நாம்
நேசித்துக்கொண்டிருந்தோம்
நேசித்த பொழுதுகள்
நியாயங்களை
யாசித்த பொழுதும்
நேசத்தின் பச்சயம்
நீரின்றி உபவாசம் செய்தபோதும்
நேசித்த புரிதல்கள்
இணைப்பின்றிய காலசூன்யத்தில்
பிரவேசித்தபோதும்
நேசத்தின் பறவை
உயிர்க்கூட்டை விட்டு
ஊண் தேடிப்பறந்த போதும்
மீந்து கிடந்த நேசத்தின் பெரும்புன்னகை
சலனமற்ற ஓவியத்தை
வரைந்தபோதும்
நேசத்தின் ஆன்மா
மாயத்திரை சூடி
கம்பளிப்பூச்சியாய்ப் பலயுகங்கள் ஊர்ந்தபோதும்
நாம் நேசித்துக்கொண்டே
இருக்கிறோம்
ஆயினும்
நம் ஆதிநேசமானது
நிர்ப்பந்தமற்ற வெளியொன்றை
தேடியலைந்துகொண்டே இருக்கிறது!
Dr ஜலீலா முஸம்மில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
துல்லியமான வெளிப்பாடு. வார்த்தைகள் சுருங்கி நெளிந்து செல்கிரது. அழகு. வாழ்த்துகள்