இணையவழிக் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கல்வி அமைச்சகத்தின் புதிய விதிகள் – சுரையா நியாஸி | தமிழில்:தா.சந்திரகுரு

இணையவழிக் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கல்வி அமைச்சகத்தின் புதிய விதிகள் – சுரையா நியாஸி | தமிழில்:தா.சந்திரகுரு



இந்தியாவின் பாதுகாப்பு, உள் விவகாரங்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் நுட்பமானவை என்று கருதுகின்றவை தொடர்பான தலைப்புகளில் இந்திய பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்துகின்ற சர்வதேச வெபினார்கள் அல்லது இணையவழிக் கருத்தரங்குகளுக்கு கல்வியாளர்கள், கருத்தரங்க அமைப்பாளர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெறுவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சகத்தால் 2021 ஜனவரி 15 அன்று வெளியிடப்பட்டுள்ள கருத்தரங்கள் நடத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

C:\Users\Chandraguru\Pictures\Online Conf Revised Guidelines.jpg

அந்த வழிகாட்டுதல்களின்படி இணையவழி நிகழ்வை நடத்த அனுமதி வழங்குவதற்கு முன்பாக, நடைபெற்று வருகின்ற போராட்டங்களின் நீண்ட வரலாறு காரணமாக உடனடியாகப்  பாதிக்கப்படக் கூடிய திறன் கொண்டவையாக கருதப்படுகிற நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மத்தியப்பிரதேசம் மற்றும் 2020இல் இந்திய, சீன துருப்புக்களுக்கு இடையே மோதல்களைக் கண்ட லடாக் பகுதிகளுடன் அந்தக் கருத்தரங்கத்தின் பொருள் தொடர்புடையதாக இருக்கவில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்து கொள்ளும்.

இந்திய உள்விவகாரங்கள் அல்லது அரசின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த விவகாரங்கள் சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கேற்பாளர்கள் அனைவரின் பெயர்களும் முன்கூட்டியே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) கிழக்கு ஆசிய ஆய்வுகள் மையப் பேராசிரியரும், சீன ஆய்வுகள் குறித்த நிபுணருமான அல்கா ஆச்சார்யா கூறுகையில், நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக் கூடியது அல்லது பிரச்சனைகள் என்று இந்த புதிய கட்டுப்பாடுகள் கருதக்கூடிய தலைப்புகள் கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள் மத்தியில் அழுத்தத்தை உருவாக்கவே செய்யும் என்கிறார். மேலும் ‘அனைத்துமே பாதுகாப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும் என்பதால் முக்கியமான பதவிகளில் இருக்கின்ற அமைப்பாளர்கள் பங்கேற்பாளர்களைச் சோதனைக்குள்ளாக்க வேண்டிய பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இது நிச்சயமாக சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்கள் மீது  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அவர் தெரிவித்தார்.

பெருமளவில் நாட்டின் பாதுகாப்பு குறித்து சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் ஆய்வறிஞர்கள் இதுவரையிலும் மிகக் கவனத்துடனே இருந்து வந்துள்ளனர் என்று கூறும் ஆச்சார்யா மெய்மைசார் விவாதங்கள் அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன என்று தான்  நம்புவதாகத் தெரிவிக்கிறார்.  அடிப்படையில் அதுவே விவாதத்தின் நோக்கமாக இருக்கிறது என்றாலும் அரசுகள் வேறுவகையில் சிந்திக்கின்றன. விளைவாக விவாதங்களின் ஒட்டுமொத்த தாக்கம் குறைந்து கொண்டே போகும். இதுகுறித்து மேலதிக விவரங்கள் வழங்கப்படுவதற்காக நாங்கள் நிச்சயம் காத்திருக்க வேண்டும்’ என்றார்.

தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் சமூகவியல் துறை பேராசிரியரான நந்தினி சுந்தர் கூறுகையில் அரசாங்கத்தில் இந்த வழிகாட்டுதல்கள் கேலிக்கூத்தாகவே இருக்கின்றன என்கிறார். ‘கட்டுப்பாடுகள் இப்போது வந்துவிட்டன. அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். ஆனால் சர்வதேச கருத்தரங்குகளுக்குள் நுழைவதற்கு எங்களுக்கு அரசின் ஒப்புதல் தேவைப்படும் என்பதே அடுத்து தர்க்கரீதியாக நடக்கப் போகிறது’ என்று அவர் தெரிவித்தார்.

விதிமுறைகளில் இருக்கின்ற ‘பங்கேற்பு’ என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதை ‘பங்கேற்பு’ என்று சொல்வார்களா? அல்லது வெளிநாட்டிலிருந்து யாராவது கலந்து கொண்டால் அல்லது பேசினால் சவுக்கு சுழற்றப்படுமா? என்று நந்தினி கேள்வியெழுப்புகிறார்.  ‘இந்தியக் கல்வியாளர் எவரொருவரும் விரைவிலேயே அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் உலகில் வேறொரு இடத்தில் நடைபெறுகின்ற கருத்தரங்கு அல்லது உரைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் மேலும் ‘சமூக அறிவியலில் எந்தவொரு தலைப்பும் மிகவும் நுட்பமானவையாக, இந்திய உள்விவகாரங்களுடன் தொடர்புடையவாகவே இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

இந்தியாவில் கல்வி சுதந்திரம் குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஸ்காலர்ஸ் அட் ரிஸ்க் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நவம்பர் மாத வெபினாரின் போது, வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இந்தியாவிற்கு வருவதற்கான ஆய்வு விசாக்களைப் பெறுவது கடினமாகிக் கொண்டு வருவதாக நந்தினி கூறினார். மேலும் ‘காஷ்மீர் அல்லது நக்சலிசம் குறித்து எந்தவொரு கருத்தரங்கையும் எங்கள் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக எங்களால் நடத்த முடியவில்லை’ என்று இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கின்ற மாவோயிஸ்ட் போராட்டக் குழுக்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.

C:\Users\Chandraguru\Pictures\sar-map.jpg

சில காலமாகவே பல்கலைக்கழகங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கான விசாக்கள் குறிப்பிட்ட வகையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த காலத்தில் அவ்வாறு விசா மறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களால் வீடியோ இணைப்பு வழியாக அந்த மாநாடுகளில் பங்கேற்க முடிந்தது.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் அரசாங்கம் சீன நிறுவனங்களுடனான கூட்டு நடவடிக்கைக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களிலும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் சீனக் கல்வியாளர்கள் பங்கேற்பு சம்பந்தப்பட்ட குறுகியகால மாநாடுகள், பட்டறைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

2020 ஜூன்  மாதம் சீனாவுடன் நடைபெற்ற ராணுவ மோதல்களுக்குப் பின்னர் சீனப் பல்கலைக்கழகங்களுடனான கூட்டு நடவடிக்கை செயல்பாடுகளை மேலும் கடுமையாக குறைப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இந்தியாவுடன் தங்களுடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கின்ற ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது, அந்த நாடுகளின் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் இந்திய பல்கலைக்கழகங்கள் முன் அனுமதியைப் பெறுவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை 2020 அக்டோபரில் கல்வி அமைச்சகம் உருவாக்கியது.

நேரில் கலந்து கொள்கின்ற கருத்தரங்குகளுக்காக அங்கீகாரத்தை நிறுவனங்கள் பெற வேண்டும் என்று இதற்கு முந்தைய வழிகாட்டுதல்களிலும் இருந்தது. ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற உலகில் கருத்தரங்கள் நிகழ்வதற்கான சாத்தியம் உள்ள ஒரே வகையான நிகழ்வாக இருந்து வருகின்ற வெபினார்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் நிகழ்வுகளை எளிதில் நேரடியாக மேற்பார்வையிட்டு பின்னர் ஆய்வு செய்து கொள்ள முடியும். இதுவரையிலும் இணையவழி மாநாடுகள் வெளிநாட்டு பேச்சாளர்களை அழைப்பதற்கான கூடுதல் சுதந்திரத்தை அமைப்பாளர்களுக்கு வழங்கி வந்திருக்கின்றன. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் அதுபோன்ற வெபினாரில் பங்கேற்கும் அனைவரின் பெயர்களும் அரசாங்கத்தால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆயினும் இப்போது வெளியிடப்பட்டுள்ள  வழிகாட்டுதல்கள் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வுகள் குறித்து அமைதி காத்தே நிற்கின்றன.

வெளிநாடுகளால் நிதியளிக்கப்பட்ட அல்லது நிதியுதவி செய்யப்படுகின்ற நிகழ்வுகளுக்கு அல்லது வெளிநாட்டினர் பங்கேற்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அல்லது அரசியல், அறிவியல், தொழில்நுட்ப, வணிக அல்லது தனிப்பட்ட பாடங்கள் குறித்து எந்தவொரு வடிவத்திலும் தரவுகளைப் பகிர்வதற்கான ஏற்பாடுகளுடன் நடத்தப்படக்கூடிய எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளக்கக்காட்சிகள் போன்றவற்றிற்கு இனிமேல் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முன் ஒப்புதல் வாங்க வேண்டும் என்பதால் இணையவழி மாநாடுகளுக்கென்று வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய கட்டுப்பாடுகள் நாட்டில் உயர்கல்வியின் வளர்ச்சியைத் தடுக்கின்ற வாகியிலேயே இருக்கும். அது கல்விக்கான சுதந்திரத்தைப் பறிக்கும் என்றே கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தரவு பாதுகாப்பு குறித்த கட்டுப்பாடுகள்

இந்தியாவின் தற்போதைய தகவல் தொழில்நுட்ப தரவு பாதுகாப்பு விதிகள், தனிப்பட்ட தரவு மற்றும் பிற முக்கிய தகவல்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் முழுமையான இணக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தரவுகளின் தன்மை, நுட்பம் இந்திய தரப்பினரால் பகிரப்படுகின்ற விளக்கக்காட்சிகள், தகவல்களின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை அடையாளம் காணும் வகையில் சரியான அளவிலே சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த ஜனவரி வழிகாட்டுதல்கள் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதால் இனிமேல் இந்திய ஆய்வு மாணவர்கள், கல்வியாளர்களின் விளக்கக்காட்சிகளும் அதிக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படலாம்.

தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள், தளங்கள் அல்லது தொடர்பு கொள்வதற்கான ஊடகம் ஆகியவற்றை நியாயமான வழியில் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கட்டாயப்படுத்துகிறது. எந்தெந்த நாடுகள் அல்லது ஏஜென்சிகள் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘இந்தியாவிற்கு விரோதமான நாடுகள் / ஏஜென்சிகள் கட்டுப்படுத்தாத / புரவலராக இருக்காத / சொந்தமாகக் கொண்டிராத சேவையகங்களைக் கொண்ட செயலிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து  வந்த சீன செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்தியா தடை செய்தது. அதே நேரத்தில் சீனா தொடர்பான இணையவழிக் கூட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் இணையவழி வெபினார்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற உரையாடல் தளமான ஜூம் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. ஜூம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருந்தாலும், அது பயனர் தரவுகளை சீன சேவையகங்கள் வழியாகவே கடத்துவதாக அறியப்பட்டுள்ளது.

அறிவியலாளர்கள் அல்லது மருத்துவர்கள் உட்பட மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியலமைப்பு செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் இணையவழி அல்லது மெய்நிகர் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் இனிமேல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படும்.

C:\Users\Chandraguru\Pictures\Screen-Shot-2020-12-01-at-2.57.39-PM.jpg

கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி சுதந்திரம் பாதிக்கப்படும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து ‘நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற கடமை அரசு அதிகாரிகளுக்கு உண்டு என்றாலும், கல்விச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூடுகின்ற சுதந்திரம் போன்ற உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து இருக்கின்ற சட்டங்களும், அவற்றின் அமலாக்கமும் தேசிய, சர்வதேச சட்டங்களுடன் ஒத்துப் போவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று ஸ்காலர்ஸ் அட் ரிஸ்க் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்களுடைய மிகச் சமீபத்திய ஃப்ரீ டு திங்க் 2020 அறிக்கையில் இந்தியா குறித்து இருக்கின்ற பகுதியில் தெரிவித்துள்ளனர்.

https://www.universityworldnews.com/post.php?story=20210203072713445

நன்றி: யுனிவர்சிட்டி வேர்ல்டு நியூஸ் 2021 பிப்ரவரி 03 

தமிழில்:தா.சந்திரகுரு

C:\Users\Chandraguru\Pictures\10012021 MoE Office Memorandum on online conferences_00001.jpg

C:\Users\Chandraguru\Pictures\10012021 MoE Office Memorandum on online conferences_00002.jpg


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *