழிப்புணர்வு ஆகியவற்றில் நேர்மறை மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கும் நிலை திருப்தி அளிக்கிறது.

NBSAP மூலம் உலக உயிரின வேற்றுமை கட்டமைப்பு நிலையில் முன்னேற்றம் கொண்டு வர சில நாடுகள் மட்டும் பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சில மகரந்த சேர்க்கை உயிரினங்களை மீட்கவும், சீனா, முழுமையாக, உயிரின வேற்றுமை இழப்பினை தடுத்து நிறுத்த உறுதி பூண்டு செயல்படும் நிலையில் இருக்கிறது. இதன் மூலம் அனைத்து நாடுகளும் வெளிப்படையாக, பொறுப்புணர்வு கொண்டு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

“COP 16 மாநாடு சிறப்பாக, உறுதியாக நிறைவு பெற நாடுகளின் தேசிய செயல் திட்டங்கள் முழுமையாக தெளிவாக இருப்பின் , அதன் பலன் கிடைக்கும்”என்று
லின் லீ, இயக்குனர், (கொள்கை &செயல்) WWF அமைப்பு தெரிவிக்கிறார்.NBSAP செயலி வழியாக நாட்டில் உயிரின வேற்றுமை பாதுகாப்பு மட்டுமின்றி, அதன் பலன்கள் நம் அனைத்து பங்கேற்பாளர்கள், பெற பொறுப்புணர்வு, வெளிப்படைதன்மை நோக்கம் கொண்டுள்ளது. COP -16 மாநாடு மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் 30%சதவீதம் நிலம், நீர்,உயிரின சூழல் அமைப்புகள் மீட்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளன. அதற்கு தேவையான விருப்ப தொலைநோக்கு இலக்குகள், ஒருங்கிணைந்த முயற்சி, உரிய நிதி ஆதாரம் தேவை ஆகும். ஆனால் அதற்குரிய தகுதியுள்ள தலைமை, வழிகாட்டி, கூட்டுறவு எண்ணங்கள் போன்றவற்றை அனைத்து நாடுகளும் பெற வேண்டும்.

COP-16 மாநாடு, கொலம்பியா நாட்டின் காலி நகரில் “இயற்கை மூலம் அமைதி “ என்ற மைய கருத்தில் நடைபெற உள்ளது. 67,000 வெவ்வேறு உயிரின சிற்றினங்கள் கொண்டு உலக அளவில் மிக அதிக உயிரின வேற்றுமை உள்ள மூன்றாவது நாடு இந்த மாநாட்டினை நடத்த உள்ளது. எனினும் பல்வேறு நாடுகள் குறிப்பிட்ட இலக்குகள், செயல் திட்டங்கள் இல்லாமல் இந்த மாநாட்டில் பங்கேற்றால், அது எப்போதும் போல் சடங்கு போல் மாறிவிடும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம், நிலவி வரும் சூழலில், பூமியில் உயிரின வேற்றுமை பாதுகாக்க, அமைதி கொண்டு அனைத்து நாடுகளும், அடிப்படை இயற்கை ஆதாரம் பற்றிய சிந்தனை கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முயல்வது நன்று. நல்லது நடக்கும் என்று
எதிர்பார்ப்போம்.!

கட்டுரையாளர் :

முனைவர். பா. ராம் மனோகர்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *