Nikos Labôt 'Her Job' Greece Movie Review By Ilango Sadhasivam. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam.



அவளுடைய வேலை (Her Job)
2018 / கிரீஸ் திரைப்படம் / 90 நிமிடங்கள்
இயக்கம்: நிக்கோஸ் லபாத்

பனயோதா கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண். பயமும், கூச்ச சுபாவமும் உடையவள். திருமணத்திற்குப் பின் கணவனுடன் நகரத்திற்கு வந்தவள். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கணவனுக்கு ஊழியம் செய்வதும், குழந்தைகள் வளர்ப்பதுமே அவளுடைய முழுநேர வேலை.

அன்றைய காலை பரபரப்பு நிறைந்ததாக இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் எழுப்பி, குளிப்பாட்டி உடைகள் அணிவித்து, காலை உணவு கொடுத்து, மதிய உணவும் தயார் செய்து கொடுத்து அனுப்புகிறாள். டிவியில் நியூஸ் கேட்கும் கணவனுக்கும் காப்பி போட்டுக்கொடுக்கிறாள். இந்த வேலைகளுக்கு இடையில் தரையை சுத்தம் செய்யும் வாக்குவம் க்ளீனர் கொண்டு பொறுமையாக வீட்டையும் சுத்தம் செய்துவிடுகிறாள். பெரியவள் முரட்டுப் பெண். தாயை அவ்வளவாக மதிப்பதில்லை. தம்பியோடு வம்பிழுத்து சண்டையிடுவதில் வல்லவள். அவளால் தாய்க்கு உதவியில்லை. நாட்டின் பொருளாதாரச் சூழலில் கணவனுக்கு தற்போது வேலையில்லை. கிரீஸ் தொழிலாளி வர்க்கம் தேச அளவிலான ஒரு வேலைநிறுத்தத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

நகருக்கு வெளியில் உள்ள ஒரு பெரிய மால் ஒன்றில் தூய்மைப் பணியாளர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று தகவல் கிடைக்க, கணவனிடம் அனுமதி கேட்டு, நேர்காணலுக்குப் போகிறாள் பனயோதா. வேலை கிடைக்கிறது. வாழ்க்கையில் முதல் முறையாக வேலைக்குப் போகிறாள். கணவன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறான். பனயோதாவையும் வேலையிடத்துக்கு அழைத்துப் போய் விடுவதும், திரும்ப அழைத்து வருவதுமான வேலையைச் செய்கிறான்.

பனயோதா வேலையில் உண்மையாகவும், ஈடுபாட்டோடும் இருக்கிறாள். வேலை செய்யும் இடமும், சம்பளமும் அவளைக் கவர்கிறது. சக பணிப்பெண்களிடம் அன்பாகப் பழகுகிறாள். நிர்வாகத்திடம் பவ்யமாக நடந்து கொள்கிறாள். எல்லோருக்கும் அவளைப் பிடித்துப் போகிறது. ஓவர்டைம் வேலை செய்யச் சொன்னாள் செய்கிறாள். யாரேனும் விடுமுறை எடுத்தால் அவரது வேலையையும் சேர்த்துச் செய்கிறாள். நிர்வாகம் சீக்கிரம் வரச்சொன்னால் வருகிறாள். தாமதமாகப் போகச் சொன்னால் வேலையைச் செய்து கொடுத்துவிட்டு அவ்வாறே போகிறாள். சில பெண்கள் யூனியனில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பனயோதா தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறாள். நிர்வாகம் சிலரை வேலை நீக்கம் செய்கிறது. துவக்கத்தில் இருந்த அளவுக்கு பணியாளர்கள் இப்போது இல்லை.

Nikos Labôt 'Her Job' Greece Movie Review By Ilango Sadhasivam. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam.

இருப்பவர்களை ஓவர்டைம் வேலை செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறது. விடுமுறை மறுக்கப்படுகிறது. பனயோதா விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறாள். நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறாள்..

ஓவர்டைம் வேலையில் கிடைக்கும் கூடுதல் சம்பளத்தைக்கொண்டு பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கித்தர முடிகிறது. தனது சொந்த தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கிறாள். இப்படி “வேலை வேலை” என்று அவள் இருப்பது கணவன் கோஸ்டாஸ்க்குப் பிடிக்கவில்லை. கடுமையாகத் திட்டித் தீர்க்கிறான். அதையும் பொறுத்துக்கொண்டு அவனது செலவுகளுக்கும் பணம் கொடுத்து அவனை சாந்தப்படுத்துகிறாள். முதல் நாள் எவ்வளவு தாமதமாக வந்தாலும், களைப்பாக இருந்தாலும் உறங்கி, மறுநாள் எழுந்து தன்னைத் தயார் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்குப் போய்விடுவாள்.

ஒரு நற்காலையில் அவளை அழைத்து வேலையிலிருந்து நீக்குகிறார்கள். ஏன், எதற்கு என்று எந்த விளக்கமும் இல்லை. பனயோதா துடித்துப் போகிறாள். அழுது கண்ணீர் வடிக்கிறாள். நாள் முழுவதும் அந்த மாலுக்குள் சுற்றி வருகிறாள். ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு அன்று மாலை தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் போகிறாள். மது விருந்தும், ஆட்டம் பாட்டமுமாக கொண்டாட்டம் களைகட்டுகிறது.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அந்நியமாக உணர்கிறாள். தோழி அவளை இழுத்துக்கொண்டு போய் நடனமாட வைக்கிறாள். செயற்கையான புன்னகையோடு பனயோதா நடனமாடத் துவங்குகிறாள்.

நேர்கோட்டில் பயணிக்கும் எளிமையான, யதார்த்தமான கதை. புதுயுகத்தில் அடிமட்டத் தொழிலாளர்கள் தங்கள் வேலை சார்ந்து சந்திக்க வேண்டிய சவால்களை கதையின் போக்கில் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது இப்படம். இயற்கையான ஒலிகளைத் தவிர பிரத்யோக பின்னணி இசைக்கோர்ப்பு இல்லை. இவ்விதமாக ஐரோப்பியப் படங்கள் நிறைய இப்போது வருகின்றன. படம் பார்த்த பின், பனயோதாவை நீண்ட நாட்கள் மறக்க இயலாது.

எஸ். இளங்கோ,
புதுக்கோட்டை.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *