உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும்.

1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது தமிழ்நாடு நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவர்க்கும் தந்த பெருமை பெற்றது. 1964 ஆம் ஆண்டிலேயே பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாதும், அனைத்து ஆசிரியர்களும் முழுத் தகுதி பெற்றவராகவும் திகழும் நிலை அடைந்தது.

இதற்குக் காரணம் கல்வித் திட்டம் வகுக்கவும் செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு இருந்த முழு உரிமை. 1976 ஆம் ஆண்டில் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் மாநில உரிமைகளில் தலையீடு இல்லாதிருந்தது. மத்திய அரசு எஸ்.எஸ்.ஏ போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

அவற்றால் மாநில அரசிற்குப் பாதிப்பேதுமில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு வந்தது முதல் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலேயே தீவிரமாக உள்ளது. பொதுப் பட்டியலில் இருக்கும் பொருள்கள் பற்றி மாநில, மத்திய அரசுகளுக்கு சம உரிமைகள் இருந்தாலும் மத்திய அரசின் சட்டத்திற்கு முரணான மாநிலச் சட்டமோ, செயல்பாடோ செல்லாது பொதுப் பட்டியலில் உள்ளதை மத்தியப் பட்டியலில் உள்ளது போலக் கருதுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது.

மாநில அரசுகளோடு கலந்து முடிவெடுக்க வேண்டுமென்ற நடைமுறை தவிர்க்கப்பட்டது. பா.ஜ.க.வின் இந்த அணுமுறைக்கு வலு கூட்டும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரைகள் செய்துள்ளது.
ஒரு நாட்டை அடிமைப்படுத்திட அதன் மொழி, கல்வி ஆகியவற்றைக் குலைத்து ஆதிக்க சக்திகளின் தேவையை நிறைவு செய்யுமாறு மாற்றப்பட வேண்டும் என்று வரலாறு சுட்டுகின்றது. மும்மொழிக் கல்வி என்ற ஆயுதத்தினை எடுத்திருப்பது வியப்பன்று.

மேற்கத்திய நாடுகளில் நடத்தப் பெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் மூளையின் 85 % வளர்ச்சி பள்ளி வருமுன்னரே ஏற்பட்டுவிடுவதாகவும், குழந்தைகளுக்கு இயற்கையாகவே மொழி கற்கும் திறன் உள்ளதென்றும் வரைவறிக்கை கூறி தம் பரிந்துரைகளை சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. நம் நாட்டில் செய்யப்பட்ட எந்த ஆய்வும் இம்முடிவுகளை உறுதிப்படுத்தவில்லை.

மாறாக சத்துணவில்லாது குழந்தைகளின் மூளை வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் உள்ளிட்டப் பல ஆய்வுகளும் வெளிப்படுத்தியுள்ளன. மொழி அறிவது வேறு, மொழி கற்பது வேறு. குழந்தை தாயிடமிருந்து தாய்மொழியையும், விளையாடும் பொழுது சக தோழர்களிடமிருந்து அவர்களது மொழிச் சொற்களையும் அறிகின்றாள். உரையாட சிறிது தெரிந்திருந்தாலும் படிக்கவோ, எழுதவோ தெரியாது. மொழி அறிந்திருப்பதாகக் கூறுவது தவறு.

வரைவறிக்கை இவ்வேறுபாட்டினை அறியாது பொதுப்படையாகத் தன் முடிவுகளுக்கு வாதம் சேர்க்க முற்பட்டது பிழைபட்டதாகும்.  அரசியல் சட்ட முகமனில் கூறப்பட்டுள்ள சோசலிசத்திற்கு முற்றிலும் மாறுபட்டது வரைவறிக்கை. சமத்துவம், சமநீதிக் கொள்கைகளை முற்றிலும் நிராகரிப்பதே பல தேர்வுகள். தேர்வுகளின் முக்கிய நோக்கம் விலக்கலே என்பதை கடந்த கால அனுபவங்களினின்று அறிகின்றோம்.

உயர்கல்வியில் சேர பரிந்துரைக்கப்பட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வு பெரும்பாலான மாணவர்க்கு உயர்கல்வியை மறுக்கக்கூடும். படித்த பெற்றோரோ, வீட்டில் கல்விச்சூழலோ இல்லாத மாணவர் கடும் உழைப்பின் மூலம் முன்னேறுகின்றார். அவர் ஓட்டத்திற்குத் தடைக்கல்லாகும் நுழைவுத் தேர்வுகள்.
ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைகூடையில் வீசுவதே நமது கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *