கொரோனா தொற்றின் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கும் – தளர்வும் இருந்து கொண்டு தான் உள்ளது. இக்கொரோனா காலத்திலும் பார்க்க, ஊரடங்குத் தடை உத்தரவின் மூலம் ஒருவழியாக எதிர்கட்சிகளையெல்லாம் அடக்கியாகிவிட்டது. நாடு முழுக்க சட்டசபைகளும் – நாடாளுமன்றமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும்,ஆட்சியாளர்கள் மட்டும் படு சுறுசுறுப்பாக இயங்கி ,நவதாராளமயக்கொள்கைகளில் மிச்சம் மீதமியிருந்தவையெல்லாம் அறிவித்து முடித்த கையோடு அமலாக்கிக்கொண்டேயிருக்கின்றனர். இவர்களின் துணையுடன் வலதுசாரி அடையாளஅரசியலின் குரூரமிக்கச்செயல்பாடுகள் நாடு முழுக்க, காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டு ஓடுகிறது.
உலகம் முழுக்க ,கடந்த நாற்பது வருடங்களில், நவதாராளமயத்தின் விளைவால், ‘நாடுகளுக்கிடையேயான போர்கள்,பொருளாதார மந்தம், சமத்துவமின்மையின் உச்சம்’ தொடர்ந்து நீடித்துவருகிறது. இதன் காரணமாக,,மக்கள் கொடுந்துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சுருக்கமாகக் கூறின், இக்காலமானது, ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் பேரழிவை தரக்கூடியதாக மாறிவிட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகான 1945 -1979 இடைபட்ட ஆண்டுகளில், மக்கள் நல அரசு அல்லது சட்டத்தின் ஆட்சிமுறையினை அடிப்படையாகக்கொண்ட தாராளமயக்கொள்கைகள் அமலாகி வந்தன. இக்காலகட்டத்தில், வர்க்கத்தின் அடிப்படையில் மக்கள் பிரித்தறியப்பட்டு அவ்வாறே அணிதிரளவும் செய்தனர். பெண்ணியம், மனித உரிமைகள், ஒடுக்கப்பட்ட சாதி,சிறுபான்மை, சுற்றுச்சூழல் சார்ந்து அடையாள அரசியல் அமைப்புக்கள் உருவாகிய காலமும் அதுதான். சட்டத்திற்கு உட்பட்டு, உரிமைகள், கோரிக்கைகள் என அரசின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அவையாவுமே ,மக்கள் நல அரசின் சட்ட வரம்பிற்குள் தீர்க்கப்படுவதாய் இருந்தன.
1980 களுக்குப் பிறகான, நவதாராளமய காலத்தில் அரசின் தன்மையும், அடையாள அரசியலின் போக்கும் திசைமாறுகிறது. அதுவரை, மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்துவந்த தாராளவாத அரசியல் பொருளாதாரமானது, தற்போது, கார்ப்பரேட் நலனுக்கு முன்னுரிமையளிக்கும் சந்தைமய பொருளாதார அரசியலாக மாறிவிட்டன. அதேபோல, அடையாள அரசியலும் வலதுசாரி மதவாத அடையாள அரசியலுக்கு வழிவகுத்துவிட்டது. மக்கள் நல அரசானது மார்க்கெட் நல அரசாக மாறிவிட்டது.
அப்போதைய, தாராளமய காலமானது, நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நலனுக்கானதாக இருந்து வந்தது. ஆனால் இப்போதைய, நவதாராளமய காலமோ, செல்வ வளமிக்க ஒரு சதவிகித பணக்காரர்களுக்காக, மீதமுள்ள 99 சதவிகித மக்களின் வாழ்வை அபகரித்துக்கொள்வதாக இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பின் வளர்ச்சியானது கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த தாராளமயகாலத்தைவிட, தற்போதைய, காலத்தில் இரட்டிப்பாகியிருக்கின்றது. அதே போல இனப்பாகுபாட்டின் காரணமாக வேலைவாய்ப்பிலும்,செல்வ வளத்திலும் கருப்பினத்தவர்களைவிட வெள்ளையர்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதை புள்ளிவிபரங்களின் மூலம் காண முடிகிறது.

அதேபோல, தாராளமய காலத்தில் தனியார் வங்கிகள் நிதிமோசடியால் திவாலாகி மூடப்படுவது என்பது மிகவும் குறைவாக இருந்துள்ளது. தற்போதைய காலத்தில் தனியார் வங்கிகள் திவாலாவது அடிக்கடி நிகழ்வதாக இருக்கின்றது.
தாராளமயகாலத்தில் மனித உரிமை, பெண்ணியம், ஒடுக்கப்பட்டசாதி அடையாளம் கொண்ட அமைப்புக்கள் குடிமைசார் குழுக்கள் யாவும் இப்போதையக்காலத்தில் மத-இன வாத குழுக்களால் மாற்றீடு செய்யப்படுவதாகிவிட்டன. பொதுத்தன்மை அதன் முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறது.
நவதாராளமயமானது,
- பொருளாதார அளவில் மக்களைச்சுரண்டுவதும், இயற்கைவளங்களை கொள்ளையடிப்பதுமாக இருக்கிறது. உலகளாவிய சந்தைக்கு வழிவகுக்கிறது.
- அரசியல் அளவில், வலதுசாரி அடையாள அரசியலுக்கு வழிவகுக்கிறது . மதம் -இனம்-சாதி சார்ந்த அடையாளங்கள் மேலெழும்புவதற்கும் வழிஅமைத்திடுகிறது.
- ஜனநாயகத்தையும், வர்க்க அரசியலையும் பலவீனமாக்குவதையே குறியாக வைத்து முனைப்புடன் செயல்படுகின்றது.
சந்தைமயக் கொள்கைகளை பாதுகாக்கும் நோக்குடன் வலதுசாரி அடையாள அரசியலினை ஒரு கேடயமாக நவதாராளமயவாதிகள் பயன்படுத்துகின்றனர். சமூக அடித்தளத்தில் வர்க்க அரசியல் சார்ந்த உரையாடல்கள் வலுவிழக்கும் போது, சந்தைமயத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வலதுசாரி அடையாள அரசியல் வழிவகுக்கிறது.
இனம் பாலினம், கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்வோடு இயைந்த யாவுமே அடையாள அரசியலுக்கு முக்கியமானது என்பதால் வலதுசாரி அடையாள அரசியல்வாதிகள் இவற்றினை இறுக்கமாகப் பற்றிக்கொள்கின்றனர்.

நவதாராளமயம் தனிநபருக்கு முக்கியத்துவம் அளித்துச்செயல்படுகிறது. அத்தனிநபரின் வெற்றியை வலதுசாரி அடையாள அரசியலானது தனது நலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறது.
நவதாராளமயமானது, கார்ப்பரேட் நிறுவனங்களின் முழுப் பலத்துடன் சமூக மக்களின் மீது போர் தொடுத்து தன்னுடைய அஜெண்டாவான தனியார்மயம்-சந்தைப்படுத்தல்-செலவில் சிக்கனம்-கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவற்றினை திணித்து அவர்களை கசக்கிப்பிழிவதாக இருக்கின்றது.
கார்ப்பரேட், மற்றும் நிதி நிறுவனங்களும் வலதுசாரி அடையாள அரசியலைப்போன்றே நவதாராளமயத்தின் அங்கமாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் யாவும் நுகர்வின் மூலம் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தனிநபருக்கு முக்கியத்துவம் அளித்துச்செயல்படுவதாக இருக்கின்றது. இதே போன்று, வலதுசாரி அடையாள அரசியலும் பொது எனும் சமூகம் பிளவுபடுவதின் மூலமாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. சமூகம் தனித்தனி நபராக பிளவுபடுத்தப்படும்போது, அத்தனிநபரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது எளிது
தனிநபர் ஒருவர், நாம் X பிறர் எனும் வலதுசாரி அடையாளத்திற்குள் திரும்பும்போது, அரசியல் சமூகமும் அதற்கேற்றவாறு சிறுசிறு துண்டுகளாக பிளவுருகிறது. அப்போது மக்கள் ஒவ்வொருவரும் பங்களிப்புடன் கூடிய எதிர்காலத்தை படைப்பதும் கடினமாகிவிடுகிறது
சமூகமானது சிறுசிறு துண்டுகளாக பிரிக்கப்படும் போது மத-இன அடையாள மாற்றம் பெறுவது எளிதாகிவிடுகிறது. இதன் மூலம் மக்களை பிளவுபடுத்தவும், பங்களிப்புடன் கூடிய குடிமை அடையாளங்கள் உருவாகாவண்னம் தடுக்கப்படுகின்றன.
சந்தையை நிறுவனமயமாக்கிவிட்டதன் காரணமாக, சந்தையானது முதலில் சமூகத்தை பாதிக்கிறது. பின்னர் சமூகம் தனி மனிதனை பாதிக்கச்செய்கிறது. இப்படியாக, சமூக வாழ்வில் தனிமனிதனொருவன், சந்தைக்கு கீழ்படிந்தே இயங்க வேண்டியுள்ளது. சந்தை தீவிரமடையும்போது, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு, வாழ்வாதார நெருக்கடி போன்றவற்றின் அழுத்தத்தால் தனிமனிதன் அந்நியமாகிவிடுகிறான். இவ்வாறு பாதிக்கப்படுகிற தனிமனிதனுக்கு வலதுசாரி அடையாள அரசியல் புகலிடமாகிவிடுகிறது. சந்தை அந்நியமாக்குகிறது : வலதுசாரி அடையாள அரசியல் அரவணைக்கிறது

சமூகம் பிளவுண்டு இருப்பதும், தனிநபர்கள் சிதறுவதும் வலதுசாரி அடையாள அரசியல் பேசும் வாய்வீச்சாளர்களுக்கு மதம் – சாதியை முன்வைத்து வன்முறைத்தீயை பற்றவைத்து பரவலாக்குவது எளிதாகிவிடுகிறது. இச்செயலானது மேலும் மேலும் சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
உலகமயமாக்கலின் காரணமாக உற்பத்தித்துறைகளில் இருந்துவந்த வேலைவாய்ப்புக்கள் பிறநாடுகளுக்கு பறிபோவதும், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டினை மிகவும் குறுகிய காலத்திற்குள் திரும்பப்பெறுவது போன்ற காரணங்கள் வலதுசாரி அடையாள அரசியலுக்கு வழிவகுப்பதாய் அமைகின்றன.
காலம்காலமாக சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகள், நவதாராளமயகாலத்தில் தங்களது அதிகாரம் வலுவிழக்கிறது என கருதும் போதும், குடிபெயர்வு மற்றும் பாலின சமத்துவம், எளிய மக்கள் முன்னேறுவது போன்றவற்றால் அச்சுறுத்தல் வரக்கூடும் என்பதினாலும், வலதுசாரி அடையாள அரசியலை முன்னெடுத்து தேசிய உணர்வூட்டி மீட்டுருவாக்க முயலுகின்றனர்.
வலதுசாரிகள் ஒரே சமயத்தில் அடையாள அரசியலினூடாக வீர தீரமாக தேசியம் பேசுகின்றனர். அதே சமயம் சந்தைமயக்கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி அந்நியர்களின் சுரண்டலுக்கு வழியமைத்துத் தருபவர்களாகவும் இருக்கின்றனர்.
நவதாராளமய வாதிகளுக்கும், வலதுசாரிஅடையாள அரசியலை முன்னெடுப்பவர்களுக்கும் அதிகாரமும் – செல்வமும் அதிகளவு தேவைப்படுகிறது. இதனை நிலை நிறுத்திக்கொள்வதற்கு தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகின்றனர். தேர்தலின் மூலம், ஒரே நேரத்தில் மதப்பெரும்பான்மை எனும் அடையாள அரசியலையும், தேசிய உணர்வையும், மதச்சிறுபான்மையினர் மீது வெறுப்பு, கார்ப்பரேட் அஜெண்டா ஆகியவற்றினை மக்களிடையே பரப்புரை ஆற்றுகின்றனர் இப்படியாக, மேற்கூறியவற்றைக் கொண்டு செல்வதற்கு அவர்கள் இருவித தந்திரங்களை கையாளுகின்றனர். 1. வெற்றுக்கூச்சல் (Rhetoric ) 2. வாய்வீச்சு (Demagogue ). இது மட்டுமின்றி, தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் ’ஒருவாக்கு-ஒருமதிப்பு’ எனும் உரிமையில் தலையிடவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.
வலதுசாரி,அடையாள அரசியலானது, வாக்காளப்பெருமக்களை ’பொது’ என்பதிலிருந்து பிரித்து, ’தனி’ எனச்சுருக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் பொருளாதாரம், அரசியல் சார்ந்த பிரச்சனைகள் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பொருத்தமற்றதாகிவிடுகிறது
உலகளாவிய அளவில் நவதாராளமயம் அமலான காலகட்டத்தில்(1980) இந்தியாவிலும் இந்துத்துவ அடிப்படைவாத அரசியல் கட்சி துவக்கப்பெற்று,தனது வலதுசாரி அடையாள அரசியலை முன்னெடுக்கிறது கடந்த நாற்பது வருடங்களில் அவர்களது பிளவுபடுத்தும் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்தால் –
- மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள, வெளிப்படைத்தன்மையுள்ள ஜனநாயகத்தூண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.
- மக்கள் நல அரசு,சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, பன்முகத்தன்மை, சமயசார்பின்மை, பொதுத்துறைகளின் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுப்பவர்களாக இருக்கின்றது.
- தேசிய-மாநில கட்சிகளை பிளவுபடுத்துவது, சிறுபான்மையினர் மீது வெறுப்பு, மதத்திலிருந்து என்றும் பிரிக்கமுடியாததாக உள்ள சாதி அரசியலை வளர்த்தெடுப்பதாக இருக்கின்றது.
- அண்டைநாடுகளுடன் பகைமை, போலிதேசிய உணர்வுகளைத் தூண்டி மக்களை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கின்றது.
- தேர்தலுக்கு முன்பும் – பின்பும் கலவரம் செய்வதில். குறியாய் இருப்பது
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்…

கார்ப்பரேட் மற்றும் வலதுசாரிஅடையாள அரசியலின் பிளவு வாத கருத்தியல்களை வெகு கச்சிதமாக மக்களிடையே கொண்டு செல்ல கார்ப்பரேட் காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அணையா விளக்காய் துணை நிற்கின்றன.
- கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக, எளிய மக்கள் எந்தெந்தவகையில் பயனடைந்திருக்கிறார்கள் என்று உறுதிபடக்கூறுவது சிரமம்.
- ஒருபக்கம் வேலைவாய்ப்பின்மை இன்னொரு பக்கம் பொருட்களின் விலை உயர்வு இவற்றின் காரணமாக சமத்துவமின்மை அதிகரித்து ஏழைமக்கள் மேலும் ஏழையாகி வருகிறார்கள்.
- சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதினால், நிலையான வளர்ச்சி என்பது பாதிக்கப்படுவதாக இருக்கின்றது.
இந்திய மக்களில், எண்பது சதவிகிதத்திற்கு மேல் ஏழைமக்களாகவே இருக்கின்றனர். இதில் சாதி – மத அளவில் பிளவு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் வேறு . இவற்றினுள் வலதுசாரி அடையாள அரசியலும் புகுந்து சமூகப்பதட்டத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
தேசத்தை ஆள்பவர்கள் விருப்பு வெறுப்பின்றி அனைத்துமக்களையும் ‘பொது’ என கட்டமைத்திடுதல் வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய முடியும். ஆனால், இங்கோ, மதப்பெரும்பான்மை எனும் அடையாளத்திற்கு முக்கியத்துவம் தந்தும், பிறரை ஒதுக்கி வைத்தும் கட்டமைக்கின்றனர்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனமானது சந்தையில் போட்டி (competition ) மற்றும் ஒப்பீடு (comparison) இவற்றினை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டு, முதலில் தங்களது லாபத்தை அதிகரித்துக்கொள்கிறது. பின்னர் பிற நிறுவனங்களை தம்முடன் இணைத்து கைப்பற்றிக்கொள்கிறது (Merger and acquisition ) அதன்பின்னர், அந்நிறுவனம் ஏகபோக தனியுரிமை கொண்டதாகிவிடுகிறது. கார்ப்பரேட்டுகள் கொண்டிருக்கும், இதேபோன்ற அணுகுமுறைகளை இங்குள்ள வலதுசாரி அடையாள அரசியல் பேசுகிற ஆட்சியாளர்களும், அவர்களது அரசியல் கட்சியும் செவ்வனே கடைப்பிடித்து வருவதைக்காண முடிகின்றது.. ஆட்சியிலும் – அரசியல் கட்சியிலும் கார்ப்பரேட் நிறுவனமய அணுகுமுறை .
இவர்களது நிறுவனமய சூழ்ச்சியால்-
- சமமற்ற சமூகமக்களிடையே, ’கல்வி – வேலைவாய்ப்பு – மருத்துவத்தில்’ சமூக நீதியை மறுத்துவிட்டு, ’போட்டி’யினை அனைவருக்கும் கட்டாயம் என ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டதினால், அனைத்து பின்தங்கிய மக்களும் மேற்கண்ட துறைகளில் மேலும் கீழ்நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயம்.
- அரசியல் பரப்பில், எதிர்கட்சிகளைச் சார்ந்த சட்டசபை-நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலது சாரி ஆட்சியாளர்களும் அவர்களது கட்சியும் முதலில் குதிரைபேரம் நடத்துகின்றனர். பிறகு விலைக்கு வாங்கிடுகின்றனர். ஆட்சி கைமாறிடுகிறது. இப்படியாக, பல மாநிலங்களை கைப்பற்றி, இறுதியில் ஏகபோக தனியுரிமைகொண்டவராகி விடுகின்றனர். கொரோனா தொற்றுக்காக நாடுமுழுக்க சட்டசபைகளும்-நாடாளுமன்றமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சமயத்திலும் கூட, ஆட்சிமாற்றம் எனும்போது மட்டும் சட்டசபைகள் விடியவிடிய இயங்குவதாக இருப்பது கவனிக்கத்தக்கது.
- சமூகப்பரப்பில், நாடு முழுக்க உள்ள பலவித சாதி அமைப்புகள், சாதித்தலைவர்கள் ஆன்மீக அமைப்புகள், சாதி அடையாள முத்திரை கொண்ட அரசியல் கட்சிகளை, கடந்த ஆறு ஆண்டுகளில் வலதுசாரி அடையாள அரசியல் கட்சிகள் தங்களுடன் இணைத்து கைப்பற்றிக்கொண்டதை இத்துடன் கவனத்தில் கொள்வது அவசியம்.
அரசியல்-சமூகம்-பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள், தனது சமூக உரிமை மற்றும் நலனுக்காக அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பது இயல்பு. ஆனால், தற்போது அதே அரசியல்-சமூகம்-பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி ஆதிக்கம் செலுத்துபவர்களும் கூட, வலதுசாரி அடையாள அரசியலினை கையிலெடுத்திருப்பது ஏற்கனவே பின்தங்கியுள்ளவர்களை மேலும் பின்னுக்குத்தள்ளவேயாகும்.
இறுதியாக, நவதாராளமயமும், வலதுசாரி அடையாள அரசியலும் சந்தைமயத்தினை முழுமையாக அமல்படுத்தும்போது, அது தவிர்க்கமுடியாமல், அரசியல்-சமூகம்-பொருளாதாரத்தினை கடுமையாக பாதிக்கிறது இதன் விளைவு, தனிமனிதன் மட்டுமல்ல அவர்கள் வழிபடும் கடவுளர்களும் கூட விற்பனைக்குரிய பண்டமாகிவிடுகின்ற நிலை..


சந்தைப் பொருளாதாரம் சமூகத்தில் செலுத்தி வரும் ஆதிக்கம் , நவ தாராளமயம் எத்தன்மையில் ஒருமைப்பாட்டைச் சிதைக்கிறது, இதனை அதிகார வர்க்கம் பயன்படுத்தி கொள்ளும் முறை முதலியவற்றை மிக நுட்பமாக பதிவு செய்து உள்ள எழுத்தாளுக்கு வாழ்த்துகள்