நினைவுகள் அழிவதில்லை மொழிபெயர்ப்பு நூல் – மொழிபெயர்ப்பாளர்  :  பி.ஆர். பரமேஸ்வரன் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

நினைவுகள் அழிவதில்லை மொழிபெயர்ப்பு நூல் – மொழிபெயர்ப்பாளர்  :  பி.ஆர். பரமேஸ்வரன் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

இந்தப் புத்தகம் முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு அங்கிருந்து மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து அதிலிருந்து தமிழில் பிஆர் பரமேஸ்வரன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் . சிந்தன் புக்ஸ் பதிப்பகம்  இதை வெளியிட்டுள்ளது .
முதல் பதிப்பு 1977இல் வந்துள்ளது . என்னிடம் உள்ள நூல் பத்தாம் பதிப்பாக டிசம்பர் 2013ல் சமூக அறிவியல் கூட்டிணைவு ஏற்பாட்டுடன் வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
244 பக்கங்கள் ,விலை ரூபாய் 100. அதற்குப் பிறகு ஒருவேளை பல பதிப்புகள் வந்திருக்கலாம்
வெளியீட்டின் போது ..
இந்த நூலின் முதல் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் விபி சிந்தன் அவர்கள் கலந்துகொண்டு “அழியாத  நினைவுகள்” என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டாராம். 1975 முதல் 77 ஆம் ஆண்டு வரை பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் போடப்பட்டிருந்த அவசர காலத்தில் தலைமறைவாக  இருந்தபொழுது தான் , பரமேஸ்வரன்  இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை  ஒரு அரசியல் புதினமாக பார்ப்பதற்கான எல்லா கூறுகளும் உள்ளடங்கியுள்ளன.
நாவலுக்கு அடிப்படை 
കയ്യൂരിന്റെ ധീരസ‌്മരണ | Articles | Deshabhimani ...
1940 இல் இந்தியாவில் விவசாயிகள், நிலப்பிரபுத்துவத்திற்கும்  ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணிதிரள தொடங்கிய காலம் .வடக்கில் உள்ள கையூர் என்ற கிராமத்தில் விவசாயிகள் சங்கம் அமைத்து (அந்த கிராமம் தற்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது) 1956இல் மொழி வாரி மாநிலங்கள்  புனரமைப்பதற்கு முன்பு , விவசாயிகள் சங்க மாநாட்டு பிரச்சாரத்தை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் அத்துமீறி தலையிட்டு தொல்லை கொடுத்த ஒரு போலீஸ்காரருக்கும் மக்களுக்கும்  மோதல் ஏற்படுகிறது. மக்களிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குளித்த போலீஸ்காரர் உயிரிழக்கிறார் இதனைத் தொடர்ந்து கையூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும்  நடைபெற்ற மனித வேட்டையும்  அடக்குமுறையும் வரலாற்றில் மிகக் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்று.
அப்போது  தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான  அப்பு, சிருகண்டன்,அபுபக்கர்,குஞ்ஞம்பு ஆகியோர் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  29 ஆம் தேதி கடலூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்படுகிறார்கள் . தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மற்றொருவர் சி.கே. நம்பியார் சிறுவனாக இருந்த காரணத்தினால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது.  இத்துடன் கையூர் சம்பவம் இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த ஒரு  அத்தியாயமாகி
விட்டிருக்கிறது .
அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி பி.ஸி. ஜோஷி, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளின்  முதல் நாள்  தூக்கு மேடைக்கு அஞ்சாத கையூர்த் தோழர்களை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு இவர்கள் 4 பேரும் தைரியம் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.
ஆசிரியரைப் பற்றி :
இந்த நிகழ்வுகள் நடந்த காலத்தில் இந்த நூலின் ஆசிரியர் நிரஞ்சனா கையூருக்கு அருகே உள்ள நீலேசுவரத்தில் உள்ள  ராஜாவின் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக இருக்கிறார் .அப்போது அவரின் பெயர் குளுகுந்த  சிவராவ். போராட்டம் நடந்த #கையூர் என்ற இடம்
இவர் படித்து வந்த  ஊருக்கு 3 மைல் தொலைவில் இருந்துள்ளது , அப்போது அங்கு ஒரு பார்வையாளனாக இருந்திருக்கிறார். அதன்பிறகு மங்களூரில் அதன் வழக்குகள் நடந்தபோது பத்திரிகையாளனாக அதற்கான தரவுகளை சேகரித்து உள்ளார். இதன் பாதிப்பினாலேயே இந்த நாவலை எழுத முனைந்திருக்கிறார்.
 இவர் 14வது வயதிலேயே எழுதத் தொடங்கியிருக்கிறார். அப்பொழுது மங்களூரில் இருந்த பிரபல எழுத்தாளர் சங்கரப்பட்_ஐ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ராஷ்டிர பந்து என்னும் வாரப் பத்திரிகையில் இவரது கதைகள் வெளிவரத் தொடங்கி , தனது எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய கால கட்டத்தில் தேர்ச்சி  முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகியிருக்கிறார்.
பிறகு கர்நாடக மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி ஆசிரியராகிறார் 1948 முதல் 1951 ஆண்டு காலத்தில்  தலைமறைவாக இருந்து பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை நிறைவேற்றி வைக்கிறார் அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1953 வெளியேறி இருக்கிறார். இவர் எழுதிய முதல் நாவல் ‘விமோசன’ 1953- இல்  வெளிவந்துள்ளது. இருபத்தி ஐந்து நாவல்களும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று நாடகங்களும் இந்த காலகட்டத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
 நூலைப் பற்றி …
இந்த நினைவுகள் அழிவதில்லை என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ள நூல் முதலில் ‘சிரஸ் மரணா’  என்னும் பெயரில் 1955-இல்  ஆசிரியர் நிரஞ்சனாவால்  கன்னடத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் இந்த நூல் வெளி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சிகரம் ஆசிரியர் திரு  செந்தில்நாதன், சென்னை புக் ஹவுஸ் பதிப்பாளர் திரு பாண்டியன் அவர்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
രണഭേരി | Just another WordPress.com site | താൾ 2
மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த உண்மைக் கதை முதன்முதலாக மொழியைக் கடந்து கன்னட மொழியைப்  பற்றி சிரஸ்மரணா என்ற அசுரனாக மாறுகிறது. பிறகு அங்கிருந்து நினைவுகள் அழிவதில்லை என்ற பெயர் தாங்கி கடந்த 43 வருடங்களாகத் தமிழ் மக்களிடையே அழியாமல் வாழ்கிறது.
இது  இரு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது  .முதல் பாகத்தில் 15 அத்யாயங்களும் இரண்டாம் பாகத்தில் 10 அத்யாயங்களும் தரப்பட்டுள்ளன.
கதா பாத்திரங்கள்  
அப்பு ,சிரு கண்டன் , கண்ணன் , அபுபக்கர் , குஞ்ஞனன்  கோரன், மாஸ்டர், பண்டிட்  , நம்பூதிரி , நம்பியார் , சந்து , பிரபு , பயில்வான் , இராமுண்ணி , அப்புவின் தந்தை , சிருகண்டனின் தாய் கல்யாணி  , தந்தை, அப்புவின் மனைவி ஜானகி , கண்ணனின் மனைவி தேவகி மற்றும் விவசாயிகள் .
நாவலின் போக்கு ….
