நூல்: “நெய் பாயாசம்” (சிறுகதைகள்)
ஆசிரியர்கள்: வைக்கம் முகமது பஷீர், எஸ்.கெ. பொற்றெக்காட், மாதவிக்குட்டி தமிழில்: சுரா
பதிப்பகம்: நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் :120
விலை: ₹. 60

மலையாள சிறுகதைகள் மீதும் தனிகவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் நூலகத்தில் எடுத்து வாசித்த புத்தகமே இது. பிரபல மலையாள எழுத்தாளர்களான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கெ. பொற்றெக்காட் மற்றும் மாதவிக்குட்டி ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். மிக குறுகிய காலத்தில் 100க்கும் அதிகமான மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள சுரா அவர்களின் மொழிபெயர்ப்பில் 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள நூல்.

வைக்கம் முகமது பஷீர்:

1.நூறு ரூபாய் நோட்டு
2.தேன்மா
3.தந்தை விழுந்த போது
4.நீர்நாகம்
5.நெய்திருட்டு
6.பழைய ஒரு சிறிய காதல் கதை
7.பத்திரிக்கைச் செய்தி
8. முதல் கதை
9. படுக்கையில் சிறுநீர் கழிப்பவன்
10. ஊனக்கால் பெண்
11. பாம்பு வழிபாடு
12.யானைத் திருடன்
13.போர் முடிய வேண்டுமென்றால்

மேற்கண்ட தலைப்புகள் உடைய சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மிக மிக குறைந்த பக்கங்களில் மிக எளிய நடையில் அமைந்த சிறுகதைகளாக இவை உள்ளன. பெரும்பாலான சிறுகதைகள் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் இளமைப் பருவ வாழ்வியலுடன் தொடர்புடையவையாகவே அமைந்துள்ளன. “பாத்துமாவின் ஆடு” நாவலை விரைந்து படிக்க வேண்டுமென்ற ஆவலும் உண்டாகிறது.

குறைவான பக்கங்களாக இருப்பினும் ஒவ்வொரு சிறுகதை குறித்தும் பல பக்கங்களில் எழுதலாம் என்பதே உண்மை. நமது ஆன்மாவை சுண்டியிழுக்கும் வண்ணம் கேலி கிண்டலுடன் மிக யதார்த்தமான முறையில் அமைந்துள்ள சிறுகதைகளாகவே உள்ளன. நகைச்சுவை உணர்வுடன் பொருள் பொதிந்த வகையில் கதைக்களத்தை அமைத்த விதம் நம்மை ஈர்ப்பதாகவே உள்ளது.

எஸ்.கெ.பொற்றெக்காட்:

1. பரீதின் ஆவி
2. யமுனைக் கரையில்
3. என் பம்பாய் நண்பர்கள்

ஆகிய மூன்று சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று சிறுகதைகளில் ‘என் பம்பாய் நண்பர்கள்’ சிறுகதை மட்டுமே சற்று பெரியது. எழுத்தாளரின் நண்பர்களாக காட்சிப்படுத்தும் நபர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மைமிக்கவர்களே. நமது அன்றாட வாழ்வில் நாம் இயல்பாக சந்தித்து கண்டும் காணாமல் போகும் நபர்களை வேறொரு கோணத்தில் கவனித்து தீட்டியுள்ள சித்திரங்கள் போற்றத்தக்கவையே… ‘பரீதின் ஆவி’ எழுப்பும் வினாக்கள் சிந்தித்து நம்மை சிந்தனையில் உறைய வைக்கக் கூடியவையே… பயண அனுபவத்தின் வெளிப்பாடுகளே இச்சிறுகதைகள் எனலாம்.

மாதவிக்குட்டி:

1. நெய் பாயாசம்
2. மாட்டு சந்தை

ஆகிய இரு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் முதல் சிறுகதையாக இடம்பெற்றுள்ள “நெய் பாயாசம்” சிறுகதையை படிக்க படிக்க நெஞ்சை பிசைந்து கண்ணீர் உண்டாக்கி ஒருவித பிரமையில் மூழ்கடிக்கச் செய்துவிட்டது என்பதே உண்மை. அடுத்த சிறுகதையை படிக்க சிறிது அவகாசம் எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னரே முனைந்தேன். மாதவிக்குட்டியின் இரு சிறுகதைகளுமே காதல், அன்பு மற்றும் பாசத்தை உணர்த்தக்கூடியவையாகவே உள்ளன. மாட்டு சந்தை தலைப்பைக் கண்டு பிரமித்துப் போகும் அளவிற்கான கதைக்களம். முதிர்கன்னியின் வரன் தேடும் சூழலை மிக மிக நுட்பமாக சித்தரித்த விதம் மிக லாவகமான நுட்பமே…

ஆக மொத்தத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன 18 சிறுகதைகளும் மணிமணியானவை. மொழிபெயர்ப்பு நூல் என்று தெரியாத வகையில் மிக இயல்பான மொழிநடையில் அமைந்துள்ள நூல். ஒவ்வொரு சிறுகதை குறித்தும் சிறு கலந்துரையாடல் நிகழ்த்துவது அவசியமானதென்றே தோன்றுகிறது..

பலரசம் நிரம்பிய வழியும் வண்ணம் அமைந்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த ” நெய் பாயாசம்”

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.

பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *