எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம். இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு நான் ரெபெக்காவாக மாறி இருந்தேன். வரிகளில் வலியை உணர்த்தி என்னை இஸ்ரேலுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவில் கன்னடம் பேசும் பெங்களூருக்கும் விசா இல்லாமல் இடம் மாற்றிக் கொண்டிருந்தது இந்த புத்தகம்.
யாராக இருந்தாலும் நான் சொல்லப்போவது “யாத்வஷேம்” பற்றி தான்.
யாத்வஷேம் ஆசிரியர் நேமிசந்த்ரா பற்றி :
கன்னடத்தில் முப்பது நூல்களை எழுதியுள்ள ‘நேமிச்சந்த்ரா’ இலக்கியம் , அறிவியல் , பெண்களைப் பற்றிய ஆய்வு , பயணம் முதலான புலங்கள் இவருடைய முக்கிய விருப்பங்களாக உடையவர். இப்புத்தகத்திற்காக கர்நாடக “சாகித்திய அகாடமி விருது” பெற்றிருக்கிறார்.
யாத்வஷேம் மொழிபெயர்ப்பாளர் கே. நல்ல தம்பி :
பிறப்பு மைசூரில். தனியார் கம்பெனியில் வியாபார பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் . நிழல் பட கலையில் ஆர்வம் மிக்கவர் . பல உலக மற்றும் தேசிய கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பல பரிசுகளும் பெற்று இருக்கின்றன. கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள் ,சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்து பல இதழ்களிலும் வெளியாகி உள்ளன.
மோசஸ் ஹாய்னா:
அனிதாவை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லுவேன் என விவேக்கின் நம்பிக்கை வார்த்தைகளோடு நாவல் ஆரம்பமாகிறது. விவேக் அனிதாவின் கணவன். இந்த நாவலின் கதாநாயகி அனீது என்கிற அனிதா என்பவளின் இயற்பெயர் “மோசஸ் ஹாய்னா” . நீங்கள் நினைப்பது போல இவள் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவளல்ல. நா*ஜிகளின் இ*னவெ*றி தாக்குதலில் சிக்குண்டான ஒரு அமைதியான குடும்பத்தில் தன் தகப்பனோடு இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்து பெங்களூரில் அடைக்கலமானவள்.
தன் தந்தையும் இறந்த பின்பு 13 வயது சிறுமியான ஹாய்னா எப்படி அனிதாவாக மாறினால், அவளுக்கு யார் அடைக்கலம் தந்தது என்று அமைதியான குடும்ப பின்னணியோடு நாவல் ஆரம்பிக்கின்றது. இந்தியாவிற்கு 13 வயதில் வந்த ஹாய்னா 70 வயதில் இஸ்ரேலுக்கு செல்ல துடிக்கும் காரணம் என்ன..?. யாருமற்ற அனாதையாக இறந்த அனிதாவுக்கு யாதுமாகி நின்றவள் அத்தம்மா. படிக்காதவள் என்றாலும் அவ்வப்போது எதார்த்தத்தை அழகாக சொல்லி ஆறுதல் தந்தவள்.
தனக்கென ஒரு வரலாறு வைத்துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் அனிதாவிற்கான வரலாறு எங்கே இருக்கிறது என்று சிந்திக்க செய்தவள். வன்முறையில் விட்டு வந்த குடும்ப உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தெரியாமல் தவிக்கும் அனிதாவுக்கு ஒரு குடும்பத்தை பரிசளித்து , நல்ல எதிர்காலத்தை தந்த அத்தம்மா போன்றவர்கள் தான் இந்தியா போன்ற பன்முகம் கொண்ட நாடுகளுக்கு நம்பிக்கை பலம்.
வாழ்க்கை அவளுக்கு தேர்வு செய்ய அதிகமாக எதையும் விட்டு வைக்கவில்லை . ஒருவிதமான வலி துன்பம் அனிதாவிடம் நிரந்தரமாக குடி கொண்டிருந்தது . கனவுகள் இல்லாத கண்கள் அவை.
கண்களை மூடி ஒரு நிமிடம் தன் கைப்பிடித்துக் கொண்டு வரும் தந்தையுடன் கட்டிடத்தின் பின்புறம் இருக்க , கண்ணுக்கெட்டும் தூரத்தில் தனது தாய் , அக்கா இரண்டு வயது தம்பி என உயிர் வாழ தப்பித்து சென்றவர்களை இ*னவெ*றி தாக்குதலால் பிரித்துச் சென்றால், உங்கள் உள்ளம் எப்படி இருக்கும் ? பிறகு எப்போதும் அவர்களைப் பற்றிய தகவல் இல்லாத நிலையில் … உங்களால் 60 ஆண்டு காலத்தை வாழ்ந்திருக்க முடியுமா…? ஆனால் இங்கே ஹாய்னா வாழ்ந்தாள் அனிதாவாக.
ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் தன் தம்பியின் அழுகையை நினைவூட்ட, உயிரோடு நம் உறவுகள் இருக்கிறார்களா..? என்ற எண்ணத்தில் அனிதா காத்த மௌனம் நம்மையும் ஊமையாக்கி விடுகிறது.
தன் ரத்த உறவுகள் தாக்குதலால் எந்த நாட்டிலாவது எஞ்சி இருப்பார்களா என்று , தன் மகனின் வருமானம் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அனிதாவின் தாயோ தமக்கையோ தம்பியோ உயிரோடு இருந்து விட வேண்டும் என்று நம்மை இரக்கமில்லாத இறைவனிடம் வேண்டி நிற்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு பின் காட்சியகத்தில் தம் தமக்கையின் கால் செருப்பை காணும் இடத்திலும் , தம்பியின் புகைப்படத்தை இறந்தவர்களின் புகைப்படத்திலும் காணும் போது மனம் நொந்து விடுகிறது.
இன்னும் வாழ்க்கையில் அவளுக்கு என்ன மிஞ்சி இருக்கப் போகிறது என்று…
கொ*ன்று குவித்த மக்களையும் நின்று பார்த்த மக்களையும் அனிதாவின் மூலம் இன்றும் நாம் சமூகத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்த அனிதாவுக்கு பல இடையூறுகளுக்கு இடையில் தமக்கையின் அறிமுகம் கிடைக்க கடந்த கால வரலாற்றை கண்ணீரோடு கடக்கும் இரவுகள் அவர்கள் இருவர் நடுவில் நம்மையும் அமர்த்தி கண்ணீர் சிந்த வைக்கிறது.
இறுதியாக அனிதா ஹாய்னாவை மறந்து , அனிதாவாகவே தாயகம் திரும்பும்போது , மத சார்பற்ற நம் மண்ணிலும் எத்தனையோ படு*கொ*லைகள் நடந்திருந்தாலும் சிறிது அன்பு தோன்றி அனிதாவை வரவேற்கிறது.
விவேக்:
சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவள் என்றாலும் அனிதாவின் முகத்தில் தவழும் சோகத்திற்கு காரணம் என்ன என்று கேட்கும் திராணி இல்லாதவன். ஆனால் அந்த சோகத்தை நிரந்தரமாக அவள் மனதில் இருந்து நீக்க வேண்டும் என்று அவ்வப்போது கனவு காண்பவன். தனக்கான உறவு என்று தன் தந்தையின் சமாதியை தேடும் போதெல்லாம் அவளுக்கான இடத்தை தந்து தூரத்தில் அரவணைப்பாய் காத்திருக்கும் விவேக் , காலம் முழுதும் கணவனாய் வந்ததில் அனிதாவிற்கு கிடைத்த வரம். தன்னோடு 60 ஆண்டுகாலம் அனிதா வாழ்ந்தாலும் 13 வயது சிறுமியாகவே தன் மனைவியை பார்க்கும் கணவன் அல்லவா….!
ஹாய்னாவின் வலியின் சரித்திரத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் அவருடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் என் அன்பின் அரவணைப்பில் காக்க விரும்பினேன் என்னுமிடத்தில் விவேக் ஒரு அடி மேலே நிற்கின்றான்.
சுமி:
அனிதாவிற்கு அனைத்துமாய் இருந்தவள். அனிதாவின் கேள்விகளுக்கெல்லாம் ஒருவாறு பதில் சொல்லி சமாதனம் அளிப்பவள் . பால்ய கால வயதில் சிறுமிகளுக்கே உரிய மிடுக்கான கேள்வி கேட்கும் திறன் இவர்களை நட்பு பாராட்ட வைத்தது. வளர்ந்த பின்பும் கூட சுமியும் அனிதாவும் ஒன்றாக இருந்தது , அனிதா அக்குடும்பத்திற்கு பட்ட நன்றிக் கடனாக கூட இருக்கலாம்.
ரெபெக்கா மோசஸ் :
நாவலாகவே இருந்தாலும் ரெபெக்கா அனுபவித்த கொடுமைகளை ஒரு பெண்ணால் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குடும்பத்தில் உதித்த இரண்டு தமக்கைகள் ஒரு தாக்குதலால் இரண்டு சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டு, ஒருத்திக்கு அன்பும் அரவணைப்பும் தந்த வாழ்க்கையை அளித்த இறைவன்…
இன்னொரு உயிருக்கு கோரமான முகத்தை காட்டி வலியை தந்தது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.
எஸ் எஸ் ஆரிய தலைவனால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ரெபெக்கா ஒரு ரொட்டி துண்டுக்காக தன் உடலையே வருத்திக் கொண்டு , பசியின் கோரப்பிடியில் சிக்கிய தருணங்கள் மிக நெருடலாக இருந்தவை. அந்த நிலையிலும் தனக்கு தாயின் அன்பை காட்டிய பெண்ணுக்கு ஒரு ரொட்டி துண்டை எழுந்து நடக்க முடியாத நிலையில் இழுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்போது , பல மாதங்களாக குளிக்காத, துவைக்காத அந்த உடையில் உள்ள ரத்தக் கரைகளை பார்த்து உயிர் போகும் நிலையில் இருந்த புதிய தாய் , இனியும் அவள் வன்புணர்வுக்கு ஆளாக கூடாது என்று மின்சார வேலியில் உயர்விட்ட தருணம்…
அப்பப்பா …. வாழ்க்கை டகாவ் லேபர் முகா*மில் எத்தனை கொடூரமானது என்பதை உணர்த்தியது. அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு தன் தாயும் இரண்டு வயது தம்பியையும் கொ*ன்ற கதைகளையும் , அங்கு யூதர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதியையும் உலகுக்கு காட்ட வேண்டும் என்று உயிரை நம்பிக்கையில் பிடித்து வைத்திருந்த ரெபேக்கா போல் எத்தனை யூதள்கள் இருந்திருப்பார்கள்.
மனிதனுக்கு மனிதன் மீது ஏன் இந்த வன்*மம்…!
இதற்கு மேலும் இந்த கதையை உங்களுக்கு சொல்ல நான் விரும்பவில்லை . அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் புனைவு நாவல். முக்கிய கதாபாத்திரத்தை தொட்டுச் சென்றிருக்கிறேன் . ஆனால் இன்னும் அகம் நோக்கி பார்க்க வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கிறது இந்த புத்தகத்தில்.
ஆஹா, இன்னும் இந்த புத்தகத்தின் பெயர் காரணம் சொல்லவில்லையே...!
இது ஒரு நினைவுச் சின்னம் . அது எதன் நினைவுச் சின்னம் என்பது ஓரளவுக்கு நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆனால் வாசித்துப் பார்த்தால் தான் ரத்தம் தோய்ந்த மக்களின் நினைவுச் சின்னமாக தெரியும்.
புத்தகத்தின் சாரமாக ஒரே ஒரு வரியை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன் . “இறந்த பிள்ளைகள் வளர்வதில்லை. இறந்த அம்மாக்களுக்கு வயதாவதில்லை”. இப்படித்தான் 13 வயதான அனிதாவுக்கு இரண்டு வயது தம்பியான ஐசக்கும், 15 வயதான அக்கா ரெபேக்காவும் , 35 வயதான தன் அம்மாவும் அனிதாவின் 60 வயது வரை தோன்றினார்கள். அவர்களின் இறுதி முடிவு தெளிவாக தெரியும் வரை..
மனதை கனக்கச் செய்த புத்தகம் . நிகழ்காலத்தில் இருந்து கொண்டே முதலாம் உலகப் போ*ரில் என்னையும் இணைத்துக் கொண்டது. எதிர்காலத்தில் மூன்றாவது உலகப்போ*ர் வருமாயின் அப்போதும் இது போன்ற பல பிரிதல்கள் ஏற்பட்டால் என்னவாகும் என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியது.
கண்மூடி யோசிக்கிறேன் . ஒரு சிறுமி 13 வயதில் இந்தியா எங்கே இருக்கிறது என்று தெரியாமல் சென்றடைந்து 60 வயதில் மீண்டும் தன் இல்லத்தில் தன் உறவுகள் இருப்பார்களா…? என்ற ஐயத்தில் கதவை தட்டும் போது நானும் ஒரு ஹாய்னாவாக…
நீங்களும் சிந்தித்துப் பாருங்கள் விட்டுச் சென்ற நம் பொருட்கள் , நம் உறவுகள் அந்த வீட்டில் அறுபது ஆண்டுகளுக்கு பின் இருக்குமா என்று…?
நூலின் விவரம்:
நூல்: யாத்வஷேம்
ஆசிரியர் : நேமிசந்த்ரா
தமிழில்: கே.நல்லலம்பி
பக்கங்கள் : 360
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : 450
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/
யாத்வஷேம் நூல் அறிமுகம் எழுதியவர்:
பா.விமலா தேவி
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஏரிப்புறக்கரை
27.10.24
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.