தனுகு
இவ்வளவு தொலைவு பயணித்து
எங்கு வேரூன்றப் போகிறாய்
எனக்கேட்டேன்
மந்தகாசம் பொங்கும்
தனுகு மரத்தின் விதை
சொன்னாள்
நான் காற்றில் பரவும் விதை
என் தொலைவை நீ அளக்க இயலாது
இது என் நிலம்
நான் இதன் தெய்வம்
நான் தான் இங்கு உண்ணிகள்
உதிரம் உறிஞ்சும் உழும் கழுத்தின் நுகத்தடி
நான் தான் நீர் இறைக்கும் சால் உருளை
நான் தான் அறுவடைநாள் விதைப் புற்றையின் கழுத்து
நான் தான் நன்றியுரைத்து தீபம் மிதக்கும் சித்திரைத் திருவிழாவின் கோவில் தெப்பம்
நான் தான் கடல் கடக்க உன் பாட்டன் செய்த கப்பலின்
மிதவை மரம்
நான் தான் வேலன் வெறியாடல்
ஆடியவனின் கட்டைப் பாதம்
பிறகு தெருக்கூத்தில்
ராவணனின் புஜச் சிறகு
ஆம்
நான் தான் கழுமரம் செய்யும் மரமும்
என் பெயரில் இருந்த ஒருத்தியின்
உடலே ஆயுதம்
எனக்கு இன்னொரு பெயர்
விவசாயி

