க.புனிதன் கவிதைகள்
************************************************
1. தேநீர்க்காரரின் பசி
என்றாவது ஒரு நாள்
பட்டாணி விற்கும்
சிறுவனின் கால் நனைக்க
விரும்புகிறது கடல் அலை
நாள் முழுவதும்
குடும்பத்திற்கு உழைப்பவரின்
விருப்ப குறியீடை
விரும்புகிறது கவிதை
எப்போதும்
பட்டாம் பூச்சி பிடித்து இருக்கும்
நிலையில் நூல் பிடித்து இருக்கும்
விற்பனைச் சிறுமியை விரும்புகிறது
பலூன்
ஓய்வு நேரத்தில்
தேநீர்க்காரரின் பசியாற்ற
விரும்புகிறது தேநீர்
பூ கட்டுபவளின்
உதிரிப் பூக்களையே
விரும்புகிறார் கடவுள்
************************************************
2. அம்மா
சூடானவுடன்
அணைந்து விடும்
ரொட்டி இயந்திரம் போல,
முன் கூட்டியே
நாம் விரும்பும் இடத்திற்குச்
சேர்த்துவிடும்
கூகிள் மேப் போல,
கண் தெரியாதவனின்
பாதையைத் தாங்கும்
செயற்கை நுண்ணறிவு போல,
வளைவுகளை எச்சரிக்கும்
மகிழ்வுந்து கணினி போல,
உழவனுக்குத்
தரையைப் பேசும்
செயற்கைக் கோள் போல,
படிக்க விரும்பும் புத்தகத்தை
ஒலியில் பரிமாறும்
மூடிய கண்களின் குரல் போல—
அம்மா,
நமக்காக முன்னரே
ஒரு அழகான உலகத்தை
உருவாக்கி வைத்திருப்பவள்.
************************************************
3. ஞானி
மருத்துவரை
ஞானியாய் ஏற்று கொள்ள முடியாது
ஏனெனில் அவரிடம்
மருந்து வாசனை அடிக்கிறது
ஆசிரியரை
ஞானியாய் ஏற்று கொள்ள முடியாது
கரும் பலகையில்
பெரிய மிருகத்தின் சப்தம் கேட்கிறது
வழக்கறிஞரை
ஞானியாய் ஏற்று கொள்ள முடியாது
அலாவுதீன் விளக்கை தடவுவது போல்
வாயிலிருந்து பொய் பூதமாய்
வந்து கொண்டிருக்கும்
கட்டிட பொறியாளனை
ஞானியாய் ஏற்று கொள்ள முடியாது
காடு அழித்து வீடு செய்பவன்
அரசியல்வாதியை
ஞானியாய் ஏற்று கொள்ள முடியாது
பூனைகள் எல்லாம் சேர்ந்து
பால் வியாபாரம் செய்ய போவது
தலையில் ஊறும்
எறும்பை அசிரத்தையாய் தட்டி
மண் வாசனையுடன்
வாழும் விவசாயியை
ஞானியாய் பார்க்கிறேன்
************************************************
எழுதியவர் :
✍🏻 க.புனிதன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
