இயற்பியல் நோபல் பரிசு 2௦26 – நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன் - ஜோசப் பிரபாகர் | 2026 Nobel Prize in Physics | Francis Halzen & IceCube Neutrino Observatory | www.bookday.in

நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன் – ஜோசப் பிரபாகர்

நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன்

– ஜோசப் பிரபாகர்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல்வாரம் என்றாலே அறிவியலை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் திக் திக் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். தனக்கு பிடித்த உச்ச நடிகருடைய படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்களைப்போல அறிவியலை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த வருடம் எந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும் என்று காத்திருப்பார்கள். அந்த வகையில் 2௦26 ஆம் வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் நோபல் பரிசுகள் அனைத்துமே மிக அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்பியல் நோபல் பரிசானது “நியூட்ரினோ” என்ற அடிப்படைத்துகள்கள் மூலம் சூரியனுக்கு அப்பால் தொலைதூரங்களில் நிகழும் பல்வேறு வான் நிகழ்வுகளை கண்டறியும் முறையை உருவாக்கியதற்காக அமெரிக்காவைச்சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சன்(Francis Halsen) என்ற இயற்பியல் அறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக்கண்டறியும் முறை என்பது அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட சாதனைக்கு ஒரு சரியான சான்று. பூமியின் தென்துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் “ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகம்” என்ற ஒரு ஆய்வகத்தை உருவாக்கி அதன் மூலம் நியூட்ரினோ துகள்களை கண்டறியும் ஒரு மிகச்சிறந்த வழிமுறையை ஹால்சன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கினர். இந்த ஆராய்ச்சிக்கு 5௦க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இயற்பியல் மற்றும் பொறியியல் அறிஞர்கள் பணியாற்றியுள்ளனர். இருந்தாலும் இந்தத்திட்டத்திற்கு கோட்பாட்டு ரீதியாக ஆரம்பவிதை போட்டவர் பிரான்சிஸ் ஹால்சன். அதுமட்டுமல்லாமல் இந்தத்திட்டத்தை ஆரம்பித்து முழுவதுமாக கட்டிமுடித்து முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நடக்கும் வரை கூடவே இருந்து வழிநடத்தியவர். இந்தப்பங்களிப்பிற்க்காகத்தான் பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2௦26 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் கடைசியாக 1992 ஆம் ஆண்டுதான் தனி ஒருவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களாக நோபல் பரிசு இரண்டு பேருக்கோ அல்லது மூவருக்கோதான் வழங்கப்பட்டிருகிறது. ஆனால் இந்த வருடம் பிரான்சிஸ் ஹால்சனுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியல் நோபல் பரிசு வென்றவர் 2026 பிரான்சிஸ் ஹால்சன் கல்வி: பட்டங்கள், PhD மற்றும் தகுதிகள் - இந்தியா டுடே
பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen)

பிரான்சிஸ் ஹால்சன் அடிப்படையில் ஒரு கோட்பாடு துகள் இயற்பியலாளர்(theoretical particle physicist). பெல்ஜியம் நாட்டில் பிறந்து அங்கேயே முனைவர் பட்டம் முடித்து பிறகு சிலகாலம் ஐரோப்பாவின் உள்ள செர்ன்(CERN) ஆய்வகத்தில் பணியாற்றினார். பிறகு 1977 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் (University of Wisconsin-Madison) பேராசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரை அங்கேயே பணியாற்றி வருகிறார்.

நியூட்ரினோ என்றால் என்ன?

இந்த வருட இயற்பியல் நோபல் பரிசின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நியூட்ரினோவை பற்றிய சில அடிப்படை அறிவியல் உண்மைகளையும், வரலாற்றுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையில் நியூட்ரினோ என்பது மின்தன்மை இல்லாத(electrically neutral) மிக மிகக்குறைந்த அளவு நிறையுள்ள(very feeble mass) ஒரு அடிப்படைத்துகள். மற்றெந்த துகள்களை விடவும் நியூட்ரினோ துகள் பிரபஞ்சம் முழுக்க நீக்கமற நிறைந்திருக்கிறது. இதன் முக்கியமான சிறப்பம்சம் என்பது இது பிரபஞ்சத்தில் உள்ள மற்ற எந்த ஒரு துகளோடும் அவ்வளவு எளிதில் வினை புரியாது. எடுத்துக்காட்டாக நமது நகத்தின் நுனி வழியாக ஒரு நொடிக்கு 65 மில்லியன் நியூட்ரினோக்கள் கடந்து வெளியேறுகின்றன, ஆனால் நம்மால் எதுவும் உணர முடியாது. இந்தப்பண்பின் காரணமாக இதைக்கண்டறிவது என்பது மிக மிக சவாலான விஷயம்.

ஏன் நியூட்ரினோ எதனோடும் எளிதில் வினை புரிவதில்லை?

நியூட்ரினோவுக்கு மின்தன்மை இல்லாததால் அதனால் மின்காந்த விசையை உணரமுடியாது. அதனால் ஒரு எலக்ட்ரானோ புரோட்டானோ அதனோடு எந்த வகையிலும் வினை புரியாது.

அதே போல் வலுவான அணுக்கரு விசையையும் உணர முடியாது. அதனால் அணுக்கருவுக்குள் சென்றாலும் நியூட்ரானும் நியூட்ரினோவை ஒன்றும் செய்ய முடியாது. நியூட்ரினோவின் நிறை கிட்டத்தட்ட சுழி ஆகையால் ஈர்ப்பு விசையும் ஒன்றும் செய்யாது. நியூட்ரினோ உணரும் ஒரே விசை மென் அணுக்கரு விசை(weak nuclear force) மட்டுமே. ஆனால் இந்த மென் அணுக்கரு விசையை உணர வேண்டுமென்றால் நியூட்ரினோவானது அணுக்கருவுக்குள் இருக்கும் பொருட்களோடு கிட்டத்தட்ட 10-18 மீட்டர் அளவுக்கு மிக மிக அருகில் வர வேண்டும்.  10-18 மீ எந்த அளவுக்கு சிறியது என்றால் பூஜ்ஜியத்திற்கு பிறகு புள்ளி வைத்து பதினேழு பூச்சியத்தை போட்டு பிறகு ஒன்று போட்டால் வரும் எண் தான் இது. எந்த அளவுக்கு சிறிய நீளம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அணுவுக்குள் இருக்கும் 99% பகுதி வெற்றிடமாகையால் நியூட்ரினோ உள்ளே நுழைந்து யாரும் இல்லாத மைதானத்தில் நுழைந்து வெளிவருவது மாதிரி எந்த ஒரு வினைபுரியாமல் வந்து விடும். அப்படி வினைபுரிய வேண்டுமானால் அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டானோடு அல்லது நியூட்ரானோடு நேருக்கு நேர் மோத வேண்டும். அப்படி நேருக்கு நேர் மோதும் நிகழ்தகவு மிகமிகக்குறைவு என்பதால் நியூட்ரினோ அவ்வளவு எளிதில் வினை புரியாது, பூமியின் ஒரு பகுதி வழியாக நுழைந்து பூமியின் மொத்த விட்டம் முழுக்க பயணித்து எங்குமே வினை புரியாமல் அடுத்து பகுதியில்  வெளிவரும் திறன் படைத்தவை இந்த நியூட்ரினோக்கள்.

நியூட்ரினோக்கள் எங்கே உருவாகின்றன?

  • எங்கெல்லாம் அணுக்கரு இணைவு வினை அல்லது அணுக்கரு சிதைவு வினை நடக்கிறதோ அங்கெல்லாம் நியூட்ரினோக்கள் அதிகப்படியாக வெளியேறுகிறது. உதாரணத்திற்கு சூரியனின் மையத்தில் அணுக்கரு இணைவு வினை நடப்பதால் சூரியனிலிருந்து எண்ணற்ற நியூட்ரினோக்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன.
  • பூமியில் அணுக்கரு ஆராய்ச்சி நிலையங்களில்(Nuclear reactors) அணுக்கரு பிளவு வினை நிகழ்வதால் அங்கேயும் நியூட்ரினோக்கள் எண்ணற்ற அளவில் வெளிப்படும்.
  • அணுக்கரு ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து வெளிவருவதால் இது ஆபத்தானது என்று நினைக்கக்கூடாது. இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சாதுவான யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத ஒரு துகள் என்றால் அது நியூட்ரினோக்கள்தான்.
  • சூப்பர் நோவா பெருவெடிப்புகளிலும், பற்றி எரியும் கேலக்சியாலும்(active galaxy ). நியூட்ரான் விண்மீன்களின் இணைவுகளிலும் வெளிவருகிறது.
  • செர்ன் போன்ற துகள் முடுக்கி ஆய்வகங்களில் அதி வேகம் கொண்ட புரோட்டான்கள் அதிநிறை கொண்ட தனிமங்களோடு மோத விடும்போது நியூட்ரினோக்கள் உருவாகின்றன. நியூட்ரினோவைப்பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் இங்குதான் செய்யப்படுகின்றன.
  • பூமியின் மையத்தில் உள்ள கதிரியக்கத்தனிமங்கள் சிதையும்போது நியூட்ரினோக்கள் உருவாகின்றன. இதை ஜியோ நியூட்ரினோக்கள்(Geo neutrinos) என்றழைக்கிறோம்.

நியூட்ரினோ எவ்வாறு கண்டறியப்பட்டது?

நியூட்ரினோ கண்டறியப்பட்ட விதமே ஒரு சுவாரசியமான வரலாறு. 193௦களில் அணுக்கரு குறித்த ஆராய்ச்சிகள் நிறைய நடைபெற்றுக்கொண்டிருந்தன. அணுக்கருவுக்குள் இருக்கும் நியூட்ரான் துகள் புரோட்டான துகள்களாக மாறும் போது ஒரு எலக்ட்ரான வெளிவருகிறது, அப்படி வெளிவரும் எலக்ட்ரானின் ஆற்றலை அளந்து பார்க்கும்போது ஒரு சிக்கலை கண்டறிந்தனர். அதாவது எதிர்பார்த்த ஆற்றலை விட எலக்ட்ரான்களின் ஆற்றல் குறைவாக இருந்தது. ஏனென்றால் இயற்பியலில் மிக முக்கியமான ஒரு கோட்பாடு ஆற்றல் அழிவின்மை கோட்பாடு(conservation of energy). இதன்படி எந்த ஒரு வினைக்கு முன்பும் இருக்கும் மொத்த ஆற்றலும் வினைக்கு பின்பு இருக்கும் மொத்த ஆற்றலும் சமமாக இருக்க வேண்டும், ஆற்றல் எங்கேயும் மறையவும் முடியாது. புதிதாக தோன்றவும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த பீட்டா சிதைவில் எலக்ட்ரான்களில் எதிர்பார்த்த ஆற்றலை விட குறைவாக இருந்ததால் மீதமுள்ள ஆற்றல் எங்கே போனது என்று அறிஞர்கள் குழம்பிப்போனர்.

புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் நீல்ஸ் போர் கூட ஒரு வேளை அணுக்கரு இணைவு வினையில் “ஆற்றல் அழிவின்மை விதி” தோற்றுப்போகிறதோ என்ற அளவுக்கு சிந்திக்க தொடங்கினார். அந்த நேரத்தில் பவுலி(Pauli) என்ற ஒரு முக்கியமான இயற்பியல் அறிஞர் “ஆற்றல் அழிவின்மை” தோற்றுப்போகவில்லை. அந்த மீதமுள்ள ஆற்றலை வேறோ ஏதோ நமக்குத்தெரியாத ஒரு துகள் எடுத்துச்செல்கிறது என்று கருதுகோளாக முன்வைத்தார். அதே போல் அதை ஆய்வுக்கூடத்தில் கண்டறிவது மிகக்கடினம் என்றும் இப்படிக்கூறுவதற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பின்னாளில் இயற்பியல் அறிஞர் என்ரிகோ பெர்மி இந்தத்துகளுக்கு “நியூட்ரினோ” என்ற பெயரை வைத்தார். “நியூட்ரினோ” என்றால் இத்தாலிய மொழியில் “மிகச்சிறிய மின்தன்மை இல்லாத துகள்” என்று பொருள்.

நியூட்ரினோ துகள் அணுஉலை ஆய்வகத்தில் கண்டுபிடிப்பு:  

பவுலி தனது “நியூட்ரினோ” கருதுகோளை 193௦இல் சொன்னபிறகு கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கழித்து அதாவது 1956 ஆம் ஆண்டுதான் ரெயினஸ் (Reines) மற்றும் கவான்(Cowan) என்ற இரு இயற்பியல் அறிஞர்கள் அணுக்கரு பிளவு உலை ஆய்வகத்தில்(Nuclear Reactor) நியூட்ரினோவின் இருப்பை உறுதி செய்தனர். இதற்காக அவர்கள் மிகபெரும் பரப்பளவுள்ள

தண்ணீர்த்தொட்டியையும் நிறை கண்டுபிடிப்புக் கருவிகளை(மொத்தம் பத்து டன் நிறை) அணுக்கரு பிளவு நடக்கும் இடத்துக்கு மிக அருகில் வைத்து தொடர்ச்சியாக ஐந்து மாதம் ஆய்வு செய்துதான் இதை நிரூபித்தனர். ஏன் ஐந்து மாதங்கள்? ஏன் பத்து டன் அளவுக்கு கண்டுபிடிப்புக்யகருவிகள்?.

இதை ஒரு எளிதான எடுத்துக்காட்டு மூலம் விளங்கிக்கொள்ளலாம். கடலில் ஒரு அபூர்வ மீனை நாம் பிடிக்க வேண்டும். சாதாரணமாக பயன்படுத்தும் வலையை பயன்படுத்தினால் அந்த மீன் வலையில் விழாது. வலையை பெரியதாக வைத்தால் அந்த மீன் மாட்டுவதற்கான நிகழ்தகவு அதிகம். அதே போல் அந்த வலையை ஒரு நாளில் வைப்பதை விட பல நாள்கள் வைத்திருந்தால் அந்த அபூர்வ மீன் பிடிபடுவதற்கான நிகழ்தகவு இன்னும் அதிகமாகுமல்லவா!. அதே காரணம்தான் இங்கேயும். அணுக்கரு பிளவு நடக்கும் போது கோடி கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் வெளிவந்தாலும் நியூட்ரினோ அவ்வளவு எளிதில் எதனோடும் வினை புரியாததால் கோடி கோடியாக வரும் நியூட்ரினோக்களில் ஏதோ ஒன்றிரண்டுதான் அங்கு வைத்திருக்கும் உணர்விகளில்(light sensors) பதிவாகும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.  அதே போல் எந்த அளவுக்கு பெரிய வடிவத்தில் உணர்விகளை நாம் வைக்கிறோமோ அந்த அளவுக்கு நியூட்ரினோக்கள் தான் போகும் வழியில் இருக்கும் ஏதேனும் ஒரு அணுக்கருவோடு வினை புரிந்து தனது இருப்பைக்காட்டுவதற்கான நிகழ்தகவு அதிகம்.

ரெயினஸ் மற்றும் கவான் இருவரும் நியூட்ரினோக்களை கண்டுபிடித்திருந்தாலும் 1995 இல் ரெயினஸுக்கு மட்டும் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கவான் 1974 இலேயே இறந்து விட்டார். இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை.

மூன்று விதமான நியூட்ரினோக்கள்:

பின்னாளில் “நியூட்ரினோ” என்பது ஒரே ஒரு துகள் அல்ல. அதில் மூன்று வகை என்று கண்டறியப்பட்டது.

  1. எலக்ட்ரான் நியூட்ரினோ (electron neutrino),
  2. மியூயான் நியூட்ரினோ (muon neutrino)
  3. டவ் நியூட்ரினோ(tau neutrino).

இதில் என்னவொரு விந்தை என்றால் ஒன்று இன்னொன்றாக மாறிக்கொள்ளும். அதாவது எலக்ட்ரான் நியூட்ரினோ சில நேரங்களில் மியூயான் நியூட்ரினோவாகவோ, அல்லது டவ் நியூட்ரினோவாகவோ மாறிக்கொள்ளும். இந்தப்பண்பை நியூட்ரினோ அலைவு(Neutrino oscillation) என்றழைக்கிறார்கள். பின்னாளில் இந்த நியூட்ரினோ அலைவைக்கண்டறிந்த அறிஞர்களுக்கு 2௦15 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கூடுதலாக இந்த எல்லா நியூட்ரினோக்களும் அதனதன் எதிர் நியூட்ரினோக்களும்(anti electron neutrino, antimuon neutrino, anti tau neutrino) உண்டு.

மேலும் நியூட்ரினோக்கள் இயற்கையாக உருவாகும் விதத்தை வைத்தும் இன்னொரு வகைப்பாடு இருக்கிறது.

1.சோலார் நியூட்ரினோ(solar neutrino)

2.வளிமண்டல நியூட்ரினோ(atmospheric neutrino)

3.காஸ்மிக் நியூட்ரினோ (cosmic neutrino)

1.சோலார் நியூட்ரினோ(solar neutrino): இது பெரும்பாலும் சூரியனிலிருந்து வருகிறது. இது பெரும்பாலும் எலக்ட்ரான் நியூட்ரினோ வகையை சார்ந்தது. சூரியனின் மையத்தில் நடக்கும் அணுக்கரு இணைவு வினையில் புரோட்டான் நியூட்ரானாக மாறும் நிகழ்வில் எலக்ட்ரான் அணுக்கருவை விட்டு வெளிவரும்போது எலக்ட்ரான் நியூட்ரினோ வெளிவருகிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் இந்த நியூட்ரினோக்களின் ஆற்றல் மெகா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு இருக்கும்(MeV=106eV). சூரியனிலிருந்து வெளிவரும்போது எலக்ட்ரான் நியூட்ரினோவாக பூமிக்கு வந்தடையும்போது வரும் வழியில் மியூயான் நியூட்ரினோவாகவோ அல்லது டவ் நியூட்ரினோவாகவோ மாறிவிடும். ரெயின்ஸ் மற்றும் கவான் 1956 இல் கண்டறிந்தது எலக்ட்ரான் நியூட்ரினோதான். ஆனால் அவர்கள் கண்டறிந்தது அணு உலை ஆய்வகத்தில்.

  1. வளிமண்டல நியூட்ரினோ(atmospheric neutrino) அண்டவெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள்(அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்கள், ஹீலியம் அணுக்கருக்கள்) வளிமண்டலத்தில் உள்ள வாயு மூலக்கூறுகளோடு மோதும்போது மியூயான் துகளும் அதோடு சேர்ந்து மியூயான் நியூட்ரினோவும், எலக்ட்ரான் நியூட்ரினோவும் வெளிப்படுகிறது.

இதில் டவ் நியூட்ரினோ உருவாவது மிகவும் குறைவு. இந்த வளிமண்டல நியூட்ரினோக்களின் ஆற்றல் டெரா எலக்ட்ரான் வோல்ட் (TeV = 1012eV) அளவுக்கு இருக்கும்.

  1. காஸ்மிக் நியூட்ரினோ(cosmic neutrino): இந்த வகை நியூட்ரினோக்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பால் அதிக ஆற்றல் கொண்ட கேலக்சி மையத்திலிருந்தும், சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்புகளிலிருந்தும், நியூட்ரான் விண்மீன் இணைவுகளிலிருந்தும் வெளிப்படுகிறது.

இதில் எலக்ட்ரான் நியூட்ரினோ, மியூயான் நியூட்ரினோ, டவ் நியூட்ரினோ என அனைத்தும் கலந்த கலவையாகத்தான் இருக்கும். காஸ்மிக் நியூட்ரினோக்களின் ஆற்றல் பெட்டா எலக்ட்ரான் வோல்ட்(PeV=1015eV) அளவுக்கு இருக்கும். இந்த அளவுக்கு ஆற்றல் கொண்ட துகளை பூமியில் உள்ள எந்த வகை துகள் முடுக்கியாலும் உருவாக்க முடியாது. இயற்கையிலேயே உருவாகும் இந்த வகை நியூட்ரினோக்களை எவ்வாறு கண்டறிவது என்பதுதான் 196௦ மற்றும் 197௦ களில் துகள் இயற்பியல் ஆராய்ச்சியின் முக்கியப்பணியாக இருந்தது.

நியூட்ரினோ வானவியல்: (Neutrino Astronomy)

1987 ஆம் ஆண்டு முதல் முதலாக SN1987A என்ற சூப்பர் நோவா வெடிப்பிலிருந்து வந்த நியூட்ரினோக்கள் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சூப்பர் நோவா வெடிக்கும் போது 99% சதவிகித ஆற்றலை நியூட்ரினோக்கள் எடுத்துச்செல்லும். மிச்சமுள்ள 1% ஆற்றல்தான் காமா கதிர்களாகவோ, எக்ஸ்கதிர்களாகவோ அல்லது கண்ணுறு ஒளியாக வெளிவரும். காமா கதிர்களாக இருந்தாலும், எக்ஸ்கதிர்களாக இருந்தாலும், கண்ணுறு ஒளியாக இருந்தாலும் வரும் வழியில் உள்ள பொருட்களோடு வினை புரிகிறது. ஆனால் நியூட்ரினோக்கள் அது வரும் வழியில் கிட்டத்தட்ட அப்படி எந்த வினையும் புரிவதில்லை. அதனால் சூப்பர் நோவா பெருவெடிப்பிலிருந்து காமா கதிர்கள், கண்ணுறு ஒளி நமது பூமியை வந்தடைவதற்கு முன்னதாகவே  நியூட்ரினோக்கள் நம்மை வந்தடைகிறது. (நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிப்பதாக கருதிக்கொள்ளக்கூடாது). இப்படி நியூட்ரினோக்கள் முன்னரே வந்தடைவதால் உலகெங்கும் உள்ள மற்ற எக்ஸ்ரே தொலைநோக்கி, கண்ணுறு ஒளியை காணும் தொலைநோக்கிகளை நியூட்ரினோக்கள் வந்த திசையை நோக்கி திருப்ப சொல்லி கூடுதல் பரிசோதனைகள், அல்லது தகவல்களை சேகரிக்க முடியும். எனவே நியூட்ரினோக்கள் எதிரி நாட்டு படை ஊருக்குள் வருமுன் தகவல் சொல்லும் ஒற்றன் போல செயல்படுகிறது.

மேலும் காஸ்மிக் கதிர்கள்(புரோட்டான்கள், ஹீலியம் அணுக்கருக்கள்) சூரியக்குடும்பத்திற்கு வெளியே தொலைதூரத்திலிருந்து வரும்போது பூமியை சுற்றியிருக்கும் காந்தப்புலத்தால் அதன் பாதை வளைந்து நெளிந்து பூமிக்கு வருகிறது. இதனால் இந்த காஸ்மிக் கதிர்கள் எந்தத்திசையில் இருக்கும் சூப்பர் நோவா பெருவெடிப்பில் உருவானது அல்லது எந்த பல்சார் விண்மீன்களிலிருந்து வெடித்து வந்தது அதன் உண்மையான திசை என்ன என்று கண்டறிவது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நியூட்ரினோக்கள் எந்த சூப்பர் நோவா பெருவெடிப்பில் உருவானதோ அதே திசையில் இருந்து ஒரே நேராக எங்கும் வழிமாறாமல் பூமிக்கு வந்து சேர்கிறது. மற்ற ஒளியைப்போல நட்சத்திர தூசுக்களோடு(interstellar dust) வினை புரிவதில்லை. மேலும் நியூட்ரினோக்களுக்கு மின்தன்மை இல்லாததால் காஸ்மிக் கதிர்கள் போல் பூமியை சுற்றியுள்ள காந்தப்புலத்தாலோ அல்லது சூரியனின் காந்தப்புலத்தாலோ பாதிக்கப்படுவதில்லை. இதனால் நியூட்ரினோ ஒரு மிகச்சிறந்த பிரபஞ்ச செய்தி சொல்லியாக (cosmic messenger) இருக்கிறது.

(இங்கே படத்தில் P என்பது ப்ரோட்டான், – என்பது காமா கதிர்கள்,  – நியூட்ரினோ. ப்ரோட்டான்கள் காந்தப்புலத்தால் வளைந்து நெளிந்து வருகிறது. காமா கதிர்கள் நட்சத்திர தூசுக்களால் தடைபடுகிறது. ஆனால் நியூட்ரினோ நேரடியாக வருகிறது)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை விண்மீன்களிலிருந்து வரும் கண்ணுறு ஒளியின் மூலம் நாம் பல்வேறு அறிவியல் உண்மைகளை புரிந்து கொண்டோம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரேடியோ அலைகள், எக்ஸ்-ரே கதிர்கள், காமா கதிர்கள் கூட விண்மீன்களிலிருந்தும், சூப்பர் நோவா வெடிப்புகளிலிருந்தும் வரும் என்றும் அறிந்து கொண்டோம். ஆனால் இப்போது நாம் சூப்பர் நோவா வெடிப்பு, கதிர்வீசும் கேலக்சி(active galacty) போன்றவற்றிலிருந்து வரும் நியூட்ரினோக்களை ஆராய்வதன் மூலம் பல்வேறு உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்.

எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு தகவல் அறிந்தால் எக்ஸ்ரே வானவியல்(X-ray astronomy) என்கிறோம். விண்மீன்களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் மூலம் நடக்கும் ஆய்வுத்துறையை ரேடியோ வானவியல்(radio astronomy) என்கிறோம். அதே போல் சில ஆணடுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஈர்ப்பு அலைகள் சார்ந்து நடக்கும் ஆராய்ச்சியை ஈர்ப்பு அலை வானவியல்(Gravitational wave astronomy) என்கிறோம். இதே போல் நியூட்ரினோக்களை வைத்து வானத்தில் உள்ள பொருட்களின் பண்புகளை ஆராயும் புதிய துறையை “நியூட்ரினோ வானவியல்”(neutrino astronomy) என்று அழைக்கிறோம். இந்த நியூட்ரினோ வானவியல் துறைக்கு பிரான்சிஸ் ஹால்சனின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. தற்போது ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இந்த எல்லா வானவியலையும் சேர்த்து பல்செய்தி வானவியல்(multimessanger astronomy) என்று அழைக்கிறார்கள். மிக அதிக வாய்ப்புள்ள ஆராய்ச்சித்துறை இது.

நியூட்ரினோவை எவ்வாறு கண்டறிவது?

இது வரை நியூட்ரினோவை பற்றிய சில அடிப்படை உண்மைகளை பார்த்தோம். நியூட்ரினோவை எவ்வாறு கண்டறிவது? உண்மையில் நியூட்ரினோவை நேரடியாக கண்டறிய முடியாது. அது ஏதாவது இன்னொரு துகளோடு வினை புரிந்து மியூயான், டவ்வான், எலக்ட்ரான் போன்ற துகள்களையும் ஒளியையும் உண்டாக்கும். அப்படி உண்டாக்கப்பட்ட துகள்களையும், ஒளியையும் கண்டறிவதன் மூலமே அது என்னவிதமான  நியூட்ரினோ என்று கண்டறிய இயலும். ஆனால் நியூட்ரினோ அவ்வளவு எளிதாக வினை புரியாததால் இதைக்கண்டறிய உருவாக்கும் வழிமுறையும் அவ்வளவு எளிதல்ல. ஆரம்ப காலத்தில் (அதாவது 196௦களின் இறுதியில்) அதிக கன அளவுள்ள அதே நேரத்தில் பரந்து விரிந்த மிகப்பெரிய தண்ணீர் பரப்பை நியூட்ரினோவை கண்டறிய பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் பரப்பில் வழியாக உள்நுழையும் நியூட்ரினோக்கள் கோடிக்கணக்கான நீர் மூலக்கூறில் ஏதேனும் ஒன்றோடு வினைபுரிந்து சில கூடுதல் துகள்களையும் ஒளியையும் உருவாக்கும். அப்படி உருவாக்கப்ப்பட்ட துகள் நியூட்ரினோ எந்தத்திசையில் வந்ததோ அதே திசையிலேயே செல்லும். அந்த தண்ணீர்ப்பரப்பை சுற்றி வைக்கப்பட்டுள்ள உணர்விகளை பயன்படுத்தி இந்த ஒளியையும், அங்கு உருவாக்கப்பட்ட துகள்களையும் கண்டறிவதன் மூலம் நியூட்ரினோவின் இருப்பை உறுதிப்படுத்தி வந்தனர். ஆனால் நீரை பயன்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. முதலில் நீர் மிக மிகத்தூய்மையானதாக இருக்க வேண்டும். தூய்மையான நீரைக்கொண்ட பெரும்பரப்பை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அப்படியே உருவாக்கினாலும் அவ்வளவு தண்ணீரை பிடிப்பதற்கான கொள்கலனை உருவாக்கி அதை பராமாரிப்பது அடுத்த சிக்கலான பணியாக இருந்தது.

எடுத்துக்காட்டாக ஜப்பானில் ஒரு மலைக்கடியில் ஒரு கி.மீ ஆழத்தில் உருளை வடிவில் மிகப்பெரிய தண்ணீர் டேங்க்கை அமைத்திருக்கிறார்கள். இதன் விட்டம் 39 மீட்டர், உயரம் 42 மீட்டர். கிட்டத்தட்ட 5௦,௦௦௦ டன் அளவுக்கு மிக மிகத்தூய்மையான நீரை இதில் நிரப்பி இதை சுற்றி ஒளிஉணரும் உணர்விகளை பொருத்தி நியூட்ரினோ ஆய்வகமாக பயன்படுத்துகிறார்கள். இதன் பெயர் super-kamiokonde neutrino observatory இதை பராமரிக்க ஆகும் ஆட்கள் செலவும், பொருட்செலவும் நாம் புரிந்து கொள்ளலாம்.

1980 களில் இறுதியில் கடல் நீரை பயன்படுத்தலாம் என்ற யோசனை வநதது. இந்தத்திட்டத்திற்கு DUMAND(Deep Underwater Muon and Neutrino Detector) என்று பெயர். ஹவாய் தீவு அருகில் உள்ள கடற்கரை ஓரத்தில் 4800 மீட்டர் ஆழத்தில் நியூட்ரினோக்களை கண்டறியும் உணர்விகளை சரம்போல தொங்க விட்டும் ஆராய்ந்து வந்தனர். ஆனால் இங்கே வேறு சில சிக்கல்கள் எழுந்தன. நாம் ஏற்கெனெவே பார்த்தபடி நியூட்ரினோக்களை நேரடியாக கண்டறியமுடியாது. அது இன்னொரு பொருளோடு வினை புரிந்து சில துகள்களையும் ஒளியையும் உருவாக்கும். கடலில் இருக்கும் பல்வேறு மீன்கள் இயற்கையாகவே வெவ்வேறு வண்ணங்களில் ஒளியை வெளியிட்டுக்கொண்டே (bioluminescence) இருக்கிறது. இந்த ஒளியானது அதிக பிரகாசமாக இருப்பதால் நியூட்ரினோ வினைமூலம் உருவாகும் ஒளியை கண்டறிவது மிகச்சவாலான பணியாக இருந்தது. அடுத்ததாக கடலுக்கடியில் சில தனிமங்கள் (பாஸ்பரஸ்-40) இயற்கையாகவே ரேடியோ கதிர்வீச்சையும் ஒளியையும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவும் ஒரு சிக்கல். எனவே நியூட்ரினோ குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் அறிஞர்கள் வேறு ஏதேனும் புதிய முறை இருக்கிறதா என்று தேடி வந்தனர். இந்த நேரத்தில்தான் பிரான்சிஸ் ஹால்சன் உள்ளே வருகிறார்

பிரான்சிஸ் ஹால்சன் 1988 ஆம் ஆண்டு கன்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அங்கே வந்த இரஷ்யாவை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகளில் நியூட்ரினோ வினைபுரியும்போது உருவாகும் ரேடியோ அலைகளை கண்டறியும் திட்டத்தை உருவாக்குவதாக கேள்விப்பட்டார். பிரான்சிஸ் ஹால்சனுக்கு உடனே பொறி தட்டியது. நாம் ஏன் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகளை பயன்படுத்தி நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கக்கூடாது என்று யோசித்தார். ஆனால் இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கும் ரேடியோ அலை வழிமுறை  அல்லாமல் புதுவிதமான வழிமுறை ஒன்றை யோசித்தார். அதன் பெயர் “செரன்கோவ் கதிர்வீச்சு முறை(Cherenkov Radiation Method)”.

செரன்கோவ் கதிர்வீச்சு முறை என்றால் என்ன?

நியூட்ரினோவில் மூன்று வகை இருந்தாலும் பிரான்சிஸ் ஹால்சனின் முக்கிய நோக்கம் சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வரும் காஸ்மிக் நியூட்ரினோக்களைக் கண்டறிவதே. காஸ்மிக் நியூட்ரினோக்களின் ஆற்றல் பூமியில் உள்ள செர்ன் ஆய்வகத்தில் உள்ள உச்சபட்ச துகள் முடுக்கிகளால் உருவாக்கப்படும் ஆற்றலை விட மிக அதிகம்(பெட்டா எலக்ட்ரான் வோல்ட்). மேலும் சோலார் நியூட்ரினோ மற்றும் வளிமண்டல நியூட்ரினோக்களின் ஆற்றலை விட இந்த காஸ்மிக் நியூட்ரினோக்களின் ஆற்றல் மிக அதிகம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட செர்ன் போன்ற துகள் முடுக்கிகளை விட பிரபஞ்சத்தின் வெகு தூரத்தில் இருக்கும் கேலக்சி மற்றும் சூப்பர் நோவாக்கள் பல ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த துகள் முடுக்கிகளாக(cosmic accelerators) செயல்படுகிறது. இந்த காஸ்மிக் நியூட்ரினோக்கள் பனிக்கட்டிகளுக்குள் நுழைந்து அங்கு இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஏதேனும் ஒரு அணுக்கருவோடு இணைந்து மியூயான் மற்றும் எலக்ட்ரான் அல்லது டவ்வான்(tauon) துகள்களை உருவாக்குகிறது. இந்தத்துகள்கள் பனிக்கட்டிக்குள் ஒளியை விட வேகமாக பயணிக்கும். அதாவது பனிக்கட்டிக்குள் செல்லும் ஒளியின் வேகத்தை விட இந்த மியூயான் போன்ற துகள்களின் வேகம் கொஞ்சம் அதிகம். இப்படி ஒரு துகள் ஒளியை விட ஒரு பொருளுக்குள் அதிக வேகத்தில் பயணித்தால்  அதன் பின்னால் நீல நிறத்தில் ஒளி உருவாகும். இந்த நீல நிறஒளியைத்தான் நாம் செரன்கோவ் கதிர்வீச்சு(Cherenkov Radiation) என்றழைக்கிறோம். அதாவது இந்தத்துகள்கள் முன்னால் செல்ல செல்ல நீல நிற ஒளி பின்னால் கூம்பு வடிவத்தில்(cone of blue light) செல்லும். கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக சூப்பர் சானிக் ஜெட் போன்ற விமானங்கள் ஒலியின்(sound) வேகத்தை விட அதிக வேகம் செல்பவை. அவை முன்னே செல்லும்போது அது செல்லும் ஒலியானது பின்னால் செல்லும். அதே போல் தான் இந்த செரன்கோவ் கதிர்வீச்சும். இந்த செரன்கோவ் கதிர்வீச்சை சரியான முறையில் பதிவு செய்வதன் மூலம் என்ன மாதிரியான நியூட்ரினோக்கள் உருவானது, எந்தத்திசையில் இருந்து வந்தது. என்ன ஆற்றலோடு வந்தது என அனைத்தும் கண்டறிய முடியும். இந்த முறையைத்தான் ஹால்சன் அண்டார்டிகா பனிக்கட்டிக்குள் செய்யலாம் என்று முடிவு செய்தார்.

அண்டார்டிகாவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் யோசனை:

1988 ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஹால்சனும் அவரது நண்பருமான லியோனார்டு இருவரும் சேர்ந்து அண்டார்டிகாவில் ஏற்கெனவே அங்கே இருக்கும் ஒரு அறிவியல் ஆய்வகத்துக்கு அருகில் பூமியில் புதைந்துள்ள மிகப்பெரிய அதாவது கி.மீ கன பருமனுள்ள அளவு பனிக்கட்டியை நியூட்ரினோ ஆய்வகமாக உருவாக்கும் திட்டத்தை அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் அமைப்பிற்கு(National Science Foundation-NSF) சமர்ப்பித்தனர்.

அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரும் பனிக்கட்டி பாளத்தை நியூட்ரினோ உணர்வியாக பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.

  • மற்ற இடங்களில் உள்ள தண்ணீர் பரப்பை சார்ந்த ஆயவகத்தை பராமரிப்பது போன்ற பராமரிப்பு சிக்கல் இல்லை. மேலும் நாம் வேண்டிய அளவுக்கு மிகப்பெரிய பனிப்பாளத்தை பயன்படுத்தலாம். ஆனால் தண்ணீர் சார்ந்த நியூட்ரினோ ஆய்வகங்களில் தண்ணீர் பரப்பை அதிகப்படுத்துவதில் மிகப்பெரிய பொருட்செலவும், பராமரிப்பு செலவும் அதிகம்.
  • கடல் நீரில் இருக்கும் இயற்கை ஒளி உமிழும் உயிரினங்களும் இங்கு இல்லை. அதேபோல் கடல் நீரில் இருக்கும் கதிரியக்கத்தனிமங்களின் கதிர்வீச்சு சிக்கலும் பனிக்கட்டிப்பாளத்தில் பெருமளவில் இல்லை.
  • அண்டார்டிகாவில் நிலநடுக்கம், புயல் போன்ற சிக்கல்கள் இல்லை.
  • அங்கே ஏற்கெனவே அமெரிக்காவின் ஒரு அறிவியல் ஆய்வகம் ஒன்று வேறு சில ஆராய்ச்சிகளுக்காக பயன்பாட்டில் இருந்தது. அங்கே இருக்கும் கட்டமைப்பை நாம் இந்த நியூட்ரினோ ஆய்வுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை எல்லாம் விட மிக முக்கியமான ஒரு நன்மை என்னவென்றால் பூமிக்கு வரும் நியூட்ரினோக்களில் பெரும்பாலானவை சோலார் நியூட்ரினோவும், வளிமண்டல

  • நியூட்ரினோவும்தான். மிகச்சிறிய எண்ணிக்கையில்தான் காஸ்மிக் நியூட்ரினோக்கள் வருகின்றன. பூமியின் தென்துருவமான அண்டார்டிகாவில் இந்த ஆய்வகத்தை அமைக்கும்போது பூமிக்கு வரும் நியூட்ரினோக்கள் வட துருவம் வழியாக உள்நுழைந்து பூமியின் மொத்த தடிமனையும் கடந்து கடைசியாக தென்துருவத்திற்கு வர வேண்டும். இப்படி வரும் வழியிலேயே குறைந்த ஆற்றல் உள்ள சோலார் நியூட்ரினோ மற்றும் வளிமண்டல நியூட்ரினோக்கள் வடிகட்டப்பட்டு அதிக ஆற்றல் உள்ள காஸ்மிக் நியூட்ரினோக்கள் தென்துருவத்தின் பனிக்கட்டி ஆய்வகத்திற்கு வரும் வாய்ப்பு அதிகம். அதாவது பூமியின் தடிமனை தேவையில்லாத நியூட்ரினோக்களை வடிகட்டும் ஒரு இயற்கை வடிகட்டியாக(natural filter) பயன்படுகிறது.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நியூட்ரினோக்களை உணரும் ஒளி உணர்விகளை கிலோ மீட்டர் ஆழமுள்ள பனிக்கட்டிக்குள் துளையிட்டு புதைப்பது என்பது பொறியியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் சிக்கலான காரியம் என அனைவரும் உணர்ந்தே இருந்தனர். எனவே ஹால்சன் இதற்கு முன்னோட்டமாக சில பரிசோதனைகளை செய்து பார்த்தார். முதலாவதாக ஏற்கெனவே கிரீன்லாந்தில் இருக்கும் இருக்கும் ஆழ்குழிகளில்(bore holes) ஒளிப்பெருக்கி குழாய்களை(photomultiplier tubes) இறக்கி நியூட்ரினோக்கள் உருவாக்கும் செரன்கோவ் கதிர்வீச்சை கண்டறிய முடிகிறதா என்று சோதித்து பார்த்தார். அதில் ஓரளவு வெற்றி பெற்றதும் அடுத்து அண்டார்டிகாவில் ஒரு கி,மீ ஆழத்துக்கு பனிக்கட்டி பாளத்துக்குள் துளையிட்டு ஒளிப்பெருக்கி உணர்விகள் கொண்ட கண்ணாடிக்குடுவைகளை(Digital Optical module) சரம் சரமாக மேலிருந்து தொங்கவிட்டு அதன் மூலம் செரன்கோவ் கதிர்வீச்சை கண்டறிய முற்பட்டார்.

 

ஒளிப்பெருக்கி கண்ணாடிக்குடுவை (Digital optical module)

ஐஸ்கியூப் திட்டத்திற்கு முன்னோடியான இந்தத்திட்டத்திற்கு பெயர்  AMANDA (Antartica muon and neutrino detection array). இதன் மூலம் மிகச்சூடான நீரை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிட்டு ஒளிப்பெருக்கி கண்ணாடிக்குடுவைகளை சரம் போல ஒவ்வொன்றாக இறக்கி தொங்கவிட வேண்டும். இந்த  AMANDA திட்டம் 1993 ஆம் ஆண்டுமுதல் 2௦௦௦ ஆம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தப்பட்டது. நாம் நினைக்கலாம் ஏன் இவ்வளவு ஆண்டுகள்?  காரணம் இந்த மாதிரியான ஒரு பொறியியல் ரீதியான கடினமான  அமைப்பைக்கட்டுவதற்கு ஒரு மிகப்பெரிய நடைமுறை சிக்கல் அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலை. கோடைகாலமான ஆறுமாதம் மட்டுமே அங்கே எதுவும் செய்யமுடியும். குளிர்காலத்தில் அங்கே யாரும் எட்டிக்கூட பார்க்க முடியாது.

படம்: ஆழ்குழியில் ஒளிபெருக்கிக்குழாய் உணர்விகள் இறக்கப்படுகிறது

அதே போல் துளையிடும் வேலையை நாள் முழுக்க செய்ய முடியாது. சுடுநீரை வைத்து பனிக்கட்டியை உருக்கிய நீராக மாற்றிய பின் சில மணி நேரங்கள் மட்டுமே நீர் வடிவத்தில் இருக்கும். பிறகு மறுபடியும் பனிக்கட்டியாக மாறிவிடும். ஏதேனும் தவறு நேர்ந்தால் கருவிகளும் சரி மற்ற உபகரணங்களும் பனிக்கட்டிக்குள் மாட்டிக்கொள்ளும். திரும்ப எடுப்பது இயலாத காரியம். எனவே மிகுந்த பொறுமையோடு மிகுந்த காலம் எடுத்துக்கொண்டு செய்ய வேண்டிய வேலை இது.

இந்த வேலை நல்லபடியாக முடிந்தாலும் பிரான்சிஸ் ஹால்சனுக்கு இன்னொரு சவால் காத்திருந்தது. AMANDA திட்டத்தின் படி ஒரு கி,மீ ஆழம் அளவுக்குத்தான் ஒளி உணரும் கருவிகள் தொங்கவிடப்பட்டது. ஆனால் இந்த ஒரு கி.மீ ஆழம் வரை அங்கங்கே பனிகட்டிப்பாளத்துக்குள் நிறைய காற்றுக்குமிழ்கள்(air bubbles) அடைபட்டிருந்தன. இந்தக்குமிழ்கள்களின் விட்டம் 5௦ மைக்ரோ மீட்டர் அளவுக்கு இருந்தன. செரன்கோவ் கதிர்வீச்சு வெளிவரும்போது

இந்தக்குமிழ்களுக்குள் இருக்கும் காற்று மூலக்கூறுகளோடு மோதி அவை சிதறல் அடைவதை கண்டறிந்தனர். இதனால் செரன்கோவ் கதிர்வீச்சு எந்தத்திசையில் இருந்து வநதது என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் செரன்கோவ் கதிர்வீச்சு செல்லும் தூரத்தையும் இந்தக்காற்றுக்குமிழ்கள் மட்டுப்படுத்திவிட்டன. எனவே இந்த சிக்கலை தீர்க்க வேண்டுமென்றால் காற்றுக்குமிழ்கள் இல்லாத இன்னும் அதிக ஆழத்துக்கு அதாவது ஒரு கி,மீ ஆழம் தாண்டி இரண்டு அல்லது இரண்டரை கிலோ மீட்டர் ஆழத்தில் ஒளி நன்றாக ஊடுருவக்கூடிய மிகத்தூய்மையான பனிக்கட்டி இருக்கும். அந்த ஆழத்தில் ஒளி உணர்விக்கருவிகளை புதைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் AMANDA திட்டத்தை வைத்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

அண்டார்டிகாவில் ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம்(Ice cube neutrino observatory)

AMANDA திட்டத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து 1999 ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஹால்சன் புதியதாக ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் என்ற திட்டத்தை மறுபடியும் அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் அமைப்பிடம் சமர்ப்பித்தார் இதன் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட 275 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.  இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 261௦ கோடி. கடைசியாக 2௦௦2 ஆம் ஆண்டு நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் இத்திட்டத்திற்கு இசைவு தந்தது.

ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் முழு வீச்சில் நடக்க ஆரம்பித்தன. தரையிலிருந்து இரண்டரை கிமீ ஆழம் வரை  சுடுநீர் போர்வெல் முறை மூலம் குழிகள் போடப்பட்டது. ஏற்கெனவே கற்றுக்கொண்ட பாடத்தின்படி தரையிலிருந்து ஒன்றரை கி,மீ வரை இருக்கும் ஆழத்தை விட்டுவிட்டு ஒன்றரை கி,மீட்டரில் இருந்து அதற்கு கீழே இரண்டரை கி.மீ ஆழம் வரை கிட்டத்தட்ட 6௦ ஒளி உணர்விக்குடுவைகள் 17 மீட்டர் இடைவெளியில் தொங்கவிடப்பட்டது. இந்த ஒளி உணர்விக்கண்ணாடிக்குடுவைகளுக்குள் தேவையான எலக்ட்ரானிக் சிப்கள், ஒளிப்பெருக்கி சர்க்கியூட்கள், மேலே இருக்கும் நிலையத்துக்கு தகவல் அனுப்பும் சாதனங்கள் என அனைத்தும் இருக்கும். இந்தக்கண்ணாடிக்குடுவை மிக மிக உறுதியாக இருக்கவேண்டும். ஏனென்றால் இரண்டு கிமீ ஆழத்துக்குள் இருக்கும் அழுத்தம் என்பது காற்றழுத்ததை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும். உறுதி இல்லையென்றால் உடனே நொறுங்கி விடும். 2௦௦5 முதல் 2௦1௦ வரை இதே போல் 86 ஆழ்குழிகள் போடப்பட்டு(125 மீட்டர் இடைவெளியில்) ஒளி உணர்விக்கண்ணாடிக்குடுவைகள் தொங்கவிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 516௦ ஒளிஉணர்விக்கண்ணாடிக்குடுவைகள் அறுங்கோண வடிவில் பனிக்கட்டிப்பாளத்துக்குள் அமைக்கப்பட்டன. இதன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் – courtesy – Nobelprize.org

ஒரு வழியாக 2௦11 ஆம் ஆண்டு ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் முழு செயல்பாட்டுக்கு வந்தது.

காஸ்மிக் நியூட்ரினோக்களில் எலக்ட்ரான் நியூட்ரினோ ஒரு விதமாகவும், மியூயான் நியூட்ரினோ இன்னொரு விதமாகவும், டவ் நியூட்ரினோ வேறுவிதமாகவும் பனிக்கட்டி நீர் மூலக்கூறுகளோடு வினை புரிகிறது. மியூயான் நியூட்ரினோ நீர் மூலக்கூறோடு வினை புரியும் போது மியூயான் துகள் மற்றும் செரன்கோவ் கதிர்வீச்சும் உருவாகி மியூயான் துகள் நேர்கோட்டில் பயணிக்கிறது. அதனோடு சேர்ந்த செரன்கோவ் கதிர்வீச்சும் பயணிக்கிறது. இந்தக்கதிர்வீச்சு முதலில் எந்த வடிவக்கண்ணாடிக்குடுவையில் படுகிறது, அடுத்த நானோ நொடியில் எந்த கண்ணாடிக்குடுவையில் படுகிறது என்று ஒவ்வொன்றாக பார்த்து அதன் நேரங்களை பகுப்பாய்வு செய்து நியூட்ரினோ வந்த திசையை நாம் கணிக்க முடியும்.

மியூயான் நியூட்ரினோ மற்றும் எலக்ட்ரான் நியூட்ரினோ வினை

ஆனால் எலக்ட்ரான் நியூட்ரினோ வினைபுரியும்போது சில துகள்கள் உண்டாகி அதே இடத்தில் கோள வடிவத்தில் ஒளிர்ந்து நின்று விடுகிறது. பெரிய அளவுக்கு இதில் எந்த பிரயோஜனம் இல்லை. டவ் நியூட்ரினோ வினைபுரியும்போது இரட்டைப்பேரொளி (double bang) என்ற நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது டவ் நியூட்ரினோ நீர் மூலக்கூறோடு வினைபுரியும் இடத்தில் டவ் துகள் உருவாகி கோள வடிவில் ஒளிர்தல் ஏற்படுகிறது. பிறகு கொஞ்ச தூரத்தில் டவ் துகள் சிதைவடையும் இடத்தில் இன்னொரு கோள வடிவ ஒளிர்தல் ஏற்படுகிறது. இதைத்தான் இரட்டைப்பேரொளி என்கிறோம். இந்த இரண்டிற்கும் உள்ள தூரத்தை வைத்து அந்த டவ் நியூட்ரினோ எவ்வளவு ஆற்றல் என்று மதிப்பிட முடியும். எப்போதெல்லாம் இந்த இரட்டைப்பேரொளி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் காஸ்மிக் டவ் நியூட்ரினோதான் வந்திருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். இந்த டவ் நியூட்ரினோக்களின் ஆற்றல் 1 முதல் 1.4 பெட்டா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு இருக்கும்.

வெவ்வேறு ஒளிப்பெருக்கி கண்ணாடிக்குடுவைகளுக்குள் ஏற்படும் செரன்கோவ் கதிர்வீச்சு

பெரும்பாலும் மியூயான் நியூட்ரினோவில் உருவாகும் மியூயான் துகள் சில மீட்டரிலிருந்து ஓரிரு கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லும். ஒரு வேளை சில மீட்டர் தூரம் வரை என்றால் ஐஸ்கியூப் ஆய்வகத்துக்குள் பதிவு செய்யமுடியும். சில கிலோ மீட்டர் தூரம் செல்லும் மியூயான் துகள் ஐஸ்கியூப் கட்டியின் நீளத்தை தாண்டி வெளியில் செல்வதால் அவைகளை பதிவு செய்ய முடியாது. மியூயான் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.6 பெட்டா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு இருக்கும். இந்த அளவுக்கு ஆற்றல் இருந்தால் அவைகள் சூரிய குடுமபத்துக்கு அப்பால் இருக்கும் கேலக்சி மற்றும் சூப்பர் நோவா பெருவெடிப்பில் (astrophysical origin) இருந்துதான் வந்திருக்க முடியும் என்று நாம் உறுதியாக கூற முடியும். ஏனென்றால் இந்த அளவுக்கு ஆற்றல் சோலார் நியூட்ரினோவிலோ அல்லது வளிமண்டலத்தில் உருவாகும் வரும் டவ் மற்றும் மியூயான் நியூட்ரான்களுக்கோ இருக்காது.

இந்த காஸ்மிக் நியூட்ரினோக்களை ஆற்றல் பெட்டா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு இருக்கும் போது அது கேலக்சியில் உருவாகும்போது அல்லது சூப்பர் நோவா வெடிப்பில் இருந்து உருவாகும்போது இந்த நியூட்ரினோக்களோடு சேர்ந்து உருவாகும் புரோட்டான்களின் ஆற்றலை நாம் எளிதாக கணக்கிட முடியும். துகள் இயற்பியல் கணக்கீடுகளின்படி நாம் பூமிக்கு வரும் காஸ்மிக் நியூட்ரினோக்களின் ஆற்றல் ஒரு பெட்டா எலக்ட்ரான் வோல்ட் என்றால் அது உருவான சூப்பர்நோவா அல்லது கேலக்சியில் வெளிப்பட்ட புரோட்டான்களின் ஆற்றல் 2௦ பெட்டா எலக்ட்ரான் வோல்ட்(20 PeV) ஆக இருக்கும்.

அண்டார்டிகா ஐஸ் கட்டிக்குள் நடக்கும் ஒரு சிறிய அறிவியல் நிகழ்வு எங்கோ பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் சூப்பர் நோவா வெடிப்பில் உருவாகும் புரோட்டான்களின் ஆற்றலை கணக்கிட உதவுகிறது பாருங்கள்!!! இதுதான் அறிவியலின் மகத்துவம். பிரான்சிஸ் ஹால்சன் இந்த ஐஸ்கியூப் ஆய்வகத்தை அதாவது கி,மீ கனமுள்ள பனிக்கட்டியை நியூட்ரினோ தொலைநோக்கி(neutrino telescope) என்று அழைக்கிறார். என்ன ஒன்று தொலைநோக்கியில் லென்ஸ் அல்லது கண்ணாடி இருக்கும். இங்கே பனிக்கட்டி மட்டுமே. அதே போல் சாதாரண தொலை நோக்கியில் ஒளி மூலம் வான் வெளியில் இருக்கும் பொருட்களை பார்ப்போம். ஆனால் இங்கே நியூட்ரினோவைக்கண்டறிவதன் மூலம் எங்கோ தூரத்தில் நடக்கும் சூப்பர் நோவா வெடிப்புகள் நடக்கும் திசையையும், பற்றி எரியும் கேலக்சிகளையும்(active galaxies) பற்றி அறிந்து கொள்கிறோம்.

ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின் சாதனைகள் என்ன?       

2௦11 ஆம் ஆண்டுமுதல் 2௦26 ஆம் ஆண்டு வரை பல முக்கிய சாதனைகளை இந்த ஆய்வகம் செய்திருக்கிறது. அதில் சில முக்கிய் நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன

  • 2௦13 ஆம் ஆண்டு முதல் முதலாக 1 முதல் 2 பெட்டா எலக்ட்ரான் வோல்ட் அளவுள்ள காஸ்மிக் நியூட்ரினோக்களை கண்டறிந்தது. இவைகள் சூரியக்குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவை என்று துல்லியமாக நிறுவியது.
  • 2௦17 ஆம் ஆண்டு 29௦ டெரா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு காஸ்மிக் நியூட்ரினோக்களை கண்டறிந்து இவைகள் 4 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் உள்ள ப்ளேசார்(blazar) எனப்படும் பற்றி எரியும் கேலக்சியில் இருந்து வந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. சுவாரசியமாக இந்த காஸ்மிக் நியூட்ரினோ ஆய்வகத்தில் பதிவு செய்யப்பட்ட உடனே உலகெங்கும் உள்ள மற்ற காமா கதிர்கள் ஆய்வகத்திற்கு அறிவித்து உடனே இந்த நியூட்ரினோ வந்த திசையை நோக்கி கவனித்த போது கணித்தது போல அந்த திசையில் இருந்து காமா கதிர்கள் வந்தன. அதை வைத்து அது ப்ளேசார்தான் என்று மேலும் உறுதி செய்யப்பட்டது. நியூட்ரினோ ஒரு முன்னறிவிப்புக்கருவியாக செயல்பட்டது.
  • 2௦22 மற்றும் 2௦23 ஆண்டுகளில் நமக்கு அருகில் இருக்கும் மெஸ்ஸியர் 77 (M77) என்ற கேலக்சியில் இருந்து வரும் நியூட்ரினோக்களைக்கண்டறிந்தது. மேலும் நமது பால்வழி மண்டலத்தின் மையத்திலிருந்து வரும் அதி ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை பதிவு செய்தது. இதன் மூலம் நமது பால்வழி மண்டலத்தின் நியூட்ரினோ படம்(neutrino image of milky way) உருவாக்கப்பட்டது. இதுவரை பால்வழி மண்டலத்தை கண்ணுறு ஒளிப்படம், ரேடியோ அலைப்படம், காமா கதிர்கள் படம் என வெவ்வேறு மின்காந்தஅலைப்பகுதியை வைத்து ஒளிப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது முத்தாய்ப்பாக நியூட்ரினோ படம் வந்துள்ளது. இது கீழே உள்ள படத்தில் பால்வழி மண்டலத்தின் நியூட்ரினோ படம் மற்ற படங்களோடு சேர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடைசியில் இருக்கும் படத்தில் நடுவில் வெளிர் நீலமாக இருக்கும் பகுதியில் இருந்து அதிகப்படியாக நியூட்ரினோக்கள் வருகிறது என்று பொருள்.

  • கடைசியில் 2௦26 ஆம் ஆண்டு கூட NGC 1068 என்ற ஒரு கேலக்சியில் இருந்து வந்த நியூட்ரினோக்களை பதிவு செய்துள்ளது.

பிரான்சிஸ் ஹால்சன் மனதில் எதேச்சையாக தோன்றிய ஒரு சிந்தனை இன்று செயல்வடிவமாகி பிரபஞ்சத்தைப்பற்றிய, கேலக்சிகளை பற்றிய, சூப்பர் நோவா பெருவெடிப்பு பற்றிய பல்வேறு ஆழமான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக பவுலி அனுமானமாக அல்லது கோட்பாட்டு ரீதியாக மட்டுமே “நியூட்ரினோ” என்ற துகள் இருக்கும், அதைக்கண்டறிவது சாத்தியமில்லை என்று கூறினார். ஆனால் இன்று அதே நியூட்ரினோ துகள்களை வைத்து நாம் பிரபஞ்சத்தின் பேருண்மைகளை கண்டறிந்து கொண்டிருக்கிறோம். இதுதான் அறிவியலின் மகத்தான சாதனை.

இந்த நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தாலும் அவரே “இது ஒரு கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்ட பரிசாகவே” தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும் “நான் முதன்முதலில் அண்டார்டிகாவில் நியூட்ரினோ ஆய்வகம்” அமைக்கலாம் என்ற யோசனை தெரிவித்த போது பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் இது சாத்தியமில்லாதது என்று யாரும் இணைந்து வேலை செய்ய வரவில்லை. ஆனால் ஒரு சிலரே என் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இதில் இறங்கினர். இந்தப்பரிசு அவர்களுக்கானது. அவர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று கூறினார். பிரான்சிஸ் ஹால்சன் மனிதர்களே வாழத்தகுதியில்லாத அண்டார்டிகா பனிக்கட்டிப்பாளத்தை பிரபஞ்சத்தை அறிவதற்கான ஒரு நியூட்ரினோ தொலைநோக்கியாக மாற்றிக்காட்டியுள்ளார். மனிதகுலத்திற்கு அவர் செய்த மகத்தான சாதனை இது.

ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் குழு புகைப்படம்

இந்தியாவும் தமிழகமும் இழந்தது என்ன?

தமிழகத்தில் 2௦1௦ ஆண்டு வாக்கில் தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத்திட்டமிடப்பட்டது. இதன் பெயர் இந்திய நியூட்ரினோ ஆய்வகம்(Indian Neutino Observatory-INO). இந்தியாவில் நியூட்ரினோ துறை ஆய்வில் நிறைய அறிஞர்கள் இருந்தனர். அவர்களின் முயற்சியில் இந்த ஐ.என்.ஓ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் அப்போது உலக அளவில் நியூட்ரினோ துறையில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைக்கானக்காண தீரவை கண்டுபிடிப்பது. ஆரம்பத்தில் நியூட்ரினோக்களுக்கு நிறை இல்லை என்று கருதப்பட்டது. பிறகு நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்று நிரூபிக்கப்பட்டது.

ஆனால் இந்த மூன்று நியூட்ரினோக்களுக்கும் எந்த அளவுக்கு நிறை உள்ளது, எதன் நிறை அதிகம், அதை எப்படி வரிசைப்படுத்துவது(neutrino mass hierarchy) என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

தமிழகத்தில் முன்மொழியப்பட்ட ஐ,என்.ஓ நியூட்ரினோ ஆய்வகத்தின் நோக்கம் இந்த நியூட்ரினோக்களின் நிறைகளைக் கண்டறியும் ஆய்வை செய்து நிறைகளை வரிசைப்படுத்துவதுதான். அதே போல் உலகத்தில் உள்ள எந்த நியூட்ரினோ ஆய்வகத்திலும் இல்லாத காந்தப்புலம் சார்ந்த நியூட்ரினோ உணர்விகள் இங்கு உருவாக்கத்திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நியூட்ரினோக்கள் உருவாகும் மியூயான் மற்றும் எதிர் மியூயான்(anti muon) போன்றவற்றை தனித்தனியே பிரித்தறிய முடியும். இன்னும் சொல்லப்போனால் அண்டார்டிகாவின் ஐஸ்கியூப் ஆய்வகத்தில் கூட இந்த வசதி இல்லை.

ஆனால் துரதிருஷ்டவசமாக வசமாக தேனியில் முன்மொழியப்பட்ட ஐ.என்.ஒ நியூட்ரினோ ஆய்வகம் அறிவியல் புரிதல் இல்லாத அமைப்புகளின் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக கைகூடவில்லை. உண்மையிலேயே இந்த நியூட்ரினோ ஆய்வகம் தேனியில் அமைக்கப்பட்டிருந்தால் இந்நேரத்திற்கு நியூட்ரினோக்களின் நிறை வரிசைப்படுத்தும் சிக்கலை நாம் தீர்த்து உலக வரலாற்றில் இடம்பெற்றிருந்திருக்கலாம்.. நாம் நோபல் பரிசு பெற வேண்டிய ஒரு வாய்ப்பை நாம் இழந்து விட்டோம். இன்னும் நியூட்ரினோக்களின் நிறை வரிசைப்படுத்தும் சிக்கலை யாரும் தீர்க்க வில்லை. சீனாவில் உள்ள ஜுனோ ஆய்வகம் மும்முரமாக இதில் ஈடுபட்டு கொண்டிருகிறது. அவர்கள் இந்த நிறை வரிசைக்கண்டுபிடித்தால் நோபல் பரிசு அவர்களுக்கு உறுதி. வரலாறு நமக்கு கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு இங்கே உள்ள சில அரசியல் மற்றும் அறிவியல் புரிதலற்ற சில சிக்கல்களால் இழந்துவிட்டோம். அரசியல் அமைப்புகள். இயற்கை சார்ந்த அமைப்புகளும் சரி அறிவியல் ஆய்வுகளின் நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுக்கு அறிவியல் ஆலோசகர் என்ற பதவி உள்ளது அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் அறிவியல் ஆலோசர்களை(scientific advisors) தங்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும். அறிவியல் சார்ந்த திட்டங்களை அவர்களின் வழிகாட்டுதல்படி முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால் இங்கே நாம் பல பிரான்சிஸ் ஹால்சன்களை இழக்க வேண்டி வரும்.

முனைவர்.சி.ஜோசப் பிரபாகர்
இயற்பியல் விரிவுரையாளர்
josephprabagar@gmail.com

உதவிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள்:

  1. நோபல் பரிசு தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கட்டுரைகள்

(i) Nobel Prize in Physics – Popular Background

(ii) Nobel Prize in Physics – Scientific Background

  1. பிரான்சிஸ் ஹால்சன் நோபல் பரிசு அறிவித்த பிறகு கொடுத்துள்ள யூடியுப் நேர்காணல் https://youtu.be/rf-oSpAJ1PM?si=X7jMzZGDFHyNqJkt
  2. இன்னும் சில யூடியூப் வீடியோக்கள்

https://youtu.be/ktOSxE_f65k?si=_mc_kTuo1QEwCtRn

https://youtu.be/eMahxeBj5k0?si=EKFktHdvSbD1hWMn

https://youtu.be/iB70qzI76Is?si=bp-UOJ1afmGLQrm_

  1. Dr.S.N.Prasad, Retired Physics Professor எழுதிய கட்டுரை. https://drsnprasadmysoreindia.blogspot.com/2026/10/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. DEVASAHAYAM S

    மிக அற்புதமான கட்டுரை. தொடர்ந்து இத்தகைய அறிவியல் புரிதல் மிக்க ஆழமான கட்டுரைகளை மிக எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் தொடர்ந்து பேராசிரியர் ஜோசப் பிரபாகர் அவர்கள் எழுதி வருகிறார். அவரையே நம் தமிழ்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசகராக நியமித்து விட்டால், தமிழ்நாட்டு பிரான்சிஸ் ஹார்ல்ஸன்கள் நிறைய அடையாளம் காணப்படுவார்கள்! தமிழக அரசின் அறிவியல் சார்ந்த அமைச்சரவை உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய நிகழ்வு இது!

  2. ரேவதி சோமு

    அணு விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் jayabarathan.org வலை பதிவில் 2010ல் இருந்து பல விஞ்ஞான கட்டுரைகள் எளிமையாக படித்து புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு பிறகு இவரது கட்டுரை ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *