திரை விமர்சனம் : நெஞ்சுக்கு நீதி – பா.ஹேமாவதி

திரை விமர்சனம் : நெஞ்சுக்கு நீதி – பா.ஹேமாவதி




ஆதிக்க வெறியர்களிடம் அதிகாரம் இருந்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி என்பதே பெரும் சவால்…
நெஞ்சுக்கு நீதி திரைப்பட விமர்சனம்…

தலித் பெண் சமைத்ததால் சமைத்த உணவு கொட்டி வீணாக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் சிறுவர்கள் என்று கூடப் பார்க்காமல் துன்புறுத்தப்படுகிறார்கள். இதுதான் படத்தின் முதல் காட்சி. தொடக்கப் பாடலிலேயே துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துயரங்களைச் சித்தரித்து, அவர்களின் இந்த நிலைக்கு நாமும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம். நாடு முழுதும் வரவேற்பைப் பெற்ற ‘ஆர்டிகிள் 15’ எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம்.

விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்குத் தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை..”

-என்று பாடினார் மகாகவி பாரதி.

தமிழகத்தில் அரைப் படி நெல் கூலி உயர்வு கேட்டு சங்கம் வைத்துப் போராடியதற்காக கீழவெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பெண்கள், குழந்தைகள் என 44 உயிர்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தக் கொடூர சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு கிராமத்திற்குக் கூடுதல் ஆணையராகப் பணியேற்று வருகிறார் விஜயராகவன்.. இயற்கை அழகைக் கொண்ட இந்த கிராமத்தில் மேலாதிக்க வாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் துன்புறுத்திக் கொல்லப்படுவது சகஜம் என்று சொல்லும் அளவிற்குச் சாதி வெறியாட்டம் நடைமுறையில் உள்ளது.

3 இளம் பெண்கள் 30 ரூபாய் கூலி அதிகம் கேட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இரண்டு பேரைக் கொடூரமாகக் கொன்று பொதுமக்கள் பார்க்கும்படி தூக்கில் தொங்க விட்டு, இனி கூலி உயர்வு கேட்டால் இதுதான் நிலை என்று உணர்த்தப்படுகிறது. இரண்டு பெண்களும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், அதனால் தகப்பன்கள் ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்றும் வழக்கை முடிக்க நினைக்கச் சதி செய்கிறார் காவல்துறை ஆய்வாளர். இந்த வழக்கு என்னவாகிறது என்பதுதான் கதை.

இந்தியச் சமுதாயத்தில் சமத்துவத்திற்காக எல்லாக் களங்களிலும் போராட்டம் நடந்து வந்திருக்கிறது. ஆணுக்கு பெண் அடிமையாகவும், சாதிப்படிநிலையின் மேல் தட்டுகளில் இருப்போருக்கு கீழ்த்தட்டுகளில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அடிமையாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மேலாதிக்கச் சாதியினரிடம் அதிகாரமும் சேர்ந்துகொள்கிறபோது அந்தத் திமிரால் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறார்கள் என்ற எதார்த்தத்தைப் பளிச்செனப் பதிவு செய்கிறது படம்..

வெளிநாட்டிலிருந்து வந்தவரான விஜயராகவன் இங்கே சாதி ஏற்றத்தாழ்வால் மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதைக் கண்டு வியப்படைகிறார். பொதுக் கிணற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுத்ததால் தீட்டு என்று சொல்லித் தண்டிக்கப்படுவதைக் கண்டு உடன் வரும் காவலர்களிடம் தீட்டு என்றால் என்ன என்று கேட்பார்.

தலித் மக்கள் பொதுக் கிணற்றில் நீர் எடுத்தால் தீட்டு, தெய்வக் குற்றம் என்று ஒரு காவலர் சொல்வார். கூடுதல் ஆணையர் ஒரு காவலரைப் பார்த்து “சார் நீங்க தலித்து தான,” என்று கேட்பார். “ஆமா சார்,” என்பார் காவலர். “அப்ப அந்தப் பசங்களும் நீங்களும் ஒரே சாதியா,” என்று அடுத்த கேள்வியைக் கேட்க, “அய்யோ இல்ல சார். நான் தலித்துதான் ஆனா, அவர்களை விட உயர்ந்த சாதி….” “அவரு எம்கிசி,. ஆனா அவரை விட நாங்க கொஞ்சம் மேல,”.“ நான் பிராமின் சார்… ஆனா சார்தான் நம்ம எல்லாரையும்விட உயர்ந்த பிராமின்… நான் அவர விட கொஞ்சம் கீழ இருக்குற பிராமின்,” என்று பதில்கள் வரும்.. சாதியின் பெயரால் மக்களை பிரித்தாளப்படுவதை அறியும் கூடுதல் கமிஷ்னர் மனம் நொந்து ‘வாட் இஸ் ஃபக் ஹெப்பன் ஹியர் மேன்,” (…த்தா என்னய்யா நடக்குது இங்கே) என்று கேட்பார். இந்தக் காட்சி பார்வையாளர்களுக்குச் சாதியத்தின் அசிங்கமான முகத்தை எடுத்துக்காட்டுகிறது. அதைக் கண்டு கொதிக்கும் கூடுதல் ஆணையர் விஜயராகவனாகப் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார் உதயநிதி.

சாதி என்ற சாக்கடையில் மூழ்கி உள்ள காவலர்களிடம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைச் சொல்லும் விதத்தில், இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை (ஆர்ட்டிகிள்) 15-ஐ அச்சிட்டு காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது சிறப்பானதொரு காட்சி. சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம், வாழ்விடம் என்ற பெயரால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்பதுதான் அந்தச் சட்ட உரை.

அரசமைப்பு சாசனம் அனைவருக்கும் சமத்துவத்தைப் பறைசாற்றினாலும் நடைமுறையில் அதற்கு நேர்
எதிராகத்தான் இருக்கிறது. அதை இப்படத்தில் வரும் சம்பவங்கள் வலுவாகக் காட்டுவதோடு, சமுகத்தில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக எழும் கேள்விகளின் நியாயத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு, “எரிக்கத்தான் விடுவாங்க… எரிய விடாமாட்டாங்க,” என்று மயானப் பணியாளரான ஒரு தலித் தன் மகன் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறுவார்.

“பன்றி மேயும் இடம். இங்கே நாம டீ குடிக்கக் கூடாது,” என்று ஒரு காவலர் சொல்லும்போது கதாநாயகன், “வெளிநாடுகளில் பன்றி விற்பவன்தான் பெரும் பணக்காரன்,” என்று கூறுவது உரிய கைத்தட்டல்களைப் பெறுகிறது. இறுதி காட்சியில் அதே இடத்தில் சாதி ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைவரும் அமர்ந்து டீ குடிப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது நயம்.

படத்தில் மொழி திணிப்பு பற்றி ஒரு காட்சி வரும். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது ஆர்வம். திணிப்பது ஆணவம் என்ற வசனம் திணிப்பாளர்களிடையே உரக்க ஒலிக்க வேண்டும்..

“எல்லாருமே சமம் என்றால் யாருதான் இங்க ராஜா?” -இப்படியொரு கேள்வி. “எவனொருவன் எல்லோரையும் சமம் என்று நினைக்கிறானோ அவன்தான் ராஜா.” என்ன அருமையான பதில்!.

“சட்டமா… எங்களுக்கும் அதுக்கும் இந்த நாட்டுல மரியாதை இருக்கா,” என்று ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் கேட்பது ஆழமான, அர்த்தமுன்ன கேள்வி.. இத்தகைய உரையாடல்கள் ‘இன்னும் எத்தனை காலம்தான் குட்டக் குட்ட குனிந்தே கிடப்பது, இனி நிமிர்ந்து நில்’ என்று பார்வையாளர்களே சொல்லும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளன..

கதாநாயகன் சமத்துவத்தை தன் மனைவியிடம் கடைப்பிடிப்பதும், சின்ன சின்ன விஷயங்களில் கூட மனைவியின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதும் அழகு.

மறக்கப்பட்டு வரும் தெருக்கூத்துக் கலையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தெருக்கூத்துப் பாடல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துச் சொல்கிற அந்தப் பாடலுக்கு உயிரோட்டமான இசையமைத்திருக்கிறார் திபு. கிராமத்திற்குள் இட்டுச் செல்லும் தினேஷ் ஒளிப்பதிவு, வினோத் ராஜ்குமார், லால்குடி என். இளையராஜா கூட்டணியின் கலை, விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டுசெல்லும் ரூபன் படத்தொகுப்பு எல்லாமே சிறப்பு.

காவல்துறை ஆய்வாளராக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி அதிகாரவர்கத்தை எதிர்த்துப் போராடுகிற தலைவராக ஆரி ஆகியோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. இளவரசு, மயில்சாமி, ஷிவானி ஆகியோரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

அனைவரது பங்களிப்பையும் சிறப்பாக ஒருங்கிணைத்து, மறக்க முடியாத ஒரு படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அருள் ராஜா காமராஜ்.

ஆதிக்கவாதிகளிடம் அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதைப் படம் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது வருங்காலத்தில் ஒடுக்கப்பட்ட இன்னும் எத்தனை கொடுமைகளைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஒரு வழக்கை நேர்மையாக முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உயர் அதிகாரிக்கு இவ்வளவு பிரச்சனை என்றால், ஒன்றிய ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் சாதி மதவாத சக்திகளும் இந்தி, சமஸ்கிருத வாதிகளும் பணியமர்த்தப்பட்டு அதிகாரம் வழங்கப்படும் இன்றைய சூழலில் எப்படி சமுக நீதியை நிலைநாட்டி ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பது என்பதே நம் முன் நிற்கும் மிகப் பெரிய சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ளும் மன உறுதியை ஏற்படுத்த உதவும் இந்தப் படம் எல்லா மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட வேண்டும்.

-பா.ஹேமாவதி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *