வண்ணைசிவா கவிதைகள் | வண்ணைசிவா எழுதிய 8 புதிய தமிழ் கவிதைகள் | Book Day Tamil Kavithaikal | புதுக்கவிதை | www.bookday.in

வண்ணைசிவா கவிதைகள்

வண்ணைசிவா கவிதைகள்

****************************************************

1

நாயின் வாலாய் சுருண்டு கிடக்கிறது
என் நகரவாழ்வு
எவ்வளவு நிமிர்த்த முயன்றாலும்
நிமிராமல் சுருண்டே கிடக்கிறது
நவீன இந்தியா
டிஜிட்டல் மயமாய்
கேஷ்லஸ் பொருளாதாரத்தை
நோக்கி நகரச் சொல்கிறது
ATM GST SMART CARD
வளர்ச்சியின் பாதையில் இந்தியா
கையில் காசு இல்லாமல்
பசிக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு
வாழ்க்கை இருளடைந்து கிடக்கிறது
இதில் வேறு எங்கு போனாலும்
ஆதார் கார்டு சுமந்து கொண்டு
செல்லவேண்டும் நான்.
மழைநீர் வடிகால் வசதியில்லை
சாக்கடை நீர் புரண்டோடும் வீதி
சாலைகள் குண்டும் குழியாய்
மின்சாரம் எப்போது வருமோ தெரியாது
பேரூந்தில் பிதுங்கிக்
கொண்டு பயணம் செய்ய வேண்டும்
இன்ன பிற இன்னல்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இந்தியா ஒளிர்க்கிறது
மிளிர்கிறது
பளபளப்பான பதாகையைச் சுமந்து.

****************************************************

2

பலரும் கடந்து போன
சாலையில்
நானும் நடக்கிறேன்
சுகங்களையும் துக்கங்களையும்
சுமந்து கொண்டு
அலையும் அச்சாலையில்
எங்கிருந்தோ வந்த
ஒரு பறவை
எச்சமிட்டுப் பறக்கிறது
என் ஆடையில்
பறவையின் எச்சம்
அப்பிக் கிடைக்கிறது
மெல்ல சாலை
வனமாக மாறிக் கொண்டிருக்கிறது
மெல்ல மெல்ல
எனக்குச் சிறகுகள் முளைக்கின்றன
பறக்க எத்தனிக்கிறேன்
மனிதகுணங்களைச் சுமந்து.

****************************************************

3

பிள்ளை வரம்வேண்டி
அம்மனுக்குப் பொங்கல் வைத்தாள்
ஆத்தாளும் சாப்பிட்ட நன்றிக் கடனுக்காக
பிள்ளை வரம் தந்தாள்
பிள்ளை வளர்ந்து பெரியவனாகி
கல்யாணமும் முடிந்தது
ஆத்தாளுக்குப் பொங்கல் வைக்காமலே பிள்ளைக்குப் பிள்ளையும் பிறந்தது சந்தோஷப்பட்டாள்
அப்புறம் வயசாச்சு
பிள்ளையும் கைவிட்டான் பொங்கல் உண்ட ஆத்தாளும் கைவிட்டாள்
கவனிக்க ஆளற்று
ஒரு வேளை சோற்றுக்கே வழியற்று
செத்தே போனாள்
ஆத்தாளுக்கு
பொங்கல் வைத்தவள்.

****************************************************

4

இன்னும் வருந்திக் கொண்டிருக்கும் பலருக்கு நீ ஒரு முன்மாதிரி
சாபத்தை வரம் ஆக்கும் வித்தையை உன்னிடம் கற்க வேண்டும்
பொழுது விடிந்தால்
பொழுது விடியும் என்கிறாய்
ஒருபோதும் பொழுது விடியாமல் இருக்காது என்கிறாய்
எவ்வளவு அர்த்தமுள்ள சொற்களை
அனாவசியமாக போகிற போக்கில் சொல்கிறாய்
எங்கு கற்றாய் இப்படிப் பேச
வாழ்க்கை கற்றுத் தந்ததை
எங்களுக்கு நீ கற்றுத் தருகிறாய்.
எல்லோரும்
சாபத்தை வரம் ஆக்கும் வித்தையை உன்னிடம் கற்க வேண்டும்
வாழ்தல் இனிது
உன்னைப் பார்த்து
வாழ்தல் இன்னும் இனிது.

****************************************************

5

இன்னும் இன்னுமென்று
பருகிக் கொண்டிருக்கிறாய்
காதல் அமுதத்தை.
அடங்க மறுத்து அடம்பிடிக்கிறது
யானையை பானைக்குள் அடக்கும் வித்தை யார் அறிவார்
தெரிந்தவர் அறிந்தவர் சொன்னால் நலம்
தீராத காதலை தீர்த்து வைக்கிறேன்
என்று முன்வந்தாய்
தோற்றுப் பின்னங்கால் இடற ஓடுகிறாய்
உயிர் பிரிதலே தீர்வு என்று
அறிவாயா நீ.

****************************************************

6

தொட்டிச்செடி நிறைய பூக்கள்
ஒரு பூ கேட்டு நீட்டிய கரங்களை
புறக்கணிக்கிறாய்
அப்பாலிக்கா போ
என்று விரட்டுகிறாய்
பூக்கள் அருமையும்
உனக்கு தெரியவில்லை
பூ கேட்டு வந்தவர்
அருமையும் தெரியவில்லை
நீ பத்திரமாய் பாதுகாத்து கொண்டிரு
தொட்டிச்செடியை மட்டும்.

****************************************************

7

உன் கவனம் எல்லாம்
தொலைக்காட்சித் தொடரில்
எதைப் பேசியும் உன் கவனத்தை
ஈர்க்க முடியவில்லை
என்னால்
விளம்பர இடைவேளையில்
என்ன பேசினீர்கள் என்கிறாய்?
பதிலுரைப்பதற்குள்
மீண்டும் தொலைக்காட்சித் தொடர் தொடர
அதில் அமிழ்ந்து விடுகிறாய்
இப்படியாய்…
காட்சிகளின் ஊடகப் பிம்பத்தில்
தொலைந்துப் போனது
நமக்கான வாழ்க்கை.

****************************************************

8
டிபன் பாக்ஸில் கட்டி வைக்கப்பட்ட
உணவை எடுத்துக் கொண்டு
அவசர அவசரமாய்
அலுவலகத்திற்குப் புறப்படும்
நீ
ஒருநாளாவது ஆற அமர உட்கார்ந்து
உணவு உண்டு இருக்கிறாயா
ருசியான உணவை சமைத்த நீ
மேலதிகாரியின் திட்டுக்கு பயந்து
சாப்பிடாமல் சிலநாளும்
அவசர அவசரமாக சிலநாளும்
வாயில் போட்டுக்கொண்டு ஒடுகிறாய்
ரசித்து ருசிக்க முடியாமல்
விழுங்கிய உணவு தொண்டைக்குள்
சிக்கி புரையேறி விடுகிறது
அவசர யுகத்தில் ரசனையை விழுங்கி
ரசனையற்று வாழ்வதே
வாழ்க்கையாக அமைந்து விட்டது
ஞாயிறு மட்டுமே ருசிக்க முடிகிறது
உனக்கான உணவை
ஒடிக்கொண்டேயிருக்கிறாய்
கால்கள் ஒய்வும் வரை.
காலங்கள் விழுங்கிய
வாழ்வை திரும்ப பெற
முடியாது என்று அறிந்தும்
ஒடிக்கொண்டேயிருக்கிறாய்
மனச்சூழலை கொன்று
பணம்சூழ் உலகில்.

****************************************************

எழுதியவர் : 

✍🏻 வண்ணைசிவா
மாதவரம் பால்பண்ணை
சென்னை-600051
Vannaisiva@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *