(புதிய கல்விக் கொள்கை) கவிதை -பா.அசோக்குமார்

*மாறி வா கல்வியே
மாநிலப் பட்டியலுக்கு*
பிறந்தது மாநிலப் பட்டியலில்;
வளர்வதோ பொது பட்டியலில்,
நம் கல்விக் குழந்தை!
ஏனிந்தத் தடமாற்றம்?
தாய்ப்பால் போதாமல் புட்டிப்பால் தேடி ஓடியதோ
நம் கல்விக் குழந்தை!
எமர்ஜென்சி காலம்
ஓட வைத்தது…
தாய்ப் பாலூட்டிய
மாநிலத் தாய்க்கோ தடுமாற்றம்!
வாரியணைத்துக் கொல்கிறது மத்திய தாய்;
மாற்றாந்தாயாக!
எமர்ஜென்சி காலம் முடிந்தபின்னரும்
மாநிலத் தாய்
கல்விக் குழந்தையை
தானே
கவனிக்கத் துணியாதது ஏனோ???
மாற்றாந்தாய் மடியே தஞ்சமென்று எண்ணிவிட்டனரோ???
காலவோட்டத்தில்
கைமாறிப் போன மாற்றாந்தாய் அரசாங்கம்,
கல்வித்
தொட்டில் குழந்தை வளர்ச்சிக்காக உருவாக்கப்படும்
கல்விக் கொள்கையால் வந்துள்ளதே
புத்தம் புதிய சிக்கல்கள்!
சரியாக வளர்க்காத நோஞ்சான்
மாநிலக் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு
தீட்டும் திட்டங்களால் திடகாத்திரமான தமிழ்க்கல்விக் குழந்தைக்கு விளையும் பயன்தான்
ஏது???
வளர்த்த கடனுக்கு
காவு கேட்பது
போலல்லவா இருக்கிறது வரவிருக்கும்
புத்தம்புது கல்வித்திட்டங்கள்!
கல்வியில் வேண்டியது
புதுமை
தானே தவிர
ஒருமையன்று.
குவிதல் கல்வியன்று.
பரவலே கல்வி.
தின்ன உணவு
செரித்ததா
என்று தின்னவுடன் சோதிப்பது போல்
மூன்றாம் வகுப்பிலே தேர்வாம்???
தேர்வு தான்
சாதனையோ!
புதுமையோ?
கல்விக் குழந்தைக்கு
தமிழ்ச் சோறும்
ஆங்கில ரொட்டியுமே போதுமென்று சொன்னாலும் கேளாமல்
சமஸ்கிருத சப்பாத்தியைத் திணிப்பது முறையாகுமா?
வளர்ந்து
பெரியவனான பின்
பசி வந்தால்
தானே தேடி
தின்ன வேண்டியதை
வலிந்து
இப்போதே திணிப்பது முறையாகுமா??
கொத்தடிமை ஆகலாமா???
தாயிடமிருந்து
சிசுவை பறித்தலே தவறு! இதில்
சிசுவை
கர்ணக் கொடூரமாக
துள்ளத் துடிக்க
கொல்லத் துணிவதை
சகிக்கலாமா?
நிதியுணவே
வேண்டாமென்று
உதறத் தயாராகுவோம் மாநிலத் தாய்களே!
நம்
கல்விக் குழந்தையை முடமாக்காமல் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க!
மாற்றாந்தாயின் புட்டியில் மாட்டுப்பால் குடித்தது போதும்;
இப்பொழுது
தர இருப்பதோ
பவுடர் பால்!
தேவையா நமக்கு!
தாய்மை நிரம்பிய
தாய்ப்பால் இருக்க
புட்டிப்பால்
நமக்கெதற்கு?
கல்விக் குழந்தையே…
மாறி வா..
பிறந்த மண்ணிற்கே!
மாறி வா கல்வியே
மாநிலப் பட்டியலுக்கே!
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.