பொருளாதார அறிஞர்கள் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியாசென் எழுத்தில் வெளிவந்து பேராசிரியர் பொன்னுராஜ் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பாரதி புத்தகாலத்தால் வெளியிடப்பட்ட மிக மிக முக்கியமான நூல்..
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்பதை குறுக்கு வெட்டாக ஆய்வு செய்து பல்வேறு முக்கிய தரவுகளோடு வெளியிடப்பட்டிருக்கும் நூல் இது..
1. விவாதத்தால் உருவாகும் அரசு (Goverment by Discussions) என்பதைப் பொருத்தே அந்த தேசத்தின் உடைய ஜனநாயகத்தை நாம் அளவிட முடியும்.. ஆட்சியாளர்கள் வெறுமனே “ஜனநாயகம்” என்று உதிர்க்கிற சொற்றொடர்களால் அதனுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியாது..
2. இந்திய மேல்தட்டு வர்க்கம் நாட்டின் வசதி வாய்ப்பற்றவர்களிடமிருந்து ஆழமாக அந்நியப்பட்டு இருக்கிறது… இந்தியா குறித்த எந்த ஒரு ஆய்வும் அந்த ஆய்வில் வட்டத்திற்கு வெளியே ஏழைகளை நிறுத்திவிட்டேதான் மேற்கொள்ளப்படுகிறது.நம்மால் பாராட்டப் படுகிற இந்தியா உண்மையில் பரந்த இந்தியாவின் ஒரு சிறு பகுதியே ஆகும் அது மேல்தட்டு வர்க்கத்தின் இந்தியாவே..
3. இந்த தேசத்தில் 86 ஆயிரம் பத்திரிகைகளும் 400க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்களும் செய்திகளை வழங்கி கொண்டே இருக்கிறது.. ஆனாலும் ஏழைகளின், வறுமையில் உழல்பவர்களின் செய்திகள் ஊடகங்களில் பிரதான இடத்தை பெரும்பாலும் பிடிப்பதில்லை.. ஆளும் வர்க்கத்தின் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் செய்திகளே பெரும்பாலும் ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன..
4. 2012. ஆம் ஆண்டு ஜூலை 30 – 31 ஆகிய இரு நாட்களில் ஒட்டு மொத்த இந்திய தேசமும் இருளில் மூழ்கியது.. அப்போதுதான் ஒரு உண்மை வெளியானது. மின் இணைப்பு பெற்ற இந்தியர்கள் இருளில் மூழ்கினார்கள் என்பது மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் மின் இணைப்பே பெறாமல் 20 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள் இந்த உண்மை தான் அது..
5. ஒரு தேசத்தில் அரசின் முதலீடு கல்வியிலும் பொருளாதாரத்திலும் கணிசமாக இருக்க வேண்டும்.. ஆனால் இந்தியாவில் 80 சதவிகிதம் கல்வியும் பொது சுகாதாரமும் தனியார் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் எளிய மக்களின் வாழ்க்கைச் செலவுகள் இதற்கு பெரிதும் செலவிடப்படுகிறது…
பொருளாதார அறிஞர்கள் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியாசென்
6. தேசம் முழுவதும் பரவி வியாபித்திருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக ஊழல் மலிந்திருக்கிறது.. குற்றம் சாட்டப்படும் மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்க ஊழியர்களும் இதர நாடுகளை விட மிக எளிதில் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளையும் இந்தியா தன்னகத்தே கொண்டிருக்கிறது..
7. வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் ஆகிய எவற்றிலும் இந்தியாவின் ஒப்பீடு பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நாடுகளை ஒத்ததாகவே உள்ளது..
8. பாலின அசமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதெல்லாம் இந்தியாவின் பெரும் பிரச்சினைகளாக இருந்தாலும் டெல்லி போன்ற ஒரு தலைநகரில் ஒரு மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்கிறபோதுதான் அது பொது சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இருப்பது இந்தியாவின் ஆகப்பெரும் துயரம்..
9. உண்மையில் பசியும் வறுமையும் இந்தியாவின் அடையாளமாக என்றென்றும் இருந்ததில்லை வளமிக்கக இந்தியா எவ்வாறு வறுமைமிக்க நாடாயிற்று.. ஏன் எனில் எங்கு வசதி படைத்தவர்களின் கோரிக்கைகள் வலுவாக ஒலிக்கிறது.. இந்திய சமூகத்தில் பின்தங்கியவர்கள் பெருமளவில் அனுபவித்து வரும் இழப்புகள் மீது மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்படுகிறது..
10. மிக மிகக் கீழே உள்ளவர்களுடைய குரல் மேலே இருக்கிற அரசுக்கு கேட்க வேண்டும். அவற்றையும் உள்ளடக்கியதான திட்டங்களை வகுப்பதே உண்மையான ஒரு மக்கள் நல அரசாக இருக்க முடியும்..
வெறுமனே ஒரு ஆளுமையை முன்னிறுத்துகிற, செயற்கையான எதிரிகளை கட்டமைத்து அதை நோக்கி மக்களின் கவனத்தை திசை திருப்புகிற, புனைவுக் கதைகளை வரலாறு என்று நம்ப வைக்கிற, அறிவியல் கண்ணோட்டங்களை மறுதலிக்கிற, வரலாற்று சக்கரங்களை பின்னோக்கி இழுத்துச் செல்கிற வலது சாரி அரசியல் மேலெழுந்து வருகிற இந்த நெருக்கடியான காலத்தில் அரசு மற்றும் அதன் கட்டமைப்பு குறித்தும், அது முன் வைக்கிற போலியான பிம்பங்களை கட்டுடைத்து, உள்ளிருந்து உண்மைகளை வெளிக் கொணர்ந்து விழிப்புணர்வை நோக்கிய ஒரு அரசியல் பாதையில் மக்களை அழைத்துச் செல்கின்ற ஒவ்வொரு சமூக அரசியல் செயல்பாட்டாளனும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இது…