ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பல படி நிலைகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.1975-85 ஆம் ஆண்டுகள், அரசியல்
கலை இலக்கியத்தின் மிக முக்கியமான (ஐந்தாவது) காலக்கட்டம் எனலாம். போராளிக் குழுக்களிடையே ஏற்பட்ட
முரண்கள், மோதல்கள், ஒற்றை இயக்கத் தலைமைக்கான நகர்வுகள், இனப் பிரச்சினை விரிவடைந்த காலச் சூழலில்
கோவிந்தனின் ” புதியதோர் உலகம் “
நாவல் வெளிவருகிறது.
புதியதோர் உலகம் நாவல் வெளிவந்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவன்
பார்த்த, பார்க்க விரும்பிய உலகம் இப்போது இல்லை. ஆனால் அவன் விடுத்த அறைகூவல் இப்பவும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985-ஆம் ஆண்டு வெளிவந்தது. நேர்த்தியான கட்டமைப்பில் 1997- ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பை விடியல் பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பு வெளிவந்த போது விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ் வாசக பரப்பில் பரவலாக கொண்டு சேர்த்தார்கள். ஆனால் 1991- ஆம் ஆண்டு மே,17 ஆம் தேதி அதே
அமைப்பினரால் கோவிந்தன் கைது செய்யப்படுகிறார். படைப்பாளி என்ன தான் ஆனார்…? அது மற்றொரு சோகம்.
அருளரின் “லங்கா ராணி” (1978) 1977 ஆம் ஆண்டு நடந்த கலவரம், அது தொடர்பான படிப்பினைகளைப் பேசுகிறது. செழியனின்” ஒரு மனிதனின் நாட்குறிப்
பிலிருந்து ” (1998), ஷோபா சக்தியின்
கொரில்லா (2001), சயந்தனின் ஆறாவடு போன்ற நாவல்கள் ஈழ்ப் போராட்டத்தின் புலம் பெயர்தல், மானிட பேரழிவுகள், உறவுசிதைவுகள்,அடையாளம் இழத்தல், அவமானங்கள் என போரின் பல கோர முகங்களை பதிவு செய்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் சற்று
மாறுபட்டது. தனித்த அடையாளத்தைக் கொண்டது. இருப்பினும் ” கொரில்லா” நாவல் தமிழ்ச் சூழலில் பேசப்பட்ட அளவிற்கு ” புதியதோர் உலகம்” நாவல் பேசப்படாமல் போனது வியப்பாக இருக்கிறது.
புதியதோர் உலகம் போராட்ட இருண்மை மட்டும் பதிவு செய்யவில்லை. விடுதலை
இயக்கத்தினுள் நிலவும் உள் முரண்கள், தலைமை புனித வழிபாடு, புதிய இளம் போராளிகள் புரட்சி வேட்கையுடனும், இன விடுதலைக் கனவுகளுடன் இயக்கத்தில் நுழைதல், இன எழுச்சிப் போராட்டம் சமூகத்தை தழுவிக் கொள்ளுதல், என நாவல் விரிவாக பதிவு செய்கிறது.
நாவல் உரையாடலால் நிரப்பப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் ( சங்கர் ) நிகழும் உரையாடல், சக தோழர்களுடன்
இடையே நிகழும் சோசலிச புரட்சியின்
மூலமே சமூக இனவிதலை சாத்தியப்படும் என்பன போன்ற உரையாடல்கள் நாவலை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.
நாவல், இயக்கத்தில் சனநாயகம் என்ற மையப் புள்ளியிலிருந்து, மானுட பெருவெளிக்குள் நுழைந்து, மனித உறவுகளின் வாழ்வியல் நுட்பங்களை செறிவான மொழி நடையில் பதிவு செய்கிறது.
“அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும் ” (பக்கம் : 243).
“அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
அப்பாற்பட்ட புதியதோர் உலகம் படைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது” (பக் : 244) போன்ற உணர்ச்சி பூர்வமான உரையாடலோடு வாசகனை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் உன்னத நாவல் ” புதியதோர் உலகம் “.
உலக மொழியோடு நீண்ட உரையாடலை நிகழ்த்தும் எல்லா கூறுகளையும் கொண்ட நாவல், தமிழோடு நின்று போனது ஏன் என்று தெரியவில்லை.
– தங்க. முருகேசன்

