தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கத்தில் உள்ளவை சில:

“உயர்கல்விக்கென பெரிய அளவிலான, வளங்களை நன்கு பெற்ற, உயிர்த்துடிப்புள்ள பல்துறை நிறுவனங்களைக் கொண்ட புதிய தொலைநோக்கும் கட்டமைப்பும் கருதப்பட்டுள்ளது.  தற்போதுள்ள 800 பல்கலைக்கழகங்களும் 40,000 கல்லூரிகளும், 15,000 சிறந்த நிறுவனங்களாக ஒன்றாக இணைத்து வலுப்படுத்தப்படும்.” (தே.க.கொ.வ.2019, ப.26)

“இந்த மீள்கட்டமைத்தல் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்தும், மீள்கட்டமைத்தும், புதியவைகளை ஏற்படுத்தியும் முறைப்படியாக, கருத்துடன் செய்யப்படும்.  இந்தப் புதிய நிறுவனம்சார் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு வினையூக்கியாக மிஷன் நாளந்தா, மிஷன் தட்சசீலா ஆகியவை தொடங்கப்படும்.  பொதுக் கலைகள்/பல்துறைக் கல்வி ஆகியவற்றிற்கான இந்தியக் கழகங்கள், ஆய்வுப் பல்கலைக்கழகங்கள் ஆகிய சில வேகம்-நிறுவுகிற நிறுவனங்களை இந்த மிஷன் முயற்சிகளின் பகுதியாக ஏற்படுத்துதல்.” (தே.க.கொ.வ.2019, ப.26)

“இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் அமைப்பு மாதிரியிலும் தரத்திலும் பொதுக் கலைகள்/பல்துறைக் கல்விக்கான பத்து இந்தியக் கழகங்களை நடுவண் அரசு அமைக்கும்.” (தே.க.கொ.வ.2019, ப.28)

“உயர்கல்வி நிறுவனங்களைத் தற்சார்பு வாரியங்கள் ஆளுகை செய்யும்.  இதில் முழுமையான கல்விசார், நிருவாகம் சார் தன்னாட்சி உரிமை இருக்கும். இந்த வாரியம், அதன் தலைமை, துணைவேந்தர்/இயக்குநர் (தலைமை நிருவாகி) ஆகியவற்றின் உருவாக்கமும் பதவியமர்த்துதலும் வெளியாள் குறுக்கீட்டைத் தவிர்ப்பதை உறுதிசெய்யும் அரசின் தலையீடும் தவிர்க்கப்பட வேண்டும். இது நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புள்ள உயர் திறனுள்ளவர்களைப் பணியமர்த்த ஆற்றலளிக்கும்.” (தே.க.கொ.வ.2019, ப.32)

“தொழிற்கல்வியையும் சேர்த்து உயர்கல்வி அனைத்திற்கும் தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு ஒன்று மட்டுமே ஒழுங்குமுறை அமைப்பாக இருக்கும்.  தற்போதிருக்கும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளும் தொழில்சார் செந்தர நிலைகள் உருவாக்க அமைப்புகளாக (Professional Standard Setting Bodies) மாற்றப்படும்.” (தே.க.கொ.வ.2019, ப.33)

“தனியார், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் இரண்டிற்குமே பொதுவான ஒழுங்குமுறைப்படுத்தும் ஆட்சி அமைப்பு இருக்கும்.  தனியார் கொடையாண்மை முன்னெடுப்பு ஊக்குவிக்கப்படும்” (தே.க.கொ.வ.2019, ப.33)

– மத்திய அரசு, கல்வியை ஒருமுனைப்படுத்தப் பார்க்கிறது என்பதும், பல்வேறு அமைப்புகள்/குழுக்கள்/நிறுவனங்களை அமைக்கப்போகிறது என்பதும் மேலுள்ளவைகளைப் படித்தாலே நமக்குத் தெரிந்துவிடும்.

யுனெஸ்கோ மூலம் நூற்றியிருபது நாடுகளுக்கு அடிப்படை மற்றும் அறிவியல் கல்வித் திட்டங்களை முன்னெடுத்து அதனை அந்தந்த நாடுகளில் செயல்படுத்திக் காட்டிய மால்கம் ஆதிசேசய்யா அவர்கள் ‘ஐயோ அதனை (கல்வியை) ஒருமுகப்படுத்தாதீர்கள்’ என்று ஒரு கட்டுரையை திட்டம் இதழில் 1986ல் எழுதியிருந்தார்.  அப்போதைய காங்கிரசு அரசு இப்போது போலவே மாநில வாரியங்களை இணைத்து மத்தியில் ஒருமுனைப்படுத்த நினைத்தது.  

வெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய ...

ஆதிசேசய்யாவின் குறிக்கோள்களில் முக்கியமான ஒன்று ‘Decentralisation’, அதாவது ஒருமுனைப்படுத்தாது பரவலாக்குதல்.  இதை அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது செயல்படுத்தியும் காட்டினார். ‘ஒரே இடத்தில் அதிகாரம் குவிந்து கிடந்தால் அதிக பிரச்சினைகளுக்கும், ஊழலுக்கும் அது வழிவகுக்கும்’ என்பதும், ‘கிராமத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்னையிலோ, டில்லியிலோ, மாவட்டத் தலைநகரத்திலோ இருந்துகொண்டு என்ன கல்வி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது தவறு’ என்பதும் அவரின் நிலைப்பாடு.

டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மதுரையில் (1957) ஒரு முதுகலை மையம் (Post Graduate Centre) தொடங்கப்பட்டது.  அதற்குப் பிறகு இருபது  ஆண்டுகள் கழித்து 1977ஆம் ஆண்டு ஆதிசேசய்யா சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராய் இருக்கும்போது தான் திருச்சியிலும், கோவையிலும் முதுகலை மையங்கள் தொடங்கப்பட்டன.  பிற்பாடு இந்த முதுகலை மையங்கள் தான் பல்கலைக்கழகங்களாக உருமாற்றப்பட்டன.  (என் கைபேசியில் எடுத்த கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள கல்வெட்டை பார்வைக்காக இங்கே இணைத்துள்ளேன்.)

“அனைத்து நிறுவனங்களுமே பல்கலைக்கழகங்களாகவோ, பட்டமளிக்கிற தன்னாட்சிக் கல்லூரிகளாகவோ இருக்கும்.”  (தே.க.கொ.வ.2019, ப.26)

– மேலுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கையின் கண்டுபிடிப்பல்ல என்பதற்கு திரு. அம்ரிக் சிங் என்பவர் எழுதியுள்ள (http://www.tribuneindia.com/2005/20050301/edu.htm) குறிப்பு சாட்சியாக உள்ளது:

“Tamil Nadu was the first state to set up autonomous colleges.  The Kothari Commission had made this proposal in the mids 1960s and when Malcolm Adiseshiah became Vice-Chancellor of the University of Madras, steps in this direction were taken, but after his term was over, there was no follow-up.”

இந்தப் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தும் அரசு கல்விக்காக இதுவரை ஒதுக்காத ஒரு நிதியை ஒதுக்குவதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் சிலர்.  அவர்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது என்பதைத்தான் நாம் பதிலாகச் சொல்லவேண்டும். இதையும் ஆதிசேசய்யாவே பதிவு செய்துள்ளார் ‘Tamil Nadu Education in the Seventies’ (MIDS Monthly Bulletin, August 1971) என்ற கட்டுரையில்:

“Tamil Nadu’s eductional record is a proud and impressive one.  We started the Sixties with an anuual education budget of Rs.15 crores and we ended last year with Rs.67 crores, which is a four-fold increase or allowing for inflation a three-fold one.  This is no mean achievement.  It means that we are spending 23 percent of our State budget or 3 percent of the State income on education. The international norm is around 14 percent.  We are the second highest educational spenders among the States, spending Rs.9 ½ per Tamilian on education….”

இதுவெல்லாம் போகட்டும், தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ன் இறுதியில் கொடுத்துள்ள வரிகளைப் படித்தால் பதட்டமாகத்தான் இருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம்: கல்விக்கான நிதியளிப்பு (1. g.) பக்கம் 50ல் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“பொருத்தமான பல்வேறு அம்சங்களின்வழி கல்வியின் வணிகமயமாக்கல் இந்தக் கல்விக் கொள்கையில் எதிர்கொள்ளப்படுகிறது.  ‘இலகுவான ஆனால் இறுக்கமான’ கட்டுப்பாட்டு அணுகுமுறை, அரசு வழங்கும் கல்வியில் கணிசமான அளவு முதலீடு ஆகியவற்றுடன் வெளிப்படைத் தன்மைகொண்ட பொது அறிக்கை முறையை உள்ளடக்கிய சிறந்த ஆளுகை முறைகள் போன்றவை இந்த அம்சங்களில் அடங்கும்.”

இதில், ‘கல்வியின் வணிகமயமாக்கல்’ என்பது தடித்த எழுத்துகளில் (in bold letters) கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உண்மையானப் பொருளை ஆள் பேதமின்றி, கட்சி பேதமின்றி, எதிர்கால மாணவர்களின் வாழ்க்கையை எண்ணி சரி, தவறு என்று சொல்லக்கூடிய ஓர் ‘ஆதிசேசய்யா’கூட இப்போது இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

Image

ஆ. அறிவழகன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிப்பகத்துறையில் உதவியாளராகப் பணியாற்றும் இவர், ‘விதையாய் நீ விருட்சமாய் நான்’ (கவிதை), ‘வெள்ளந்தி மனிதர்கள்’ (சிறுகதை) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மால்கம் ஆதிசேசய்யா குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளவர், அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டுள்ளார்.

படிக்க கிளிக் செய்க: புதிய கல்விக் கொள்கை – 1 (பள்ளிக்கல்வி) – ஆ. அறிவழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *