யாத் வஷேம்
நேமி சந்த்ரா
கர்நாடக சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னடப் புனைகதை
தமிழில்: கே.நல்லதம்பி
எதிர் வெளியீடு
எங்கேயோ.. எப்போதோ சந்தித்த நபர்கள்..
பார்த்த ஏதோ ஒன்று, எவரோ ஒருவர் சொல்லிய செய்தி.. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் படித்த, பார்த்த கேட்ட ஏதோ ஒன்று எப்போதாவது நம்முடைய ஆழ்மனதில் ஏதாவது ஒன்றை நிகழ்த்தி அசைத்துப் பார்த்து இருக்கிறதா..? அப்படி அசைத்துப் பார்த்த அதில் நமக்குள் ஒரு பெருமிதத்தையோ.. தாழ்வு உணர்ச்சியையோ.. குற்ற உணர்ச்சியையோ அது நிகழ்த்தி விடலாம் .. நிகழ்விற்குள்ளான நம்மால் அதற்கு எதிராகவும்.. ஆதரவாகவும் ஏதேனும் செய்ய முடியுமா என்கிற ஒரு சிறு கீறல் மூளைக்குள் எழலாம்.. அதே ஒரு படைப்பாளியாக இருக்கும்போது ஆழ்மனது உள்வாங்கிய நம்மை அச்சுறுத்திய.. மகிழ்ச்சி அடையச் செய்த.. மனதை வலிக்கச் செய்த அந்த ஏதோ ஒன்று ஒரு சிறுகதையாக.. ஒரு கவிதையாக.. ஒரு புதினமாக கொண்டுவருவதற்கான முயற்சி உருவாகக்கூடிய ஒரு இடமாக.. ஆரம்பப் புள்ளி ஒன்றினை அது நமக்குள் ஏற்படுத்தி இருக்கலாம். அப்படி உந்தித் தள்ளிய.. நமக்குள்.. மெல்லிய கீரலை ஒன்றினை உருவாக்கிய அந்த விஷயங்களை வரலாற்று நிகழ்வுகளோடு.. மெய்யான உண்மைகளை.. நடந்த கொடூரங்களை உள்வாங்கி அதை புனைவாக மாற்றுவது என்பது மிகப்பெரிய ஒரு சவாலான பணியாகும். அந்த சவாலை எதிர்கொண்டு அதற்காக தன்னுடைய எட்டு ஆண்டுகால உழைப்பை செலுத்தி பல்வேறு தூர தேசங்களுக்கு சென்று இந்த புனைவுக்குத் தேவையான அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள.. முகமறியா பல நபர்களை சந்தித்து அரசியல் விஷயங்கள் பேசி..
இன்றைய அரசியல் சூழல் அன்றைய வரலாற்று உண்மைகளோடு பொருத்தி புதினம் ஒன்றினை வலிமிகுந்த அர்த்தம் பொதிந்த ஒன்றாக.. பொதுவெளிக்கு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டி.. களச் செயல்பாட்டாளர்கள்.. அரசியல் செயல்பாட்டாளர்கள் அனைவரும் உள்வாங்கி செயல்படவேண்டிய.. தேவையான ஒன்றினை..படைப்பதென்பது ஆகப்பெரிய சவால் பொருந்திய ஒன்றாகும்.. அதனைச் சரியாக.. நேர்த்தியாகச் செய்திருக்கிறார் நாவலாசிரியர் “நேமி சந்த்ரா” அவர்கள். தான் நடந்து சென்ற நாள் ஒன்றின் மாலைப் பொழுதினில் மைசூருக்கு அருகிலிருக்கும் கோரிப்பாளையம் சுடுகாட்டில் கண்ட “யூதர்களின் மயானம் இது” என்று எழுதி வைத்திருந்த ஒரு பலகையின் வழியாக மெய்யான வரலாற்றின் பின்னோக்கி நகர்ந்து தன்னுடைய “யாத் வஷேம்” நாவலில் அந்தச் சவாலை முடித்திருக்கிறார். கன்னட மொழியில் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவலை தமிழில் சரியானபடி மூல நூலில் எழுதிய அந்த உணர்வுகளில்.. உணர்ச்சிகளிலிருந்து எந்தவித சறுக்கலும் இன்றி தமிழ் மண்ணிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி அவர்கள்.
நல்லதொரு முறையில் தேவையான பொழுதினில் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள் எதிர் வெளியீடு பதிப்பகத்தார். அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.
“ஜெர்மன் ஜெர்மானியர்களுக்கு.. ஜெர்மன் ஆரியர்களுக்கு” என்ற முழக்கத்தை முன்வைத்து ஹிட்லர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாட்கள் தொடங்கி ஆரிய இனத்தை தவிர்த்து ஜெர்மனி நாட்டில் வசித்த மற்ற இனத்தை சார்ந்த பொதுமக்கள்.. அரசு ஊழியர்கள்.. பேராசிரியர்கள்.. விஞ்ஞானிகள்.. ராணுவ வீரர்கள் என அனைவரையும் வேட்டையாடத் தொடங்கினார்கள்.. 1938 ஆம் வருட நவம்பர் மாதத்தின் நாளொன்றில் இயற்பியல் விஞ்ஞானி மோசஸ் மற்றும் அவரது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என ஐவர் கொண்ட குடும்பம் ஒன்று இரவோடு இரவாக நாட்டைவிட்டு கிளம்பி வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகக் கிளம்பி, அருகில் இருக்கும் நெதர்லாந்தை சேர்கிறார்கள்.. உலகினை தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவர அதிகார வெறியோடு கிளம்பிய ஹிட்லரின் நாஜிப் படை 1945ஆம் வருடம் நெதர்லாந்தையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறார்கள்.. அங்கேயும் இனவெறி ஆட்டத்தை தொடர்கிறார்கள்.. வீதிகள் எங்கும் மாற்று இனத்தைச் சார்ந்த அனைவரும் குறிப்பறிந்து அடையாளமிட்டு கொல்லப்படுகிறார்கள்.. (நாம் வாழும் காலத்தில் குஜராத் மண்ணில் முஸ்லிம் சிறுபான்மையினர் கொளுத்தப்பட்டது போன்றும் கொலை செய்யப்பட்டது போன்று… )
அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்படுகிறது.. வீதிகள் எங்கும் பிணக் குவியல்களும் எரிந்துகொண்டு இருக்கும் மனித உடல்களுமே.. மீண்டும் மோசஸ் குடும்பம் நெதர்லாந்திலும் வாழமுடியாமல் வேறு நாடுகளை நோக்கி ஓடத் தொடங்குகிறார்கள்.. தஞ்சம் புக முற்படுகிறார்கள்.. குடும்பத்தோடு மொத்தமாக கிளம்பிச் சென்றால் நாஜிகளுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் அப்பாவும்2-வது பெண் குழந்தையும் முதலாவதாக வீட்டிலிருந்து கிளம்புகிறார்கள்.. அடுத்தபடியாக அம்மாவும் உடன் இருக்கக்கூடிய மூத்த 12 வயது பெண் குழந்தை ரெபேக்காவும் 4 வயது ஆண் குழந்தை ஐசக்கும் வீட்டைவிட்டு வெளியேற முற்படும்போது நாஜி படையால் கைது செய்யப்படுகிறார்கள்.. அம்மாவும் இரண்டு குழந்தைகளும் நாஜிப் படையால் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படுவது அப்பாவும் அவரோடு இருக்கும் 6 வயது பெண் குழந்தையும் கவனிக்க.. இதிலிருந்து தொடங்குகிறது ஹயானாவின் தேடுதல் நாவலுக்குள்..
அப்பா மோசஸ், ஆறு வயது மகள் குழந்தை ஹயானாவோடு இந்தியாவின் பெங்களூர் நகரில் தஞ்சம் அடைகிறார்கள்.. முப்பத்துமுக்கோடி தேவர்களையும் ஆயிரக்கணக்கான கடவுள்களையும் எண்ணிக்கையற்ற சிறு தெய்வங்களையும் காலம் தோறும் வெவ்வேறு மத மாச்சரியங்கள் கொண்ட அரசுகளின் கீழ் பல்வேறு சாதி மதங்களாக பிரிந்து கிடந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இந்தியாவிற்குள் அவர்களின் எதிர்கால வாழ்வு தொடங்குகிறது பெங்களூருக்குள். பெங்களூரில் இருக்கும் விவேக் உடைய குடும்பம் விஞ்ஞானி மோசஸ் மற்றும் அவரின் மகள் ஹயானாவிற்கு ஆதரவளிக்கிறது. வந்த இரண்டு வருடங்களுக்குள் மோசஸ் இறந்துபோக தனித்து விடப்படுகிறாள் ஹயானா.. தாயும் தந்தையும் அற்று நிற்கதியாய் நிற்கும் ஹயாநாவிற்கு விவேக்கினுடைய குடும்பம் முழு ஆதரவு கொடுத்து தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்கிறது..
இரண்டு ஜீவன்களின் இடையில் ஒரு வலியின் உறவு, மௌனத்தில், நிசப்தத்தில் ,தனிமையில் ஆரம்பமானது. அந்த உறவிற்கு பெயர் இருக்கவில்லை, அந்த உறவிற்கு வானவில்லின் ஏழு நிறங்கள் இருக்கவில்லை, அந்த உறவில் இளமைகளின் நீர்க்குமிழிகள் இருக்கவில்லை, இளம் பருவத்தின் வேகம் இருக்கவில்லை, பாயும் நீர்வீழ்ச்சியின் முழக்கம் இருக்கவில்லை, கடலின் ஆர்பாட்டம் இருக்கவில்லை, எரிக்கும் வெயிலில்லாத, சூடில்லாத, புழுக்கம் இல்லாத, நெஞ்சை இறுக்காத ஒரு உறவு அந்த இளம் மனதுகளுக்கிடையில் பின்னத் தொடங்கியது. ஒரு இனிமையான உறவு மாலைப்பொழுதின் குளிர்ந்த ஆதவனைப்போல, நிறைந்த இரவின் வெண்ணிலாவை போல, குளிர்ச்சியான அமைதியான அன்பு. “நானிருப்பேன் உன்னுடன்” என்று மட்டும் சொல்லி தொலைவில் நின்று அன்பு. நீ அழைக்கும் போது வருவேன் என்று காத்திருந்த அன்பு.
வருடங்கள் பல கடக்க, ஹயானா என்கிற அனிதாவும் விவேக்கும் காதல் மணம் புரிகிறார்கள், குடும்பத்தில் அனைவரின் ஒப்புதலோடு.. இருவருக்கும் ஆண் குழந்தை விசு வாரிசாக. அனிதா விவேக் இருவரின் கடும் உழைப்பினால் விசு படித்து முன்னேற.. விசுவும் தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு பணியில் இணைகிறான்.. கண்காணாத தூரதேசத்திலிருந்து சிறு குழந்தையாக வந்த ஹயானா அனிதாவாக மாறி தன்னுடைய குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் கவனித்து வருவது என்பதை விவேக் மட்டுமே தற்போது அறிந்தவனாக இருக்கிறான்.. அனிதா விவேக் இருவரையும் முதுமையின் தொடக்கப் படிக்கட்டுகள் கம்பளம் விரிக்க மகன் விசுவின் அரவணைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஓய்வு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னோடு மட்டுமே பயணித்து வரும் அனிதாவின் கண்களில் இருக்கும் ஒரு பேரன்பின் தேடுதலை கவனிக்க தூண்டுகிறது விவேகினுடைய உள்ளுணர்வு.. அந்த தேடுதல் ஆறு வயதில் தன்னுடைய இரு கண்களும் பார்த்திருக்க தாயும் தமக்கையும் தம்பியும் நாஜி படைகளால் உள்ளே இழுத்து வீசப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியாக இருக்கிறது.. இழுத்து வீசப்பட்ட அந்த மூவரின் நிலை இன்று என்னவானது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிய அவர்களை விட்டுவந்த இடங்களை நோக்கி ஹயானாவை அழைத்துச் செல்கிறான் விவேக்.. உடன் நம்மையும் புதினத்தின் ஆசிரியர் இழுத்து போகிறார் ஜெர்மனியின் பெர்லின் நகருக்குள் முதலாவதாக.