இது சாதாரண நாவலல்ல , ஒரு சமூகத்தின் விடுதலைக்கான துருப்புச் சீட்டு , ஏகாதிபத்தியம் எளிய மக்களை என்ன செய்யும் ? நிலப்பிரபுத்துவம் எப்படி ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கித் தின்னும் ? அடிமைகள் தலையெடுத்தால் என்ன நடக்கும் ? ஒரு ஆசிரியர் (மாஸ்டர் ) நினைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ? வாசிப்பும் சில வகுப்புகளும், இரவுப் பள்ளிகளும் இந்த  சாதாரண விவசாயக் கூலிகளையும் குடியானவர்களையும் கையூரின் தோழர்களாக உலக சரித்திரத்தில் இடம் பெற வைத்த ஒரு நீண்ட வரலாறு என்ன ? படிப்பறிவின் விவேகம் எப்படி விவசாயிகளை ஸ்தாபனம் உருவாக்க , உரிமையைக் கோர , நிலக்கிழார்களின் சுரண்டலை நிறுத்த உதவியது ? அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் ? அதிகாரத்தையே மாயமாக்கிய  மக்களின் எழுச்சி  அழிவதாகத் தோன்றினாலும்  நிலைத்து நிற்கும் என்ற பல விதமான  நம் கேள்விகளுக்கு  பதில் தருகிறது இந்தப் புதினம்.
அதிகாரமும் ஏகாத்தியபத்தியமும் நிலப்பிரபுவத்துவமும் இணைகிறது .
அதோடு நாட்டு நடப்பைக் கற்றுத் தரும் மாஸ்டருக்கு புரட்சிக்காரன் பட்டம் சுமத்துகிறது.  ஒன்றுமறியா  உழைக்கும் அப்பாவி விவசாயிகள் கடன் வாங்கும் வறுமைக்கு நிலத்தையே பிடுங்கிக் கொள்ளும் கொள்ளைகாரர்களாக நம்பூதிரி , நம்பியார் என்ற நிலக்கிழார்களின் வழியாகப் பிரயாணிக்கிறது நாவல். மாஸ்டரும் எவ்வளவோ பொறுத்திருந்து சமயம் வரக் காத்திருந்து ஒரே ஒரு ஒளிக்கீற்றை சிருகண்டன் , அப்பு என்ற சிறுவர்களின் வழியாக உருவாக்கிய தருணங்கள் தான் இறுதி அத்யாயத்திற்கான ஆதார நிமிடங்கள்.
பள்ளிக்கூட வாயிலில் மாலையில் விவசாயிகளை அழைத்து பத்திரிகைப்  படித்து வந்ததற்கான முயற்சி நிலக்கிழாரின் அடுத்தடுத்த நரித்தனத்தால் நின்று போனதும் , விவசாயிகளின் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விடக் கூடாது என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதெல்லாம் ,  ஒட்டு மொத்த ஏகாதிபத்தியர்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறையாகத் தெரிகிறது. கிராமப் பஞ்சாயத்து வந்தால் கூட தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் எத்தகைய ஆதிக்க மனப்போக்கு என்பதை நாவலின் ஒவ்வொரு வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
உறவுகள் யாருமற்ற கோரனின்  குடிசை  இரவுப் பள்ளியாக மாறிய நாளும் விவசாய சங்கம் உருவாகி ஒவ்வொரு படியாக கையூரில் இளைஞர்களால்  கட்டமைக்கப்ட்ட ஸ்தாபன செயல்பாடுகளும் வாசிக்க வாசிக்க நம்மையறியாமல் கண் கலங்க வைக்கின்றன. இவற்றைக் காணும் மாஸ்டரின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் புரிந்து கொள்வது , சமூக மாற்றத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் என்ற இன்னொரு புரிதலை நமக்குத் தருகிறது. விவசாய சங்கத்தின் அடுத்தடுத்த சிந்தனைகளாக பாலர் சங்கம் , பெண்கள் சங்கம் என பரிமாணங்கள் விரிகின்றன . கூடவே பிரச்சனைகளும் வளருகின்றன. ஒரு கட்டத்தில் மாஸ்டர் ஊரை விட்டே துரத்தப்படுவது கூட நடக்கிறது.
எதிர்பாராத ஒரு தருணத்தில் இவர்களை  அடக்க வந்த போலீஸ்காரன் சுப்பைய்யா படும் பாடு , நதியோடு போய் உயிர் நீத்த விபத்து கையூரின் கால் தடங்களை  சொல்லவொணாத துன்பத்திற்கு உள்ளாக்கி , கையூர் தோழர்கள் படும் சித்ரவதைகள் , விவசாயிகளுக்கு அதிகார வர்க்கம் தொடுக்கும் ஆணவ தண்டனைகள், தலைமறைவு என கதை விரிகிறது. 60 பேர் சிறைபிடிக்கப் படுவதற்குள் நடக்கும் காட்சிகள் , நீதிமன்ற வழக்கு நிலவரங்கள் நாடே கையூர் தோழர்களுக்கு சப்போர்ட் செய்யும் நிகழ்வுகள் இப்படி புதினம் நிஜ சம்பவத்தின் மீது அழகாகக் கட்டப் பட்டுள்ளது.
சிறு கண்டனும் அப்புவும் தான் ஏழாவது அத்தியாயம் வரை இருக்கிறார்கள், எட்டாம் அத்தியாயத்தின்  இறுதியில்தான் கண்ணன் உள்ளே நுழைகிறான் . 14-ஆவது அத்தியாயத்தில் அபூபக்கர் இவர்களோடு இணைகிறான் .ஆரம்பத்திலிருந்து மாஸ்டர் கையூரின் பள்ளிக்கு ஆசிரியராகவும் சங்கத்தை உருவாக்க அஸ்திவாரம் போடக்கூடிய அருமையான மனிதராகவும்  நம்மோடு பயணம் செய்கிறார்.
நினைவுகள் அழிவதில்லை | Book My Book
நிலப்பிரபு நடத்துகின்ற சுரண்டலின் பாதுகாப்புக்குப் போலீஸ் உருவாக்கிய ஒரு சதியாலோசனையாக இந்த வழக்கு . ஒரு போலீஸ்காரனின் எதிர்பாராத மரணத்தின் மறைவில் இந்த மாநிலத்தின் விவசாயிகள் ஸ்தாபனத்தை அடியோடு ஒழிப்பதற்காகவே வழக்கு மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேறுவது வரலாற்றில் அழியாத  முக்கியத்துவம் பெற்றுள்ளதை உணர முடிகிறது .
நாவல் முழுக்க நம்முடன் பயணம் செய்யும் மனிதர்கள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி , புரட்சி ஏன் உருவாகிறது ? ஏன் மாஸ்டர் தன்னை காந்தியவாதி இல்லை என ஒப்புக் கொள்கிறார் ? என்பதை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. படிக்கும் போது நம்மை அறியாமல் கீழ்வெண்மணி விவசாயிகள் பற்றியும் மனம்  பயணம் செய்கிறது.
முதல் ஆசிரியர் நூலில் குதிரைக் கொட்டகையில்  கல்வி தரும் தூய்ஷேன்  இங்கே வரும் மாஸ்டர் கதாபாத்திரத்தைப்  படிக்கும் போது நினைவுக்கு வருவதுடன் அமெரிக்க கருப்பின மக்களுக்கு கல்வியளித்த மேக்லியோட் பெத்யூனும் மாஸ்டருடன் போட்டி போடுகிறார் .இவர்கள் மட்டுமா ? தாய் நாவலில் படிப்பாளி புரட்சிப் பெண்ணாக மாறும் பெலகோவ்னா நினைவுக்கு வருகிறார்.
நாவலில் அப்புவிற்கும் சிருகண்டனுக்கும் இடையில் சிறு வயது முதலே இருக்கும் நட்பு , மாஸ்டருக்கும் சிறுவர்களுக்குமான உறவு , விதவைக்கு மறு வாழ்வு தரும் கண்ணன் பண்பு  ஒவ்வொருவரும்,  கணவன் மனைவி குடும்பமாக சமுதாயத்திற்கு பணி  செய்ய இவர்கள் எடுக்கும் முயற்சி , ஊர் மக்களது நம்பிக்கை , அனைவருடனான ஒற்றுமையுணர்வு என எல்லா வகையிலும் நம் மனதில் நிற்கிறது. மொழி பெயர்ப்பு நூலாக விலகியிருக்காமல் மொழி நடையும் நமக்கு நெருக்கமாக இருப்பது சிறப்பு.
இளைஞர்கள் ,ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் வாசித்து உள்வாங்க வேண்டிய காலத்தால் அழியாத மிகவும் நல்லதொரு புத்தகம் இது.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *