நியோ தாந்திரீகக் கவிதைகள் | இந்திரன்

நியோ தாந்திரீகக் கவிதைகள் | இந்திரன்

Image

தாந்திரீக சுவாசம்

————————————————

உன் உடம்பின் உள்ளும் புறமும்

பயணிக்கிறேன் என்னைத் தேடி.

 

நிர்வாணத்தை நோக்கிய எண்கோணப் படிகளில்

சட்டை உரித்து நகர்கிறது குண்டலினிப் பாம்பு.

 

ஆணும் பெண்ணுமாய்

இரண்டாய்ப் பிளந்த நாவின் மூலமாய்

பஞ்சபூத ரகசிய உரையாடலின் வார்த்தைகளை

கட்டிலில் உரக்கப் பேசுகிறது காமம்.

 

பிரபஞ்ச முட்டை உடைத்து

எடையின்றி பறக்கும் பயணத்தில்

நட்சத்திர மண்டலத்தில்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமாய்

தலைவனும் தலைவியும்.

 

சூரிய கலையும் சந்திர கலையுமாய்

நாகங்கள் பின்னிப் பிணைகையில்

தாந்திரீகச் சுவாசம் பயில்கிறது மானுடம்.

 

பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசை

———————————— 

பிரக்ஞையின் ஆர்ப்பரிக்கும் கடலுக்குள்

நாம் இருவரும் துணிந்து பாய்ந்து

நீந்திக் களிக்கிறோம்.

 

காதலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்

கலையை முயன்று கற்கையில்

சூரியக் குடும்பத்தில்

இருவரும் இணைந்து ஒரு காலப் பயணம்.

 

உன் மூச்சை நானும்

என் மூச்சை நீயுமாய் சுவாசிக்கையில்

பால் பிடித்து முற்றித் தலைசாய்ந்த நெல்வயலில்

மெலிதாய்க் கைவீசி நடைபழகுகிறது நமது சுவாசம்.

 

மூலாதார மையத்தில் மூண்டெழும் கனல்

இயற்கையின் ஆதிப் பிரவாகமாகப் பாய்கையில்

ஐம்புலனும் ஐம்பூதங்களுடனும் கலந்து

பிரபஞ்ச ரகசியங்களை நம் காதில் பேசுகின்றன.

 

துயிலெனும் குளத்தில்

வெண்ணிற ஆம்பல் இதழ் விரித்துப் பேசுகிறது

நமது பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசையை.

—————————————————————————-

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *