புலம்பல் – நேயா புதுராஜாஎன்ன இது தெரியவில்லை…
எப்படி வந்தது புரியவில்லை…
எப்ப போகும்…
இன்னும் எத்தனை போரோடு போகும்…
எதுவும் தெரியாது கண்கட்டி
விட்டாற் போல்…
நாடெல்லாம்
மரண ஓலங்கள் வரலாற்றில்
மட்டுமே படித்தோம்…
என்பதை மாற்றி…
இன்று கண்ணாலும் காதாலும் நிகழ்காலத்தில் காண்கிறோம்…
சேவைக்காக வயிற்றில் எட்டுமாதக் குழந்தையோடு வந்த மருத்துவரும்
மரணித்துப் போகிறார்..
இந்த உலகைப் பார்க்காத
அந்த ஜீவனிடத்தில் கைகூப்பி…
கண்ணீர் மல்க மன்னிப்பு
கேட்கும் மானுட மனங்கள்….
ஐந்து வயது மகனையும்..
அவனோடு இரண்டு மாதப் பெண் சிசுவையும் விட்டுச்சென்ற பெற்றோர்கள்…
சொந்தம் எதுவும் இன்றி
ஒரே நாளில் ஆதரவற்றவர்களாக மாறிப் போன அவலம் என்ன..
இராணுவ பணிக்கு நிகராக
இன்று யுத்தகளமாக மருத்துவமனைகள்…
பெற்ற தாய்க்கு மருத்துவ வசதிக்காக மருத்துவர் காலில் விழும்
மகனும் மகளும்….
நேற்று திரையில் பார்த்து
ரசித்த பிரபலங்கள் பல இன்று இல்லை…
கண்காணா தேசத்தில்…
தன் இணையைப் பறிகொடுத்துவிட்டு…
கண்ணால் கூட அந்தக் கடைசி
வழியனுப்புதலில் கூட இருக்க
முடியா நிலையை நினைத்து
அன்று முதல் அழுதுகூட தீர்க்காமல்…மௌனமான
அந்த பெண்…
எரிக்கக்கூட இடமில்லாமல்…
இருந்தாலும் பணம் இல்லாமல்..
கங்கையில் வீசப்பட்ட
பிணங்கள்…
உலகெல்லாம் பிராணவாயு
நிரம்பி இருக்க….
பல லட்சம் பேர் அதே
பிராணவாயுக்காக தவித்தபடி
மருத்துவமனைகளில்…
இயற்கை வாழ்வியலில்
உள்ளோரும்…
நவீன அறிவியலைத் துணைகொண்டோரும்…
பாரபட்சமில்லாமல் மண்ணுக்குள்…
இன்னும் எத்தனை ஓலங்களைக் கேட்க வேண்டுமோ…
என சுற்றமும் நட்பும்….
இன்று நீ,நாளை நானா…
என இதயத்தில் விழுந்த
அடிகளைத் தாங்காமல்..
அழும் மன ஓலங்களில்…
பீதியோடு நம் நாட்களை நகர்த்தலின் வலி…
கொடிது கொடிது…

நேயா புதுராஜா.