60 லட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்டுகளையும், உடல் ஊனமுற்றவர்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும் கொடூரமாக கொன்று குவித்த ஹிட்லரின் தேசத்திற்குள் நாமும் நுழைகிறோம் ஹயானாவின் ரத்த சொந்தங்களைத் தேடி.. தான் பிறந்து வளர்ந்த, விளையாடிய தெருக்களில் நடந்து போகிறாள் தன் வீடு நோக்கி. 60 ஆண்டுகால பாசத்தையும் மொத்தமாய் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டு வேகவேகமாக வீடு நோக்கி நடை போடுகிறாள் கூடவே விவேக்கும்.. வீடும் வீதியும் இந்த அறுபதாண்டு காலத்தில் முழுவதுமாக இவளிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.. வாழ்ந்த வீட்டினை அறிந்து விசாரிக்கிறார்.. அம்மாவும் அக்காவும் தம்பியும் திரும்பி வந்ததற்கான எந்தவிதமான வார்த்தைகளும் அங்கிருந்து அவளுக்கு கிடைக்காத பொழுது, எவரோ ஒருவர் சொல்கிறார் அன்றைக்கு அழைத்துச்சென்ற அனைவரையுமே ஜெர்மனியில் இருக்கக்கூடிய அழகிய டகாவ் என்கிற கிராமத்தில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்து நாற்பதே நாட்களில் எழுப்பப்பட்ட நாஜிக்களின் சித்திரவதை கூட்டத்திற்கு என்று. மறுநாள் அந்தக் கிராமத்திற்குள் நுழையும்போதே சுவாசிக்கும் காற்றினில் பிணம் எரிந்து கருகிய வாடை நம் மூக்கை துளைத்தெடுக்கும்.. 32000 மனித உயிர்களின் ரத்த வாடைக் காற்றில் முழுவதுமாக கலந்திருக்கும்.. ரத்தக்கரை படிந்த வரலாற்றினை துடைத்தெறியும் விதமாக.. நிகழ்த்திட கொடூரங்கள் அனைத்தையும் வரலாற்றிலிருந்து மறைத்து ஒழிக்கும் அடையாளமாக அங்கே வெள்ளை நிறம் அடிக்கப்பட்ட நினைவகம்..

இருப்பவர்களிடம் விசாரிக்கும் பொழுது இந்தச் சித்ரவதை முகாமில் இருந்தவர்களின் பெயர்கள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண் கொண்டே அழைக்கப்பட்டதாகவும்.. பலருடைய மரணம் இங்கே பதிவேற்றப் படகூடவில்லை என்றும் தகவல் கிடைக்க.. கூடவே, நாஜிக்களின் முகாம் குறித்தும் அவர்களால் நிகழ்த்தப்பட்ட கொடும் சித்திரவதைகள் குறித்தும் நீங்கள் முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்காவில் வாஷிங்டன் செல்லுங்கள்.. அங்கே நாஜிகளின் முகாம் குறித்தான விவரங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது என்று வழி காட்டப்படுகிறார்கள்.. தன்னுடைய அம்மாவும் அக்காவும் தம்பியும் உயிரோடு இருக்கிறார்களா இல்லை நாஜிக்கள் எரிக்கப்பட்டார்களா.. அவர்களின் விஷவாயு அறைகள் தம் சொந்தங்களின் மூச்சை நிறுத்தியதா.. மனிதர்களை சித்ரவதை செய்வது எப்படி என்கிற பயிற்சி எடுக்கின்ற உடலாகி மாறி பயிற்சியாளர்களிடம் செத்துப் போனார்களா.. உயிருள்ள மனிதர்களிடம் நாஜி விஞ்ஞானிகளும், டாக்டர்களும் மேற்கொண்ட சோதனைகளுக்காக தம் சொந்தங்கள் தங்களைக் கொடுத்துக் கொண்டார்களா என்கிற எந்த தகவலுமே தெரியாமல் இந்தியாவிற்கு திரும்புகிறாள் சோகம் அனைத்தும் மனதில் சுமந்தபடி ஹயானாவும் அவளுக்கான விவேகம்..
இந்தியா திரும்பி இரண்டு வருட மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன் செல்கிறார்.. அதிகார வெறியால் ஆறு மில்லியன் மக்களை கொன்று புதைத்த ஹிட்லர் என்கிற கொடுங்கோலனின் வரலாறு அங்கே காட்சியாக நின்று கொண்டிருக்கிறது “ஹோலோகாஸ்ட் அரங்கத்தில். நாஜிக்களின் சித்திரவதைகள் அனைத்தும் காணொளி காட்சிகளாகவும் படக்காட்சிகள் ஆகவும் நிறுவப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நாஜிக்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலையானவர்களின் பொருட்களும் அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . அதற்குள் இருக்கக்கூடிய ஒரு சிவப்பு காலனி டயானாவின் அக்கா ரெபேக்கா பின் பெயரை உச்சரிக்க.. அந்த காலணியை பார்த்த மாத்திரத்திலேயே
ஹயானா அங்கேயே சுருண்டு விழுவாள் ரெபேக்கா செத்துப் போய் விட்டாள் என நினைத்து.. அம்மாவையும்.. தம்பியையும் ஒவ்வொரு அடுக்காக தேடிக்கொண்டே வரும்பொழுது 15 லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்ட வரலாறு அங்கே நிறுவப்பட்டிருக்கும். அழகான குழந்தைகளையும் கொன்று தன் இனவெறி தீர்த்துக்கொண்டு ஒருவனின் மனநிலையை என்னவென்று சொல்வது..
கொலையாகிப்போன குழந்தைகள் எவரெவரென குறித்து நிறுவப்பட்டிருக்கும் அந்த வரலாற்றுப் பதாகைக்குள் தன் தம்பியின் படத்தை பார்த்து விடுவாள் ஹயானா.. எப்படியும் தங்களின் ரத்த உறவுகளை பார்த்துவிடுவோம்..
உயிரோடுதான் இருப்பார்கள் என்ற 60 ஆண்டுகால எண்ணத்தின் உயிர் நரம்பு அறுத்தெறியப்பட்டதாக உணர்ந்தாள்.. ஆனாலும்கூட அறுத்து எறியப்பட்ட உயிர் நரம்பிற்குள் நம்பிக்கை என்பது இன்னும் கசிந்து கொண்டே இருக்கிறது பேரன்பின் நுணி பிடித்து.. அன்பும் காதலும் நேசமும் பிரியமும் எத்தனை உயிரானது.. மரணித்தும் கூட அதன் அழகும் இளமையும் ஒவ்வொரு மனித உள்ளங்களுக்கும் வளர்ந்து பெரிதாகிக்கொண்டேயல்லவா இருக்கும்.. அங்கே ஒரு பெண்மணி சொன்ன ஒரு கூற்று ஹயானவின் என்ன சிறகினை அசைத்து விட்டது.. ஆம், நாஜி கேம்பிலிருந்து தப்பித்து வந்த பெண்மணி ஒருவர் இன்னும் சற்று நேரத்தில் இங்கே பேட்டி அளிக்கிறார்..அவரோடு கொஞ்சம் உறவாடி பாருங்கள்.. பேசிச் செல்லுங்கள் உங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைக்கலாம் என்கிறார்.. தப்பித்து வந்த பெண்மணியிடம் ஹயானா கேட்கிறாள், தன்னுடைய அக்கா குறித்தும் அம்மா குறித்தும் தம்பி குறித்தும்.. அந்தப் பெண்மணி சொல்கிறாள் ஒருவேளை நீங்கள் இஸ்ரேலுக்கு சென்றால் தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.. ஜெருசலத்தில் மிகப்பெரிய “யாத் வஷேம்” என்கிற நினைவுச்சின்னம் இருக்கிறது.. நாஜி முகாமில் நடந்தவை குறித்த விவரங்களும் கொலையானவர்களின் விவரங்களும் அங்கே கணினியில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கிறது.. அங்கு சென்றால் உங்களுக்கு தகவல் ஏதேனும் கிடைக்கலாம் என்று கூறுகிறார்.. அடுத்த நாளில் ஹயானாவும் விவேக்கும் இஸ்ரேலின் “டெல் அவிவ்” நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.
டெல் அவிவ்விலிருந்து பாலஸ்தீனத்தின் ஜெருசலத்தில் இருக்கக்கூடிய
யாத் வஷேம் என்கிற நினைவிடத்திற்கு எப்படி செல்கிறார்கள்..?
செல்கிறார்களோ இல்லையோ.. ?
அங்கே சென்று அவர்களின் சொந்த
உயிர்களின் விவரங்களை அறிய முடிகிறதா..? நாஜி முகாமில் இருந்து தப்பி வந்தவர்கள் எவராவது இருப்பாரா..? அவர்களில் எவரையாவது ஹயானா சந்தித்து இருப்பாரா..? இப்படியான நிறைய கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.! எந்த நாஜிக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள் யூதர்கள் என்கிற வரலாறு நிஜமாக நம் கண் முன்னே இருக்கும் பொழுதினில்.. அதே நாஜிக்களாக மாறிவரக்கூடிய மனிதர்களாக இங்கே இஸ்ரேலில் பாலஸ்தீன மக்களை விரட்டியடித்து கொண்டு யூதர்கள்.. உடுக்கை அடிக்காமல் குதியாட்டம் போடுகிற சாத்தானாக எப்படி இவர்களும் மாறிப் போனார்கள்..?
அர்த்தம் மிகுந்த காத்திரமான உலகம் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு நாவலை மிக அற்புதமாக தன்னுடைய உழைப்பாலும் வார்த்தைகளின் செழிப்பாலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் அவர்கள்.. பிணக் குவியலின் மீது ஏறி நின்று தன் சாம்ராஜ்யத்தை கட்டிய ஹிட்லர் இன்று உலகம் முழுவதிலும் எங்கேயாவது ஒரு இடத்தில் பிறந்து வருவதற்கான அனைத்து காரணங்களும்.. காரணிகளும்.. சமூக கட்டமைப்பும்.. அரசியல் கட்டமைப்பும்.. சுழலும் நிதமும் இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கிறது அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. தற்கொலை செய்து செத்துப்போன ஹிட்லர் இந்தியாவிற்குள்ளும் இரத்தம் ஒழுகும் பற்களோடு அயோத்தி மண்ணை பிளந்து எழலாம்.. உலகத்தின் எந்த மூலையிலும் நவீனத்தின் பெயரால் விஞ்ஞானத்தின் பெயரால் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் துவேஷ ரத்த வாடையடிக்கும் தன்னுடைய முகத்தை காட்டிச் சிரிக்கலாம்..!
என்ன செய்யப்போகிறோம்.?
இதுதான் இன்றைக்கு ஜனநாயகத்தின்பால் அக்கறை கொண்ட அனைவருக்குமானது..
சவால் மிகுந்ததும் கூட. எப்படி நாம் சந்திக்கப் போகிறோம்.? பாசிசத்திற்கு எதிராக எவரையெல்லாம் நம்மோடு இணைத்துக் கொண்டு ஓங்கி நிற்கப் போகிறோம்..? ஆகப்பெரிய சவால்தான் இது.. ஆனால் சந்தித்தே ஆக வேண்டும் எந்த ஒரு தனிநபரும் நான் இல்லை என்று விலகி ஓடிவிட முடியாது பாசிசத்தை எதிர்க்காமல்..
“உங்கள் நாட்டைக் காதலியுங்கள். உங்கள் அரசாங்கத்தை சந்தேகியுங்கள்.. தைரியமாக இருங்கள்.. உண்மையை எதிர்கொள்ளுங்கள்.. மக்கள் கொலையை வெறுத்திடுங்கள்.. அதற்கு நீங்களும் ஒரு நாள் பலியாக்கலாம்..எச்சரிக்கை.’ என்று ஆசிரியர் பதிந்திருக்கும் வார்த்தைகளில் முழுவதும் நிஜம் வழிந்து கிடக்கிறது…
எட்டு ஆண்டுகால கடும் உழைப்பால் இந்த புதினத்தின் பாத்திரங்கள் எல்லாம் எந்த தேசம் செல்கிறதோ அங்கெல்லாம் சென்று கிடைத்த அனுபவங்கள் அத்தனையும் நிஜம் நிறைந்த வரலாற்று அரசியல்.. எதார்த்தம் சொல்லிடும் நிகழ்கால அரசியலோடு பிணைத்து நமக்கு ஒரு அற்புதமான.. அரசியல் வலுமிகுந்த நாவலை கொடுத்திருக்கக் கூடிய நாவலாசிரியர் அன்பிற்குரிய நேமி சந்த்ரா மெச்சத் தகுந்த போற்றுதலுக்குரியவர்.. இந்த நாவல் அனைவராலும் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
விவேக்-அனிதா இரண்டு கதாபாத்திரங்கள் வழியாக ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்வினையும் நிகழ்கால உலக, இந்திய அரசியலையும்.. சாதிய மேல்நிலை உருவாக்கத்தையும்.. அதற்கான ஒழுங்குகள் எங்கிருந்து கிளம்பியது என்கிற சமூக கட்டுமானத்தையும் அருமையாக கொண்டு வந்திருப்பார்.. இரண்டு கதாபாத்திரங்களும் தனக்குள் ஏற்படும் எண்ணங்களின் பிரதிபலிப்பு வழியாக புனைவாக மாற்றி ஒரு நாவலை முடித்திருப்பது மிகப்பெரிய ஒரு சோதனை முயற்சியே.. அந்த சோதனை முயற்சியில் ஆகப் பெரிய வெற்றியை நிகழ்த்தியிருக்கிறார் நாவலாசிரிய
நேமி சந்த்ரா அவர்கள்.
யாத் வெஷேம்
கடந்தகால நிஜங்களையும்
எதிர்கால எச்சரிக்கையும்
நம் சமூகத்திற்கு சொல்கிறது.
வாசியுங்கள்.
கருப்பு அன்பரசன்

